Wednesday, October 15, 2014

ஜெயமோகன் மெக்தலீனா மீது கல்லை வீசும் முன் ஒரு நொடி யோசியுங்கள்!


சமீபமாய் ஜெயமோகன் பத்திரிகைகள் பற்றி இவ்வாறு சொல்லி இருக்கிறார்:
“பொதுவாக தமிழ் பெரிய இதழ்களின் பிரசுர அரசியலும் சிறிய இதழ்களின் பிரசுர அரசியலும் வெவ்வேறானவை. பெரிய இதழ்களில் நீடிக்கும் கோபம் , காழ்ப்பு என ஏதும் இருப்பதில்லை. எவருக்கும் எந்த அக்கறையும் இருப்பதில்லை, அவ்வளவுதான். நம் இதழாளர்களில் பெரும்பாலானவர்கள் சினிமாவுக்குள் நுழையும் கனவுள்ளவர்கள். எஞ்சியவர்கள் பல்வேறுவகை செய்தித்தொடர்பாளர்கள். இலக்கியம் வாசிப்பு என்றெல்லாம் ஆர்வமுடையவர்கள் சொற்பம்

கூடவே பெரிய இதழ்களில் சாதியரசியல் உண்டு. நெடுங்காலம் பிராமண அரசியல் செல்வாக்குடன் இருந்தது. இன்று அது அனேகமாக பின்தள்ளப்பட்டுவிட்டது. இன்று உள்ளது தேவர்-நாடார் அரசியல். விகடன் அனேகமாக ஒரு தேவர் பத்திரிகை இன்று. வைரமுத்துவின் ‘மணிமுடி அவ்வாறு தயாரிக்கப்படுவதே. அதில் அறிமுகமாகும் எழுத்தாளர்களும் அவர்களே. சினிமா விமர்சனங்கள் வரை அந்தக் குறுகிய அரசியல் விகடனில் கோலோச்சுகிறது. அங்கே பணியாற்றும் சிலருடைய சொந்த சாதிப்பற்று அது.
மறுபக்கம் சிற்றிதழ்களில் உள்ளது குழு அரசியல்.
உயிர்மைகுழு காலச்சுவடு குழு என. அவர்கள் முழுமையான விசுவாசத்தை எதிர்பார்ப்பார்கள்.
-ஜெயமோகன்”
வணிக பத்திரிகைகளின் சாதி விசுவாசம், சிறுபத்திரிகைகளின் குழு விசுவாசம் பற்றி பொங்கும் ஜெயமோகன் சினிமா உலகின் அரசியல் பற்றி ஏன் மௌனமாக இருக்கிறார்? ஒருமுறை விகடன் பேட்டியில் ஜெயமோகன் பற்றி இவ்வளவு இழிவாக பாலா பேசினார்:ஜெயமோகன் எதையாவது எழுதி விட்டு என் பின்னால் பதுங்கிக் கொள்வார்”. இதற்கு ஜெயமோகன் பதிலுக்கு பொங்கினாரா? இல்லை. அமைதியாக வாயை பொத்திக் கொண்டார்.
ஏன்? ஏனென்றால் சிவாஜியை கிண்டல் பண்ணி ஜெ.மோ எழுதப் போக அவரை இனி சினிமாவில் இயங்கவே விட மாட்டோம் என சிவாஜி குடும்பம் மிரட்டியது. பயந்து போன ஜெ.மோ பாலாவிடம் சரணடைந்தார். பாலா இனி சிவாஜி பற்றி எழுதக் கூடாது என ஜெ.மோவிடம் அறிவுறுத்திய பாலா பிறகு சிவாஜி குடும்பத்திடம்இனி அவர் ஒழுங்கா இருப்பார். ஒருமுறை மன்னிச்சிடுங்கஎன சமரசம் பேசினார். அப்படித் தான் ஜெ.மோ அன்று தப்பினார்.
அப்படி பஞ்சாயத்து பண்ணி தன்னை காப்பாற்றி விட்ட பாலாவின் உண்மையான அதிகாரமும் பலமும் ஜெ.மோவுக்கு தெரியும். பாலா இல்லையென்றால் ஜெ.மோவிடம் திரை வாழ்க்கை அன்றோடு முடிந்திருக்கும். இந்த பாலா ஒரு இறுமாப்புடன் விகடன் பேட்டியில் ஜெயமோகனை “பேசிப் பேசிக் கொல்லக் கூடியவர்” என்றார். இப்படி ஜெ.மோவை கேலி பண்ணும் அருகதை பாலாவுக்கு உண்டா என்றால் இல்லை. பாலா வெறுமனே ரெண்டு பாட்டு, நாலு சண்டைக்காட்சியுடன் கொஞ்சம் எதார்த்தமாய் வணிகப் படம் எடுப்பவர். ஆனால் ஜெ.மோ “விஷ்ணுபுரம்” போல் மிக முக்கியமான நாவல் எழுதியவர். ஜெ.மோவை கிண்டல் செய்ய பாலாவுக்கு தைரியம் வருவதற்கு ஜெ.மோவே தான் காரணம். அவர் அவ்வளவு எளிதில் ஒரு சினிமா இயக்குநரின் காலில் விழுந்து விடுகிறார். பிறகு எப்படி அவருக்கு மரியாதை கொடுக்க தோன்றும்?
இது போல் ஒரு எழுத்தாளன் ஜெயமோகனை கேலி பண்ணினார் என்றால் அவர் அந்த எழுத்தாளனை சூரசம்ஹாரம் பண்ணி விடுவார். இப்போது தன் “வெண்முரசை” மட்டம் தட்டி ஒரு கருத்தை அசோகமித்திரன் பேட்டியில் வெளியிட்டதற்காக காலச்சுவடு கண்ணனை அது தான் செய்கிறார். ஆனால் பாலா விசயத்தில் ஜெயமோகன் தன் மீது அடி விழுந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. அவரது “அறிவுச் செருக்கு”, கௌரவம் எல்லாம் அங்கே காயப்படவில்லையா? ஏன் அவரால் அதற்கு பதிலடி கொடுக்க முடியவில்லை?
 உயிர்மை, காலச்சுவடு ஆகிய பத்திரிகைகள் அதில் எழுதும் எழுத்தாளர்களிடம் முழு விசுவாசத்தை கோருவதாய் கூறும் ஜெயமோகன் தன் கோடம்பாக்க காட்பாதர் பாலாவிடம் தான் காட்டும் விசுவாசத்தை ஏன் மறைக்கிறார்? சொல்லப் போனால் இலக்கிய, நடுநிலை பத்திரிகைகளில் தான் எழுத்தாளர்கள் தமக்கு வாய்ப்பளித்தவர்களை விமர்சிக்கும் மரபு உள்ளது. அங்கே உயிர்மையை மிக கடுமையாய் விமர்சித்த சாரு நிவேதிதா திரும்ப போய் மீண்டும் கட்டுரை எழுத முடியும். உயிர்மையில் தொடர்ந்து இயங்கும் ஷாஜி காலச்சுவடில் எழுத முடியும். ஒரு காலத்தில் சுகுமாரன் எந்த சிக்கலும் இன்றி இந்த இரு பதிப்பகங்களிலும் எழுதிக் கொண்டிருந்தார். என்னதான் குழு அரசியல் இருந்தாலும் ஒரு கண்காணா ஜனநாயகம் இலக்கிய பத்திரிகைகளில் செயல்படுகிறது.
ஆனால் அது சினிமாவில் இல்லை. சிவாஜியை தொடர்ந்து கிண்டல் பண்ணிக் கொண்டு ஜெயமோகனால் தமிழ் சினிமாவில் இயங்க முடியுமா? இல்லை. அவர் சிவாஜி குடும்பத்தின் காலில் விழுந்து பாலா மூலம் சமரசம் பண்ணிக் கொள்கிறார். ஜெயமோகன் மணிரத்தினத்தை எதிர்த்து ஒரு வார்த்தை எழுதினால் அவர் மகன் இன்று மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக பணி செய்ய முடியாது. ஜெயமோகன் எப்படி இலக்கிய உலகுக்கும் கோடம்பாக்கத்துக்கும் இருவேறு மதிப்பீடுகளை வைத்துக் கொள்கிறார் என எனக்கு புரியவில்லை.
அதனாலே பாலா தன்னை வெளிப்படையாக கிண்டல் பண்ணினதுக்கு பதில் சொல்லாமல் வாய், காதை மூடிக் கொண்டார். ஆனால் அவரது வீரம், உதார், வீராப்பு எல்லாவற்றையும் பெண் எழுத்தாளர்கள், சிறுபத்திரிகையாளர்கள், சக எழுத்தாளர்கள் என்று காட்டிக் கொண்டிருப்பார். ஏனென்றால் எங்களுக்கு கட்ட பஞ்சாயத்து பண்ண சக்தியில்லை. பண பலமோ ஆள் பலமோ இல்லை. காறித் துப்பலாம், முழங்கையால் இடிக்கலாம். நாங்கள் முடிந்தளவுக்கு திரும்ப கத்துவோம். அவ்வளவு தான் முடியும். ஆனால் கோடம்பாக்கத்தில் நிஜ ரௌடிகள் இருக்கிறார்கள். அங்கே ஜெ.மோ அமைதியாகப் போவார்.
ஜெயமோகன் முதன்முறை இளையராஜாவை பார்க்கப் போன போது பட்டென்று அவர் காலில் விழுந்து வணங்கியதாய் அதைக் கூட இருந்து பார்த்த ஒரு இலக்கிய நண்பர் சொன்னார். இது போல் ஜெயமோகன் சி.சு செல்லப்பா அல்லது சு.ராவின் காலில் விழுந்திருப்பாரா? இல்லை. அவர் இளையராஜாவை இவர்களுக்கு மேலாக நினைக்கிறாரா?
ஒரு மனிதன் இருவேறு முரண்டபட்ட மதிப்பீடுகளை வைத்துக் கொள்ளலாம். அதை வாழ்க்கையிலும் பின்பற்றலாம். ஆனால் அதை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை விமர்சிக்கவும் கிண்டல் பண்ணவும் கூடாது. ஏனென்றால் அப்படியான கராறான வாழ்க்கை நிலைப்பாடு அவருக்கே இல்லை. ஜெயமோகனின் நிலைப்பாட்டை சு.ரா எடுக்கலாம். எஸ்.வீ ராஜதுரை எடுக்கலாம். ஏன் ஜெயகாந்தனும் பொன்னீலனும் கூட எடுக்கலாம். ஆனால் அதற்கான தார்மீக உரிமையை ஜெயமோகன் என்றோ இழந்து விட்டார். இலக்கிய உலகினுள் அவர் பெரிதாய் சமரசம் பண்ணாமல் இருந்திருக்கலாம். ஆனால் சினிமாவுக்காக தனிப்பட்ட முறையில் தன்னை சமரசம் பண்ணி யார் காலிலும் விழத் துணிந்து விட்ட அவருக்கு அடுத்தவர்கள் மீது, அதுவும் எந்த வருமானமும் சன்மானமும் இன்றி ஒரு சின்ன உலகுக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு எழுத்துக்கு தன்னை ஒப்புக் கொடுத்து வாழும் சக எழுத்தாளன் மீது தன் தார்மீக சாட்டையை சொடுக்க அருகதை இல்லை.

கர்த்தர் சொன்னது போல் விபச்சாரி மீது கல்லெடுத்து அடிக்கும் முன் நீங்கள் ஒரு நொடி உங்களைப் பற்றி யோசியுங்கள்!

3 comments:

chitra chitra said...

மிகுந்த வன்மத்தோடும், நிஷ்டூரமாகவும், ஏறத்தாழ சாபமிடுதலைப் போன்ற தொனியுடன் கூடிய கட்டுரை ஜெ வினுடையது. உங்கள் பதில் ஆழமானது. இன்னும் கடுமையாக இருந்திருக்கலாம். அவர் எவ்வளவு அடித்தாலும், வலிக்காத மாதிரியே காட்சியளிப்பார்.
ஆமா, மணிரத்தினத்திடம் பயின்று, அவர் மகன் என்ன செய்யப் போகிறார்?


Abilash Chandran said...

//மணிரத்தினத்திடம் பயின்று, அவர் மகன் என்ன செய்யப் போகிறார்? // இயக்குநராகப் போகிறார்

Abilash Chandran said...
This comment has been removed by the author.