Wednesday, December 3, 2014

மற்றொரு பிறந்த நாள் … மேலும் சில சொற்கள்


மற்றொரு பிறந்த நாள் அதற்குள் வந்து விட்டது. கடந்த சில மாதங்கள் வெகுவேகமாய் நகர்ந்து விட்டன. அதனாலே பிறந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு “அதற்குள் பிறந்த நாள் வந்து விட்டதா?” என வியப்பு ஏற்பட்டது.
இந்த முறை மனைவியிடம் இருந்து நிறைய பரிசுகள். வழக்கம் போல் இம்முறையும் பேஸ்புக்கில் தான் பிறந்தநாள் கொண்டாட்டம் விமரிசையாக நடக்கிறது. முன்பு வேலை பார்த்த இடத்திற்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடுவேன். இப்போது முனைவர் பட்ட ஆய்வு செய்கிறேன். இன்று என் நாவலை திருத்திக் கொடுக்கும் கடும் நெருக்கடியில் இருப்பதால் பல்கலைகழகம் போகவில்லை. வீட்டில் இருந்தபடி நண்பர்களின் வாழ்த்துக்களை டைம்லைனில் கவனித்தபடி விர்ச்சுவல் பிறந்த நாளாகி விட்டது.

எல்லா பிறந்த நாளையும் போல் அம்மா செய்யும் பாயசத்தை மிஸ் பண்ணுகிறேன். எந்த வேலையும் நெருக்கடியும் இல்லாமல் காற்றைப் போல் திரிந்து பிறந்த நாளை ரசித்த காலத்தை மிஸ் பண்ணுகிறேன்.
போன பிறந்தநாளின் போது சில உறுதிமொழிகளை எடுத்திருந்தேன். அவை என்னவென்றே மறந்து விட்டேன். பின்பற்றினேனா எனவும் தெரியாது. இவ்வருடம் நிறைய படிக்க வேண்டும், குறிப்பாக லகுவான ஊடக கட்டுரைகளை தவிர்த்து தீவிரமான தத்துவ நூல்கள் படிக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். எழுதுவதற்காக படிக்காமல் எனக்குள் தோன்றுகிற சிக்கல்களை, கேள்விகளை எதிர்கொள்ள படிக்க வேண்டுமென நினைக்கிறேன்.
இந்த வருடம் கிடைத்த யுவபுரஸ்கார் விருது என்னை உற்சாகப்படுத்தியது. முதன்முதலில் ஒரு பெண் நம் காதலை ஏற்கையில் கிடைக்கும் அந்த பலூனாக பறக்கும் உணர்வு. இன்னொரு புறம் மீடியா மூலம் கிடைத்த கவனத்தின் கடுமையான வெளிச்சம் என்னை இந்த மகிழ்ச்சியை ரசிக்க முடியாமல் செய்து விட்டது. தொடர்ந்து வாழ்த்துக்களுக்கு பதில் சொல்வதிலும், ஊடகங்கள் கட்டும் பிம்பத்துக்கு எதிராக என்னை தொகுத்துக் கொள்வதிலும் மட்டுமே என் ஆற்றலும் நேரமும் போய் விட்டது. மிக மிக அமைதியாக எனக்குள் அந்த மகிழ்ச்சியை ரசிக்க விரும்பினேன். கூச்சல் கொண்டாட்டத்தில் அது நிகழவில்லை. பரவாயில்லை. விருதை கிரீடம் போல் சுமக்கக் கூடாது, அது என் எழுத்தையோ பிரக்ஞையோ மாற்றக் கூடாது என விரும்பினேன். மாறவில்லை என்பது திருப்தியளிக்கிறது. நான் நானாகவே தான் மாற வேண்டும். ஒரு நிகழ்வு என்னை மாற்றக் கூடாது.
இந்த விருதுக்காக புத்தகங்களை அனுப்பும் போது எனக்குக் கிடைக்காது என உறுதியாக நம்பினேன். ஏனென்றால் விருது பெற யாராவது உங்களை பரிந்துரைக்க வேண்டும். பரிந்துரைப்பதற்கான அதிகார மட்டத்தில் உள்ள நண்பர்கள் வேண்டும். எனக்கு அப்படியான நண்பர்கள் இல்லை. தமிழின் பல மூத்த எழுத்தாளர்களுடன் எனக்கு தொடர்பே இல்லை. ஆக என்னை யாருமே பரிந்துரைக்க மாட்டார்கள் என நினைத்தேன். நான் விருதுக்காக லாபியும் செய்யவில்லை. இயக்குநர் ஒருவர் தன்னுடைய உதவி இயக்குநருக்கு இவ்விருதை பெற்றுத்தர கடுமையாக முயல்வதாய் அறிந்தேன். அவர் நல்ல எழுத்தாளரே. அவருக்கே கிடைக்கட்டும் என நினைத்தேன். ஆனால் எனக்கு விருது அறிவிக்கப்பட்ட பின் நம்ப முடியவில்லை. தர்க்கரீதியாய் பார்த்தால் சாத்தியமில்லை தானே. பிறகு ஒரு நண்பர் வழி எனக்கு விருது கிடைத்தது எப்படி என அறிந்தேன். விருதுக்குழுவில் ஒரு மூத்த எழுத்தாளர் எனது தொடர்ச்சியான எழுத்துப்பணியை குறிப்பிட்டு எனக்காக வாதாடியிருக்கிறார். அதனாலே எனக்கு தரும்படியாக ஆனது. ஆனால் அந்த மூத்த எழுத்தாளரிடம் நான் ஒருமுறை கூட பேசினதில்லை. அவர் ஜெயமோகனின் நெருக்கமான நண்பர் வேறு. அதனால் என்னை பிடிக்காது என்றே நினைத்திருந்தான். ஆனா நான் எப்படியான முட்டாள் பாருங்கள்? அவருக்கு என் மீது விருப்பமும் நம்பிக்கையும் இருந்திருக்கிறது. விருது அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட நான் இன்னமும் அவரிடம் பேசவில்லை. தகுந்த சந்தர்ப்பம் அமையும் போது நன்றி தெரிவிக்க வேண்டும். எந்த செல்வாக்கும் இன்றி உழைப்பினாலும் அர்ப்பணிப்பினாலும் கூட ஒரு எழுத்தாளனுக்கு விருது அமையலாம் என்பதற்கு இது ஒரு உதிரியான உதாரணம். வாழ்வில் நன்மை மீது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை அதிகமாகி இருக்கிறது. சமீபத்தில் ஜீவா படத்தில் ஒரு வசனம் கேட்டேன்: “தொடர்ந்து கடுமையா உழைச்சிக்கிட்டு இருந்தா நம்ம வாழ்க்கையில ஒரு மேஜிக் நடக்கும்”. அந்த அற்புதம் என் விசயத்தில் நடந்து விட்டது.
இரண்டு வருடங்களாக நாவல் எழுதும் முயற்சியில் தான் இருக்கிறேன். நான்கு நாவல்களை முதல் நூறு அல்லது இருநூறு பக்கங்களோடு நிறுத்திக் கொண்டேன். மனதளவில் ஒரு உத்வேகம் தோன்றாவிட்டால் நாவலை தொடர்ந்து முடிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அப்படி என்னை இறுதி வரை இழுத்துச் சென்றது ஒரே ஒரு நாவல்: “ரசிகன்”. அதை இவ்வருடம் எழுதி முடித்தேன். எழுதிய பின் ஆறு முறைகள் அதை படித்து திருத்தினேன். ஒரு கலைவடிவமாக என் முதல் நாவலை விட அதிக நேர்த்தியுடன் வந்திருப்பதாக உணர்ந்தேன். நாவல் வடிவத்தின் வாலைப் பிடித்து விட்டேன். இனி அடுத்த நாவல்களில் தாவி அந்த புரவியின் முதுகில் உட்கார்ந்து விடுவேன் என நம்பிக்கை இருக்கிறது. நாவல் கலையை கற்க நீங்கள் அதை எழுதியே ஆக வேண்டும். சிறுகதைப் பயிற்சி கூட மிக சின்ன அளவிலேயே உதவும். அதேவேளை ஏனோதானோ என எழுதக் கூடாது என தெளிவாக இருக்கிறேன். ஒரு ஆழ்மனத் தூண்டுதல் ஏற்படும் போது மட்டுமே எழுதுவேன். நாவல் கலை கைவசப்பட்டு விட்டது என்பதுடன், வாழ்க்கை பிரச்சனையை தத்துவார்த்தமாகவும் இன்னொரு நிலைக்கு நகர்த்தி பார்ப்பதிலும் வெற்றி பெற்றிருப்பதாக தோன்றியது. நாவலில் அப்படி ஒரு அடுக்கு உள்ளது. வாழ்வை இன்னொரு படி உயர்த்தி “ஏன் இப்படியெல்லாம் ஆகிறது?” என மனித நிலையை தீவிரமாக படைப்பூக்கத்துடன் அலசுவது. அதை இந்நாவல் செய்கிறது என ஒரு திருப்தி ஏற்பட்டது. என் மொபைலில் உள்ள நாட்குறிப்பில் “நான் இன்னொரு நிலைக்கு போய் விட்டேன். தொடர்ந்து மேலே மேலே பயணிக்க வேண்டும்” என எழுதினேன். அதை படித்து விட்டு என மனைவி எதற்கெடுத்தாலும் “நீ தான் அடுத்த  நிலையில் இருக்கிறாயே” என கலாய்க்க ஆரம்பித்து விட்டாள்.
நான் எழுதிப் பார்க்காத ஒரே வடிவம் நாடகம். அதை எழுதவே போவதில்லை என்றே நினைத்தேன். பல்கலையில் நண்பர் டேவிட் ஒரு நாடக்குழு வைத்துள்ளார். அவர் அளித்த தொடர்ந்த தூண்டுதலால் இரண்டு நாடகங்கள் எழுதினேன். “வீடு” மற்றும் “சின்னஞ் சிறு பூச்சிகள்”. “வீடு” ஒரு non-linear நாடகம். நினைவு நாடக வகை (memory play). அது டேவிடின் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை அடிப்படையாய் கொண்டு நான் எழுதியது. “சின்னஞ்சிறு பூச்சிகள்” மனுஷ்யபுத்திரனின் “இனி இந்த உலகத்தை ஆளட்டும் சின்னஞ்சிறு பூச்சிகள்” என முடியும் ஒரு கவிதையை அடிப்படையாக கொண்டது. சாதியம் மற்றும் இனவெறியை விவாதித்து, மனிதன் அடிப்பவனாக அல்லாமல் அடிவாங்குபவனாக, எளிமையாக இருப்பது எவ்வளவு அவசியம் எனக் கூறுகிறது. அந்நாடகத்தின் ஒத்திகை பார்க்க மிக சுவாரஸ்யமாக உற்சாகமாக இருந்தது. ஒரு நாடகம் பிரதியில் இருந்து எப்படி செயல்வடிவுக்கு வருகிறது என்பது சில நாட்கள் கவனித்ததே ஒரு பாடம் தான். துரதிஷ்டவசமாக நாடகத்தை தள்ளிப் போட வேண்டிய கட்டாயம். இன்னொரு தருணத்தில் மேடையேற்றுவோம் என நம்புகிறேன்.
போன வருடம் கவிதைத் தொகுப்பு வெளியான பின் பத்து மாதங்களில் கவிதையே எழுதவில்லை. பிறகு திடீரென இரண்டு நல்ல கவிதைகள் எழுதினேன். அதில் ஒன்று “ஒரு ஆடையின் தினம்” இம்மாத உயிர்மையில் வெளியாகி உள்ளது. வேறு எதையும் விட கவிதைகள் எழுதினது தான் எனக்கு இவ்வருடம் மிகுந்த மனக்கிளர்ச்சியும் திருப்தியும் அளித்தது.
இந்த வருடம் கார்த்திகேயன் பங்காரு போல் பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். அருள், டேவிட், சர்வோத்தமன் போன்றவர்களுடனான உறவு வலுப்பட்டது. சர்வோத்தமனுடன் தான் எவ்வளவு விவாதித்திருக்கிறேன்? எதைப் பற்றி குழப்பமாக பேசினாலும் தெளிவாக புரிந்து கொள்ளும் ஒரு நண்பன். அதே போல் இந்த வாழ்வின் பிரச்சனைகளை அறிவுத்தேடலால் தீர்க்க முடியும் என என்னைப் போல் நம்பி தீவிரமாக நகர்பவர். வாழ்வில் சலிப்பற்று மணிக்கணக்காய் அறிவார்ந்த விசயங்களை வேறு யாரிடமும் பேசியதில்லை. அவருடனான உரையாடல்கள் இவ்வருடத்தின் சிறந்த பகுதிகள்.

சில எதிர்மறையான விசயங்களும் உள்ளன தாம். தாங்க முடியாத ஒரு அலுப்பு ஏற்படுகிறது. எழுதுவது, படிப்பது, வகுப்பில் பாடமெடுப்பது தவிர்த்து மிச்ச நேரம் அர்த்தமற்றதாய் தோன்றுகிறது. முடிந்தளவு மனதை இதைப் பற்றி யோசிக்க விடாமல் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். இவ்வருடம் ஒரு கடல் அலை போல் என்னை தூக்கிக் கொண்டோடட்டும்! இவ்வருடம் போன்றே அடுத்த வருடமும் “அதற்குள் அடுத்த பிறந்தநாளா?” என குழம்ப ஆசைப்படுகிறேன்.

3 comments:

mahesh said...

iniya pirantha naal vazthukal sir.

krish said...

இந்த வருடம் போலவே,வரும் வருடமும் அமையட்டும்!

தீதும் நன்றும் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எழுத்தாளர் அவர்களே....பாராட்டுக்களின் பால் ஏன் தங்களுக்கு இத்தனை எதிர்மறையான எண்ணம்....பாராட்டுக்களை இந்த அளவு உதாசினப்படுத்துவது பாராட்டுபவர்களின் எளிய அன்பை முகத்திற்கு நேராக புறக்கணிப்பது போல் உள்ளது. பல்வேறு தளங்களில் பல்வேறு பதிவுகளில் பாராட்டுக்களால் தாங்கள் மிகவும் தொந்தரவுக்குள்ளானதாக குறிப்பிடுகிறீர்கள்..ஒவ்வொரு பாராட்டுக்குப் பின்னரும் ஏதோ உள்நோக்கு இருப்பதாகவும், எதிர்பார்ப்பு இருப்பதாகவும், மிகுந்த தொந்தரவுக்கு உள்ளாவது போலவும், எதிரி வைக்கும் பொறி போலவும் தாங்கள் ஏன் கருதுகிறீர்கள் என்று எனக்குத் துலங்கவில்லை. ஏனென்றால் உங்களை ஒருமுறை மின்னஞ்சலில் பாராட்டிவிட்டு பின்னர் நீங்கள் எழுதிய கட்டுரைகளைப் வாசித்த போது மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டது. நீங்கள் இன்னும் நிறைய பாராட்டுக்களை நிச்சயம் பெறுவீர்கள் என்று உங்கள் பிறந்த நாளில் இன்னும் அதிக அன்போடு சாபமிடுகிறேன். நன்றி