Monday, December 1, 2014

“நீராலானது” – யாருடனும் இல்லாமல் இருத்தல்“நீராலானது” 2001இல் வெளிவந்த தொகுப்பு. மனுஷ்யபுத்திரனின் தொகுப்புகளில் ஒரு களங்கமின்மையும் இளமையும் கொண்ட கவிதைகள் இதில் உள்ளன. இதன் பின்னர் அவர் இதை விட ஆழமுள்ள தொழில்நுட்ப நேர்த்தியுள்ள, தத்துவார்த்த செறிவுள்ள பல கவிதைகளை எழுதினார். ஆனாலும் இத்தொகுப்பில் உள்ள ஆழ்மன தத்தளிப்புகளும் உண்மையின் ஒரு கூர்மையான வெளிச்சமும் அவற்றில் இல்லை.

இத்தொகுப்பை அவர் “உன்னோடிருத்தல்”, “தன்னோடிருத்தல்”, “பிறரோடு இருத்தல்” என மூன்றாக பிரிக்கிறார். மனுஷ்யபுத்திரனின் இதற்கு முன்பான தொகுப்பின் தலைப்பு “இடமும் இருப்பும்” என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த “இருத்தல்” எண்பதுகளின் இருத்தலிய தாக்கத்தை நினைவுபடுத்துகிறது. ஆனால் இத்தொகுப்பில் ஒரு தத்துவார்த்தமான இருத்தலியத்தை பார்க்க முடியாது. ஆனால் இருத்தலின் ஒரு ஜென் தன்மையையும், இருப்பு குறித்த உளவியல் பூர்வமான பார்வையையும் வெளிப்படுத்துகிறது.

”நீ அமர்ந்து சென்ற இருக்கைகளில்/ துணி விரிப்புகள் கலைவதில்லை” என “தீண்டல்” கவிதை ஆரம்பிக்கிறது. ஒருவர் நம் அறைக்கு வந்து போன பின் அங்கு பௌதிகமாக எல்லாம் அப்படியே இருக்கிறது. ஆனாலும் நுட்பமாக எதுவோ ஒன்று மாறுகிறது. அவர் போன பின் அந்த இடம் மற்றொன்றாக இருக்கிறது. இருப்பு பற்றின உளவியலுக்கு இக்கவிதை ஒரு உதாரணம். ஒரு அறையோ ஒரு வீடோ நம் மனதின் ஒரு வெளிப்புற நீட்சியாக இருக்கிறது. நம் மனம் கலைந்து இருந்தால் அறையும் கலைந்திருக்கும். மனம் கலங்கலாக இருந்தால் அறையும் லேசான இருட்டுடன் இருக்கும்.

“நீராலானது” தலைப்புக் கவிதை “குற்றத்தின் கறைகளைப் போல கழுவித் தீராததாக…இல்லை உனதிந்த பிரியங்கள்” என்கிறது. இதுவும் உளவியல் கவிதை தான். மனித மனம் வெறுப்பிலும், வஞ்சத்திலும், பழி உணர்ச்சியிலும் கொள்ளும் தீவிரம் அன்பிலும் பாசத்திலும் இல்லை. மனம் மிக எளிதாக வெறுப்பினால் சுடர் கொண்டு எரிகிறது. அது நம்மை மிக இயல்பாக ஆட்கொள்கிறது. ஆக தீமை தான் மனித இயல்பா? அன்பு கட்டமைக்கப்பட்ட ஒன்றா? இத்தொகுப்பு முழுக்க மனுஷ்யபுத்திரன் அன்பின் பல்வேறு போலித்தனங்களைப் பற்றி பேசுகிறார். நாம் அன்பு குறித்த பிரக்ஞை அதிகமாகி விட்ட ஒரு உலகில் வாழ்கிறோம். கோடை வெயில் போல் அன்பு, பாசம், இரக்கம், நட்பு ஆகியவை நம்மை சுடுகின்றன. அன்பின் பிரச்சனை அது சொல்லாக மாறுவதில், செயல்படுத்தப் படுவதில் இருக்கிறது. ஒரு கவிதையில் அவர் நாம் இனி “அன்பு செலுத்துகிற கெட்டப் பழக்கத்தை … விட்டுவிட வேண்டும்” என்கிறார் (ஒரு நண்பருக்கு தெரிவித்துக் கொள்வது). அன்பு செலுத்துவதில் என்ன பிரச்சனை? அன்பு “செலுத்தப்படாமல்” இயல்பாக தோன்றி இருக்க வேண்டும். காமத்தை நாம் செலுத்த வேண்டியதில்லை. அது நம்மை அறியாமல் நம்மில் இருந்து பீறிடுகிறது. அன்பின் பிரச்சனை அது அவ்வாறு பீறிடுவதில்லை என்பது. நாம் அதற்கு பெயரும், கருத்தாக்கங்களும், முறைமைகளும், பெருமிதங்களும் அளித்ததும் அது செத்துப் போய் விடுகிறது.

அன்பின் போலித்தனம் பற்றின மற்றொரு கவிதை இது:
முகமூடி
சில பிரியங்கள்
குழந்தைகளை திடீரென பயமுறுத்தும்
முகமூடிகள் போல

சீக்கிரம் சிரித்து
சீக்கிரம் சகஜமாகலாம்”
“ஒரு பருவத்தின் கடைசி தினம்” தமிழில் எழுதபட்ட சிறந்த பிரிவுக் கவிதைகளில் ஒன்று. காதல் பிரிவு எப்படி நாடகமாகி நம் கண்ணில் படாத ஒரு அனுபவமாக நம்மை கடந்து போகிறது என பேசுகிறது இக்கவிதை.

மனுஷ்யபுத்திரன் கவிதைகளின் இரண்டு பிரதான உணர்ச்சிகள் கசப்பான எள்ளலும், pathos எனப்படும் ஒரு உயர்வான இலக்கியத்தனமான இரக்க உணர்வும். இத்தொகுப்பில் உள்ள “ஒரு பெரிய அவமானத்திற்கு பிறகு” எனும் பிரபலமான கவிதை pathosக்கு நல்ல உதாரணம். இதன் இறுதி வரிகள் முக்கியமானவை:
“எல்லையற்றது
இந்த உலகின் தீமை
எல்லையற்றது
இந்த உலகின் கருணை”

அவமானத்தின் காயங்களை பிறரிடம் இருந்து மறைந்து இயல்பாக இருப்பதாய் பாவித்து இருக்க வேண்டிய அவசியத்தை இக்கவிதை சொல்கிறது. ஏன் அப்படி இருக்க வேண்டும்? ஏனென்றால் இவ்வுலகம் இரு எதிர்முனைகளுக்குள் மாட்டி இருக்கிறது: எல்லையற்ற தீமை மற்றும் எல்லையற்ற கருணை. இவை இரண்டையும் நேரில் சந்திக்க மனிதனுக்கு சக்தியில்லை. இரண்டுமே நம்மை பைத்தியம் பிடிக்க செய்யும். ஆக அவன் இடையில் ஒரு பாவனையுடன் வாழ நேர்கிறது. இப்படி இரு தீவிர உணர்ச்சிகளிடம் இருந்து தப்பி ஓடுவதே நவீன வாழ்க்கை என இக்கவிதை சொல்கிறது.

“பிசாசை பழக்குதலும்” மிக பிரபலமான கவிதை. இது படைப்பாக்கம் பற்றின ஒரு கவிதை. இது நகுலன் பாணியிலான கவிதையும் கூட. கவிதைசொல்லி இரண்டாக பிளக்கிறான். நடைமுறை மனிதன், அவனுக்குள் உள்ள கலைஞன். கலைஞன் தான் இதில் வரும் பிசாசு. பிசாசை அவன் எப்படி நடைமுறை வாழ்வின் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு சமாளிப்பது என சொல்லித் தருகிறான். அதன் பற்களையும், நகங்களையும் பிடுங்கி, அணிகலன்களை கழற்றி, பறக்காமல் நடக்க பழக்கி “நாகரிகப்படுத்துகிறான்”. பின்னர் ஒரு பிரச்சனை வருகிறது. பிசாசுக்கு போரடிக்கிறது. தனிமையை போக்க என்ன செய்ய? கவிதை எழுத நினைக்கிறது. அப்போது தான் கதைசொல்லிக்கு கவலையும் பயமும் ஏற்படுகிறது. ஏனென்றால் நமக்குள் உள்ள கலைஞன் தன்னை கலைஞன் என சீரியசாக எடுக்குக் கொள்ளும் தருணம் நமக்கு பைத்தியம் பிடித்து விடும்.

“தமிழ் வாழ்க்கை” இந்திய வாழ்க்கை பற்றின கவிதை. இந்திய வாழ்க்கை ஒழுங்கற்று, குழப்பமாக, ஆபத்தாக இருக்கிறது. அழைப்பு மணிகள் வேலை செய்யாது. குளியறைக்கு தாழ்ப்பாள் இல்லை. விருந்தாளிக்கான நாற்காலிகள் உடைந்தவை. வாகனங்களில் பிரேக் சரியில்லை. அடிவயிற்றில் ஏதோ வலி. கொஞ்சம் சமாளித்து திரும்பிப் படுத்தால் வலியில்லை. இப்படி எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் பண்ணி வாழும் இந்த வாழ்வு உண்மையில் சிக்கலில்லாமல் சரளமாக தெளிவாக உள்ளது. ஆனால் இவ்வாழ்வை நீங்கள் ஒழுங்குபடுத்த நினைத்தால் அது மிக சிக்கலாக மாறி விடும். உதாரணமாய் நீங்கள் விதிமுறைகளை பின்பற்றி சாலையில் வண்டியோட்டி பாருங்கள். நிச்சயம் விபத்து நேரும். ஒரு பெண்ணிடம் சமத்துவமாக பழகிப் பாருங்கள். அவளை நீங்கள் அவமானப்படுத்துவதாய் கொதிப்படைவாள். அதனால் இங்கு “சீர்படுத்த வேண்டியவை ஏராளம்/ என்றாலும் சிக்கலற்றது/ தமிழ் வாழ்க்கை” என கவிதை முடிகிறது.

மனுஷ்யபுத்திரன் கவிதைகள் தொடர்ந்து உறவுகளில் உள்ள பாசாங்கைப் பற்றிப் பேசுகின்றன. அவரது ஒரு முக்கியமான அக்கறை மனிதன் எப்படி எல்லாம் பிறரிடம் தன்னை மறைத்துக் கொண்டு புதுப் புது நிறங்களை காட்டுகிறான், வேசங்கள் போடுகிறான் என்பது. “ஒரு சிறிய தவறு” கவிதையில் நண்பர்கள் கவிதைசொல்லியை ஏதாவது குற்றம் சொல்லியபடி இருக்கிறார்கள். தான் அப்படி என்னதான் தவறு செய்து விட்டேன் என யோசிக்கிறார். அவருக்கு தோன்றுகிறது: “ஒரு மாறுதலுக்காக என்னை நானே/ முக்கியமாக நினைத்துக் கொண்டதைத் தவிர/ வேறெந்த தவறும் செய்யவில்லை”. மனிதர்கள் அடுத்தவரிடம் உறவாடுகையில் அங்கு தம் முகத்தை, ஈகோவை காணத் தான் விரும்புகிறார்கள். அதனால் தான் தன்னை முழுமையாக வெளிப்படுத்தும் ஆட்களுடன் உரையாடுகையில் நமக்கு மூச்சுமுட்டல் ஏற்படுகிறது. நகுலனின் “என்னைப் பார்க்க வந்தவர்/ தன்னைப் பார் என சொல்லிச் சென்றார்” எனும் வரிகளை இக்கவிதை நினைவுபடுத்துகிறது.

இதில் உள்ள மிகச் சிறந்த கவிதை “கொலை நடந்த இடம்” தான். ஒரு ஆழமான மனவெழுச்சியை தரும் கவிதை இது. ஒரு கொலை நடந்த இடத்திற்கு கவிதை சொல்லி போகிறான். ஆனால் அங்கு அதற்கான எந்த தடமும் இல்லை. மனிதர்கள் மிக இயல்பாக இருக்கிறார்கள். கொலைக்களன் சுத்தமாக அலம்பி விடப் பட்டிருக்கிறது. மனம் கசந்து திரும்பி வரும் வழியில் அவன் பொம்மை வியாபாரி ஒருவரைப் பார்க்கிறான். அவர் தலையில் உள்ள கூடையில் பளிங்கு பொம்மைகள். கடவுளின் உருவங்கள். அதில் ஒன்றில் கொலையுண்டவனின் முகத்தை பார்க்கிறான். இந்த சமூகம் ஒருவரை கொன்றதும் முதலில் சுத்தமாக அவரை மறந்து விடுகிறது. அவரைப் பற்றின உண்மையான நினைவுகளை கழுவி விடுகிறது. அடுத்து அவரை தெய்வமாக்கி ஒரு புனித நிலையில் வைத்து நினைத்துப் பார்க்கிறது. இக்கவிதை எனக்கு கர்த்தரை நினைவுபடுத்தியது. கர்த்தர் ஒரு பலியாடு. சமூகம் எப்போதும் யாரையாவது பலி கொடுத்து தன்னை மேலெடுக்கிறது. சுத்தப்படுத்துகிறது. விடுதலை பெறுகிறது. கலைஞர்கள், உண்மையான அரசியல் தலைவர்கள், தியாகிகள், போராளிகள் என பலரும் இவ்வரிசையில் வருகிறார்கள். நமக்கு இவர்கள் தேவைப்படுகிறார்கள். நம்மை வழிநடத்த அல்ல. பலி கொடுத்து நம்மை உயர்த்திக் கொள்ள. மிக மிக மௌனமாக இயல்பாக ரத்தக் கறைகளை நாம் அலம்பிக் கொள்கிறோம். அவர்களின் ரத்தம் சற்று காலத்துக்காவது நம்மை நமது பாசாங்குகளில் இருந்து, இழிவுகளில் இருந்து காப்பாற்றுகிறது. பிறகு நாம் மீண்டும் சகதியில் வீழ்கிறோம். வாழ்கிறோம்.

No comments: