Tuesday, December 23, 2014

புத்தக விலையின் இரு சிக்கல்கள்


புத்தக விலையை ஏன் குறைக்கக் கூடாது என்பது பற்றி ஒரு சர்ச்சை பேஸ்புக்கில் பரவலாக நடந்து கொண்டிருக்கிறது. இது ஒரு முடிவற்ற விவாதமாக தோன்றுகிறது. ஏனென்றால் இரண்டு எதிர்முனைகளில் இருந்து ஆட்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று லட்சியத்தின் முனை. இன்னொன்று வணிகத்தின் முனை. எந்த புறச்செயலும் நிகழ இரண்டு முனைகளும் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டும். ஆனால் அது நிகழ்வதில் ஒரு சிக்கல் உள்ளது.

இரண்டு விதமான பதிப்பகங்கள் உள்ளன. மலிவாய் பதிப்பிக்கிறவர்கள், அதிக விலையில் பதிப்பிக்கிறவர்கள். பொதுவாக மலிவான பதிப்பாளர்கள் அதிக பிரதிகள் விற்கிற வெகுஜன நூல்களை விற்கிறவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நூலை தரங்குறைந்த தாளில் அதிக எண்ணிக்கையில் குறைவான விலையில் பிரசுரிக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு போதுமான லாபம் கிடைக்கிறது. குறைவாய் விற்கும் இலக்கிய அல்லது நடுநிலை பதிப்பாளர்களுக்கு அப்படி செய்ய தயக்கம் உள்ளது. ஒரு புத்தகத்துக்கு ஐநூறு வாசகர்கள் இருப்பதாக கொள்ளுங்கள். அதன் விலை 500. அதை 300க்கும் விற்கலாம். ஆனால் அதே ஐநூறு பேர்கள் தான் வாங்குவார்கள் என்றால் குறைவான முதலீட்டில் கூட குறைவான லாபம் தானே வரும். ஆங்கிலத்தில் இரண்டு விதமான விலைகளில் விற்கிறார்கள். ஒரு நூல் ஐநூறு ரூபாய் என்றால் இன்னொன்று 350 இருக்கும். ஆனால் தமிழில் இதை நடைமுறைப்படுத்தினால் விலை அதிகமான நூலின் விற்பனை பாதிக்கப்படுமோ என பதிப்பாளர்கள் அஞ்சுவார்கள். அதனால் தான் அவர்கள் இப்பிரச்சனையின் போது விற்பனை எண்ணிக்கை பற்றி மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள். அனைத்து தரப்பினருக்கும் தம் நூல்கள் போய் சேர வேண்டும் என நம்மைப் போல் அவர்களுக்கும் விருப்பம் இருக்கும். ஆனால் லாபத்தில் ஓட்டை விழுமென்றால் செய்ய மாட்டார்கள். ஆனால் சமூக சமத்துவம் ஒரு விழுமியத்தை மட்டுமே முக்கியமாய் நினைக்கும் எதிர்தரப்பினர் இந்த வணிக விகிதத்தை பார்க்க தயாராக இருக்க மாட்டார்கள். அதனால் தான் இரண்டு பேரும் எவ்வளவு தான் விவாதித்தாலும் இப்பிரச்சனை முடிவுக்கு வராது எனச் சொன்னேன். இம்முறையும் நான் புத்தக சந்தையில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்க மிகவும் தயங்குவேன். நான் அதிகமாய் பாதிக்கப்பட போவதில்லை. என் வாசிப்பு பெரும்பாலும் ஆங்கில நூல்களை நம்பியே உள்ளன. அவையும் கணிசமாய் இலவசமாய் தரவிறக்க கிடைக்கின்றன. தமிழை மட்டுமே நம்பியிருக்கும் சில வாசகர்களை நினைத்து தான் எனக்கு வருத்தம். அவர்களுக்கு சாப்பிட, வாடகை கொடுக்க, ஆடை வாங்க, நொறுக்கித் தீனிக்கு காசில்லையா, அது போல் புத்தகத்துக்கு செலவு செய்தால் என்ன என கேட்கக் கூடாது. ஏனென்றால் புத்தக வாசிப்பு ஒரு பண்பாட்டு நடவடிக்கை. நமக்கு தேவையான நூல்களுக்காய் முழுக்க நூலகத்தை நம்பி இருக்க இயலாது. நாம் தேடும் நூல்கள் தேவையான நேரத்தில் அங்கு கிடைக்காமல் இருக்கலாம். கோயிலுக்கு போக விரும்புகிறவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கோயில் பண்பாட்டை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக இச்சமூகம் நிறைய செலவு செய்கிறது. முழுக்க ஒரு தனிமனிதனை நம்பி அது இல்லை. புத்தகங்களை நாடிச் செல்வதும் அப்படியான ஒரு தேவை தான். அதை நாம் உயிர்ப்புடன் வைத்திருக்க செலவு செய்ய வேண்டும். இன்று தீபாராதனை செய்ய வேண்டுமென்றால் நீ நூறு ரூபாய் கட்டு என நாம் ஒரு பக்தனை கேட்பதில்லை. அது போல் புத்தக வாசிப்பை ஈர்ப்பானதாக மாற்ற புத்தகங்கள் கிடைப்பது எளிதாக வேண்டும். ஆனால் அந்த பொறுப்பை நாம் மொத்தமாய் பதிப்பாளன் மேல் சுமத்த முடியாது. அவர்கள் ஒரு தொழில் செய்கிறார்கள். நான் ஒரு ஆசிரியன். கற்பிக்கும் ஆர்வத்துக்காய் தான் அத்தொழில் செய்கிறேன். அது என் லட்சியம். ஆனால் அதில் இருந்து எனக்கு வருவாயும் வர வேண்டும். இல்லாவிட்டால் செய்ய மாட்டேன். இரண்டும் இணைய வேண்டும். பணம் இருந்து கற்பிக்கும் சூழல் இல்லாவிட்டாலும் செய்ய மாட்டேன். இப்போதைக்கு நம்மிடம் லட்சியம் மட்டுமே உள்ளது. வருவாய் இல்லை.
கிழக்கு பதிப்பகம் வெளிப்படையான தன்னை வியாபார நிறுவனமாய் அறிவித்துக் கொள்கிறது. அவர்களின் தரப்பு சுவாரஸ்யமானது. அவர்களுக்கு ஒரே முனை தான் – வருவாய். பேஸ்புக்கில் அப்பதிப்பகத்தின் ஹரன் பிரசன்னா விலை குறித்து ஒரு கருத்து சொல்கிறார். ஒரு நூலின் விலை பதிப்பகத்தின் தனிப்பட்ட முடிவு அல்லது நிலைப்பாடு சார்ந்தது என்கிறார், இதையும் கவனிக்க வேண்டும். பதிப்பு இன்று ஒரு குறிப்பிட்ட வர்க்கம் சார்ந்ததாக மாறி இருக்கிறது. அவர்களுக்கு என்று ஒரு பதிப்பு தரமும் விலையும் உள்ளது. விலையை குறைத்தால் பதிப்பகத்தால் அவர்களுக்கு விசுவாசமாக இருக்க முடியாது. ஒரு பொருளை நாம் அதன் உள்ளடகத்திற்காக மட்டும் அல்ல, விலைக்காகவும் தான் வாங்குகிறோம். அதாவது நான் இருநூறு ரூபாய் விலையில் குறிப்பிட்ட தரத்தில் தான் ஒரு நூலை விரும்புகிறேன் என்றால் அதையே இன்னொரு தரத்தில் நூறு ரூபாய்க்கு தந்தால் மறுத்து விடுவேன். அப்பதிப்பகம் பற்றின என்னுடைய மனப்பதிவும், எதிர்பார்ப்பும் மாறும். இது பா.ஜ.கவின் இந்துத்துவா அரசியல் போலத் தான். இந்துத்துவாவை கைவிட்டு பொருளாதார வளர்ச்சியை கட்சியின் கொள்கையாக கையாளலாம் என சில தலைவர்கள் நினைக்கலாம். ஆனால் அப்படி செய்தால் அக்கட்சியை ஆதரிக்கும் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் விலகி விடுவார்கள். அந்த அச்சத்தில் பா.ஜ.க இந்துத்துவாவை பற்றிக் கொண்டிருக்கும்.

மானை வேட்டையாடத் தான் சிங்கத்திற்கு கோரைப் பற்கள். சிங்கத்திற்கு கோரைப்பற்கள் உள்ள காரணத்தினால் தான் மான்களும் இயற்கையில் இருக்கின்றன. இருவரையும் பிரிக்க முடியாது.

No comments: