அமேசான் காட்டில் தொலைந்த என் பார்சல்


அமேசானில் நான் ஆர்டர் பண்ணின பொருள் ஒன்று மூன்று நாட்களாய் தாமதாகிக் கொண்டிருந்தது. கஸ்டமர் கேர் ஆட்கள் இன்னிக்கு வந்திரும், இப்போ வந்திரும் என விளையாட்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கொரியர் சேமிப்புக் கிடங்கின் முகவரியையோ தொடர்பு எண்ணையோ தரவில்லை. ஆனால் ரொம்ப ஒழுங்காக சமர்த்தாக என்னிடம் தினமும் நான்கு முறையாவது அவர்களாகவே போன் பண்ணி மன்னிப்பு கேட்பதும், இதோ ரெண்டு மணிநேரத்தில் வந்து விடும் என பொய் சொல்வதுமாக தொடர்ந்தது.

எந்திரத்தனமாக பதில் சொல்கிறார்கள் எனத் தோன்ற ஒரு கொரியர் ஆள் மூலமாக அவர்களின் சேமிப்புக் கிடங்கின் (வேர் ஹவுஸ்) முகவரியை தெரிந்து கொண்டு போனேன். அங்கே போன போது அமேசான் என சரியாக தான் பெயர் வைத்திருக்கிறார்கள் எனத் தோன்றியது. அது ஒரு குட்டிக் காடு. காட்டில் திசை தவறினால் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான் என்பார்கள். அங்கே மூட்டை மூட்டையாய் பார்சல்கள். இரவு பத்து மணி வரை பார்சல்களை ஆட்கள் எடுத்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு வேலை பார்த்தும் தேங்கி நிற்கிற பொதிகளை வெளியேற்ற முடியவில்லை என்றார்கள். பொதுவாக புது பையன்கள் தான் வேலை பார்க்கிறார்கள். சீனியர்கள் பாவனை பண்ணிக் கொண்டு சோம்பி நிற்கிறார்கள். அங்கே போகும் வரை என் பார்சல் தாமதமாவதற்கு ஆள் குறைவே காரணம் என நினைத்தேன். மழை, தீபாவளி நெரிசல் என பல காரணங்கள் தோன்றின. என்னை தொடர்பு கொண்ட கஸ்டமர் சர்வீஸ் ஆட்களும் இதையே கூறினர். என்னைப் போல் வேறு பலருக்கும் இரண்டு வாரங்கள் வரை பொருட்கள் தாமதமானது பற்றி பேஸ்புக்கில் படித்தேன்.
ஆனால் உண்மைக் காரணம் இவை எதுவும் அல்ல என போன போது தான் அறிந்தேன். அமேசான குரியர் அலுவலகம் அல்லது சேமிப்புக் கிடங்கு ஒழுங்காக சீராக இயங்கவில்லை. அன்றன்றைக்கு வந்து குவிகிற பொதிகளை இடத்தை பொறுத்து பொறுக்கிப் போகிறார்கள். சிலர் என்னால் பம்மல் என்றால் போக முடியாது என்கிறார்கள், சிலர் சைதாப்பேட்டை என்றால் போகிறேன் என்கிறார்கள். பொருட்களை அவற்றின் அஞ்சல் தேதி அல்லது அவசரம் பொறுத்து அனுப்புவதில்லை. ஆனால் உடனடி தபால் வசதி அமேசானில் உண்டு. அதற்கு கூடுதல் பணம் செலுத்தினால் அத்தனைய பார்சல்களுக்கு முன்னிரிமை கொடுக்கிறார்கள். இந்த அவசரத்தில் வழக்கமான பார்சல்கள் எங்கோ பின்னுக்கு தள்ளப்பட்டு காணாமல் போகின்றன.
என்னுடைய பார்சலை கொண்டு வந்தவர் அழைத்த போது நான் போனை எடுக்கவில்லை. நான் திரும்ப அழைத்த போது அவர் மறுநாள் தருகிறேன் என்றார். ஆனால் மறுநாள் மட்டுமல்ல அடுத்த மூன்று நாட்களும் அவர் விடுப்பில் போய் விட்டார். அவர் அலுவலகத்தில் என் பார்சலை எங்கோ ஒப்படைக்க அது தொலைந்து விட்டது. அதாவது அவர்களின் அலுவலகம் எனும் காட்டின் பெரும் புதர் ஒன்றுக்குள் மாட்டி விட்டது. திரும்ப தருகிற பொருளை ஒழுங்காய் ஒரு இடத்தில் வைக்கிற வழக்கம் அங்கு இல்லை. பொருட்கள் பல இடங்களிலாய் இறைந்து கிடக்கின்றன. நான் நேரடியாக போனதனால் ஒருவர் எனக்காய் ஒரு மணிநேரம் பல மூட்டைகளில் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. ஏனென்றால் மூட்டைகளை இடம் பொறுத்து பிரிக்காமல் எல்லாம் குழம்பிப் போய் கிடந்தன. கிண்டி மூட்டையில் அண்ணா நகர் பொருட்கள் இருந்தன.
அவர் என்னிடம் நாளை தேடிப் பார்த்து சொல்கிறேன் என்ற போது கஸ்டமர் சர்வீஸில் அழைத்து “உங்கள் பொருள் எங்கள் குரியர் பையனிடம் உள்ளது. நாளை வந்து விடும்” என்றார்கள். நான் சொன்னேன் “எந்திரத்தனமாய் நீங்கள் உங்கள் கணினியைப் பார்த்து எனக்கு பதிலளிக்கிறீர்கள். ஆனால் நான் உங்கள் சேமிப்புக் கிடங்கில் இருந்து நிலவரத்தை பார்த்து சொல்கிறேன். என் பொருள் தொலைந்து விட்டது. அது நாளை வராது”. பிறகும் அவர் அதே பதிலை ரோபோ போல் சொல்ல நான் கத்தினேன். அவர்களைப் பொறுத்த வரையில் கணினியில் குரியர் ஆட்கள் dispatched என்று அப்டேட் செய்தால் பொருள் குரியர் ஆளிடம் இருக்கிறது எனப் பொருள். ஆனால் இரு நாட்களாக என் பார்சலை எந்த குரியர் ஆளும் எடுக்கவில்லை. ஏனென்றால் அது எங்கே என்றே அவர்களுக்கு தெரியவில்லை. இவ்விசயம் கஸ்டமர் சர்வீசுக்கு புரியாமல் தொடர்ந்து உங்க பார்சல் வந்துக்கிட்டு இருக்கு என உளறிக் கொண்டிருந்தனர். இது பேஸ்புக்கில் இரங்கல் தெரிவிப்பது போன்றது. உங்களில் யாராவது ஒருவரின் படத்தைப் போட்டு இன்னார் இறந்து விட்டார் என்றால் அது உண்மையா, ஏன், எப்படி என விசாரிக்காமல் RIP என போட்டு விடுவார்கள். அது போல் அமேசான் கஸ்டமர் சர்வீஸுக்கும் உண்மை தெரியவில்லை. ஆனால் நீங்கள் அவர்களின் பக்கத்தில் போய் கிளிக் செய்தாலோ புகார் தெரிவித்தாலோ அவர்களாகவே கூப்பிட்டு சமர்த்தாய் “பரலோகத்தில் உள்ள ஆவியானவர் உங்களோடு இருக்கிறார்” என கீ கொடுத்த பொம்மை போல் பேசுவார்கள். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதில் அக்கறை இல்லை. இப்படி ஒரு கஸ்டமர் கேர் இருப்பதில் எந்த பயனும் இல்லை.
இதனிடையே எனக்காக தேடியவர் ஒரு பெரிய மூட்டையை கொண்டு வந்து காட்டி இதெல்லாம் மழையில் நனைந்த பார்சல்கள். முகவரி அழிந்து விட்டன. இவற்றை திரும்ப அனுப்ப போகிறோம். உங்களுடையதும் இதில் இருக்கலாம், நாளை தேடி சொல்கிறோம் என்றார். நான் எனக்கு முதல் நாள் தர வந்தவரின் எண்ணை வாங்கி அழைத்து என் பார்சல் மழையில் நனைந்ததா என கேட்டேன். அவர் இல்லை என்றார். அல்லாவிட்டால் இவர்கள் அது ஒருவேளை வீணான பார்சல் எனும் கணக்கில் விட்டு விடுவார்கள். இப்படி எதை தேடும் போதும் ஒரு அலட்சியம், எளிதில் முன்முடிவுக்கு வருவது.

இப்போது எனக்கு உண்மை நிலவரம் தெரியும். நாளைக்குள் எதேச்சையாய் என் பார்சல் மாட்டினால் உண்டு. மறுநாள் தீபாவளி. விடுப்பு. அதற்கு அடுத்த நாட்கள் அவர்கள் அங்குள்ள கணிசமான பொருட்களை வெளியே அனுப்பி இடம் காலியான பின் ஏதோ கிணற்றை இறைக்கும் போது பழைய வாளி, பிளாஸ்டிக் பொருட்கள் கிடைப்பது போல் என் பார்சலும் கிடைத்தால் உண்டு. அப்படியென்றால் சனியோ அடுத்த திங்களோ வரும். இல்லாவிட்டால் மீண்டும் அவர்கள் கடும் பிரயத்தனம் செய்து கண்டு பிடிக்க வேண்டும். எப்படியும் இப்படித் தான் நடக்கும். நான் அவர்களின் சேமிப்பு கிடங்குக்கு (வேர் ஹவுசுக்கு) போனாலும் இல்லாவிட்டாலும். என்ன இப்போது நான் தெளிவாக குழப்பமில்லாமல் இருக்கிறேன். ஏதாவது நடக்கும் என நம்பிக்கையில் கையை பிசைவதை விட இப்படித் தான் உறுதியாக நடக்கும் என தெரிந்து விட்டால் ஒரு நிம்மதி வருமல்லவா! இன்றைக்கு போய் பார்த்ததன் பயன் அது தான். 

Comments