Sunday, October 12, 2014

நம் கழுத்தறுத்து நம்மையே பிரியாணி வைப்பது: சில இனிய மற்றும் கசப்பான இலக்கிய பிரயாணங்கள்


யுவ புரஸ்கார் பரிசு அறிவிக்கப்பட்ட பின் நான் வாரத்துக்கு ரெண்டு கூட்டங்களாவது பேசிக் கொண்டிருந்தேன். சில சமயங்களில் கிருபானந்த வாரியார் போல் ஆக்கி விடுவார்களோ என பயந்தேன். என் அதிர்ஷ்டத்துக்கு பாதி கூட்டங்கள் ஏதாவது ஒரு தீவிரமான விசயத்தை பேசுவதற்கான நல்ல வாய்ப்பாக அமைந்தன. அதற்காக தனியாக கட்டுரைகள் எழுதினேன். ஞாநியின் கேணி கூட்டத்தில் பேசினது கட்டுரையாக இம்மாத அமிர்தாவில் வந்துள்ளது. அதன் பிறகு சென்னை பல்கலையில் பெண் ஆய்வுகள் துறை சார்பில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசுவதற்கு தயாரித்த கட்டுரை என் முனைவர் பட்ட ஆய்வின் ஒரு பகுதியாக மாறி உள்ளது.

போன மாதம் 29 நாகர்கோயிலுக்கு போனேன். அங்கு மூன்று நாட்களுக்கு காலை மாலை என தினமும் இரு கூட்டங்கள். “அனக்கம்” என்றொரு அமைப்பு வைத்திருக்கிறார்கள். WCC கல்லூரியில் கூட்டம் நடந்தது. அங்கு யு.ஆர். அனந்தமூர்த்தியின் “சம்ஸ்காரா” பற்றி பேசினேன். அது திருப்தியாக அமைந்தது. ஆனால அதை கட்டுரையாக எழுதி வைக்கவில்லை. மறுநாள் அய்யப்பா கல்லூரியில் மொழியாக்கம் பற்றி ஒரு கருத்தரங்கம் நடக்க இருந்தது. ஆனால் அதை ரத்து செய்தார்கள். அதற்காக ஒரு நல்ல கட்டுரை தயாரித்திருந்தேன். அதை பின்னர் ஸ்காட் கிறித்துவ கல்லூரியில் நடந்த கூட்டத்தில் வாசித்தேன். அன்று அய்யப்பா கல்லூரியில் எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். சிறப்பாக ஏற்பாடுகள் பண்ணி இருந்தார்கள். ஒரு ஓவியரைக் கொண்டு என் படத்தை பதாகையில் வரைந்திருந்தார்கள். அழகாக இருந்தது. எனக்காக அப்படி மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பதே நெகிழ வைத்தது. அந்த கூட்டத்தில் ஒரு எளிய நடைமுறை நிகழ்வை எப்படி நல்ல கதையாக மாற்றுகிறார்கள் என அசோகமித்திரன், மார்க்வெஸ் ஆகியோரின் கதைகளை வைத்து பேசினேன். அதே போல் குறைபாடு உடையவர்கள் எப்போதும் பிறரை விட வலுவானவர்களாக, வாழ்க்கையை இன்னும் மேலாக கையாள்பவர்களாக எப்படி மாறுகிறார்கள் என்பதையும் பேசினேன்.
அன்று மாலை முஸ்லீம் ஆர்ட்ஸ் கல்லூரியில் இன்னொரு பாராட்டு விழா. பேராசிரியர் ஜனார்த்தனன் என் நாவல் பற்றி ஒரு ஆழமான உரையாற்றினார். “கால்கள்” நாவலில் வரும் பேராசிரியர் மதுசூதனன் உண்மையில் அவர் தான். கல்லூரியில் அவர் எனக்கு பேராசிரியராக இருந்த போது துவங்கிய எனக்கும் அவருக்குமான உறவைப் பற்றி பேசினார். மிகுந்த ஆர்வத்தோடு அவரை கவனித்து கேட்டேன். மைக் எனக்கு அளிக்கப்பட்ட போது ஒரு எழுத்தாளன் எவ்வாறு தன் அக்கறை மற்றும் பிரக்ஞையை தன்னை நோக்கி அன்றி வெளியே சமூகம் நோக்கி திருப்ப வேண்டும் என பேசினேன். அது போல் இந்த பரிசும், அதை ஒட்டிய பாராட்டுகளூம் எனக்கு வேறு யாருக்கோ நடப்பது போல் தோன்றுவதாய் சொன்னேன். “அந்நியன்” நாவலில் வரும் மெர்சால்ட்டுக்கு அவன் அம்மா இறந்து போனதாய் சேதி வரும். ஆனால் அவனுக்கு துக்கமே தோன்றாது. எனக்கு இவ்விருது அது போல் எந்த மகிழ்ச்சியும் தரவில்லை என்றேன். மேலும் மகிழ்ச்சி என்பது ஒரு இயல்பாக இருக்க வேண்டும். அது “ஏற்படக்” கூடாது. “ஏற்படாத” ஒன்று மறையவும் செய்யாது. ஆகையால் தனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாய் சொல்லுகிறவன் கொஞ்ச நேரத்தில் வருத்தம் ஏற்பட்டதாயும் சொல்லுவான். ரெண்டும் குளத்தில் கல் விட்டெறிந்தால் எழும் சிற்றலைகள் போலத் தான். ஆழத்தின் எதுவுமே நடக்க வில்லை. நாம் அங்கு தான் இருக்கிறோம்.
அடுத்த நாள் காலை ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் மற்றொரு பாராட்டு விழா. அது நான் படித்த கல்லூரி. சுற்றிப் பார்த்தேன். வெகுவாக மாறி இருக்கிறது. மாணவர்கள் சீருடையில் இருக்கிறார்கள். பழைய இரைச்சல் இன்றி ஒருவித பயமுறுத்தும் அமைதியுடன் இருக்கிறது. முன்பு முதுகலைக்கான வகுப்புகள் பார்க்கர் ஹால் எனும் மிக அழகான வகுப்பறையில் நடக்கும். சிவப்பு திரைகள், சிவப்பு கார்ப்பெட், மேடை என அவ்வறை மிக கம்பீரமாய் இருக்கும். நான் இளங்கலை படிக்கையில் அவ்வறையை மிகுந்த பொறாமையுடன் பார்த்தபடி இங்கு ஒருநாளாவது படிக்க வேண்டும் என நினைப்பேன். அங்கு தான் எங்களது வாசகர் வட்டம், கவிஞர் சந்திப்பு கூட்டங்கள் நடக்கும். இக்கூட்டங்கள் சார்பில் அங்கு ஜெயமோகன், பொன்னீலன் ஆகியோரை அழைத்து வந்து பேச வைத்திருக்கிறேன். அவ்வறையை ஒட்டி எனக்கு மிக மிக அந்தரங்கமான பல நினைவுகள் உள்ளன. நான் படித்த ஆங்கிலத் துறையை கீழ்த்தளத்தில் இருந்து முதல் நிலைக்கு மாற்றி இருந்தார்கள். பார்க்கர் ஹாலின் திரைகளை அகற்றி, கார்ப்பெட்டை நீக்கி பூட்டி வைத்திருந்தார்கள். துறைக்கு போனேன். என்னுடைய ஆசிரியர்கள் யாரும் இல்லை. ரேணுகா எனும் ஒரே ஒரு பழைய ஆசிரியை இருந்தார். பிறர் புதியவர்கள். அங்கு நடந்த கூட்டமும் செறிவாக இருந்தது.
அன்று மாலை கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய கூட்டத்தில் என் அம்மாவை பேச வைத்தார்கள். அவர் மைக்கில் பேசிய முதல் கூட்டம். வீட்டில் பேசிப் பேசி என்னைக் கொல்வார். ஆனால் இது முதல் மேடை அனுபவம். எந்த பதற்றமும் இன்றி சரளமாக சுருக்கமாக பேசினார். நட.சிவகுமார் என் கட்டுரைகள் பற்றியும், ஹெச்.ஜி ரசூல் என் கவிதைகள் பற்றியும் பேசினர். முஜீப் ரஹ்மான் “கால்கள்” நாவல் பற்றி மிக ஆழமாய் உரையாற்றினார். “கால்கள்” பற்றி நான் கேட்ட மிகச்சிறந்த விமர்சனம் அதுவே. நான் பேசும் போது கலை இலக்கிய பெருமன்றம் எனக்கு வெறும் இலக்கியப் பள்ளி மட்டும் அல்ல. அதை விட முக்கியமாய் வாழ்க்கையில் இலக்கற்று இருந்த போது ஒரு பிடிமானத்தை தந்த அமைப்பு. மிகுந்த தனிமையில் இருந்த போது அணுக்கமான குடும்பமாய் மாறின அமைப்பு. மேலும் சமூகம், அரசியல், இலக்கியம் பற்றி எனக்கு இன்றுள்ள சில பிடிவாதங்கள் அவர்கள் எனக்கு தெரியாமல் எனக்குள் விதைத்த விழுமியங்களில் இருந்து தோன்றியவை தான் என்றேன்.

மன்றத்து நண்பர்களை அந்த கூட்டத்தில் சந்தித்தது தான் உண்மையான குடும்ப உறவுகளை சந்தித்தது போல் இருந்தது. என் அப்பாவோடு பிறந்தவர்கள் ஏழு பேர். என் அம்மாவோடு ரெண்டு பேர். எல்லாம் சேர்ந்து மிகப்பெரிய வலைப்பின்னல் என் உறவினர்கள். ஆனால் யாருமே என்னுடன் நெருக்கமாக இல்லை. போலியானவர்கள். அவர்களை யாரையும் சந்திக்க நான் விரும்பவில்லை. உறவு என்பது மனதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ரத்தத்தில் இருந்தல்ல. என் அத்தானுக்கும் நானும் “ரன்” படத்தில் வரும் ரகுவரனும் மாதவனும் போல. அவர் அடிப்படையில் நல்ல மனிதர். ஆனால் என்னை கேலி பண்ணி மட்டம் தட்டாவிட்டால் தூக்கம் வராது. விருதை ஒட்டி நான் அளித்த பேட்டி ஒன்றில் “எழுதுவது எனக்கு ஒரு பெண் அருகே இருக்கையில் கிடைக்கும் கிளர்ச்சியை அளிக்கிறது” என சொல்லி இருந்தேன். என் அத்தான் என் நண்பர் ஒருவரை அழைத்து “இதைப் படித்தால் பெண்ணைப் பெற்ற அப்பாக்களின் மனம் எவ்வளவு காயப்படும். அதனால் அபிலாஷுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கப் போகிறேன்” என்றார். இவ்விசயம் கேள்விப்பட்டு மிகவும் ரசித்து சிரித்தேன். அதனால் அவரை பார்க்க அவர் வீட்டுக்கு போனேன். என்னைப் பார்த்து அன்புடன் விசாரித்தார். குறும்பாக பார்த்தார். ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு.
நான் பேசிய மூன்று கல்லூரிகள் மற்றும் கலந்து கொண்ட மன்ற கூட்டத்திலும், அனக்கம் கூட்டத்திலும் சிறிது, பெரிதென்று தங்களால் முடிந்த ஒரு தொகையை எனக்கு அளித்தார்கள். ஸ்காட்டில் ஒரு பெரிய தொகையையே அளித்தார்கள். அதை நான் எதிர்பார்க்கவில்லை. இவ்விசயத்தில் சென்னைக்காரர்களுக்கும் எங்கள் ஊர்க்காரர்களுக்கு ஒரு வித்தியாசம் உண்டு. சென்னையில் கூட்டம் நடத்துபவர்கள் அலங்காரம், ஆடம்பரம், பந்தா இதில் தான் செலவழிப்பார்கள். பெரிய பதாகை கட்டுவதிலும், பெரிய ஹாலை வாடகைக்கு எடுப்பதிலும் செலவழிக்கிற தொகையை பேசாமல் சிறப்பு விருந்தினர் அல்லது எழுத்தாளனுக்கு கொடுத்து விடலாம். சென்னைக் கிறித்துவக் கல்லூரி அலும்னி அமைப்பினர் நடத்திய பாராட்டுக் கூட்டமும் சரி, சென்னை பல்கலைக்கழகம் நடத்திய பாராட்டு விழாவும் சரி சென்னையில் எனக்கு நடந்த பாராட்டு கூட்டங்களில் எனக்கு அஞ்சு காசு கூட தரவில்லை. ஆனால் ஊரில் இந்த பந்தா, பட்டாசு, புஸ்வாணம் எல்லாம் இராது. காசு கொடுத்து ரேடியோ ஜாக்கியை கூட்டி வந்து தொகுக்க வைக்க மாட்டார்கள். வீடியோகிராபருக்கு செலவழித்து பதிவு செய்ய மாட்டார்கள் தாம். ஆனால் எழுத்தாளனுக்கு தாராளமாக பரிசுத் தொகை அளிப்பார்கள். பொதுவாக பணம் இல்லாதவர்கள் தாராள மனதோடு இருக்கிறார்கள். போரடிக்கிறதென்றால் மாலுக்கு போய் ஆயிரக்கணக்கில் காசை விசிறி எறிகிறவர்கள், விமானத்திலும், ஏஸி கார்களிலும் பயணிக்கிறவர்கள், ஐயாயிரம் ரூபாய்க்கு சட்டை வாங்கிறவர்கள் கூட்டங்கள் நடத்தும் போது மட்டும் மிக கஞ்சத்தனமாக நடந்து கொள்வார்கள். எழுத்தாளனுக்கு பயணச் செலவுக்கு ஐநூறு ரூபாய் கொடுப்பதற்கு தயங்குவார்கள். முந்தா நாளும் நேற்றும் திருச்சியில் இரண்டு கூட்டங்களில் பேசினேன். ஒன்று ஜமால் முகமது கல்லூரி. நூறு ஏக்கர் பரப்பிலான கல்லூரி. பத்தாயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கூட்டத்தில் பேசுபவர்களை உபசரிப்பதில் ஆர்வமில்லை. பயணச்செலவுக்கு என ஒரு ரூபாய் கூட தரவில்லை. எனக்கான பயணம் மற்றும் தங்கும் செலவைக் கூட நண்பர் ஷாநவாஸ் தான் பார்த்துக் கொண்டார். அன்று நடந்தது ஒரு தேசிய கருத்தரங்கு. பொதுவாக கருத்தரங்கில் கலந்து கொள்பவர்களுக்கு பயணம் மற்றும் பொதுவான செலவுக்கு பணம் அளிப்பது மரபு. இது கூட இவ்வளவு பெரிய கல்லூரி நடத்துபவர்களுக்கு தெரியவில்லை என வியப்பு ஏற்படுகிறது. அக்கல்லூரிக்கு இனி தெரியாமல் பேச செல்வபர்களுக்கு எச்சரிக்கையாக தான் இதை எழுதுகிறேன். இதில் கொடுமை நிகழ்ச்சியை சிங்கப்பூர் வாழ் ஜமால் கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் அமைப்பும் சேர்ந்து நடத்தியது என்பது. சிங்கப்பூரில் வீட்டு வேலை பண்ணுகிறவர்களுக்கு மாத சம்பளம் ஒரு லட்சம் கொடுக்க வேண்டும். அப்படி செலவழிப்பவர்களுக்கு ஒரு கருத்தரங்கில் ஒரு மணிநேரம் கால் கடுக்க நின்று பேசுபவர்களுக்கு தர ஒரு ஐநூறு ரூபாய் இல்லையா? இது ஒரு எழுத்தாளனுக்கு அல்ல, அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கு தான் அவமானம். எதிர்காலத்தில் சிங்கப்பூர் போக நேர்ந்தால் ஜமால் கல்லூரியின் மாணவர்கள் யாரைப் பார்த்தாலும் நிச்சயம் இதைக் கேட்பேன்: “குப்பை பெருக்குகிறவனுக்கு நீங்கள் பணம் கொடுக்காமல் வேலை வாங்க முடியுமா? முடி வெட்டுகிறவனிடம் போய் ஓசியில் வெட்டிக் கொள்ள முடியுமா? ஒரு வேசி கூட பணத்தை கையில் வாங்காமல் ஆடையை அவிழ்க்க மாட்டாள். எழுத்தாளன், ஆய்வாளன் என்றால் மட்டும் காசு வாங்காமல் நீண்ட தூரம் பயணித்து வந்து உங்களிடம் தொண்டை வறள பேச வேண்டுமா? அறிவை மட்டும் ஏன் ஓசியில் வாங்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? நாங்களா உங்கள் கூட்டத்துக்கு வந்து பேச வேண்டும் என கெஞ்சுகிறோம்? நீங்களாகத் தானே அழைக்கிறீர்கள்? அழைத்து ஓசியில் எங்களை பயன்படுத்தி விட்டு எங்களை திரும்பி அனுப்புகிறீர்கள். அடுத்த முறை ஒரு நல்ல பேச்சை கேட்கும் முன், ஒரு நல்ல புத்தகத்தை படிக்கும் முன் கண்ணாடி முன் நின்று உங்களை நோக்கி காறித் துப்பிக் கொள்ளுங்கள். வேலை செய்கிறவனுக்கு ஊதியம் தராமல் ஏமாற்றும் போது எப்படியும் மறைமுகமாக உங்களுக்கு நீங்களே அதைத் தான் செய்து கொள்கிறீர்கள்.” இதெல்லாம் கூடப் பரவாயில்லை. மாலை கூட்டம் முடிந்து அறையில் இருக்கும் போது ஜமால் முகமது முன்னாள் மாணவர்கள் சிங்கப்பூர் பேரவையின் தலைவர் என் நண்பருக்கு ஒரு வாய்ஸ் மெஜேஜ் அனுப்பியிருந்தார். “கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது. முன்னாள் மாணவர்கள் சார்பாக பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்”. அதைக் கேட்டதும் உண்மையில் என் ரத்தம் கொதித்தது. இவர்களுக்கு எல்லாம் ஈவிரக்கமே இல்லையா? யாராவது ஒருவர் கழுத்தை அறுத்து பிரியாணி வைத்து விட்டு “ரொம்ப சுவையாக இருக்கிறது, கறி மிருதுவாக இருக்கிறது” என பாராட்டுவார்கள்? உங்கள் தட்டில் இருப்பது இன்னொருவரின் ரத்தம் என உங்களுக்கு புரியாதா? இதில் தனக்குத் தானே மாலை போட்டுக் கொள்வது வேறு!
இன்னொரு கொடுமை எனக்கு பாராட்டு விழா என்று சொல்லித் தான் முதலில் அழைத்தார்கள். ஆனால் அங்கே போனதும் பாராட்டு விழா மாயமாக தேசிய கருத்தரங்காகி விட்டது. இப்படி இவர்கள் இஷ்டத்துக்கு வைத்து விளையாட எழுத்தாளன் என்ன சொப்பு சாமானா? ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வது மகிழ்ச்சியான விசயம் தான். ஆனால் அதற்கென்று முறையாக முன்கூட்டியே சொல்லி சரியாக நடத்த வேண்டும். பேசுபவர்களுக்கு முன்கூட்டியே அழைப்பிதழ் அனுப்ப வேண்டும். ஆனால் பேசுபவர்களுக்கு முந்தின நாள் தான் என்னிடம் நிகழ்ச்சி நிரல் என்னவென சொல்கிறார்கள். அப்போது தான் அது கருத்தரங்காக மாற்றப்பட்ட விசயம் எனக்குத் தெரியும். அங்கு போன பின் தான் எனக்கு அவர்கள் எந்த விதமான பெரிய கருத்தரங்கோ கூட்டமோ நடத்தி அனுபவம் இல்லாதவர்கள் எனப் புரிந்தது. அதற்கான முறையோ நாகரிகமோ அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கு நான் என்ன பரிசு வாங்கி இருக்கிறேன் என்று கூடத் தெரியவில்லை. எனக்களித்த ஒரு ஷீல்டில் “பால புரஸ்கார்” என பொறித்திருந்தார்கள். பிறகு அவர்களிடம் விளக்கி அதை திருத்தி வாங்கினேன். ஆத்மார்த்தியை அறிமுகப்படுத்தியவர் அவர் நாவல் எழுதியிருக்கிறார் என்றார். ஆத்மார்த்தி என் காதருகே “இவர் பெரிய சித்தராக இருப்பார் போல, எதிர்காலத்தை எழுதப்போகிற நாவல் பற்றி இப்போதே ஆருடம் சொல்கிறார்” என்றார்.
அடுத்த நாள் மாலை திருச்சியில் கலை இலக்கிய பெருமன்றம் ஒரு பரிசளிப்பு விழா நடத்தியது. அதில் என்னை கௌரவித்தார்கள். அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு காலையில் சென்றிருந்தேன். தோழர்கள் சேர்ந்து ஆளுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் என பணம் போட்டு அன்றைய நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். இப்படி எந்த புரவலரும் இன்றி தாமாகவே உள்ள பணத்தில் கூட்டம் நடத்தியவர்கள் நிகழ்ச்சியில் பரிசு வாங்கிய இருபது பேருக்கு மேலாக தாராளமாக ஆளுக்கு ரெண்டாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இதைத் தான் முதலில் சொன்னேன்: உலகின் மிகப்பெரிய கஞ்சர்கள் பெரிய பணக்காரர்கள். தாராள மனம் கொண்டவர்களிடம் பணம் இருக்காது. ஆனால் கொடுக்க மனம் இருக்கும். பணத்தை விட அந்த மனம் தான் முக்கியம். பணக்காரர்கள் தாம் உலகின் மிகப்பெரிய பிச்சைக்காரர்கள்.

அந்த கூட்டம் கலைக்காவிரி எனும் ஒரு இசைக்கல்லூரியின் அரங்கில் நடந்தது. அக்கல்லூரி பார்க்க அவ்வளவு அழகாக கலைநயத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சி முடிந்ததும் அங்கு படிக்கும் எங்க ஊர்ப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் எழுத்தாளர் மலர்வதியின் உறவினர். அப்போது பின்னணியில் யாரோ சேர்ந்திசையாக பாடுவது கேட்டது. மாணவிகள் பரீட்சைக்கு படிக்கிறார்கள் என்றார் அவர். நாமெல்லாம் பரீட்சைக்கு மேஜையில் மண்டையை மோதி அழுது கொண்டு படிப்போம், இவர்கள் பாடிக் கொண்டு எவ்வளவு இனிமையாக லயிப்பாக படிக்கிறார்கள் என வியந்தேன். அந்த பரீட்சை எவ்வளவு அழகாக இருக்கும், காப்பி அடிக்க, பிட் அடிக்க முடியாது. கை விரல்கள் வலிக்காது. வகுப்பில் ஆசிரியர் பாடி வகுப்பெடுத்தால் தூங்குவீர்களா என்று கேட்டேன். சிலர் தூங்குவார்கள் என்றார். உண்மையில் இசை இந்த எழுத்தும், அது சார்ந்த வன்முறைக்கும் எவ்வளவோ மேலானது. இன்று அது நல்ல தொழிலும் கூட. ரியாலிட்டி ஷோவில் ஓரளவு பேர் வாங்கினால் ஒரு மேடையில் பாட லட்சம் பணம் கொடுப்பார்கள். மற்றபடி மேடையில் இசைநிகழ்ச்சி குழுவில் இருந்தால் கூட ரெண்டே மேடைகளில் ஒரு மாதத்தில் ஒரு தனியார் கம்பனியில் சம்பாதிப்பதை விட இரட்டிப்பு சம்பாதிக்கலாம். ஆனால் நீங்கள் எவ்வளவோ படித்து விரிவாக செறிவாக சுவாரஸ்யமாக ஆயிரம் டி.வி மேடைகளில் பேசினாலும் உங்கள் கதி “ரத்தக்கண்ணீர்” ராதா நிலை தான். 

1 comment:

chitra chitra said...

அறச் சீற்றம்.