Tuesday, October 28, 2014

அபிலாஷ் சந்திரனின் “கால்கள்” - Finding one's feet and landing on them! - ஷஹிதா


Lagya balai - லக்யா பலாய் - உன் வலி வேதனைகளை எனக்குத் தந்துவிடு ! என் தங்கையின் ( கஷ்மீரி ) மாமியார் அவளைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் உரையாடத் துவங்குமுன் சொல்லும் உளப்பூர்வமான முகமன் இது . கேட்கும் போதெல்லாம் நடைமுறைப்படுத்த இயலாதே என்ற ஆதங்கம் கொள்ளச் செய்யும் , இதை விடவும் அதி உன்னதமான வாழ்த்து உலகில் இருக்குமா என்று உருக வைக்கும் சொற்கள் . 
வலி எத்தனை உக்கிரமான உணர்வாக , வாழ்வை , அதன் தரத்தை நிர்ணயிக்கும் , மாற்றிப் போடும் விசையாக இருக்கிறது என்பதைத் தன் ஆங்கில இலக்கியப் புலமை , அங்கதச்சரளம் , கவிதைமொழி எல்லாமும் இழைந்த நடையில் அபிலாஷ்சந்திரன் பேசும் நாவல் கால்கள் . தொடர்ந்து வலியும் வாதையுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி மதுக்ஷரா . அவள் குடும்பம் , கல்வி , நட்பு , சமூகத்தில் அவளுடைய நிலை இவற்றோடு வலியை , உடற்குறைப்பாட்டை , நோயை மையமாகக் கொண்ட நாவலானாலும் பாத்திரங்களின் அசல்தன்மையும் , வெளிப்பாட்டின் கலைத்தன்மையும் , 552 பக்கங்களை களைப்பின்றி பின்தொடர வற்புறுத்துகின்றது .

ஒரு காலின் பலமின்மை காரணமாக , சுழற்சி முறையில் போல , சில வாரங்களுக்கு ஒரு முறை என்ற ஒழுங்கில் ( ! ) விழுந்து அவதிப்படுகிறாள் மது . பாதங்களின் வீக்கம் , வலி , இடுப்பு வரையில் பரவுகிறது . தன் ஊனத்துக்குக் காரணம் என்று கருதும் தன் பெற்றோர் மீதும் , சமூகத்தின் மீதும் அவளுக்கு இருக்கும் கசப்பு , அனுபவிக்கும் வலி , கால் சரியாகி அவளும் ஒருநாள் எல்லோரையும் போல நடக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் மதுவின் அப்பா ஏற்பாடு செய்யும் தொடர் சிகிச்சை முறைகள் , 
இவற்றை எல்லாம் சுவாரஸ்யமாகவும் , தனிமைக்கசப்பு , அகச்சிக்கல்களை ஒரு பெண் உணரும் கோணத்தில் அபாரமான துல்லியத்துடனும் சொல்லியிருக்கிறார் அபிலாஷ் . மதுவின் பெற்றோர் , ஆசிரியருடன் , நண்பர்கள் கார்த்திக் , கண்ணன் , அந்தத் தெருவில் வசிக்கும் ஏராளமான நபர்கள் என்று பெரிய கதாபாத்திரக் கூட்டம் .
போலியோ தாக்குதலில் , துரதிர்ஷ்டத்தின் ஒரு நொடியில் நொடித்துப் போன இடது காலைத் தன் அம்மாவோடு ஒப்பிட்டுப் பார்க்கிறாள் மது ! தன் அம்மாவுடன் கொண்டிருந்த love hate உறவும் , சூம்பின காலையே தன் அம்மா என்று நினைப்பதுமாக கவிஞர்களுக்கு மட்டுமே எட்டும் வெளிப்பாட்டு உயரம் . விசாலத்தின் அசமஞ்சத்தனம் ஒரு வகையில் தன் ஊனத்துக்குக் காரணம் என்ற ஆழமான நினைப்பின் காரணமாகத் தன்னை அறியாமலே அவள் மேல் ஊறிப்போன வெறுப்பு , ஆனாலும் தன் உடலின் ஒரு பகுதியைப் போன்ற தாயை முழுக்கவும் விலக்கவும் முடியாத அன்பு என்று வெர்பல் லெவெல் அர்த்தத்திலும் சரி சப்டெக்ஸ்ட்டிலும் ஒரு கவிதைக்கான பொருள் போல அத்தனைப் பொறுத்தம் !
DOES HE KNOW A MOTHER'S HEART:
மதுவின் பேராசிரியர் மதுசூதனனின் மகன் பாலுவின் நோய்மை , மனநலம் பற்றின பத்திகள் , ஒருவனுக்கு மனநோய் இருக்கிறதா இல்லையா என்று தீர்மானிக்க /யாரும் தான் யார்/ என்று வாதிடும் மதுவின் கேள்விகள் , இவை எல்லாமுமே தனியான ஒரு நாவலாக விரிக்கப் போதுமான அளவுக்கு கனம் கொண்ட பக்கங்கள் . 
மதுவின் போலியோவுக்கும் , பாலுவைப் பற்றின கிளைக்கதைக்கும் தொடர்புடைய புத்தகமாக Arun shourie யின் Does he know a mother's heart ஐச் சொல்லலாம் . நான் வாசித்தவரையில் - தன் குழந்தையின் துயரம் , ஊனம் , வலி ஒரு தந்தையின் மனோபாவத்தை , அவனின் வாழ்வை எத்தனைத் தூரம் மாற்றுகிறது என்பதற்கான மிகக் குறிப்பிடத்தகுந்த பதிவுகளாகத் தெரிபவை அபிலாஷின் கால்களும் , அருண் ஷோரியின் Does he know a mother's heart ட்டும் .
பிறப்பின் போது மூளையில் காயங்களை அடைந்து அதனால் பல்வேறு உடற்குறைகளுக்கு , வாதைகளுக்கு ஆளானவர் ஆதித் .அவருடைய தந்தை , அரசியல்வாதியும் எழுத்தாளருமான அருண்ஷோரி தன் மகனின் உடற்குறை ஏற்பட்ட விதம் , 35 ( புத்தகம் வெளியான 2011 ல் ) வயது நிரம்பிய ஆதித்தின் உலகம் , அவருடைய தனித்தன்மைகள் , வலியும் வேதனைகளும் மருத்துவ சிகிச்சைகளுமான அவருடைய அன்றாட வாழ்கைப்பாடுகள் என்ற அத்தனையையும் பதிவு செய்யும் போதே , வலியும் துயரமுமான வாழ்கை , எப்படி , மதங்களை , இறைவனை எதிர்க்க , மறுக்கச் செய்கிறது என்றும் ஆவேசமாகப் பேசும் நூல் இது . 
அருண் ஷோரி - தன் மகனின் அன்றாடப்பாடுகளை இயன்ற வரையில் மேம்படுத்திக் கொடுப்பதில் முனைப்புக் கூடிய ஒரு தகப்பன் . தன் கசப்பை , தத்துவார்த்தமாக , தர்க்கரீதியிலான தேடல்களில் , கேள்விகளில் தொலைத்துக்கொள்ள முற்படுகிறார் . Does he know a mother's heart அபுனைவு எனும் போதும் , இரு நூற்களுமே உடற்குறைபாடு , வலியைப் பிரதானமாகப் பேசும் , நம் இந்தியக் குடும்ப அமைப்பில் விசேஷக் குழந்தைகளின் தகப்பன்மாரின் உளவியல் கூறுகளை அறியத்தரும் முக்கியமான புத்தகங்களாக இருக்கின்றன .
பிரம்மேந்திரன் - மதுவின் அப்பா . மொடாக் குடியர் , மனைவியை அடிப்பவர் , சூம்பிப் போன தன் காலும் அம்மாவும் ஒன்றே தான் என்ற முடிவுக்கு மது வரக் காரணமான அளவுக்கு மதுவின் அம்மாவை முடக்கிப் போடுபவர் ! மகாமோசமான மனிதன் என்ற முடிவுக்கு யாரையும் வரச்செய்யும் குணவிசேஷங்கள் . ஆனாலும் மதுவின் மீது அவர் காட்டும் அக்கறை , சொல்லப்போனால் அளவுக்கு அதிகமான கவனம் காரணமாக வாசகனின் மனதில் ஒரு இடத்தைத் தக்க வைத்துக்கொள்கிறார் . தன் மகளின் இந்நிலைக்குத் தானே காரணம் என்ற குற்ற உணர்வோடே , எப்போதாவது அவள் நிச்சயம் நடப்பாள் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையைக் கடத்தும் ஒரு தந்தை , தன் இயலாமையை குடியில் மறக்க எத்தனிக்கிறார் . 
மதுவை காலிப்பர்களை விடாது அணியச்செய்ய வலியுறுத்தி ,பல்வேறு விதமான சிகிச்சைகளுக்கு ஆட்படுத்தி , விதவிதமான களிம்புகளிட்டு பிரமேந்திரன் குணப்படுத்த நினைப்பது , சூம்பி , வளைந்து போன தன் மனதைத் தான் என்ற நினைப்பு பிரமேந்திரனின் பெயரோடே என் நினைவில் பொருந்திவிட்டது . 
பிரமேந்திரன் பாத்திரத்துக்கான ஒரு அசலான முகம் என் நினைவின் அடுக்குகளில் புதையுண்டு கிடந்ததை நாவலைப் படித்து முடித்த மறுநாள் என் பள்ளித்தோழனின் தந்தை இறந்த செய்தி வந்து சேர்ந்த போது ஒரு நடுக்கத்தோடு உணர்ந்து கொண்டேன் . குடிகாரர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்ற முற்றுமுழுதான தீர்மானத்தில் நான் இருந்த பிராயத்தில் , காண வாய்த்த போதெல்லாம் குடிபோதையில் தள்ளாடியபடியே இருந்த மனிதர் அவர் . எப்படியான போதும் தன் மக்களின் மீது அவர் கொண்டிருந்த பிரியம் என் நினைவில் உருண்டபடியிருந்திருக்கிறது . கால்கள் படித்துக்கொண்டிருந்த ஒரு வார காலமும் நான் அவரை நினைத்துக் கொண்டிருந்ததும் நோய் முற்றி அவர் அதே வார இறுதியில் இறந்து போனதும் வெறும் ஒரு தற்செயல் தான் என்பதை இன்னமும் நம்ப முடியவில்லை . ஒரு மனிதன் என் மனதில் இடம்பெற்றிருப்பதையும் அவனின் குணவிசேஷங்களை என்னை அறியாமல் கவனித்திருக்கிறேன் , அங்கீகரித்திருக்கிறேன் என்பதையும் உணர்த்த அவன் இறந்து போக வேண்டியிருந்திருக்கிறது .
துவக்கத்தில் இருந்தே சீரான மெதுகதியில் இறுதி வரை செல்லும் கதையில் உணர்ச்சிக்கொந்தளிப்புகளோ ட்ராமாவோ எங்குமே படிக்கக் கிடைப்பதில்லை . ஒரு கட்டத்தில் , கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு , மது வழக்கத்தை விடக் கூடுதலான நாட்கள் படுக்கையில் கிடக்கும் இடத்தில் அவள் கால்களை வருடினபடி பிரமேந்திரன் அழும் இடத்தில் ஒரு இமோஷனல் ட்ராமா அரங்கேறி இருக்க வேண்டிய நேரம் கூட பிரமேந்திரனின் குடிபோதை மெல்லிய ஒரு அங்கதத்தைப் புகுத்தி இலகுவாக்கிவிடுகிறது . மது , அவள் அம்மா , அப்பா என்று எல்லா பாத்திரங்களையும் இயல்பான மனிதர்களாக அவர்களின் குறைகளோடே உலவ விட்டிருப்பதும் , எந்த நேரத்திலும் எவர் மீதும் வாசகன் இரக்கம் கொள்ளும் விதமாக எழுதப்படவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும் .
டாக்டர் ஆப்ரகாமிடம் சிகிச்சைக்குச் செல்வதில் , மது இனி நடக்கவே போவதில்லை என்பதையும் , வருடக்கணக்காக செய்து வந்த சிகிச்சைகளினால் ஒரு பலனும் இல்லை என்பதையும் குடும்பம் அறிந்து கொள்வதும் , குறிப்பாக தன்னுடைய உடற்குறைக்கான காரணமாய் தன் பெற்றோரை இனி பழி சுமத்தவே முடியாது என்று மது உணர்ந்து கொள்வதும் நாவலின் உச்சகட்டம் .
மதுவின் மனக்கிலேசங்கள் , அவை தீவிரம் கொள்ளும் சமயங்களில் அவள் தனக்குள்ளாகவே நிகழ்த்திக்கொள்ளும் உரையாடல்கள் ஆகியவற்றையும் , மிக முக்கியமாக அவளுடைய ஊனத்துக்கான காரணம் அவள் பெற்றோரின் அஜாக்கிரதை அல்ல எனும் மிக முக்கியமான செய்தியும் அவளில் உண்டாக்கும் தெளிவை , மாற்றங்களை , தன்னுடைய குறைப்பாட்டை ஒப்புக்கொள்வதுடன் அதனோடே உலகைச் சந்திக்க அவள் ஆயத்தமாகி நிற்பதையும் அவளுக்கு வரும் கனவுகளை விவரிப்பதன் மூலம் அறியத்தருகிறார் அபிலாஷ் . 
இந்தப் பூடகமான வெளிப்பாட்டு முறை நிச்சயமாக , சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது . எளிய ஒரு வாசகனால் இக்கனவுகளின் உள்ளோட்டங்களைப் புரிந்து கொள்ளவோ பின் தொடரவோ இயலுமா என்ற கேள்வி எழாமலும் இல்லை .
கார்த்திக் - மது , கண்ணன் - மது இடையிலான உறவையும் , மதுவின் தர்க்க அறிவு , வாசிப்பின் ஆழ நீளம் , தார்மீக நியாயங்கள் குறித்த பார்வை என்று அவளுடைய ஆளுமையையும் உரையாடல்கள் வழியாகவே சொல்லி இருப்பதிலும் , சிடுக்குகளற்ற உரையாடல்கள் x மதுவின் அகவெளிப் பயணங்கள் மற்றும் அவளுடைய கனவுகள் வரும் பத்திகளில் மட்டுமான சிக்கலான அடுக்குகள் என்று brilliant ஆகப் பிரித்தாண்டிருக்கிறார் அபிலாஷ் .
// வாழ்க்கையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவது தான் இலக்கியத்தின் கொள்கைக் கோட்பாடு .... வாழ்க்கையின் அவலங்களினால் மனமொடிந்து போகிறவர்களுக்கு , வாழ்க்கை இப்படியே இராது , இது மாறும் என்கிற நம்பிக்கையை சொல்வேன் // என்று ஜெயகாந்தன் தன் இலக்கியக் கோட்பாடு பற்றிப் பேசியிருப்பதைச் சமீபத்தில் படித்தேன் . இந்தச் செய்தியை சொல்லத்தானா இத்தனை பெரிய பட்டாலியனைத் திரட்டி இவ்வளவு பெரிய கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறார் எனத் தோன்றிவிடாமல் ஆசிரியரின் கலையம்சத்துடன் கூடிய வெளிப்பாடு உதவுகிறது . அவரது சொந்த ஊர் , பார்த்துப் பழகிய மக்கள் என்ற பின்னணியில் தான் தன் அனுபவ ஆழத்தை , அதன் சாராம்சத்தைக் கதையாக்கியிருக்கிறார் எனத் தோன்றச் செய்யும் மெய்த்தன்மையும் வாசகனை நம்பிக்கை கொள்ளச்செய்கிறது , பாதிப்புக்குள்ளாக்குகிறது . வாழ்வு/கால மாற்றத்துக்கான ஒரு குறியீடாக , மதுவுக்கும் தெருவாசிகளுக்கும் ஒரு துக்கநிவாரணியாகவே பயன்படும் அந்தக்குளத்தின் தண்மை நாவலெங்கும் தளும்பித் தெரிக்கிறது .
மாற்றுத்திறனாளிகளின் மன/உடல் நிலை , சமூகச்சார்பு , எதிர்பார்ப்புகள் , வாதைகள் , பற்றின , சிறப்பான , கதையம்சத்துடன் கூடிய ஒரு ஆவணமாக பதிவாகியிருப்பதுடன் , உடற்குறைகள் உபாதைகளுடன் வாழ்தல் பற்றின நம் முன்முடிவுகளை அசைத்துப் பார்க்கும் விதத்தில் எழுதப்பட்டிருப்பதில் கால்கள் முக்கியமான நாவலாக score செய்கிறது . 
பல்வேறு உடற்குறைப்பாடுகளுடன் பிறந்து , சிசுப் பிராயத்திலேயே மறைந்த என் தம்பியின் மகள் சாராவை இந்நேரத்தில் நினைத்துக்கொள்கிறேன் . உடற்குறைகளோடென்றாலும் பிள்ளை வாழ்ந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் ஒரு அலை போல படர்ந்து மனதில் ஏறி வருதைப் பார்த்தபடி வலியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் சின்னஞ்சிறு சிசுக்களின் ஒரு நிமிட வாதையையாவது ஏற்றுக் கொள்ள உளப்பூர்வமாக விழைகிறேன் ..லக்யா பலாய் .


No comments: