சச்சின் சுயசரிதை: ஒரு பிம்பத்தின் பிரதிபலிப்பு


ஒரு சுயசரிதையில் நாம் முழுக்க அம்மணமாக வேண்டுமா? அல்லது இன்னும் கொஞ்சம் நாகரிகமாக பிக்கினியில் தோன்ற வேண்டுமா? முழுக்க வெளிப்படையாக எழுதப்படும் ஒரு சுயசரிதை உண்மையிலேயே வெளிப்படையானதா அல்லது அப்படி ஒரு பாவனை கொண்டுள்ளதா? சச்சினின் சுயசரிதையான Playing it my Way நூல் ஏமாற்றமளிப்பதாய் எழுந்த விமர்சனங்கள் பார்க்கையில் இக்கேள்விகளும் எனக்குள் தோன்றின.

சச்சின் நிறைய விசயங்களை மறைத்து விட்டார் என்பது அடிப்படை குற்றச்சாட்டு. ஒருவர் ஏன் அப்படி மறைக்கக் கூடாது? ஒருவர் தன்னை முழுக்க நிர்வாணப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பது இந்த பேஸ்புக், செல்பி வெறி காலத்தின் ஒரு அர்த்தமற்ற அழுத்ததின் காரணமாகவா? இன்று சற்றே தன் அந்தரங்கங்களை பாதுகாக்க விரும்பும் பொதுமனிதர்கள் மிகுந்த சந்தேகத்துடன் பார்க்கப்படுகிற, அவர்களை ஒரு காபரே பெண்ணைப் போல் மெல்ல ஒவ்வொன்றாய் மக்கள் துகிலுரிந்து பார்த்து மிகுந்த மனக்கிளர்ச்சி அடைகிற காலகட்டத்தில் வாழ்கிறோம். இன்று சாதாரணமாய் தன் தனிப்பட்ட வாழ்க்கையை பாதுகாக்க விரும்புகிற ஒருவரைப் பார்த்து நமக்கு சந்தேகமும் எரிச்சலும் தோன்றுகிறது. மிகை இன்று எதார்த்தமாகி விட்டது. சச்சின் போன்றவர்களின் மிதமான நிலைப்பாடுகள் உதிரியாக, சமூக விரோதமாக கூட, தோன்றுகின்றன.
சுயசரிதைகளில் இருவகை உண்டு. ஒன்று தகவல்பூர்வமாய், புறவயமாய் வாழ்க்கையை சித்தரிப்பது. இன்னொன்று மிக வெளிப்படையாய், ஆவேசமாய், உணர்ச்சிகரமாய், தன்னிலையின் உச்சமான ஒருவித அகங்காரத்தில் தன்னை சித்தரிப்பது. காந்தியின் “சத்திய சோதனை” படிக்கையில் அதில் வரும் சுயநிந்தனையும், அகந்தையற்ற தன்னிலையும், கூச்சமற்ற ஒரு நேர்மையும் அதிர்ச்சியூட்டவும் ஈர்ப்பு கொள்ளவும் வைக்கும். ஆனால் ஒருவர் மிக வெளிப்படையாய் பேசுவது ஒரு பாவனை, ஒரு பொறி என நாம் புரிந்து கொள்வதில்லை. எழுத்தாளன் தன்னைப் பற்றின கீழ்மையான சேதியை சொல்லி விட்டால் – காந்தி தான் அப்பாவின் மரண நிமிடங்களில் இச்சையை கட்டுப்படுத்தால் மனைவியுடன் கூடியதை குறிப்பிடுகிறார் – அவன் நேர்மையாக இருப்பதாய் நம்பி விடுகிறோம். ஆனால் இந்த வெளிப்படுத்தல்களில் ஒரு தேர்வும் திட்டமிடலும் உள்ளது. காந்தி தன் இளமையில் தன் கிராம அமைப்பில் இருந்த சாதியத்தை பற்றி எங்கும் குறிப்பிடுவதில்லை. சாதியத்தை ஒரு தனிமனித ஒழுக்கமாய் அவர் வலியுறுத்தினாலும் அது ஒரு அமைப்பு சார்ந்த பிரச்சனை எனவும் அவர் அறிந்திருந்தார். ஆனால் இந்திய பாரம்பரியத்தை கேள்விக்குள்ளாக்கக் கூடாது என அது சார்ந்த பார்வைகளை தன் சுயசரிதையில் மறைத்து விடுகிறார். ஆனால் இது போன்ற தவிர்ப்புகளை ஒருவர் புறவயமான சுயசரிதைகளில் செய்தால் அவர் மாட்டிக் கொள்வார். ஆனால் காந்தியினுடையது போல் அகவயமான எழுத்தில் தப்பித்து கொள்ளலாம்.
என்றுமே அதிகாரத்தை கேள்வி கேட்காத ஒரு மத்தியதர வாழ்க்கை மனநிலை கொண்ட சச்சின் இப்போது மட்டும் திடீரென இந்திய கிரிக்கெட் வாரியத்தை அதன் ஊழல் மற்றும் சூதாட்ட சர்ச்சைகளுக்காக விமர்சிப்பார் என நாம் எதிர்பார்க்க முடியாது. காந்தி எப்படி இந்திய பாரம்பரியத்தை புனித பசுவாக பார்த்தாரோ அதே போன்ற சச்சினின் தொழுவத்திலும் பல புனித பசுக்கள் உள்ளன. அவரது சுயசரிதை மீதான விமர்சனங்களின் மையம் இதுவாகவே இருந்துள்ளது என்பதால் நாம் இந்த விமர்சன தரப்பின் மிகையை, போலித்தனத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
சச்சினை ஓரளவு பின் தொடர்ந்து கவனித்துள்ளவர்கள் யாருமே அவர் வெளிப்படையாக சர்ச்சைகளைப் பற்றியோ தன்னைப் பற்றியோ சுயசரிதையில் பேசுவார் என எதிர்பார்க்க மாட்டார்கள். அதனாலேயே அவர் ஏன் சில சிக்கலான பிரச்சனைகளில் மௌனம் காக்கிறார் என கேட்கிறவர்களைப் பார்த்தால் வேடிக்கையாக உள்ளது.
இந்த கேள்விகளுக்கு ஓரளவு வழி அமைத்து கொடுத்ததும் கிரெக் சாப்பல் மற்றும் திராவிட் குறித்து அவர் எழுதியிருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தாம். அதுவும் சாப்பல் பற்றி அவர் புதிதாய் ஒன்றும் கூறவில்லை. எத்தனையோ முறை பலரும் அவரை ஒரு சர்க்கஸ் பயிற்சியாளர் என அழைத்திருக்கிறார்கள். அதையே சச்சினும் செய்கிறார். ஆனால் இந்நூலின் பதிப்பாளர்கள் ஒரு பரபரப்புக்காக இது போன்ற பகுதிகளை நூல் வெளியீட்டுக்கு முன் மீடியாவில் பிரசுரித்து செய்தி வரும் படி செய்தார்கள். இது “நையாண்டி” படத்தின் தொப்புள் சர்ச்சை போல் ஆகி விட்டது. சர்ச்சைக்காக நாக்கை சுழற்றி போனவர்கள் ஏமாற்றமாகி புத்தகமே வீண் எனும் முடிவுக்கு வந்தார்கள். சச்சின் நினைத்தால் இதை விட நூறு மடங்கு சர்ச்சைகளை தூண்டி விட்டு இந்திய கிரிக்கெட்டையே ஒரு வாரம் பரபரப்பாக எரிய விட்டிருக்க முடியும். ஆனால் சச்சின் வெளிநாடுகளில் இருக்கும் போது தனக்காக வீட்டு சாப்பாடு சமைத்து அளித்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் பெயர்களையே மறக்காமல் நன்றியுடன் பட்டியலிடுபவர். அவர் தொடர்ந்து பல கட்டங்களில் தன்னை பாதுகாத்து, தான் ஓய்வு பெறும் ஆட்டம் சொந்த மண்ணில் விழா கோலத்துடன் நடக்க வேண்டும் எனும் தனது வேண்டுகோளை நிறைவேற்ற மட்டுமே மே.இ தீவுகள் அணியை கரகாட்ட கோஷ்டி போல இந்தியாவுக்கு வரவழைத்து டெஸ்ட் தொடர் நடத்தின ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட வாரிய நிர்வாகிகளை பழிப்பார் என எப்படி எதிர்பார்க்க முடியும்? அப்படி இருக்க அவருக்கு முழு உரிமை உண்டு. ஒரு புத்தகம் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காக சச்சின் இன்னொருவராக முடியாது. அது போல் சச்சின் திடீரென கிரிக்கெட்டின் தீமைகளுக்கு எதிராக போராட வேண்டும் என எதிர்பார்ப்பதும் ரஜினி அரசியலுக்கு வருவாரா என கேட்பது போலத் தான்.
இந்த புத்தகம் வேறொரு வகையில் ஏமாற்றமளிக்கிறது. இதில் உள்ள 70% தரவுகள் நம்மிடம் ஏற்கனவே உள்ளவை. ஒரு கிரிக்கெட் அவதானிப்பாளராக சச்சின் மிக ஆழமான பார்வையுடையவர் என கூறுகிறார்கள். ஆனால் சச்சினின் கிரிக்கெட் குறித்த தொழில்நுட்ப மற்றும் உளவியல் ரீதியிலான அவதானிப்புகள் கிட்டத்தட்ட பதிவாகவே இல்லை என்பதே இந்நூலின் முக்கிய குறை. உதாரணமாய் சச்சின் தான் ஒரு சிறுவனாக கிரிக்கெட்டில் ஈர்க்கப்பட்டு அதில் முழுக்க ஈடுபட்ட அனுபவங்களை பேசும் போது அவருக்கு இந்த விளையாட்டு ஏன் பிடிக்கிறது, அது எப்படியான ஒரு ஆழமான உலகினுள் அவரை எடுத்துச் சென்றது என அவர் கூறுவதில்லை. மாறாக, கிரிக்கெட் ஆடும் போதும் ஆடாத போதும் அவரது புற உலகம், குடும்ப நிலை, அவரது குறும்புகள், சேட்டைகள், அடைந்த காயங்கள், அதன் விளைவுகள் இவை பற்றியே அதிகம் பேச விரும்புகிறார். ஒருமுறை சிறுவனாக கிரிக்கெட் ஆட்டமொன்றில் முகத்தில் காயம்ப்பட்டு அவரது வெள்ளைசட்டை முழுக்க ரத்தமாகிறது. ரத்தமான சட்டையுடன் பெரிய கிரிக்கெட் பையையும் தோளில் சுமந்து பேருந்தில் பயணித்து நகரத்தில் இருந்து வீட்டுக்கு வருகிறார். இப்பயணம் சச்சினுக்கு சங்கடமாக இருக்கிறது. வீட்டுக்கு வந்து அவர் யாரிடமும் சொல்லாமல் உடை மாற்றிக் கொள்கிறார். தான் இப்படி காயங்களை மறைப்பதால் அப்பா இரவில் அவர் தூங்கிய பின் அவரது உடலை தடவி சோதிக்கும் வழக்கம் கொண்டிருந்ததாய் கூறுகிறார். இப்படி தன் உடல் பற்றி எழுதுவதில் தான் சச்சினுக்கு அதிக ஆர்வம் உள்ளது. ஆனால் மும்பையின் சிவாஜி பார்க் மைதானத்தில் சிறுவர் கிரிக்கெட் எப்படி இருந்தது, தொழில்நுட்ப ரீதியாக அவரது ஆட்டம் எவ்வாறு பதிமூன்று வயதில் இருந்து பதினாறு வயதுக்குள் எப்படி மாற்றம் பெற்றது, தனக்கு பிடித்த விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் கவாஸ்கரின் மட்டையாட்ட நுணுக்கங்களில் தான் கவனித்தவை எவை என்பது பற்றி சச்சின் பேசுவதில்லை. ஒரு தொழில்நுட்ப, உளவியல் ஆட்டமாக கிரிக்கெட்டை சச்சின் எங்கும் அலசுவதோ அவதானிப்பதோ இல்லை. அவர் தனது ஆட்டவாழ்வின் பல புற நெருக்கடிகள், உலகறிந்த திருப்புமுனைகள், தகவல்கள், மைல்கற்கள் பற்றியே அதிகம் பேசிச் செல்கிறார்.
சச்சின் உக்கிரமாக, அந்தரங்கமாக விவரிப்பது தனது உடல் காயங்கள் தந்த வலி, சிகிச்சையின் போது உணர்ந்த தவிப்பு, பாதுகாப்பின்மை, பதற்றம், கலக்கம் ஆகியவற்றை தான். அவரது மோதிர விரலில் அறுவை சிகிச்சை செய்யும் போது அவர் உள்ளங்கையில் கிழிக்க வேண்டாம் என மருத்துவரை வலியுறுத்துகிறார். உள்ளங்கை கிழிக்கப்பட்டால் தன்னால் பின்னர் வழக்கம் போல் மட்டையை பற்றிக் கொள்ள முடியாது போகும் என அஞ்சுகிறார். இந்த பதற்றம் காரணமாய் அவர் அறுவை சிகிச்சையில் பாதியில் மயக்கத்தின் போது எழுந்து கொண்டு மருத்துவர்களிடம் “உள்ளங்கையை தொடவில்லை தானே?” என கேட்கிறார். கையின் பைசெப்ஸ் தசைக் காயத்திற்கான அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் மருத்துவரின் பரிந்துரையை மீறி பயிற்சி செய்கிறார். அப்போது அவரது தசை தனியாக கழன்று தொங்குகிறது. விரல் காயத்துடன் இங்கிலாந்தில் ஒரு வாடகைக்காரில் மனைவியுடன் பயணிக்கிறார். இறங்கும் போது அவரது அறுவை சிகிசைக்குள்ளான விரல் கார் கதவில் மாட்டிக் கொள்கிறது. வலி தாங்காமல் அவர் தரையில் விழுந்து துடிக்கிறார். ஓட்டுநர் பயந்து போகிறார். அஞ்சலி ஓட்டுநரை அமைதிப்படுத்தி அனுப்புகிறார். பிறகு துடிக்கும் சச்சினை கையறு நிலையில் பார்க்கிறார். அவரை மெல்ல எழுப்பி உட்கார வைக்கிறார். இது போன்ற பல அதிர்ச்சியான விவரிப்புகள் அவரது காயங்களைப் பற்றி வருகின்றன. சச்சின் இவ்வளவு ஆர்வமாய் தன் காயங்களைப் பற்றி பேசுவது தனது சாதனைகளுக்கு பின்னே உள்ள வலி, தொடர்ச்சியான தியாகங்களை சுட்டிக் காட்டத் தான். முப்பது வயதுக்கு பிறகு அவர் ஏதாவது ஒரு வலியுடன் பல்லைக் கடித்தபடி தான் ஆட நேர்கிறது. நாம் பார்த்து வியந்த பல அட்டகாசமான இன்னிங்க்ஸ்களுக்கு பின்னால் திறமைக்கு ஒப்பாக வலியை பொறுத்து அதை மறந்து ஆடும் சச்சினின் உறுதியும் பிடிவாதமும் தெரிகிறது. இந்த பகுதிகள் இந்நூலில் படிக்க வேண்டியவை.
டென்னிஸ் முழங்கை காயத்திற்கான ஓய்வில் இருக்கையில் இரவில் தூங்க முடியாமல் தன் நண்பர்களை அழைத்து நள்ளிரவுகளில் அவர்களுடன் காரில் பயணம் போகிறார். அப்போது தான் அவருக்கு அமைதி கிடைக்கிறது. சச்சின் அழைத்ததனால் அவருக்காக நள்ளிரவில் தூக்கத்தையும் தொலைக்கும் நண்பர்களின் பக்திகரமான மனநிலையையும் நாம் கவனிக்க வேண்டும். சச்சினின் பைசப்ஸ் தசை கழன்று விட அவர் உடனடியாய் தில்லி போய் ஒரு மருத்துவரை பார்ப்பதற்கு ஒரு நண்பர் தனது பிரைவட் ஜெட் விமானத்தை அளிக்கிறார். ஆஸ்திரேலியாவில் ஒரு காரோட்டி சச்சின் மற்றும் அவர் மனைவியை இலவசமாக ஊர் சுற்றி காட்டுகிறார். சச்சின் அவருக்கு பதிலுக்கு ஆட்டத்துக்கான நுழைவுச்சீட்டுகள் மற்றும் அனைத்து வீரர்களின் கையெழுத்து பெற்ற ஆடையை ஞாபகமாய் அவருக்கு தருகிறார். அதற்காய் மெனக்கெடுகிறார். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா வென்றதும் அவரவர் போக்கில் கொண்டாட்டத்தில் இருக்க சச்சின் எப்போதுமே அவரது பெயரை உடலில் வண்ணம் பூசி அனைத்து ஆட்டங்களிலும் காட்சியளிக்கும் ரசிகரை அழைத்து டிரெஸ்ஸிங் ரூமில் வைத்து கௌரவிக்கிறார். “அவரை கௌரவிப்பதன் மூலம் நான் என்னை அது வரை ஆதரித்த அத்தனை ரசிகர்களுக்கும் மனப்பூர்வமாய் நன்றி செலுத்தினேன்” என்கிறார். நம்முடைய அன்றாட வாழ்வில் சாதாரணமாகவே எத்தனையோ உதவிகளை தெரியாதவர்களிடம் இருந்து பெறுகிறோம். ஆனால் சச்சினைப் போல் நாம் அவர்களை நினைவு வைத்து நன்றி கூறி எத்தனிப்பதில்லை. நாம் அதற்கெல்லாம் பாத்தியப்பட்டவர்கள் என சிறுமையாய் நினைக்கிறோம். சச்சினின் பணிவும் சின்ன விசயங்களில் காட்டும் கவனமும் நம்மை மிக அதிகமாய் நெகிழ்ச்சியடைய செய்வது இது போன்ற தருணங்களில் தான்.
இன்னொரு புறம் சச்சின் தன்னுடைய நண்பர்கள், ஆதரவாளர்களை ஒரு நீட்டிக்கப்பட்ட குடும்பமாக பார்க்கிறார். வேலை முடிந்து ஓய்வு கொள்ளும் குடும்பத் தலைவரிடம் பிற குடும்பத்தினர் நடந்து கொள்வது போல் இவர்கள் தன்னிடத்து நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார். தன்னை பாதுகாக்கும் நண்பர்கள், வாரிய நிர்வாகிகளிடத்து அவர் மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறார். அதனாலே இந்திய வாரியம் பற்றி அவர் கண்டித்து ஒரு சொல் கூட கூறியதில்லை. அதேவேளை தன்னை விமர்சித்த மஞ்சிரேக்கர், காம்பிளி போன்ற முன்னாள் நண்பர்களிடத்து சகிப்புணர்வு அற்றும் நடந்து கொள்கிறார். கங்குலி “ஜெ.ஜெ”, காம்பிளி “ஜி.நாகராஜன்” என்றால் சச்சின் ஒரு “பால்வண்ணம் பிள்ளை”. அவருடைய பவ்யமும் பணிவும் நேர்மையும் நமக்கு எந்தளவுக்கு நெகிழ்ச்சியூட்டுகிறதோ அந்தளவுக்கு சிலவேளை வேடிக்கையாகவும் படும். குடும்ப வரம்புக்குள் அவர் சீறுகிறார், பொங்குகிறார். அது திராவிடுக்கோ சாப்பலுக்கோ எதிராக இருக்கலாம். உச்சபட்சமாக கிரிக்கெட் அரங்கில் தன் வன்முறையை கலாபூர்வமாய் வெளிப்படுத்துகிறார். ஆனால் இரண்டுக்கும் வெளியே அவரால் ஒரு பசுமாட்டை விற்பதை விட வன்முறை காட்ட இயலாது.
சச்சின் பங்கெடுத்த பல முக்கியமான கிரிக்கெட் தொடர்கள் உள்ளன. மூன்று உலகக் கோப்பைகளை உதாரணம் சொல்லலாம். அப்போது ஒரு கிரிக்கெட் பார்வையாளனாக என்னென்ன கவனித்தார் என்பதைப் பற்றி சச்சின் ஒன்றும் எழுதுவதில்லை. அவரது கவனம் தனது ஆட்டம் எப்படி இருந்தது என்பதை வர்ணிப்பதில் உள்ளது. அதுவும் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் ஷோயப் அக்தரை அல்லது வார்னை சந்திக்கையில் தன் மனநிலை எப்படி இருந்தது, அவர்கள் தனிப்பட்ட முறையில் எப்படியானவர்கள், கிரிக்கெட் பண்பாடு அவரது ஆட்ட வாழ்வின் இரு பத்தாண்டுகளில் எப்படி மாறி வந்திருக்கிறது, அவர் சந்தித்த அணிகளுக்கு இடையிலான வித்தியாசங்கள் என்னென்ன என எவ்வளவோ விசயங்களை தவிர்க்கிறார். இது இந்நூலை சச்சினுடன் இணைந்து எழுதிய போரியா மஜும்தரின் தோல்வியாகவும் இருக்கலாம். அவரால் சச்சினை போதுமான படி, சரியான கோணத்தில் பேச வைக்க இயலவில்லை. அது போல் இந்நூலில் சில மோசமான தகவல் பிழைகளும் உள்ளன. என் கண்ணில் பட்டது 2003இல் மெல்போர்னில் சேவாக் 195 ஓட்டங்களுக்கு பிராட் ஹோகின் பந்தில் வெளியானார் என்பது. உண்மையில் அவர் ஆட்டமிழந்தது பகுதி நேர வீச்சாளரான காட்டிஷின் பந்தில். இது மிக அசட்டுத்தனமான பிழை. ஏனென்றால் பிராட் ஹோக் எனும் முழுநேர வீச்சாளர் என்றால் சேவாக் அன்று ஆட்டமிழந்திருக்க மாட்டார். அவரது கவனம் சிதறியதற்கு காரணமே பகுதி நேர வீச்சாளரான காட்டிஷ் வீச வந்து ஒரு புல் டாஸை போட்டது தான். அப்போதைய அணித்தலைவர் ஸ்டீவ் வாஹ் இதை ஒரு உத்தியாகவே செயல்படுத்தினார். சேவாகின் வெளியேற்றத்துடன் இந்தியா 286க்கு மூன்றில் இருந்து 366க்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விளைவாக ஆட்டத்திலும் தோற்றது. அந்த புல் டாஸ் பந்தை எந்த கிரிக்கெட் பார்வையாளனும் எளிதில் மறக்க இயலாது. ஆனால் இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் கொண்ட தகவல்களிலேயே பிழை உள்ளது என்பது இந்நூல் எவ்வளவு மோசமாக திட்டமிடப்பட்டு அவசரகதியில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு உதாரணம். இது போன்ற புத்தகங்களின் தயாரிப்பில் பிழைதிருத்துநர் மட்டுமல்லாமல் காப்பி எடிட்டர், மேனேஜிங் எடிட்டர் போன்று பலரும் சம்மந்தப்பட்டிருப்பார்கள். இவர்களும் சரி இதை எழுதிய மொஜும்தரும் சரி லட்சக்கணத்தில் இந்நூலுக்காக சன்மானம் பெற்றிருப்பார்கள். இத்தனை பேரையும் கடந்து இவ்வளவு அபத்தமான தவறுகள் செய்ய முடியும் என்பதற்கு இந்நூல் “அஞ்சானுக்கு” அடுத்தபடியாய் நல்ல உதாரணமாய் இருக்கிறது.
வெளிப்படையாய் எழுதப்படும் நூல்களும் சரி தர்க்கத்தால் தணிக்கை செய்யப்பட்டவையானாலும் சரி ஒரு நுணுக்கமான மனம் வெளிப்படுவதில் தான் சுயசரிதையின் வெற்றி உள்ளது. Straight from the Heart எனும் கபில் தேவின் சுயசரிதை கொதிக்கும் நீரை காலில் கொட்டிக் கொண்டது போன்ற நடையில் எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு சொல்லுக்கு இடையிலும் கபிலின் இதயம் துடிக்கும். அப்படி ஒரு ஆவேசம், இதோ என் நெஞ்சைப் பிளந்து பார் எனும் பாய்ச்சல். ஆனால் நூலில் கவனத்திற்குரியதாய் ஒன்றுமே இல்லை. கபில் பந்து வீச்சு பற்றியோ அக்காலத்தை உள்ளூர் கிரிக்கெட் ஆட்ட நிலைமை பற்றியோ, தன் காலத்தைய சிறந்த வீச்சாளர்கள் பற்றியோ பேசுவதில்லை. தன் அம்மா தனக்கு எவ்வளவு சப்பாத்தி சுடுவார், விளையாடி விட்டு வந்ததும் தான் எப்படியெல்லாம் சாப்பிடுவேன் என எழுதுகிறார். சாப்பாட்டுக்கு அடுத்தபடியாய் அவர் உணர்ச்சிவசப்படுவது தான் எந்தளவுக்கு உணர்ச்சிவசப்படுவேன் என்பதைப் பற்றித் தான். கவாஸ்கரின் Sunny Days எனும் நாட்குறிப்பு பாணியிலான நூல் புறவய சுயசரிதையும் எப்படி வெற்றாக இருக்க கூடும் என்பதற்கு உதாரணம். கவாஸ்கரின் ஆர்வம் தான் பிறருக்கு எதிராகவும் பிறர் தனக்கு எதிராகவும் செய்த அரசியலை பேசுவதும், பிற வீரர்களை மட்டம் தட்டுவது அல்லது கிண்டலடிப்பதிலும் தான். அவரும் கிரிக்கெட் பற்றி மிக குறைவாகவே எழுதுகிறார். உணர்ச்சிகர சுயசரிதைகளில் ஹெர்செல் கிப்ஸ் எனும் தென்னாப்ப்ரிக்க மட்டையாளரின் நூலான To the Point கிட்டத்தட்ட ஒரு நாவலைப் போன்று உணர்ச்சி ஆழம் கொண்டது. கறுப்பின அம்மாவுக்கும் வெள்ளைக்கார அப்பாவுக்கும் பிறக்கிற கிப்ஸ் கட்டுப்பாடற்ற சுபாவம் கொண்டவர். மிதமிஞ்சிய திறமையும் ஒழுக்கமின்மையும் இணைந்த ஒரு ஆளுமை. அவர் எப்படி தென்னாப்பிரிக்க உள்ளூர் ஆட்டங்கள் வழியாக சோபித்து தேசிய அணிக்கு வந்தது, அங்குள்ள வீரர்களின் கலாச்சார வாழ்க்கை, மதுபோதை சிகிச்சை மையத்தில் அவர் வாழ்கிற போது சந்திக்கிற மனிதர்கள், விவாகரத்து ஆன பின்னரும் அவரது வாழ்வில் அக்கறை காட்டும் மனைவி என பல சுவாரஸ்யமான வித்தியாசமான சித்தரிப்புகள் கொண்ட நூல் அது. அந்நூல் அவ்வளவு சிறப்பாக வந்ததற்கு இயல்பிலேயே நல்ல அவதானிப்பு திறன் கொண்ட கிப்ஸும், அவரை சரியாக பேட்டி கண்டு நூலை அவருடன் இணைந்து தீவிரத்துடனும் சரளத்துடம் எழுதிய பத்திரிகையாளர் ஸ்டீவ் ஸ்மித்தும் தான் காரணம். முன்னாள் இங்கிலந்து அணித்தலைவர் நசீர் ஹுசெனின் சுயசரிதை Playing with Fire கிரிக்கெட் ஆட்டம் எப்படி ஒருவரை ஒரு நரம்பியல் சீர்குலைவுக்கு கொண்டு செல்லக் கூடியது என்பதை மிக உணர்ச்சிகரமாக விவரிக்கும் ஒரு அபாரமான உளவியல் ஆய்வு. அந்நூல் சிறப்பாக வந்ததற்கு முக்கிய காரணம் ஹுசேன் கிரிக்கெட்டின் உளவியல் குறித்து தீவிரமாக சிந்திப்பவர் என்பது. இது அவரை ஒரு அற்புதமான அணித்தலைவராகவும் வர்ணனையாளராகவும் மாற்றியது. ஆகாஷ் சோப்ராவின் Beyond the Blues தில்லி உள்ளூர் கிரிக்கெட் அணி ஒன்றிணைந்து வெற்றியை நோக்கி பல தத்தளிப்புகளுடன் பயணித்த கதையை, சோப்ரா தான் எப்படி தனது தனிப்பட்ட தேசிய கிரிக்கெட் ஆட்ட வாழ்க்கையின் தோல்வியின் கசப்பில் இருந்து மீள அவ்வனுபவம் பயன்பட்டது என்பதை சேர்த்து சொல்லும் மற்றொரு அபாரமான நூல். இந்த நூல்களை ஒட்டுமொத்தமாய் பார்க்கையில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் எப்போதும் சிறந்த எழுத்தாளனாகவோ கூர்மையான சிந்தனையாளனாகவோ இருப்பதில்லை எனத் தோன்றுகிறது. இறுதியில் ஒருவரின் ஆட்டத்திறமை அல்ல, அவரது ஆளுமை தான் சுயசரிதையை உயிருள்ளதாக மாற்றுகிறது.
சச்சினின் இந்த சுயசரிதை சோபிக்காததற்கு மற்றொரு காரணம் அவரது இயல்பான கூச்சம். தன்னுடைய சிறப்புகளை கொஞ்சம் சுயவிமர்சனங்களுடன் துணிச்சலாக சொல்ல காந்தியிடம் இருந்த ஒரு மெல்லிய அகங்காரம் சச்சினுக்கு இல்லை. முத்தமிட்ட பின் சிவாஜி கணேசன் வெட்கப்படுவதை விட அதிகமாய் சச்சின் தன் சாதனைகளை பற்றி பேசுகையில் வெட்குகிறார்.
விக்ரம் சதாயே என்பவரின் How Sachin Destroyed my Life எனும் நூல் ஒரு ரசிகரின் சுயசரிதை மற்றும் சுயமுன்னேற்ற நூல் எனலாம். சச்சினின் நண்பரான இவர் அவரைப் பற்றின பல சுவாரஸ்யமான செய்திகளை கூறுகிறார். இந்திய கிரிக்கெட் அணியில் புதிதாக வருகிறவர்களை முக்காலியில் ஏறி நிற்க வைத்து கேள்வி கேட்டு கேலி பண்ணி அணியின் பகுதியாக அங்கீகரிக்கும் ஒரு சடங்கு உண்டு. இதை ஸ்டூலிங் என்பார்கள். ஒரு முறை அணியில் ஒரு வயதான மனிதர் மசாஜ் அளிப்பவராக சேர்கிறார். அவரை முக்காலியில் நிற்க வைத்து வறுத்தெடுக்கிறார்கள். இதை பார்க்க நேரும் சச்சின் மிகுந்த கோபம் கொண்டு அவரை தனியே அழைத்து போய் மன்னிப்பு கேட்கிறார். எப்படி ஒரு வயதான மனிதரை இப்படி அவமானப்படுத்தலாம் என தன் சக வீரர்களிடம் சீறுகிறார். அவர்கள் இளைஞர்கள். சச்சின் ஏன் கொதிக்கிறார் என அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் அது ஒரு மரபு, எல்லாரும் பின்பற்ற வேண்டியது என்கிறார்கள். வயதில் மூத்தவர்களை எந்த காரணம் கொண்டும் சிறுமைப்படுத்தக் கூடாது என சச்சின் அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். சச்சின் இதை ஆத்மார்த்தமாய் நம்புகிறவர் தான். அவர் சில மரபான விழுமியங்களை பிடிவாதமாய் பின்பற்றுகிறவர். அவரது பிரம்மாண்ட வெற்றிகளும் புகழும் அவரது ஆழ்மனதை தொடாமல் இருப்பதற்கு இந்த விழுமியங்கள் தரும் வாழ்க்கை குறித்த ஒரு பரந்து பட்ட பார்வை ஒரு காரணம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் காட்டப்பட்ட அலைவரிசையில் சச்சின் குறித்த ஆவணப்படத்தில் ஒரு சம்பவம் வருகிறது. 19 வயதில் அவர் யார்க்க்ஷைர் கவுண்டிக்காக இங்கிலாந்தில் ஆடுகிறார். அப்போது அவர் அங்கு வாழும் ஒரு முதிய இந்திய தம்பதியினருடன் வாழ்கிறார். தினமும் காலையில் சச்சின் சிற்றுண்டி தயாரித்து இவருக்கும் அளிப்பாராம். அப்போது சச்சின் ஒரு சர்வதேச நட்சத்திரம். ஆனால் அந்த பகட்டு எதுவும் அவரிடம் இருக்காது. ஒருநாள் சச்சின் கவுண்டி தொடரை பாதியில் நிறுத்தி ஊருக்கு கிளம்ப வேண்டிய அவசரம். நள்ளிரவில் அவர் அந்த முதியவரின் கதவைத் தட்டுகிறார். அவர் வியப்புடன் கதவு திறக்க சச்சின் தான் புறப்படப் போகும் தகவலை சொல்லி விட்டு காலில் விழுந்து வணங்குகிறார். அடுத்து அவரது மனைவியின் காலிலும் விழுந்து வணங்கி, அவர் தனது அம்மாவுக்கு இணையானவர் என கூறுகிறார். தனக்கு உறவோ சம்மந்தமோ இல்லாத, கூட வாழ நேர்ந்த ஒரு வயதான தம்பதியினரை சொந்த பெற்றோராக நினைத்து பணிய ஒரு பிடிவாதமான நன்மையும், மன உயர்வும் வேண்டும். அது சச்சினிடம் இருந்ததை கேள்விப்படுகையில் அவரது கிரிக்கெட் சாதனைகளை விட இது மிக உயர்வானது என படுகிறது. சச்சின் பற்றி இது போல் நாமறியாத, மிகுந்த மன எழுச்சி தருகிற பல கதைகள் உள்ளன. ஆனால் அவை அவரது சுயசரிதையில் இடம்பெறவில்லை என்பது ஒரு குறை தான். தன்னுடைய நன்மையை பற்றி பேச ஒரு தயக்கமற்ற அகங்காரம் வேண்டும். சச்சினிடம் அது இல்லை.
அஞ்சலியை காதலித்ததை பற்றி கூறுகையில் அவர் தன்னை விட வயதில் மூத்தவர் என்பதைக் கூட எழுத தயங்குகிறார். சச்சினை காதலுக்காய் நெருங்குவது தொடங்கி, திருமணத்துக்காக சச்சினின் பெற்றோர்களிடம் பேசுவதை வரை அஞ்சலி தான் முதல் அடி எடுத்து வைக்கிறார். சச்சின் அவர் அளவுக்கு கூச்சமுள்ள பெண்ணை விரும்பியிருந்தால் காதலையே தெரிவித்திருக்க மாட்டார். ஒருவிதத்தில் அஞ்சலி அவருக்கு சரியான ஜோடி. வயதில் மூத்தவர் என்பதாலும் இயல்பு காரணமாகவும் அவர் துணிச்சலானவர். சச்சினுக்குள் ஒரு வளராத சிறுவன் எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறான். தன்னை விட மூத்த பெண் மீது அவர் ஈர்ப்பு கொண்டதற்கு ஒரு ஈடிபல் காம்பிளக்ஸ் கூட காரணமாக இருந்திருக்கலாம். ஏனென்றால் ஆதிக்கம் செலுத்துவது போன்றே ஆதிக்கத்துக்கு உள்ளாவதும் கூட உறவில் ஆழமான மனக்கிளர்ச்சி தரும் ஒன்று தான். தன் மனைவியை இதுவரை பெயர் சொல்லி ஒருமுறை கூட அழைத்ததில்லை என சச்சின் கூறுகிறார். அது மட்டுமல்ல சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவின் போது அஞ்சலி மேடை நோக்கி வருகையில் சச்சின் தானாகவே எழுந்து நிற்கிறார். அஞ்சலி அனிச்சையாக அவரை நோக்கி “உட்காருங்கள்” என சைகை காட்டுகிறார். அதற்கு பின் தான் உட்காருகிறார். இதற்கு பொருள் தாம்பத்திய வாழ்விலும் சச்சின் இப்படி பணிவாக இருப்பார் என்றல்ல. ஆனால் சச்சின் இறுகூறான மனிதராகத் தான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் மிகுதியான பணிவுடன் ஆட்களை நடத்துபவராகவும் இன்னொரு புறம் சீண்டப்பட்ட ஈகோவின் தீவிர கோபத்தை (திராவிட், சாப்பல், மற்றும் பல வீச்சாளர்களிடம்) காட்டுபவராகவும். பொதுவாக குழந்தைகள் இப்படித் தான் இருப்பார்கள். இடைப்பட்ட நிலை குழந்தைகளுக்கு தெரியாது. இவ்வளவு தயக்கமும் கூச்சமும் சுயவிமர்சனமும் குழந்தைத்தனமான கோபமும் நிரம்பிய ஒரு ஆள் இப்படியான புத்தகத்தை தானே எழுத இயலும்!

 நன்றி: உயிர்மை, நவம்பர் 2014

Comments