Thursday, November 6, 2014

கலாய்ப்பதன் அதிகாரம்: லிங்குசாமியும் பரட்டைகளும்-    (அக்டோபர் மாத “உயிரெழுத்தில்” வெளியான கட்டுரை)
பிரபலங்கள் மீது கல்லெறிய பொதுஜனத்துக்கு மிகவும் பிடிக்கும் என சுஜாதா ஒரு முறை சொன்னார். இது கொஞ்சம் முரணானது. ஏனென்றால் பொதுஜனத்துக்கு பிடிக்கும் என்பதால் தானே ஒருவர் பிரபலம் ஆகிறார். அதே பொதுமக்களுக்கு ஏன் அவர்களை அசிங்கப்படுத்த பிடிக்க வேண்டும்? வயிற்றெரிச்சலா? தாழ்வுணர்வா? இரண்டும் இருந்தால் இந்த பிரபலங்களை மக்கள் பிரபலங்களாக நீடிக்க விட மாட்டார்களே?
மனைவியை போட்டு அடித்து விட்டு பிறகு மல்லிகைப் பூ வாங்கிக் கொடுத்து கொஞ்சுவது போன்ற மனநிலை இது. இன்று இணையத்தில் சமூகத்தின் ஒரு சின்ன சதவீதம் இயங்க ஆரம்பித்து, அவர்களின் செயல்பாடு மீடியா கவனத்தையும் அதிகம் பெறும் நிலையில் மனைவியை மிதிப்பது வெறுமனே மனைவியை மிதிப்பதாக இன்று இல்லை. அரசியல் தலைமைகள் தொடர்ந்து இணைய விமர்சகர்களை உற்று கவனித்து வருகிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகளை தாக்கினால் கைது செய்வதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டன. இன்னொரு புறம் தேர்தலின் போது இணைய அரசியல் விவாதங்கள், சர்ச்சைகள், பிரச்சாரங்கள் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதையும் பிரதான கட்சிகள் உன்னிப்பாய் கவனித்து வருகின்றன.

இந்த சீரியசான சூழலில் தான் டுரோல்கள் (trolls) எனப்படும் கலாய்க்கும் கூட்டம் வருகிறது. இவர்கள் எல்லாரையும் கலாய்க்க மாட்டார்கள். மோடியையும் அத்வானியையும் சோனியாவையும் கலாய்க்க மாட்டார்கள். ஆனால் ராகுலையும் மன்மோகனையும் கலாய்ப்பார்கள். ஜெயலலிதாவையும் ராமதாஸையும் அழகிரியையும் ஸ்டாலினையும் கலாய்க்க மாட்டார்கள். ஆனால் கலைஞரையும் விஜயகாந்தையும் மட்டும் கலாய்ப்பார்கள். அதுவும் கலைஞர் ஆட்சியில் இல்லாத போதும், விஜயகாந்த தேர்தலில் சொதப்பும் போது தாராளமாய் கலாய்ப்பார்கள். இவர்கள் “பதினாறு வயதினிலே” பரட்டை மாதிரி. இவர்களுக்கு தெருமுனையில் கும்பலாய் உட்கார்ந்து பாவமாய் தம்மை கடந்து போகும் சப்பாணிகளை கலாய்த்து அழ வைக்க பிடிக்கும் ஒருவேளை சப்பாணி “இனிமே என்ன அப்பிடி கூப்பிடாதே” என்று விட்டால் உலகின் எல்லா டுரோல் கும்பல்களும் சேர்ந்து ராப்பகலாய் சப்பாணியை துரத்தி அடிக்கும்.
இணையம் ஒருபுறம் குரலற்றவர்களுக்கு குரல் அளிக்கிறது என்றாலும், அங்கு ஒருவித ஜனநாயகத் தன்மை இருக்கிறது என்றாலும் ஏன் அங்கு அப்பிராணிகள், அதுவும் பிரபலமான அப்பிராணிகள் அதிகம் தாக்கப்படுகிறார்கள் என்பதே என் கேள்வி. சமீபத்தில் பல படங்கள் தோல்வியை தழுவி இருக்கின்றன. பலத்த எதிர்பார்ப்போடு வரும் இத்தகைய படங்கள் மிக மோசமாய் அமையும் போது கடுமையாய் டுரோல்களால் கேலி பண்ணப்படுகின்றன. நியாயம் தான். அப்படித் தான் “அஞ்சான்” படம் கோமணம் உருவி துரத்தி அடிக்கப்பட்டது. நியாயமே! அதற்கு முன் “கோச்சடையானும்” பகடி செய்யப்பட்டது. தன் படத்தில் “கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி வைத்திருப்பதாய்” சன் டிவி பேட்டியில் பஞ்ச் வசனம் பேசியதற்காக லிங்குசாமி வரலாறு காணாத அளவுக்கு டுரோல்களால் தாக்கப்படுகிறார். அவர் பெயரில் மெமே எனப்படும் படத்துடன் கூடிய கேலி வசனங்கள் இணையத்தில் குவிகின்றன. அவரை கலாய்ப்பதற்காக டுரோல்கள் தனி பக்கங்களை ஆரம்பித்து நடத்துகிறார்கள். சிலர் இப்படி லிங்குசாமியை கலாய்க்கும் படங்களை தங்கள் புரொபைல் படமாக வைத்திருக்கிறார்கள். இங்கு இன்னொரு விசயம் எனக்கு புரியவில்லை. அது “அஞ்சானில்” நடித்த சூர்யாவோ “கோச்சடையானுக்காக” ரஜினியோ தம் அபத்த ஹீரோயிசத்துக்காக ஏன் கலாய்க்கப்படுவதில்லை என்பது. அந்த சினிமாக்களை உருவாக்கியவர்களில் ஆக சாதாரண நட்சத்திர மதிப்பு கொண்ட இயக்குநர்கள் தாம் கடுமையாய் கேலி செய்யப்பட்டார்கள். இதுவே இப்படங்களை இதே போல் மணிரத்னமோ கமலோ எடுத்திருந்தால் கலாய்ப்பதற்கு டுரோல்கள் தயங்கி இருப்பார்கள்.
ரஜினையையோ கமலையோ ஏன் கலாய்க்க வேண்டும் என்று கேட்டால் ஏன் கூடாது என நாமும் திரும்ப கேட்க முடியும். கலாய்ப்பது என்பதன் நோக்கமே ஒருவரின் அகங்காரத்தை, மிகையை மட்டம் தட்டி அவரை சமநிலைக்கு கொண்டு வருவது தானே. அப்படி இருக்க விளம்பர உள்நோக்கத்துக்காக “நான் ஒருவேளை அரசியலில் பிரவேசிக்கலாம்” என சமீபமாய் கூறி தேவையின்றி ஊடகங்களின் ஊகங்களை தூண்ட முனைந்த ரஜினியின் போலி அரசியல் விளையாட்டை ஏன் கலாய்க்க கூடாது? அது போல் தான் எடுக்கிற பழைய பாணி ஹாலிவுட் படத்துக்கு உலக சினிமா அளவுக்கு பந்தா பண்ணுகிற கமலை ஏன் கலாய்க்க கூடாது? ஆனால் டுரோல்களால் அது முடியாது.
ஏனென்றால் டுரோல்கள் சமூகத்தில் உயர்ந்தவர்களாக கருதுபவர்களின் நிழலை அண்டி வாழ்பவர்கள். அப்துல் கலாமில் இருந்து ரஜினி வரை இவர்களுக்கு ஏதோ ஒரு உளவியல் ஆறுதல் வழங்குகிறார்கள். உயர்மட்ட நட்சத்திரங்களின் அதிகாரத்தை அவர்களை பின் தொடர்வதன் வழி இவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் ரஜினியையும் கலாய்ப்பார்கள். இப்போது அல்ல. இன்னும் ஒரு இருபது வருடங்களுக்கு பின் கடுமையாக கலாய்க்க போகிறார்கள். அவர் அப்போது தன் நட்சத்திர மதிப்பை, சமூக அதிகாரத்தை வெகுவாக இழந்து பல்விழுந்த சிங்கம் ஆகி இருப்பார். அப்போது அவரை நோக்கி சில சின்னப் பையன்கள் கல்லெறிவார்கள். கூட சிலர் சேர்ந்து கெக்கெலித்து சிரிப்பார்கள். சிவாஜிக்கு அது நேர்ந்ததே. அவர் உச்சத்தில் இருந்த வேளையில் யாரும் அவரை கலாய்க்க துணியவில்லை. ஆனால் பின்னர் அவர் இறந்த பின் சினிமாவிலே அவரை தொடர்ந்து மிமிக்றி செய்து பகடி பண்ணாத நடிகர்களே இல்லை எனலாம். எம்.ஜி.ஆருக்கு அது நேராததற்கு அவர் அ.தி.மு.க மூலம் ஒரு பிம்பமாக செத்த பின்னும் ஒரு அதிகாரத்தை தக்க வைப்பது காரணம்.
டுரோல்களுக்கு அதிகாரம் தான் இலக்கு. அதிகாரம் உள்ளவர்களிடம் இருந்து அதை பகிர்ந்து கொண்டு அவர்களின் காலடியை ஒற்றி கண்ணில் வைத்துக் கொள்வார்கள். அதிகாரம் இல்லாதவர்களை மிதித்து தேய்த்து தம் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். இணையத்தில் பெண்கள் மிக அதிகமாக டுரோல்களால் தாக்கப்படுவது இதற்கு மற்றொரு உதாரணம்.
லிங்குசாமிக்கு ஆதரவாக வெங்கட் பிரபு பேசினார். ஒரு சினிமா நம் கட்டுப்பாட்டை மீறி சிலவேளை மோசமாக வந்து விடும். அதை அவ்வளவாய் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றார். உடனே டுரோல்கள் அவரையும் தாக்கினார்கள். அவர் ஒரு முக்கியமான கேள்வி கேட்டார். “அஞ்சான்” மட்டமான படம் தான். அதனால் அதை கேலி பண்ணுகிறீர்கள். சரி தான். ஆனால் அதே மாதிரி அல்லது அதை விட மட்டமான படங்களை நீங்கள் வெற்றி பெறவும் வைத்துள்ளீர்களே? வெங்கட் பிரபு இதே மொழியில் கூறவில்லை. ஆனால் அவர் உத்தேசித்தது இது தான். உதாரணமாய், “ராஜா ராணி” எனும் படுமட்டமான படம் பெரும் வெற்றி பெற்றது. இத்தனைக்கும் அது “மௌன ராகத்தை” காட்சிக்கு காட்சி ஈயடி காப்பிடித்த படம். அதைக் கூட யாரும் குறிப்பிட்டு கலாய்க்கவில்லை. பிறகு அந்த படத்தை ஏதோ உன்னத படைப்பு எனும் கணக்கில் விஜய் டிவியில் கொண்டாடினார்கள். அதையும் யாரும் கேலி பண்ணவில்லை. பொதுவாக ஒரு படம் வெற்றியடைந்து அதிகார பீடத்தில் உட்கார்ந்தால் அதில் என்ன தான் குறையிருந்தாலும் டுரோல்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்றல்ல. வெற்றி பெற்றால் உடனே எழுந்து தூசு தட்டி உட்கார இடம் கொடுப்பார்கள். “உங்களுக்கு உண்மையிலேயே நல்ல ரசனை உண்டென்றால் ஏன் “தங்கமீன்களை” வெற்றி பெற வைக்கவில்லை?” என வெங்கட்பிரபு கேட்கிறார். முக்கியமான கேள்வி. இங்கு இன்னொரு கேள்வி எழுகிறது.
படம் வெளியாகும் போது எல்லா இயக்குநர்களும் தாம் மிக பகட்டாய் பேசி படத்தை முன்னிலைப்படுத்துகிறார்கள். “எந்திரன்” வெளியான போது சங்கர் பல பிரபலங்களை டிவி மேடைக்கு கொண்டு வந்து அதைப் புகழ்ந்து முழங்கச் செய்தார். ராமுக்கு அந்தளவுக்கு ஆள் பலம் இல்லை. அதனால் அவரே தன்னையும் தன் படத்தையும் பற்றி கொஞ்சம் மிகையாகவே பேச நேர்ந்தது. அதற்கு இந்த டுரோல்கள் “கிரேட் டிக்டேட்டர்” படத்தில் ஹிட்லர் பேசுகிற காட்சியில் ராமின் குரலை பின்னணியாக சேர்த்து யுடியூபில் அவரை குரூரமாக கலாய்த்தார்கள். “எந்திரன்” தோல்வி அடைந்திருந்தால் கூட சங்கரை இது போல் கலாய்த்திருக்க மாட்டார்கள். மணிரத்னம் தொடர்ந்து பல தோல்விப்படங்கள் கொடுத்திருந்தும் அவரை எளிதில் கலாய்க்க மாட்டார்கள். மிஷ்கினின் இரு “கலைப்படங்கள்” தோல்வியுற்ற போதும் டுரோல்கள் அவரை மரியாதையாகவே நடத்தினார்கள். அதாவது தோல்வியுற்ற படங்களை உடனே தர்ம அடி அடிப்பார்கள் என்றில்லை. இதிலும் ஒரு படிநிலை உள்ளது.
மணிரத்னம், பாலுமகேந்திரா, மிஷ்கின், ராம் என இந்த பட்டியல் போகும். ரொம்ப கீழே இருப்பவர் ராம் என்பதால் அடிக்கடி சில கற்கள் அவர் மீதும் விழும். அறிவுஜீவி இயக்குநர்கள் என்றால் அவர்கள் சொதப்பினாலும், மிஷ்கின் போல் ரொம்பவே சுயதம்பட்டம் அடித்து ஆரவாரம் பண்ணினாலும் டுரோல்கள் தேவையில்லாமல் அவர்களின் வம்புக்கு போக மாட்டார்கள். பெரிசு போகட்டும் என விட்டு விடுவார்கள். ஆனால் லிங்குசாமி போன்றவர்களுக்கு இந்த சலுகை எல்லாம் கிடையாது. இந்த சலுகை கிடைக்க “கலைப்படமாக” இருக்க வேண்டும் என்று கூட இல்லை. கலைப்படமாக பாவனை பண்ணுகிற ராஜூ முருகனின் “குக்கூவாக” இருந்தாலும் போதும். கேவலமாய் பட்டாலும் அந்த திசைக்கு தலை வைத்து படுக்க மாட்டார்கள்.
ஆனால் அதற்கு டுரோல்கள் சீரியசானவர்களை மதிக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். பேஸ்புக்கில் கோணங்கியை கிண்டல் பண்ண பக்கம் ஒன்று ஆரம்பித்திருந்தார்கள். அதில் அவரது கதையின் ஒரு பத்தியை போட்டு “என்ன பேத்தல் இது” எனும் கணக்கில் கேலி பண்ணினார்கள். சரி இப்படி கேலி பண்ணினவர்கள் இலக்கிய பின்னணியை பார்த்தால் அவர்கள் பாக்கியம் ராமசாமிக்கு அடுத்து ஒன்றுமே படித்திருக்க மாட்டார்கள். இதைப் போன்றே மிக சாதாரணமாக ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் என இணையத்தில் தெரியப்பட்ட யாரையும் தயங்காமல் கலாய்ப்பார்கள். கலாய்க்கும் முன் அவர்களின் எழுத்தின் வீச்சை தெரிந்து கொள்வதோ தமக்கு ஒரு வாசகனாக அந்த தகுதி உண்டா என இவர்கள் யோசிப்பது இல்லை. அது போகட்டும்; ஒரு உயர்ந்த இயக்குநரையோ நடிகரையோ அரசியல் தலைவரையோ கலாய்ப்பதற்கு தயங்கும் டுரோல்கள் ஏன் எழுத்தாளனை இவ்வளவு அலட்சியமாக நடத்துகிறார்கள்? இந்த எழுத்தாளர்கள் அலம்பல் பண்ணுகிறார்கள், மட்டுமரியாதை இல்லாமல் பேசுகிறார்கள், மாறி மாறி அடித்துக் கொள்ளுகிறார்கள் என நீங்கள் கூறலாம். ஆனால் தன்னை ஒரே நேரம் எழுத்தாளனாக, உலகமகா இயக்குநராக, நடிகராக, மார்க்ஸியவாதியாக, இந்துத்துவாவாதியாக, ஐம்பது வயதில் லெதர் ஜாக்கெட் போட்டுக் கொண்டு துள்ளித் தாவி சண்டை போடுகிறவராக அழிச்சாட்டியம் பண்ணும் கமலஹாசனை மட்டும் இதே போல் ஏன் இவர்களால் ஏன் கலாய்க்க தோன்றவில்லை? அரசியலே தெரியாமல் எல்லா மட்ட அரசியல் தேசிய பிரச்சனையிலும் தலையிட்டு படம் எடுக்கும் மணிரத்தினத்தை, உலகசினிமா பாவனையில் அவர் எடுத்த “கடலை” கலாய்க்க முடியவில்லை? ஏனென்றால் இவர்கள் கண்ணோட்டத்தில் அதிகார படிநிலையில் ஜெயமோகனும், கோணங்கியும், எஸ்.ராவும், மனுஷ்யபுத்திரனும் மிஷ்கின், பாலுமகேந்திரா, மணிரத்தினத்துக்கு வெகு கீழே இருக்கிறார்கள்.
இந்த மாதிரி அதிகார மனப்பான்மையுடன் பாமர மக்கள் செயல்பட்டாலும் பரவாயில்லை. இந்த டுரோல்கள் பாமரர்கள் அல்ல. தம்மை இலக்கியமும் அரசியலும் உலக சினிமாவும் அறிந்தவர்களாக காட்டிக் கொள்ளும் ஒரு மேட்டிமையான கூட்டம் தான் இந்த டுரோல்கள். ஆனால் இவர்களுக்குள் இயங்குவது ஒரு இரட்டை நிலை. ஒரு பக்கம் இணையத்தில் தம்மை அதிகாரத்தை கேலி பண்ணுகிறவர்களாக வீரசூரர்களாக காட்டிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் அதிகாரத்தை கண்டால் தவழ்ந்து தவழ்ந்து போய் ஷூவை நக்கி சுத்தப்படுத்துவார்கள். இது படிநிலை சார்ந்த அதிகாரம் செயல்படும் முறை. காலனிய காலத்தில் வெள்ளைக்காரர்களிடம் மண்டியிட்டு சேவை செய்த நம் ஆட்கள் கோட் போட்டு தலைப்பாகை அணிந்து தம்மில் கீழே இருக்கும் மக்களை வெள்ளைக்காரனை விட மிக கொடூரமாக நடத்தினர். அதிகாரத்துக்கு முழுக்க பணிகிறவர்கள் அவ்வாறு தான் மேலே இருந்து அதிகாரத்தை கடன் பெற்று அதை கீழே இருப்பவர்களிடம் காட்டி தம்மை தக்க வைப்பார்கள். அவர்களுக்கு அதிகாரத்தை எதிர்க்க தெரியாது.
இன்னொரு வகையில் கலாய்ப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தம் முதலாளி முன் மரியாதை காட்டுவார்கள். ஆனால் மறைமுகமாக தம் எதிர்ப்பை காட்டுவார்கள். சக ஊழியர்களிடம் முதலாளியை பகடி பண்ணுவார்கள். வேலையில் அக்கறை காட்டாமல் எதிர்ப்பை காட்டுவார்கள். வெளியே வந்து பழிப்பு காட்டுவார்கள். இவர்கள் தாம் உண்மையில் அதிகாரத்தை எதிர்ப்பவர்கள்.
ஆனால் டுரோல்கள் முதல் வகை. அவர்கள் அதிகாரத்தில் உள்ள ஒரு இயக்குநரையோ நடிகரையோ முதலாளியையோ கனவில் கூட கலாய்க்க மாட்டார்கள். அப்படி எதிர்த்தால் தம் அதிகாரம் காலியாகி விடும் என அஞ்சுவார்கள். படித்த மேதாவிகளான அவர்கள் ஒரு சாதாரண ரசிகனைப் போல் ரஜினி படத்துக்கு போஸ்டர் ஒட்ட மாட்டார்கள். பாலாபிஷேகம் செய்ய மாட்டார்கள். ஆனால் எந்த கூட்டத்தில் அதிக ஆள் பலமோ அங்கு சேர்ந்து கொள்வார்கள். மோடியை எல்லாரும் புகழ்ந்தால் இவர்கள் மோடி பக்கம் இருப்பார்கள். நாளை மோடியை எல்லாரும் திட்டினால் மெல்ல அப்பக்கம் இருந்து நகர்ந்து அடுத்து எங்கு போய் சேரலாம் என யோசிப்பார்கள். ஒரு படம் ஜெயித்தால் அதை இயக்கியதே தாம் எனும் கணக்கில் பேசுவார்கள். தோற்றால் காறித் துப்பி ஏதோ குடும்பப் பகை போல நடந்து கொள்வார்கள். இவர்களுக்கு போஸ்டர் ஒட்டும் ரசிகன் எவ்வளவோ மேல். தன் தலைவன் படம் நன்றாக இல்லையென்றால் ஏனோ படம் சரியில்லை, பரவாயில்லை என தன் போக்கில் போய் விடுவான். படம் தோற்கும் போது அவன் எதையும் இழப்பதில்லை. படம் வெற்றி பெறும் போது அவன் எதையும் அடைவதும் இல்லை.

அதிகாரத்தை எதிர்கொள்ளுவதில் இந்த ரசிகன் மூன்றாவது வகை. இவன் பார்க்க ரசிகனாக தெரிவான். ஆனால் மேதாவித்தனமாய் தெரியும் இணைய விமர்சகர்களை போல் அவன் அதிகாரத்திற்கு முழுமையான அடிமை அல்ல. ஏனென்றால் முழுமையான அடிமைகள் எப்போதும் தமக்கு கீழ் அடிமைகள் சிக்க மாட்டார்களா என அலைந்து கொண்டிருப்பார்கள். ரசிகன் ஒரு பண்ணை அடிமை என்றால் டுரோல்கள் மத்திய சாதிகள் போல. அவர்கள் இன்னும் ஆபத்தானவர்கள்.

2 comments:

V said...

மிகுந்த மரியாதையுடன் இந்த கட்டுரையை நான் வரவேற்கிறேன்! இவர்கள் தனக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கி கொண்டு கேலி செய்பவர்கள்... அந்த நேரத்தில் யாரை இழிவு செய்தால் தக்க புகழை பெறலாம் என்று அறிந்தவர்கள்... அதே நேரம் ஷங்கர், மணிரத்னம் போன்றவர்களை கலாய்த்தால் அதை கேள்வி கேட்டு வசை பாட ஒரு பெரிய கும்பல் இருப்பதை அறிந்தே இவர்கள் பலவீனமானவர்களை தாக்குகிறார்கள்... மேலும் இது சீரியஸாக செய்யப்படும் விஷயம் இல்லை... இவர்கள் நட்புவட்டத்தின் லைக்குக்கும் கமெண்ட் களுக்கும் வேண்டி செய்யும் சில்லரைத்தனமான வேளை இது... முதலில் ஒரு மெமோ போடுவார்கள் அதற்கு லைக் விழாவிட்டால் அல்லது ஷேர் செய்யாவிட்டால் வேலையை பார்த்து சென்று விடுவார்கள் மாறாக அதுவும் குறிப்பாக நட்பு வட்டார பெண்களுக்கு பிடித்துவிட்டால் தினம் ஒரு மெமோ தினம் ஒரு கலாய்ப்பு ஸ்டேட்டஸ் போட துவங்கி விடுகிறார்கள் ... இதை தடுக்க ஒரே வழி 'புறக்கணிப்பு'... போஸ்ட்க்கு லைக், காமென்ட் மற்றும் ஷேர் செய்யாமல் இருப்பதே அஅந்த புறக்கணிப்பு...

குமரகுரு

Dinesh said...

troller மனநிலை பற்றி நீங்கள் சொல்வதெல்லாம் சரி தான். அஞ்சான் படத்தையும் பார்த்தவர்களுக்கு tuning, மொத்த வித்தைக்கு எதிர்வினை செய்வதில் ஆச்சர்யம் இல்லை. மிஷ்கின் திரை மொழி குறித்து வெகுஜன ரசிகர்களுக்கு ஆர்வம் இல்லை. அதனால் மிஷ்கினை கலாய்ப்பதால் trollers TRP எகிறாது. தவிர மிஷ்கின் கொரிய படங்களில் இருந்து சில காட்சிகளை சுட்டாலும் தமிழுக்கு அது புதிது தானே. ஆனால் அஞ்சான் தமிழிலே வந்த பல படங்களின் கதையை தழுவி எடுத்து விட்டு tuning, மொத்த வித்தை என்று கதை விட்டால் trollers மூக்கு வியர்க்காதா என்ன :-)