Thursday, November 27, 2014

இலக்கிய கூட்டங்களில் ஏன் பிரியாணி போடக் கூடாது?


ஒரு நினைவஞ்சலி கூட்டம் பற்றின் அழைப்பிதழ் பார்த்தேன். சுமார் முப்பது பேர்கள் பேசுவதாய் போட்டிருந்தார்கள். அதை பார்த்த போதே எனக்கு தலை சுற்றியது. நாம் ஏனிப்படி பேசி பேசி மாய்கிறோம்? எல்லாருக்கும் பேச ஆசை தான். ஆனால் அது எல்லோருக்கும் புணர ஆசை தான், சாப்பிட ஆசை தான், அடிக்க ஆசை தான் என்பது போல. ஒரு வெளிப்பாட்டுக்காக பேசுவது வேறு, உரையாற்றுவது வேறு. நம்மூரில் ஒரு சின்ன கூட்டம் கூடினாலே யாருக்காவது உரையாற்றும் ஆசை வந்து விடும். அவர் ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் என்பார். யாரும் வாய் திறக்க மாட்டார்கள். ஏனென்றால் பேசியதை புரிந்து கொண்டு எதாவது கேட்பதென்றால் மெனக்கெட்ட காரியம். ஆனால் யாராவது மேடைக்கு வந்து கருத்தை சொல்லலாம் என்றால் ஆளாளுக்கு வந்து ஒரு மணிநேரம் பேசுவார்கள். இது ஒரு மேடை வியாதி. மற்றப்படி பேச மாட்டார்கள். ஆனால் மேடையை பார்த்தால் பொத்துக் கொண்டு பேச்சு வரும்.

சமீபமாய் ஒரு கூட்டத்துக்கு போயிருந்தேன். நானும் பேசுவதாய் ஏற்பாடு. என்னுடன் இன்னொருவரும் பேச இருப்பதால் எப்படியும் அவரே அதிக நேரம் எடுத்துக் கொள்வார் என எனக்குத் தெரியும். அதனால் எதற்கும் அவர் பேசி முடிக்கட்டும் என நான் ஒரு மணிநேரம் தாமதமாக போனேன். ஆனால் பாருங்கள் அப்போதும் அவரே பேசிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பவர் இன்னொருவர் பேசப் போகிறார் என்று அவரிடம் சொல்ல அவர் “ஓ இவரும் பேசப் போகிறாரா? நல்ல வேளை என்னை நினைவுபடுத்தினீர்கள். ஏனென்றால் பேச ஆரம்பித்தால் நான் நிறுத்த மாட்டேன். யாராவது பிடித்து நிறுத்தினால் உண்டு”. நான் இருபது நிமிடம் பேசினேன். அதையடுத்து ஒருங்கிணைப்பாளர் சுருக்கமாய் பேசினார். இதை அடுத்து பார்வையாளர்கள் பங்கெடுக்கும் விவாதம் என்றார். ஆனால் பார்வையாளர்கள் யாரும் கேள்வி கேட்கவில்லை. முதலில் பேசியவரே சில கேள்விகளை மனதில் கருதிக் கொண்டு பேச ஆரம்பித்தார். கூட்டம் எட்டு மணிக்கு முடிக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் அலாரம் வைத்திருந்தார். அவர் கூட்டம் முடிந்ததாய் அறிவித்தார். பேச்சாளர் தான் இன்னும் சொல்ல நிறைய உள்ளது என்று விசனிக்க அவர் “நீங்க வேணும்னா பேசுங்க. ஆனா கூட்டம் முடிஞ்சு போச்சு” என்றார். நாங்கள் மேடையில் இருந்து பார்வையாளர் அரங்கில் உட்கார்ந்தோம். அவர் பேசுவதை மரியாதையின் பொருட்டு இன்னும் அரைமணி நேரம் உட்கார்ந்து கேட்டேன். பிறகு பொறுக்க முடியாமல் வந்து விட்டேன். நான் கிளம்பிய பின்னும் அவர் எப்படியும் ரெண்டு மணிநேரத்துக்கு மேல் பேசி இருப்பார். விட்டால் நான்கு மணிநேரம், எட்டு மணிநேரம் கூட பேசுவார். அவரை யாராவது இழுத்து போதும் என உட்கார வைக்க வேண்டும். அதுவரை கால் தளர்ந்து, பசி மயக்கத்தில் விழுவது வரை பேசிக் கொண்டே இருப்பார்.

ஏதாவது விரிவாக தயாரித்து வந்து நீண்ட நேரம் பேசினால் பரவாயில்லை. அல்லது தொழில்முறை பேச்சாளர் என்றால் கூட ஒரு மணிநேரம் தாங்கும். ஆனால் இவருடையது ஒரு auto-speech பாணி. மனதில் தோன்றுவதெல்லாம் பேசுவார். எவ்வளவு பேசினாலும் சரியாய் பேசவில்லை என அதிருப்தி அவருக்கு இருந்து கொண்டிருக்கும். அதனால் திருப்தி வரும் வரை பேசிக் கொண்டே இருப்பார். அவருக்கு திருப்தியே வராது. பொதுவாக பேசத் தெரியாதவர்கள் நிறைய பேசுவார்கள். ஒருவர் மைக்கின் முன் நின்று “எனக்கு பேச வராதுங்க” என்றால் சுதாரித்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் ஒரு மணிக்கு குறையாமல் பேசுவார்.

எனக்கு பொழுதுபோக்காய் (கொஞ்சம் சீரியசாயும்) பேசும் பர்வீன் சுல்தானா, பாரதி கிருஷ்ணகுமார் போன்றோரை கேட்க பிடிக்கும். அதிகம் களைப்பில்லாத, டி.வி பார்க்கும் மனநிலையில் கேட்க வேண்டிய பேச்சுகள் இவை. அது போல் ஆன்மீக உரைகள், பாராயணங்களும் பிடிக்கும். இன்னொரு பக்கம் பதினைந்து பேர் உட்கார்ந்து பேசும் மிகத் தீவிரமான இலக்கிய விவாதங்களும் அணுக்கமானவை. நல்ல கருத்தரங்குகளும் புதிய சிந்தனைகளை தூண்டக் கூடியவை. ஆனால் எனக்கு இலக்கிய கூட்ட பேச்சுகள் பிடிக்காது. அடிப்படையில் எழுத்தின் அழகை பேசி புரிய வைக்க முடியாது. நல்ல வாசகர்கள் உள்ள ஒரு கருத்தரங்கில் இலக்கியத்தை விளக்கலாம். ஆனால் பொது அரங்கில் இலக்கியத்தை பற்றி பேசுவது அபத்தம். வாசகன் எழுத்துடன் மிக நெருக்கமாய் உரையாடக் கூடியவன். அவனுக்கு ஒரு நூலை வாங்க தள்ளுவண்டிக்காரர் கூவி விற்பது போன்ற பேச்சு தேவையில்லை. ஒருவேளை ஜனரஞ்சகமான எழுத்தை அதே போல் ஜனரஞ்சகமாய் பேசி வாங்க வைக்கலாம். ஆனால் இலக்கியத்துக்கு இது பொருந்தாது. 

இலக்கியம் ஒரு மெல்லிய புழு போல. கண்மறைவான இலைக்கு அடிப்புறமாய் அது நெளிந்து கொண்டிருக்கும். அதை நசுக்காமல் விட்டாலே போதும்.

அடுத்த முறை ஒரு கூட்டத்துக்கு போய் அங்குள்ள முண்ணூறு பேரில் எத்தனை பேர் புத்தகங்கள் வாங்குகிறார்கள் பாருங்கள். ஏற்கனவே வாசகர்கள் நிறைய உள்ள எழுத்தாளர் என்றால் அவர்கள் எந்த பேச்சையும் பொருட்படுத்தாமல் அந்நூலை வாங்கிப் போவார்கள். அல்லாவிட்டால் என்னதாய் மாய்ந்து மாய்ந்து பேசினாலும் வாங்க மாட்டார்கள்.

இதனாலே நான் இலக்கிய கூட்ட பேச்சுகளை வெறுக்கிறேன். அதுவும் ஐந்து நூல்கள் வெளியீடு என்றால் நான் அங்கேயே ஒரு கோமா நிலைக்கு சென்று விடுவேன். அது முழுக்க நேர வீணடிப்பு. இதனாலே சில கூட்டங்களில் புத்தகத்தை முகாந்திரமாக வைத்து பேச்சாளர்கள் முற்றிலும் சம்மந்தமில்லாத எதையாவது பேசிப் போவார்கள்.
ஆனால் ஒரு புத்தகத்துக்கு அறிமுகம் தேவைப்படுகிறதே? என்ன செய்யலாம்?

 ஒரு மேடையில் எழுத்தாளனையோ அல்லது வேறு ஒருவரையோ அந்நூலின் சில பக்கங்களை வாசிக்க சொல்லலாம். பிறகு சில கேள்விகளை எழுத்தாளனிடம் கேட்கலாம். போதும், அந்நூலின் சுவை வாசகனுக்கு கிடைத்து விடும். பெண் பார்க்கும் சடங்கு பார்த்திருப்பீர்கள் அல்லவா? பெண் வந்து முகத்தை காட்டி விட்டு பொய் விடுவாள். அதற்கு மேல் சில கேள்விகள். ஆனால் எங்காவது பெண்ணைப் பற்றி அவளது அப்பா, அம்மா, சித்தப்பா, பெரியப்பா என ஒவ்வொருவராய் ஒரு மணிநேரம் உரையாற்றுவார்களா? இந்த அபத்தத்தை நாம் இலக்கிய கூட்டங்களில் நிறுத்த வேண்டும். பத்து நிமிடம் வாசிப்பு, பத்து நிமிடம் கேள்வி பதில். ஒரு புத்தகத்துக்கு மேல் ஒரு கூட்டத்தில் பேசக் கூடாது. இது முடிந்ததும் பார்வையாளர்களுக்கு ஒரு விருந்து கொடுக்கலாம்? இலக்கியத்துக்கும் சாப்பாட்டுக்கும் என்ன சம்மந்தம் என நீங்கள் யோசிக்கலாம்.

பதினான்கு ஆண்டுகளுக்கு முன் நான் பிரிட்டீஷ் கவுன்சில் நடத்திய ஒரு புத்தக கூட்டத்துக்கு போயிருந்தேன். கூட்டம் முடிந்ததும் ஒரு விருந்து. அதில் நான் முதன்முதலாக வெள்ளை வைன் சுவைத்தேன். நான் அப்போது கல்லூரி மாணவன். கூட்டத்தையும் விருந்தையும் தனித்தனி அனுபவமாக பார்த்தேன். கூட்டத்தின் துவக்கத்தில் இருந்த ஒரு வித எரிச்சல் எனக்கு கூட்டம் விருந்துடன் முடிந்ததும் போய் விட்டது. நிம்மதியாக திரும்பினேன்.

மக்கள் ஒரு கூட்டத்துக்கு இலக்கியத்தை புசிக்க வருவதாய் நினைக்கிறோம்? ஆனால் இலக்கியம் என்று ஒரு பொதுப்படையான, தூய்மையான ஒரு பொருள் இல்லை. ஒரு புத்தகம் ஒரு பயன்படுத்தின சானிட்டரி நாப்கின் போன்ற பொருள். அது மிக மிக அந்தரங்கமான பொருள். எழுத்தாளனின் ஈகோவின் நீட்சி. ஒரு கூட்டத்தில் ஒருவர் ஒரு நூலைப் பற்றி பேசும் போது அந்த எழுத்தாளனின் ஒரு உறுப்பை பற்றித் தான் பேசுகிறார். உதாரணமாய் இந்த புத்தகத்தில் இது நன்றாக இருக்கிறது என புகழும் போது “இந்த எழுத்தாளரின் தொப்பையும் அதில் உள்ள மச்சமும் அழகாய் ரசிக்கத் தக்கதாய் இருக்கிறது” என்று தான் பொருள். அதனால் அவரது நண்பர்களுக்கும் சக எழுத்தாளர்களுக்கும் (அவர்கள் தான் கணிசமான பார்வையாளர்கள்) நிச்சயம் எரிச்சல் ஏற்படும். அருவருப்பாய் தோன்றும். ஏனென்றால் இன்னொருவரின் ஈகோ கொண்டாட்டத்தை எத்தனை நேரம் பொறுத்துக் கொண்டிருப்பது?

இருந்தும் நாம் ஏன் தொடர்ந்து இலக்கிய கூட்டங்களுக்கு போகிறோம்? அது ஒரு சந்திப்பு புள்ளியாக, வலைதொடர்பு வாய்ப்பாக இருக்கிறது. அங்கு நாம் போவதன் வழியாக இந்த இலக்கிய வட்டத்துக்குள் இருக்கிறோம் என நிரூபிக்கிறோம். நம்மூரில் திருமணம், வளைகாப்பு, இன்ன பிற சடங்குகளுக்கு நாம் போவதும் இதே போன்ற நோக்கத்துக்காகத் தான். ஒருவருக்கு கல்யாணம் என்றால் அவரைப் பிடிக்காத நூறு பேர், பெரிதாய் அவரிடம் அக்கறை இல்லாத இருநூறு பேர், வெறுமனே முகபரிச்சயத்துக்காக போகும் முன்னூறு பேர் போவார்கள். இவர்கள் திருமணத்தில் கலந்து கொள்கையில் கிடைக்கும் அன்பிலும் பூரிப்பிலும் திருப்தி உற மாட்டார்கள். இவர்களை திருப்திப்படுத்த தான் அங்கு விருந்து நடத்துகிறார்கள். வாழ்த்து சொல்கிறார்களோ என்னவோ சபிக்காமல் போவார்கள். குறைந்தபட்சம் சாபத்தை “சாம்பாரில் உப்பு குறைவு” என்ற புலம்பலுடன் நிறுத்திக் கொள்வார்கள்.

அலுவலகத்தில் நமக்கு ஒரு பதவி உயர்வென்றால் ட்ரீட் கொடுக்கிறோம். ஏன்? அதன் மூலம் அடுத்தவரின் வயிற்றெரிச்சலை குறைக்கவும், புதுசாய் வயிற்றெரிச்சல் கிளம்பாமல் இருக்கவும் தான். இன்னொரு நோக்கம் நமது தனிப்பட்ட மகிழ்ச்சியை பொருள் ரீதியாய் பிறருடன் பங்கு கொள்வது. ஒரு புத்தகம் வெளியிடுவது எழுத்தாளனுக்கு ஒரு தனிப்பட்ட கொண்டாட்டம் தானே? அவன் மட்டும் பிறரை வேடிக்கை பார்க்க கொண்டாடினால் எப்படி? இது ஒருவர் தன் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஆட்களை அழைத்து தான் மட்டும் பிறந்த நாள் கேக்கை வெட்டி முழுவதும் சாப்பிடுவது போல.


இலக்கிய கூட்டங்கள் அடிப்படையில் ஒரு சடங்கு, சமூக ஒன்றுகூடல் (social get together) என நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பேச்சை குறைத்து பரஸ்பர நலம் விசாரிப்புக்கும், குசலம் பேசுவதற்கும், வலை தொடர்புக்குமான இடமாக அது பிரதானமாய் மாற வேண்டும். அங்கு விருந்து வேண்டும். எனக்கு வசதி வந்தால் நான் என் புத்தக வெளியீட்டுக்கு பிரியாணி போடுவேன். பதினைந்து நிமிடங்களுக்குள் வெளியீடு மற்றும் அறிமுகத்தை முடித்துக் கொள்வேன். இலக்கிய ஆவியெழுப்புதல் கூட்டங்களில் எனக்கு நம்பிக்கையில்லை.

2 comments:

faqirsulthan said...

அடிப்படையில் இன்றைய கூட்டங்களை (எந்த வகையாயினும்) ஸ்பான்சர்கள்தான் வடிவமைக்கிறார்கள். அந்த ஏற்பாட்டாளர்களில் ஒருவர் வரவேற்புரையும் இன்னொறுவர் அறிமுக உரையும் எடுத்துக்கொள்ள, வரவேற்புரை பேசுபவர் வரவேற்பு என்றால் என்ன? என்றே ஒரு மணி நேரம் பாடம் எடுப்பார். ஏனென்றால் அது அவர் படியளக்கிற கூட்டம். கேட்டுத்தான் ஆக வேண்டும். துவக்கம் முடிந்து மெயின் பேச்சாளருக்கு மைக் வரும்போது அவரும் கூட்டமும் சோர்ந்து போக, பேசிய கூலிக்குத்தகுந்த நேரம் பேச வேண்டிய கட்டாயத்தில் அவரும், கேட்க வேண்டிய கட்டாயத்தில் நாமும். இன்னொரு வகை மசாலா கூட்டங்கள். ஆன்மிகக் கூட்டத்துக்கு அழைப்பு இருக்கும். ஆன்மிகப் பேச்சாளரும் வந்திருப்பார். அதற்கு படியளப்பவர் (எல்லாச்செலவும் சாப்பாடும்) அக்கூட்டத்தின் நடு நாயகமாக வீற்றிருப்பார். ஆரம்ப வரவேற்புரையிலிருந்து லொட்டு லொசுக்கு பேச்சாளர் எல்லாரும் அந்த படியளக்கும் பகவான் பற்றி மட்டுமே பேசுவர். கொடுமை என்னவெனில் ஆன்மிகம் பற்றி பேச வேண்டிய மெயின் பேச்சாளர் தனக்கு எதுவம் ஆகி விடக்கூடாதென்று அவரும் ஒருமணி நேரப்பேச்சில் அரைமணி நேரம் அவர் புராணம் பாட ஒரே கூத்தாக இருக்கும்.
இன்னும் இன்னும் இன்னும் உண்டு.

மு.கோபி சரபோஜி said...

சமீபத்தில் இப்படியான கூட்டங்களுக்கு சென்று வருகிறேன். அப்போது என் மனதில் எழும்பியவைகள் இங்கே கட்டுரையாக வாசித்த போது அது எனக்குமட்டுமான மனநிலை இல்லை என்று தோன்றியது. இங்கும் விருந்து உண்டு. கல்யாண வீட்டுக்கு வந்து வாழ்த்தி, மொய் வைத்து போகிறவர்களுக்கு தரும் சிறு அன்பளிப்பு போல இலக்கிய நிகழ்வுகள் எங்கும் அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடைசியாய் நீங்கள் சொல்லி உள்ள இலக்கிய எழுப்புதல் உண்மையான வார்த்தை. இலக்கிய கூட்டங்களில் பேசுபவர்களும், இலக்கிய வட்டத்தில் வலம் வருபவர்களும் உணர்ந்தால் நல்லது