Monday, December 22, 2014

புத்தக விற்பனையும் எளிய மக்களும்

புத்தகங்களை இலவசமாக விற்கலாமா என க்ரியா ராமகிருஷ்ணன் தமிழ் ஹிந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் புத்தகங்களை தரமாக அச்சிடுவது மிக விலைபிடிப்பான காரியம் என்றும், நாம் இன்னொரு புறம் புத்தகங்களை இலவசமாக கொடுக்க கேட்கிறோம், இது நியாயமில்லை என்றும் வாதிட்டிருக்கிறார். பண்பாட்டு அறிவு இலவசமாக ஒரு சமூகத்துக்கு கொடுக்கப்படும் என கேட்பதில் தவறில்லை. ஆனால் அதே வேளை புத்தகங்களுக்கு அரசும் மையசமூகமும் மீடியாவும் எந்த ஆதரவும் அளிக்காமல் பதிப்பாளர்களை மிகுந்த நெருக்கடிக்கு தள்ளி உள்ளது. எனக்குத் தெரிந்த பதிப்பாளர் தனது பத்திரிகை விலையை பத்து ரூபாய் உயர்த்தினார். எப்படி மக்கள் வாங்குவார்கள் என கேட்ட போது “பால் விலை ஏறினால் பால் குடிக்காமல் இருக்கிறார்களா?” என திரும்பக் கேட்டார். ஆனால் உணவு அத்தியாவசியப் பொருள். அதனை ஒரு பண்பாட்டு அறிவுச்சாதனத்துடன் ஒப்பிட இயலாது. ஆனால் பதிப்பாளரை அவ்வாறு பேச வைப்பது முழுக்க கைவிடப்பட்ட நிலை தான்.


இன்னொரு புறம் நாம் மத்திய, கீழ்மத்திய, அடித்தள மக்களின் கண்ணோட்டத்தில் இருந்தும் பார்க்க வேண்டும். ஒரு உதவி இயக்குநர் நண்பரிடம் பேசும் போது தனக்கு சம்பளம் நாலாயிரம் ரூபாய் என்றார். எப்படி சமாளிக்கிறீர்கள் எனக் கேட்க “எனக்கு எந்த தேவையும் பெரிதாய் இல்லை. புத்தகம் வாங்கவும் வெளியே போக வண்டி செலவுக்கும் பணம் கிடைத்தால் போதும்” என்றார். இந்த சமூகத்தில் அவரைப் போன்றவர்கள் புத்தகங்களை வெறுமனே வேடிக்கை பார்த்து கடந்து விட வேண்டும் என நாம் கூற முடியாது. புத்தகங்கள் வாசிப்பது ஒரு அடிப்படை உரிமை. அதை இந்த அரசும் சமூகமும் தனிமனிதனுக்கு அளிக்க வேண்டும். ஆனால் காலங்காலமாக விலை காரணமாய் புத்தகங்கள் சாதாரண மக்களூக்கு ஒரு கனவாகவே உள்ளது. நான் சிறுவனாய் இருக்கையில் பதினைந்து வயதில் தான் என் அப்பாவிடம் மிகவும் கெஞ்சி ஒரு புத்தகத்தை முதன்முதலில் வாங்கினேன், பிற்பாடும் என் வாசிப்பு இரவல் நூல்கள் வழி தான் நடந்தது. இது ஒரு அவல நிலை. ஒரு நாகரிக சமூகத்தில் சமூகத்தில் எந்த மூலையிலும் நூல்கள் எளிதாக எவர் கைக்கும் எட்டும்படி இருக்க வேண்டும்.

புத்தகங்கள் இலவசமாக கொடுக்கப்படுவது ஒன்றும் தவறல்ல. பண்பாட்டு அறிவு இலவசமாக கிடைப்பது நல்லது தானே. அதற்கான செலவை அரசு பார்த்துக் கொள்ளலாம். அரசு லேப்டாப் இலவசமாக வழங்குவது போல் நிறைய நூல்களை வாங்கி மாணவர்களுக்கு அளிக்கலாம். கல்லூரி வரையிலான மாணவர்கள் பதிப்பிப்பதற்கு அரசு ஒரு இலவச பதிப்பகம் ஆரம்பிக்கலாம். அதற்கு ஒரு நல்ல எழுத்தாளர் மற்றும் பதிப்பாளரை பொறுப்பாக வைக்கலாம். பிறகு இந்த சேவையை எளிய பொது மக்களுக்கும் நீட்டிக்கலாம். அரசின் உதவியின்றி மக்களுக்கு புத்தகங்களை கொண்டு சேர்ப்பது மிக சிரமம்.

புத்தகத்தின் விலை பற்றி கிரியா ராமகிருஷ்ணன் கூறுகையில்  மேற்தட்டினரின் சல்லித்தனத்தை சாடுகிறார். அவர் மாதம் ஆறாயிரம் சம்பாதிக்கிற ஆட்களின் நிலையையும் யோசிக்க வேண்டும். அவர்களெல்லாம் வாங்கவே முடியாது. பதினைந்தாயிரம் சம்பாதிக்கிறவர்கள்  புத்தக விழாவில் பதினைந்து புத்தகங்கள் வாங்கினால் அந்த மாதம் சாப்பிட முடியாது. அதனால் பதிப்பாளர்கள் ஒரு புத்தகத்தின் 70% பிரதிகளை மலிவான தாளில் அச்சிட்டு 60% குறைவான விலையில் விற்பதையும் முயற்சித்து பார்க்கலாம். என்னிடம் சேகரத்தில் உள்ள கணிசமான நூல்கள் நடைபாதைகளில் பொறுக்கியவை. அழுக்கானவை, கிழிந்தவை. எனக்கு அவற்றை படிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. மிக உயர்வான தாளில் பளபள அட்டையில் தந்தாலும் ராணிமுத்து தாளில் தந்தாலும் புத்தகத்தின் உள்ளடக்கம் தான் முக்கியம். மேலும் இன்றைய காலத்தில் புத்தகங்களை வருடக்கணக்கில் பாதுகாத்து வைப்பதும் நடைமுறைக்கு ஒவ்வாத காரியம். ஒரு முறை வாசித்தால் நிலைக்கும் அளவுக்கான தரத்தில் இருந்தால் அதுவே தாராளம். ரஷ்ய மொழியாக்க நூல்கள் முன்பு ரெண்டு, மூன்று ரூபாய்க்கு மலிவாக கிடைத்தன. அது போன்ற ஒரு நிலை தமிழ் நூல்களுக்கு வர வேண்டும் என்பது என் கனவு. புத்தகங்கள் மேட்டுக்குடியினருக்கு ஆனதாக மாறி வருகிறது. அந்நிலை மாற வேண்டும்!

1 comment:

Raghunathan V said...

I am surprised why the option of "Lending library" is not considered in the write-up. In my child-hood most of my reading took place thanks to lending library which could get me all sorts of books for a fixed affordable monthly subscription.