Monday, December 29, 2014

ஆறாவடு: ஷோபாசக்தியும் சயந்தனும்


சயந்தனை ஷோபாசக்தியின் குட்டித்தம்பி என்று சொல்லலாம். ஒரே உலகம். ஒரே பார்வை. நாவலின் கதைக்களனும் மையப்பாத்திரமும் கூட கிட்டத்தட்ட ஒன்று தான். ஈழப் போர். ஒரு பக்கம் புலிகளும் இன்னபிற சிறு போராட்ட குழுக்களும். இன்னொரு பக்கம் சிங்கள ராணுவம். இடையில் அரசியலற்ற ஒரு மக்கள் திரள். அவர்கள் இலங்கைப் படை மற்றும் போராட்ட குழுக்கள் மத்தியில் மாட்டிக் கொண்டவர்கள். ஆற்றில் ஒழுக்கில் இழுத்துக் கொண்டு போகப்படும் மரத்துண்டை போன்றவர்கள்.


கதைசொல்லி இத்திரள் மத்தியில் இருந்து வருகிறவன். அவன் தப்பித்து வெளிநாட்டுக்கு செல்ல முயல்கிறவன். அங்கும் கடும் அரசியல் மற்றும் உளநெருக்கடியை சந்திக்கிறவன். சயந்தனின் நாயகன் வெளிநாட்டு மண்ணை அடைகிற போராட்டத்திலேயே உயிர்விட்டு விடுகிறான். ஷோபாசக்தியின் நாவல்கள் “சிதைந்த பிரதியின் பிளவுண்ட குரல்” எனும் தொண்ணூறுகளின் பின்நவீனத்துவ பாவனைகள் கொண்டவை. சயந்தன் எதார்த்தவாத பாணியை பின்பற்றுகிறார். ஆனால் கதைசொல்லியை அமுதன், அவன் என இரண்டாக உடைத்து, இருவரின் பார்வையிலும் சம்பவங்களை கலைத்துப் போட்டு கூறி இறுதியில் இருவரையும் இணைக்கிறார். ஆனால் இந்த தொழில்நுட்ப பிரயத்தனங்கள் சயந்தனிடம் ரொம்ப தொந்தரவாக இல்லை.

எப்படி ஒரு ஷக்கீலா படத்தில் திரைமுழுக்க அவரது ரூபம் பரந்து விரிந்திருக்குமோ அது போல் ஷோபாசக்தியின் மொழியிலும் அவரே ஆதியும் அந்தமுமாக இருப்பார். இந்த சுயமுன்னெடுப்பு அல்லது சுய-வாந்தியெடுத்தல் ஷோபாசக்தியின் ஒரு பலவீனம். எந்த பாத்திரத்தை, சம்பவத்தை சித்தரிக்கும் போது அவரது விமர்சனம், கருத்து, தீர்மானம் அதில் நீட்டிய வாளைப் போல் துருத்தி நிற்கும். அவரது பிரமாதமான அங்கதத்தை சற்று மாற்று குறைப்பது இது தான். ஆனால் சயந்தனிடம் இந்த துருத்தல் இல்லை. ஷோபா சக்தியிடம் நாவல் வடிவம் பழிவாங்கத் திரியும் ஒரு வெஸ்டர்ன் பட நாயகனின் துப்பாக்கி போல் உள்ளது. அவர் யாருக்கோ சதா பதில் கூறும் முனைப்பில் இருப்பார். அவரது மொழியின் முகத்திரையை விலக்கினால் தெரியும் வன்மத்தின் பின் ஒரு சுய-நியாயப்படுத்தல் உள்ளது. அந்த சுய-நியாயவாதத்தின் பின்னே ஒரு குற்றவுணர்வும் தொனிக்கிறது. சயந்தனிடம் இந்த சிக்கலும் இல்லை. சயந்தனின் “ஆறாவடு” ஒரு ஐரோப்பிய போர்நாவலைப் போல் வாசிக்க தொனிக்கிறது. கிட்டத்தட்ட “கொரில்லா” நாவலை அத்தியாயம் அத்தியாயமாக முன்மாதிரியாக வைத்து எழுதப்பட்டிருக்கா விட்டால் இந்நாவல் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும்.

 ஆனால் இந்த தாக்கத்தையும் மீறி பல தரப்பட்ட மனிதர்கள், அவர்களின் போர்க்கால நெருக்கடிகள், போர் எனும் கண்மூடித்தனமான சுழல்காற்றில் மக்கள் மாட்டிக் கொண்டு உருத்தெரியாமல் மாறுவது ஆகியவற்றை துல்லியமாக சித்தரித்திருக்கிறார். சயந்தன் தன் ஆளுமையின் வண்ணத்தை பாத்திரங்கள் மேல் ஏற்றாமல் சுயமாக திரிய விட்டிருக்கிறார். இவ்விசயத்தில் அவர் ஷோபா சக்தியிடம் இருந்து வெகுவாக மாறுபடுகிறார்.
சயந்தன் எந்த பாத்திரத்தையும் ஒரு கருத்தை பதிய வைக்கும் கருவி ஆக்குவதில்லை. இதற்குள் ஒவ்வொருவருக்கும் ஒரு சுதந்திரமான வளர்ச்சியும் போக்கும் இருக்கிறது. சில பத்திகளே வரும் அமுதனின் காதலியான அகிலாவின் அப்பா பாத்திரத்தை உதாரணம் சொல்லலாம். ஒரு போராளி தன் மகளை மணப்பதில் அவருக்கு மாறுபாடில்லை. அதேவேளை தன் மகள் நிம்மதியாக வாழ வேண்டுமென நினைக்கிறார். இரண்டும் ஒரே நேரத்தில் சாத்தியமில்லை. இது அவர் நெருக்கடி. போரில் ஒரு காலை இழந்து செயற்கைக் கால் பொருத்தியிருக்கிறான் அமுதன். அவனிடம் பேசும் போது இயல்பாக அவரது பார்வை அவனது பேண்ட் விளிம்பிற்கு வெளியே தெரியும் செயற்கைக் காலை தொட்டுப் போகிறது.

அது போல் நேரு ஐயா எனும் ஆங்கில் ஆசிரியர் பாத்திரம். அவர் புலிகளுக்காய் போராட்ட வரலாற்று நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கி தருகிறார். அவருக்கு புலிகள் மீது விமர்சனம் இருந்தாலும் பணத்துக்காய் வேலை செய்கிறார். அவரிடம் இருந்து மொழியாக்கிய தாள்களை வாங்க வரும் அமுதனிடம் அவர் கொள்ளும் உரையாடல்கள் வெகு தமாஷானவை. அமுதனுக்கு போராட்ட தெளிவில்லை. அவன் தன் செருப்பு திருடியவனை கண்டிக்க போய் ராணுவத்திடம் சிக்கி, ராணுவத்துக்கு ஆதரவாய் செயல்படும் ஒரு தமிழ் விடுதலைக் குழுவிடம் மாட்டி நிர்பந்தமாய் அதில் சேர்கப்பட்டு பின்னர் அதில் இருந்து புலிகளிடம் மாட்டிக் கொள்கிறான். அவனுக்குள் இயல்பாகவே ஒரு யூதாஸ் இருக்கிறான். கொஞ்சம் பயமுறுத்தினால் யாரை வேண்டுமானாலும் காட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறான். இந்த யூதாஸ்தனத்தை போராட்ட, லட்சியவாத மனப்பான்மைக்கான ஒரு மாற்றுப்பாதையாக ஷோபா சக்தி தன் புனைவுகளில் தொடர்ந்து முன்வைக்கிறார். நெருக்கடியின் போது ஒருவன் யூதாஸாகவும் இருக்கலாம், அவனுக்கான நியாயங்களும் உள்ளன என்பது ஷோபா சக்தியின் தரப்பு. அவரது எழுத்தின் சிறப்பு துரோகத்தின் உளவியலை ஆராய்வது தான். இதை சயந்தன் அப்படியே வரித்துக் கொள்கிறார். அமுதன் இயக்கத்தில் இருப்பதை விரும்புகிறான். குறிப்பாக போரை. வன்முறையில் லயிப்பதன் வழி அவன் தனது உளவியல் நெருக்கடியை மறக்க முயல்கிறான். ஆனால் சமாதான காலத்தில் அவன் பொதுமக்களை சந்திக்க நேர்கிற போது அவர்கள் புலிகளின் தவறுகள் பற்றி கேட்கும் சங்கடமான கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறான். அவன் சமாதான காலத்தை இதனாலே வெறுக்கிறான். மேற்சொன்ன நேரு ஐயா ஒரு அறிவார்ந்த விலகலுடன் இந்த நெருக்கடியை எதிர்கொள்கிறார். புலிகளின் கூட்டத்தில் பேசும் போது அவர்களை புகழ்ந்தும், அமுதனிடம் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது அவர்களை கேலி செய்வதிலும் அவருக்கு எந்த தயக்கமோ முரண்பாடோ இல்லை. இருவருக்குமான உரையாடல்கள் நாவலின் மிகச்சிறந்த பகுதிகளில் ஒன்று. அமுதன் புலிகள் குறித்த உண்மையை எதிர்கொள்ள விரும்பாதவன். ஆனால் உணர்ந்தவன். நேரு ஐயா அதை வெளிப்படையாக அவனிடம் கூறி அவனை எரிச்சலைய வைப்பதை ரசித்து செய்பவர். இவ்விடத்தில் அங்கதம் தன் உச்சத்தை தொடுகிறது.

அமுதனுக்கு ஒரு விலை உயர்ந்த பைபர் கண்ணாடி செயற்கை கால் உள்ளது. கப்பல் பயணத்தின் போது அவன் கடலில் மூழ்க அவனது செயற்கைக் கால் மட்டும் கரையடைகிறது. அதை எரித்திரிய விடுதலைக்காக போராடிய இத்ரிஸ் எனும் கிழவன் கண்டெடுக்கிறான். இக்கிழவன் தனது போராட்டத்தில் காலை இழக்கிறான். அத்தோடு போராட்ட நம்பிக்கையையும் கைவிடுகிறான். அவன் கடலோரத்தில் எளிய வேலைகள் செய்து பிழைக்கிறான். அவனது தகர செயற்கைக்கால் துருபிடிக்க அதற்கு பதில் புது தகரக்கால் வாங்குவதே அவன் கனவு. நாவலின் முடிவில் அவன் அமுதனின் செயற்கைக்கால் கிடைத்த மகிழ்ச்சியில் அதை முத்தமிடுகிறான். அவனுக்குள் எந்த இரக்கமோ இழப்புணர்வோ இல்லை. வாழ்க்கையை அதன் அடிப்படை நோக்கங்களுக்காக வாழ்ந்தாலே போதும், போராட்டமெல்லாம் மனிதனை அலைகழிக்கும் ஒரு செயற்கையான மிகை உணர்ச்சி என நினைக்கிறான். இது சரியா தவறா என்பது ஒரு புறம் இருக்கட்டும். அன்றாடத்தின் எளிமை தான் வாழ்வின் ரகசியம் எனும் சேதியை சயந்தன் தெரிவிக்க விரும்புகிறார். அமுதன் தன் காலை இழந்த பின் தான் அன்றாட வாழ்வுக்கு திரும்பி மக்களை அவர்கள் எதார்த்த தளத்தில் சந்திக்கிறான். இத்ரிஸும் அவ்வாறே தன் காலை இழக்கையில் தான் போராட்டத்தில் இருந்து இயல்பு வாழ்வுக்கு திரும்புகிறான். ஒரு செயற்கைக் காலுடன் சிரமமற்று நடப்பது ஒரு நாட்டின் விடுதலைக்கு இணையான ஒன்றும் தான் என அவனுக்கு ஒரு புரிதல் கிடைக்கிறது. இந்த மனநிலை அமுதனுக்கு இறுதி வரை வாய்க்கவில்லை. அதற்கு முன்பே இறந்து விடுகிறான். அமுதனுக்கு கிடைக்காத ஒரு மனநிலை இத்ரிஸுக்கு வாய்ப்பதையே இந்த இறுதிக் காட்சியில் அவன் செயற்கைக்காலை முத்தமிடுவது காட்டுகிறது. இவ்வாறு செயற்கைக்காலை சாமான்ய வாழ்வின் எளிமையின் குறியீடாக சயந்தன் சட்டென மாற்றிடும் தொழில்நுட்ப நேர்த்தி மிகவும் பாராட்டத்தக்கது.

அங்கதம் என்பது நகைச்சுவை தடவின நஞ்சு தானே. ஒருவரை அல்லது ஒரு அமைப்பை அல்லது ஒரு சித்தாந்தத்தை தன் விமர்சன இலக்காக்கித் தான் அது இயங்கும். எந்த அங்கதப் படைப்பும் இந்த விமர்சனப் பாங்கு காரணமாய் சற்று சுருங்கிப் போகும். மேற்திரையை விலக்கினால் ஒளித்து வைத்த துப்பாக்கி முனைகள் தென்படும். மிக மிக அரிதாகவே பகடிப் படைப்புகள் இலக்கியத்துக்கான பன்முகத்தன்மையை பெறும். அதற்கு படைப்பு தனது முதல்கட்ட விமர்சன நோக்கை தாண்டி மேலெழ வேண்டும். டான் குவிக்சோட் அவ்வாறு எழுகிறது. நைட்ஸ் எனப்படும் ரொம்பாண்டிக்கான மத்தியகால போர்வீரர்களின் கதைகளை பகடி செய்யும் முயலும் அந்நாவல்  மனித மனதின் பல்வேறு அபத்தங்களை சித்தரிக்கிறது. ஆனால் “ஆறாவடுவின்” ஆபாரமான பகடியும் அங்கதமும் அதன் ஒரு பலவீனமும் தான். போராட்டத்தை பகடி செய்வது எனும் முன் தீர்மானமானத்தை, மக்கள் அனைவரையும் ஈழ மற்றும் சிங்களத் தாக்குதலால் சமமாக பாதிக்கப்படவர்களாக காட்டுவது எனும் திட்டத்தை கடந்து இந்நாவல் எழவில்லை. அது வெறுப்பு எனும் சுயதளைக்குள் கட்டுண்டு போகிறது. உதாரணமாய், சிங்களவர்கள் மீதான வெறுப்பையும் மீறி அவர்களையும் தம்மைப் போல் போரில் பலியானவர்கள் தாம் என பார்க்க முடிகிற சயந்தனால் இந்திய ராணுவத்தினரை அவ்வாறு பார்க்க இயலவில்லை.

வெற்றி எனும் தீரமான போராளி, இந்திய ராணுவத்தினரை குண்டுவெடித்து கொல்லும் நிலாமதி எனும் பெண், அதே போல் இந்திய ராணுவத்தினரை பழி வாங்கும் தேவி எனும் மனம் பிறழ்ந்த பெண் ஆகிய பாத்திரங்களை ரொமாண்டிக்காக மிகையாக படைப்பக்கப்படிருக்கிறார்கள். பெரியய்யா கப்பல் பயணத்தின் போது இறந்து போகும் ஒரு சிறுவனின் மரணத்தை ஏற்க மறுப்பது, அவனை பிறர் நீரில் வீசுவதான இடங்களும் மிகையாக, கண்ணில் கிளசிரனை தடவும் நோக்கில் எழுதப்பட்டுள்ளன.

இவை மிகச்சின்ன குறைகள் தாம். ஆனால் ஒரு எழுத்தாளன் முதல் நாவல் இவ்வளவு சிறப்பாக எழுதப்பட்டிருப்பது தமிழில் என்றல்ல உலகளவில் கூட அரிது தான். 

1 comment:

Poovi Poovilangothai said...

ஆரா வடு என்னை வெகுவாக கவர்ந்த நூல். நீங்கள் அதன் குறைகளை சுட்டும் போது உன்மையில் எரிச்சலடைந்தேன். விமர்சனத்தின் கடைசி இரண்டு வரிகள் என்னை சமாதான படுத்தியது. உங்கள் கழுகு பார்வையில் இருந்து எதுவும் தப்ப முடியாது என்று உணர்கிறேன்.