Saturday, November 1, 2014

உயிரெழுத்து பேட்டி - பகுதி 4


யுவ புரஸ்கார் விருதை ஒட்டி உயிர் எழுத்து போனதற்கு முந்தின இதழை எனக்கு சிறப்பிதழாக கொண்டு வந்தார்கள். அதில் என் நீண்ட பேட்டி வெளியானது. அப்பேட்டியின் இறுதிப் பகுதி இது:

கேள்வி: 'கால்கள்' நாவல் மனிதர்களின் இருமை பற்றி பேசுகின்றதா அல்லது இயலாமைப் பற்றி பேசுகின்றதா?

ஆர்.அபிலாஷ்: இயலாமை பற்றி பேசவில்லை. ஆனால் வலிகளாலும் உடலின் வாதைகளாலும் உருவாகும் ஒரு மாற்று உலகை பற்றி பேசுகிறது. பிரதான பாத்திரமான மது தன் சூம்பின போலியோ காலுடன் உரையாடும் ஒரு இடம் வருகிறது. அவள் அந்த காலை இன்னொரு ஆளாக பார்க்கிறாள். தன்னுடே சதா கூட வரும், தனக்கு எந்த விதத்திலும் பயன்படாத ஒரு மௌன சாட்சியாக அவளுக்கு தன் கால் தோன்றுகிறது. அவளைப் போல் வேறு பலர் வருகிறார்கள். திடீரென பக்கவாதம் வந்து தளர்ந்து போகும் ஒரு விளையாட்டு வீரன், மனவளர்ச்சி இல்லாத ஒரு பெண், தான் சமைக்கிற எதையும் சாப்பிட விரும்பாமல் அதை வீணடித்து சதா தூங்கும் ஒரு மிக பருமனான பெண் வருகிறாள். இவர்களின் சார்பாய் மது இயல்பான உடல் கொண்டவர்களுடன் உரையாடுகிறாள். இதன் வழி தன் பாதை எது என அறிந்து கொள்கிறாள். முக்கியமாய், தன் ஊனம் சம்பந்தமான தன் பெற்றோர்களின் குற்றவுணர்வை எதிர்கொள்கிறாள். அந்த குற்றவுணர்வு அபத்தமானது என தத்துவ, அறிவியல் ரீதியாய் புரிந்து கொள்கிறாள். இது அவளை விடுவிக்கிறது. ஊனம் பற்றின இருமைகளை இந்நாவல் எதிர்கொள்கிறது எனலாம். உதாரணமாய், ஊனம் × ஊனமற்றவர் என உலகை வரையறுக்கிறோம். இந்த இருமையின் அபத்தத்தை கேள்வி கேட்கிறது.


கேள்வி: சுமார் இருபது ஆண்டுகள் தமிழ் இலக்கியப் புலத்தில் இயங்கி வந்துள்ளீர்கள். அதில் பெரும் பகுதியை வாசிப்புக்கே செலவழித்துள்ளதை அறிய முடிகின்றது. இன்று நீங்கள் கவனத்துக்குரிய படைப்பாளியாக ஒளிர்ந்துகொண்டு இருப்பதது எப்படி? 'கருவில் திரு' என்பார்களே அப்படியா?

ஆர்.அபிலாஷ்: முதலில், 'கருவில் திரு' என்பதை நான் நம்பவில்லை. உள்ளார்ந்த திறமையின் வெளிப்பாடு ஒருவனை எழுத்தாளனாக்குவதில்லை. நான் கடந்த ஐந்து வருடங்களாக அதிகமாக தொடர்ச்சியாக எழுதி வருகிறேன். அது என் மேல் ஒரு சின்ன கவனத்தை உருவாக்கி உள்ளது தான். நம் சூழலில் நீங்கள் ஒரு நல்ல கட்டுரையோ கதையோ எழுதினால் எழுத்தாளனாய் கவனிக்கப்பட மாட்டீர்கள். தொடர்ந்து நிறைய நல்ல படைப்புகளை கொடுத்தால் தான் வாசகர்கள் திரும்பி பார்ப்பார்கள். அப்போது உங்கள் சிறந்த ஏதோ ஒரு படைப்புக்கு அந்த பல படைப்புகள் மத்தியில் ஒரு தனி முக்கியத்துவம், அர்த்தம் உண்டாகும். இது நம் குரலுக்கு வாசகனை பழக்குவது போல. ஒரு சிறப்பான படைப்பை எழுதி இலக்கியத்தில் தடம் பதிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தொடர்ந்து இயங்குவது தான் எழுத்தாளனின் இடத்தை உருவாக்குகிறது. அப்படி செய்ய என்னை தூண்டியவர் மனுஷ்யபுத்திரன். நான் ஆரம்பத்தில் சில நல்ல கட்டுரைகளை எழுதியுள்ள நிலையில் இதற்காக நிறைய கவனிக்கப்படுவேன் என நினைத்திருக்கிறேன். ஆனால் அப்படி அல்ல, தொடர்ந்து தரமாக வாசகனுடன் உரையாடினால் தான் நாம் எழுதுகிற சிறப்பான விசயங்கள் கவனிக்கபடும் என பிறகு புரிந்து கொண்டேன். அதனால் நான் சட்டென உருவாகி கவனம் பெறுவதாய் நினைக்கவில்லை. நான் ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேன். ராகுல் திராவிட், லஷ்மண் போல். எழுத்துச் சூழலில் என்னுடைய இடம் அது தான். நான் சேவாக் அல்ல.

இரண்டாவதாய், எனக்கு நிறைய எழுதப் பிடிக்கும். வாழ்க்கையில் எனக்கு ரொம்ப பிடித்த விசயம் எழுதுவது. அது மட்டுமே மகிழ்ச்சி தருகிறது. சில நாட்கள் 12, 14 மணிநேரம் கூட தொடர்ந்து எழுதியிருக்கிறேன். களைப்பே தோன்றாது.

கேள்வி: உங்கள் குடும்பத்தில் இலக்கிய முன்னோடிகள் இருக்கின்றனரா? உங்களுடைய இலக்கிய முன்னோடிகள் என எவரை கருதுகின்றீர்கள்.
என் குடும்பத்தில் எழுத்தாளர் யாரும் இல்லை. என் இலக்கிய முன்னோடிகளாக தமிழவன், ராஜ் கௌதமன், எஸ்.ரா, ஜெயமோகன், சுந்தர ராமசாமி ஆகியோரை சொல்ல விரும்புகிறேன். மனுஷ்யபுத்திரன் பெயரை சொல்லவும் ஆசை தான். ஆனால் அவருக்கு நிகராக ஒரு கவிதை வரியை கூட என்னால் எழுத முடியாது. நான் அகல நின்று அந்நெருப்பை தரிசித்து கொள்கிறேன்.

கேள்வி: ஆங்கில இலக்கியத்தை பயின்ற நீங்கள் தமிழ் மொழியில் இத்தனை காத்திரமான படைப்பாளியாக மாறியது எவ்வாறு?

ஆர்.அபிலாஷ்: நான் தமிழ் இலக்கியம் படிக்கத் தான் ஆசைப்பட்டேன். ஆனால் என் அம்மா என்னை வற்புறுத்தி ஆங்கில இலக்கியம் சேர்த்து விட்டார்கள். ஆனால் பின்னர் இது எனக்கு பயன்பட்டது. பல நல்ல எழுத்தாளர்கள் ஆங்கிலம் மூலமாய் அறிமுகமானார்கள். ஆனால் அதற்கு முன்னரே பல ஐரோப்பிய கோட்பாடுகள், தத்துவ ஞானிகளை எனக்கு சிறுபத்திரிகைகளும் இங்குள்ள எழுத்தாள நண்பர்களும் தான் அறிமுகப்படுத்தினார்கள். அதாவது பி. முதலாண்டு ஆங்கிலம் படிக்கும் போதே எனக்கு டி.எஸ் எலியட்டும், ஜேம்ஸ் ஜாய்ஸும் அறிமுகமாகி இருந்தார்கள். ஆனால் கல்லூரியில் அவர்களை மூன்றாம் ஆண்டு தான் சொல்லித் தந்தார்கள். அது போல் பின்நவீனத்துவமும் இங்குள்ள சூழலில் நன்றாக அறிமுகமாகி இருந்ததால் எம். படிக்கையில் அது கல்லூரியில் படிக்க வேண்டி வந்த போது எளிதாக இருந்தது. அதனால் ஒரு விதத்தில் ஆங்கில இலக்கியத்தை கூட தமிழ் சிறுபத்திரிகைகள் வழியாகத் தான் கற்றுக் கொண்டேன் எனலாம். இப்போது சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் முனைவர் பட்ட ஆய்வும் தமிழ் நவீன இலக்கியத்தில் தான் செய்கிறேன். ஏற்கனவே இந்த சூழலில் இருந்து மிக அந்தரங்கமாய் நான் அறிந்து யோசித்துக் கொண்டிருந்த விசயங்களைத் தான் இப்போது ஆங்கிலத்தில் ஆய்வு செய்கிறேன். எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு உலகைப் பற்றி இன்னொரு மொழியில் ஆய்வு செய்வது அலாதியான அனுபவமாக இருக்கிறது. தமிழில் உள்ள பரிச்சயம் தான் என் ஆங்கிலக் கல்வியை பல தளங்களில் தாக்கம் செலுத்தி வருகிறது.
அதே போல் என் உரைநடையில் ஆங்கில எழுத்தாளர்களின் தாக்கம் உள்ளது. இதைப் பற்றி எஸ்.ரா கூட ஒருமுறை குறிப்பிட்டார். இது அவர் கவனத்தில் பட்டதன் காரணம் அவரும் ஆங்கில இலக்கியம் கல்லூரி அளவில் படித்தது தான் என நினைக்கிறேன்.

கேள்வி: வணிக இதழ்கள் மீது உங்களுடைய பிடிப்பு குறைவாக இருப்பதற்கு காரணம் நீங்களா அல்லது வணிக இதழ்களா?

ஆர்.அபிலாஷ்: வணிக இதழில் ஒரு தீவிர எழுத்தாளன் எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் வணிக இதழ் வாசகர்களின் நுண்ணுணர்வு வேறு. அவர்களுக்காய் நாம் நம் மொழியை அணுகுமுறையை மாற்ற நேரிடும். அது நல்லதல்ல. ஆனால் வணிக இதழ்கள் தீவிர இலக்கியத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி முன்னெடுக்கும் பணியை செய்ய வேண்டும். ஆங்கில நாளேடான இந்துவில் கூட நம் தமிழ் எழுத்தாளர்கள் பற்றி எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் வரும் சாதாரண இந்திய நாவல்களுக்கு கூட ஆங்கில நாளேடுகளில் தொடர்ந்து விமர்சனங்கள் வருகின்றன. அதாவது நூற்றுக்கணக்கில் மதிப்புரைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழில் எழுதப்படும் மிக முக்கியமான தீவிர நூல்களுக்கு கூட மதிப்புரைகள் வருவதில்லை. அப்பணியை விகடன், குமுதம், குங்குமம் போன்ற பத்திரிகைகள் தான் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்வதில்லை. இதில் கொடுமை என்னவென்றால் இது போன்ற வணிக இதழ்களில் உள்ள எடிட்டர்கள் கவனமாய் தொடர்ந்து சிறுபத்திரிகைகளை படிக்க கூடியவர்கள். ஆனால் ஆங்கிலேய ஆட்சியின் போது பிராமணர்கள் செயல்பட்டது போல் அவர்கள் இன்று செயல்படுகிறார்கள்.

கேள்வி: சிற்றிதழ் இயக்கத்தோடு பல ஆண்டுகள் தொடர்பில் இருப்பவன் என்கிற முறையில் கேட்கின்றேன். சிற்றதழ் படைப்பாளிகளோடு உங்களால் அணுக்கமாக இருக்க இயன்றதா?

ஆர்.அபிலாஷ்: ஆம். நான் அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். பொதுவாக எழுத்தாளர்கள் இடையே வெறுப்பும் பொறாமையும் கடுமையாய் இருக்கும் தான். ஆனால் அதை தவிர்த்து பார்த்தால் அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அவர்கள் நம் பண்பாட்டுக்காக தம் வாழ்க்கையையே தியாகம் பண்ணுகிறார்கள்.
கேள்வி: இப்பொழுது உங்களை முன்னிட்டு கேட்கின்றேன், சிற்றிதழ் இயக்கம் என்பது இன்று ஆரோக்கியமாக உள்ளதா?

ஆர்.அபிலாஷ்: சிற்றிதழ் இயக்கமே இன்றில்லை என நினைக்கிறேன். சிலர் இன்னும் சிற்றிதழ் பாணியில் பத்திரிகைகள் கொண்டு வருகிறார்கள். ஆனால் அதில் எழுதுகிறவர்கள் முழுக்க சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் இல்லை. சிறுபத்திரிகை இயக்கம் காந்திய, இடதுசாரி இயக்கங்களை போன்றது. அதில் லட்சியவாதிகளும் பிடிவாதமான வாழ்க்கை, இலக்கிய, அரசியல் மதிப்பீடுகள் கொண்டவர்கள் தாம் இயங்க முடியும். இன்று நாம் ஒரு இடைநிலை, கேளிக்கை கலாச்சாரத்தில் வாழ்கிறோம். லட்சியவாதத்தின் மரணத்தோடு சிறுபத்திரிகை இயக்கமும் மரித்து விட்டது. குறிப்பாய் ரெண்டாயிரத்தின் பின்னான மீடியா பெருக்கமும், அதை சிறுபத்திரிகை ஆளுமைகள் பயன்படுத்த தொடங்கியதும் சிறுபத்திரிகை இயக்கத்தின் சாவு மணி ஆக மாறியது. ஆனால் அதை அவர்களால் தவிர்த்திருக்க முடியுமா என தெரியவில்லை. ஏனென்றால் இன்று தீவிர எழுத்தாளர்கள் எல்லாரோடும் சேர்ந்து சின்ன சமரசங்களுடன் இயங்க வேண்டி இருக்கிறது. அல்லாவிட்டால் அவன் காணாமல் போய் விடுவான். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நாம் சமரசம் செய்யக் கூடாது என நினைக்கிறேன். எந்த அனுகூலத்துக்காகவும் சினிமாக்காரர்களையும் அதிகாரிகளையும் வெகுஜன எடிட்டர்களையும் ஒரு எழுத்தாளன் தேவையின்றி புகழ்ந்து எழுதக் கூடாது. தேவையான நேரத்தில் அவர்களை கண்டித்து எழுத வேண்டும். தீவிர இலக்கியம் நம் வீடு போல. அங்கு அந்நியர்களை வந்து போகலாம். ஆனால் நிரந்தரமாய் தங்கக் கூடாது. வெகுஜன மீடியாவில் இயங்கும் தீவிர எழுத்தாளர்கள் காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர் போல. அவர்கள் இந்தியாவுடன் ஒத்துழைக்கலாம். ஆனால் ஒருக்காலும் தாம் வேறு அவர்கள் வேறு என்பதை மறக்க கூடாது. மறந்தால் நாம் அழிந்து போவோம்.
இன்று சிறுபத்திரிகையின் இடத்தை இணைய இதழ்கள் (பேஸ் புக் கூட) எடுத்துள்ளது. அச்சு சிறுபத்திரிகைகளில் எழுத ஆள் இல்லை. அங்கு இணையத்தில் எழுத்து பயில்கிறவர்கள் எழுதுகிறார்கள். வளர்ந்த எழுத்தாளர்கள் இடைநிலை பத்திரிகையில் எழுதுகிறார்கள். சினிமா உதவி இயக்குநர்கள் வெகுஜன பத்திரிகைகளில் எழுத்தாளனாய் உலா வருகிறார்கள். இதனிடையே பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் மட்டும் எழுத தெரிந்தவர்களும் எழுத்தாளனாய் மாறி வருகிறார்கள். அவர்களில் சிலருக்கு எழுத்து மீது எந்த கடப்பாடும் இல்லை. இப்படி நம் நம் சூழல் இன்று தி.நகர் உஸ்மான் ரோடு போல் ஆகி விட்டது. தீவிர எழுத்தாளன் வழக்கம் போல் அங்கு தெருவோரமாய் சாக்கடை பக்கத்தில் தன் கடையை விரித்து ஒடுங்கிப் போய் அமர்ந்திருக்கிறான்.

கேள்வி: இறுதியாக ஒரு கேள்வி. தமிழின் மூத்த படைப்பாளுமைகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதென்ன?

ஆர்.அபிலாஷ்: நான் அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இணைந்து உருவாக்கிய இந்த மொழியில், பண்பாட்டில் வேலை செய்வதே ஒரு பெரும்பேறு. “விஷ்ணுபுரம்நாவலின் துவக்கத்தில் ஒரு சித்திரம் வரும். பாலையில் ஒரு அகண்ட மணற்பரப்பில் நடந்து செல்லும் ஒருவன் அலையலையாய் நெளியும் மணலின் கீழ் புதைந்து கிடக்கும் எண்ணற்ற காலடிகளைக் கண்டுஎத்தனை எத்தனை பேர் இந்த தேடலில் எனக்கு முன்னே சென்றிருக்கிறார்கள்!” என நினைத்து பெருமூச்செறிவான். நான் எந்த புத்தகத்தை திறந்து பார்த்தாலும் அந்த காலடிகளைத் தான் பார்க்கிறேன். உங்களுக்கு ஒன்றுமே திரும்ப தராத இந்த சமூகத்திற்காக இவ்வளவு ஆழமாய் தீவிரமாய் எழுதி, வாழ்க்கையை தியாகம் செய்து, கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் தீவிர எழுத்துலகை காப்பாற்றி வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு என் முத்தங்கள்.No comments: