Sunday, October 26, 2014

இந்தியாவும் பாகிஸ்தானும்: இருவேறு அணுகுமுறைகள்இம்முறை பாகிஸ்தான் அணியில் அஜ்மல் இல்லை. நான்கு இளம் வீச்சாளர்களுடன் இறங்கி ஆஸ்திரேலியாவை முதல் டெஸ்டில் 221 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. என்னை மிகவும் கவர்ந்த விசயங்கள் இரண்டு.


ஒன்று, அவர்கள் இறுக்கமாக ஒழுக்கமாக பந்து வீசி நெருக்கடியை உருவாக்குவது. மட்டையாளர்கள் இந்த அழுத்தம் தாளாமலே அவுட் ஆகி விடுவார்கள். அது போல் சாதாரணமாய் ஒரு லைன் மற்றும் லெங்தில் வீசினால் கூட, பந்து ஒன்றும் பெரிதாய் செய்யாமல் இருந்தாலும் கூட அவர்களின் பந்து வீச்சாளர்களின் உடல் மொழி ஆக்ரோசமாக ஆவேசமாக உள்ளது. மொத்த களத்தடுப்பாளர்களும் பத்து வாடகை கொலையாளிகள் பொருட்களுடன் சூழ்வது போல் மட்டையாளனை சூழ்வார்கள். இது உருவாக்கும் ஒரு அச்சமூட்டும் சூழல் முக்கியமானது. இதுவே இந்தியா என்றால் களத்தடுப்பாளர்கள் ஏதோ திருவிழாவுக்கு போன குழந்தைகள் போல் நின்று கொண்டிருப்பார்கள். ஓஜ்ஹா முதலிரவு பெண் போல் அலுங்காமல் வந்து செல்லமாக வீசுவார். விட்டால் மட்டையாளனை அணைத்து முத்தமிடுவாரோ என அச்சமாக இருக்கும். அப்படி ஒரு இட்லி வடை அணுகுமுறை நம் வீச்சாளர்களுக்கு.

இன்னொரு வித்தியாசம் லைன். பாகிஸ்தான் வீச்சாளர்கள், அனுபவமற்ற புது சுழல் வீச்சாளர்களான பாபர், யாசிர் ஷாஹ் கூட மிகச் சரியாக ஆப் ஸ்டம்பில் வீசுகிறார்கள். ஓஜஹா போல் வைடாக அல்ல. மேலும் ஒரே இடத்தில் பந்தை திரும்ப திரும்ப விழ வைக்கும் கூர்மை வியப்பேற்படுத்துகிறது. நம் ஓஜ்ஹா என்றால் பாபர் வீசுவதில் இருந்து நான்கு அங்குலமாவது வைடாக தான் வீசுவார். இது ஒரு எதிர்மறை மனநிலையில் இருந்து வருகிறது. போன முறை ஆஸ்திரேலிய பயணத்தில் அஷ்வின் நன்றாக வீசினார் என்றாலும் அவரை நம்ப முடியாது. T20யும் ஒருநாள் ஆட்டங்களும் அவரை சீர்குலைத்து விட்டன. அவர் பந்து வீசும் போது கட்டாயமாக இரண்டு பந்துகளாவது ஆப் ஸ்டம்புக்கு வெளியே குறைநீளத்தில் விழும். இன்னும் ரெண்டு லெக் ஸ்டெம்புக்கு வெளியே போகும். இப்படி ஏதோ ரெண்டு வார நாய்க்குட்டி விளையாடுவது போல் அவரது பந்துகள் விழும். மிஷ்ரா கூட கிட்டத்தட்ட இதே நிலையில் தான் இருக்கிறார். ஆனால் பாகிஸ்தானின் பகுதிநேர சுழலரான ஹபீஸ் அஷ்வினை விட நூறு மடங்கு அதிக கூர்மையுடன் கட்டுப்பாடுடன் வீசுகிறார். இந்த கட்டுப்பாடும் அவேசமான அணுகுமுறையும் தான் பாகிஸ்தானின் பலம். இந்த டெஸ்டில் ஆடுதளம் அவ்வளவு தட்டையானது. சுழலவே இல்லை. அதில் ஆஸ்திரேலியாவை முன்னூறுக்கு கீழ் சுருட்டியது ஒரு சாதனை தான். இந்தியாவுக்கு எதிரே என்றால் ஆஸ்திரேலியா நிச்சயம் 450 மேல் எடுத்திருக்கும். அதனால் தான் எந்த அணியை தோற்கடிக்கவும் நமக்கு அதிகமாய் சுழலும் ரெடிமேட் ஆடுதளங்கள் தேவைப்படுகின்றன.


இறுதியாய் என்னைக் கவர்ந்த அந்த இரண்டாவது விசயம் ஆட்டம் முடிந்ததும் பரிசளிப்பின் போது அணித்தலைவர் மிஸ்பா பேசியது. அவர் பிரதானமாய் தன் பந்து வீச்சாளர்களைத் தான் புகழ்ந்தார். இத்தனைக்கும் யூனிஸ்கான் இரு சதங்களும், ஷேஸாத் பிரமாதமாய் ஆடி ஒரு சதமும் அடித்திருந்தனர். இதுவே தோனி என்றால் ஆட்டத்தை வென்றதற்கு மட்டையாளர்கள் தாம் காரணம் என மீண்டும் மீண்டும் புகழ்ந்திருப்பார். எனக்கு பிரவீன் குமாரின் பேட்டி ஒன்றில் அவர் சொன்னது நினைவு வந்தது. உத்தர பிரதேச அணியில் குமார் ஆடும் போது அங்கே வேகப் பந்து வீச்சாளர்கள் ஒரு குழுவாக சேர்ந்து சதா பந்து வீச்சு பற்றி பேசுவது, பயிற்சி செய்வது என இருப்பார்கள். அவர் அங்கு நிறைய கற்றுக் கொள்கிறார். ஆனால் இந்திய அணிக்கு போன பின் அங்கு யாரும் பந்து வீச்சு பற்றி விவாதிப்பதோ உற்சாகமாய் தகவல் பரிமாறுவதோ இல்லை. முழுக்க சதா மட்டையாட்டம் பற்றின விவாதம் தான். அந்த சூழலில் பந்து வீச்சாளர்களுக்கு எந்த ஊக்கமும் அங்கு இல்லை என்றார் பிரவீன் குமார். எந்த நல்ல வீச்சாளர்கள் நம் அணிக்கு வந்தாலும் உடனே காயடிக்கப்படுவதன் ரகசியம் இது தான்.

No comments: