Sunday, October 12, 2014

இவ்வளவு பேசி என்ன சாதித்து விட்டோம்?


எழுத்தாளன் பயணிக்க வேண்டும்; படிக்க வேண்டும் என்பார்கள். எனக்கு படிக்க மட்டுமே பிடிக்கும். பயணிக்க அலுப்பாக தோன்றும். எனக்கு பயணங்களின் மீது எந்த ரொமாண்டிக்கான எதிர்பார்ப்பும் இல்லை. எல்லா இடங்களும் ஒரே போன்று தான் இருக்கின்றன. எல்லா மனிதர்களும் கூட.
எந்த நோக்கமும் இன்றி பயணிக்கையில் மனது சற்று விடுபடுகிறது. மனிதர்களை இன்னும் உற்று கவனிக்க முடிகிறது. நம்மையே நாம் கவனித்து அறிய முடிகிறது. ஆனால் திட்டமிட்ட, சூட்கேஸுக்குள் அமர்ந்து நம்மையே நாம் பூட்டிக் கொள்கிற பயணங்களில் அதுவும் சாத்தியப்படுவதில்லை. அடுத்து பயணிக்க ஒன்று நிறைய பணம் வேண்டும். சும்மா ஊருக்கு போய் வருகிற பணத்தில் பத்து நாள் என் செலவுகள் ஓடும். என்னுடைய சில எழுத்தாள நண்பர்கள் மதுரை போவதென்றால் கூட விமானத்தில் தான் போகிறார்கள். கார் வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் இல்லாதவர்கள் எதையும் தாங்கும் உருக்கு உடலோடு இருக்கிறார்கள். இம்மூன்றும் இல்லாதவர்கள் பயணங்களில் நொந்து விடுவார்கள்.

எனக்கு பயணத்தில் இன்னொரு பிரச்சனை உண்டு. பொதுவாய் இலக்கிய கூட்டங்கள் போன்ற இடங்களுக்கு போய் பேசும் போது சட்டென்று எனக்கும் சுற்றி இருப்பவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனும் எண்ணம் வலுவாக தோன்றும். அவர்கள் என் நண்பர்களாகவும் என் மீது அக்கறை உள்ளவர்களாகவும் இருப்பர். ஆனால் பொதுவாக கூட்டங்களில் உள்ள சூழலில் ஆத்மார்த்தமான உரையாடல்களுக்கு இடமிருக்காது. ஏதோ சாலையில் இடித்துக் கொண்டு நடக்கிற உணர்வு தான் இருக்கும். இப்படி அவசர அவசரமாக ஆட்களை முகம் பார்த்து கைகுலுக்கி வீட்டுக்கு வந்த பின் கடுமையான ஒரு தனிமை என்னைச் சூழும். மூன்று நாளில் நானும் என் சிறிய அறையும் புத்தகங்களும் என வாழ்ந்த பின் அத்தனிமை அகன்று விடும்.
மேலும் வாழ்வுக்கு ஒரு ரிதம் உண்டு என நம்புகிறேன். தினமும் படிப்பது, எழுதுவது, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு போய் நாம் முக்கியமாய் நினைக்கிறவர்களை தினமும் சந்திப்பது போன்ற ஒரு தொடர்செயல்பாடு வாழ்க்கையில் ஒரு தீவிரத்தையும் ஆழத்தையும் தரும். ஆனால் பயணங்கள் இந்த ரிதமை உடைத்து விடுகின்றன. ஒன்றுடன் தொடர்ந்து இருப்பது என்பதே எனக்கு பிடித்தமான காரியம். பலவற்றுடன் அவ்வப்போது இருப்பது வாழ்க்கையை தட்டையாக்கும் என நினைக்கிறேன். தினமும் எங்காவது பயணித்து விற்பனை பிரதிநிதி போல் மேடைகளில் தெரியாத முகங்களுடன் உறவாடி எந்த நெருக்கமான உறவுகளையும் பெறாமல் விசிட்டிங் கார்ட் போல் நினைவுகளை சேகரித்து வீட்டுக்கு திரும்புகிறவர்களின் பிச்சைப்பாத்திரம் உண்மையில் காலியாகவே இருக்கிறது.
பயணம் நல்லது தான். அது பிக்‌ஷுக்களின் பயணம் போல் இருக்க வேண்டும். எழுத்தாளர்களின் பயணங்கள் விற்பனை பிரதிநிதியின் போல் பயணம் போலிருக்கிறது. எனக்கு இந்த துறவிகளை பார்த்து பொறாமையாக இருக்கிறது. எந்த ஊருக்கு போனாலும் தங்குவதற்கு என்று ஒரு ஆசிரமம் இருக்கும். நம் போக்கில் இருந்து விட்டு கிளம்பலாம்.
பயணம் என்பது தனிமையின் ஊடாக இருக்க வேண்டும். கூட்டத்தோடு கூட்டமாக மாட்டுவண்டி மேல் பயணப்பொதி போல் இருக்க கூடாது. மனதுக்குள் நுழைய ஒரு வாசல் இருக்கிறது. பயணம் அங்கு ஆரம்பித்து மற்றொரு வாசல் வழி வெளியே வந்து விட வேண்டும். ஆனால் நமது பயணங்கள் மனதின் வெளியே உள்ள இரைச்சலான இடத்தில் ஆரம்பித்து பிளாட்பாரத்தில் முடிகிறது. வெளியே ஆரம்பித்து இன்னும் வெளியே போய் முடிகிறது.
அதனால் தான் பயணங்கள் களைக்க வைக்கின்றன. நான் களைப்பாக இருக்கிறேன்.
நண்பர் மனுஷ்யபுத்திரன் வாரம் ஒரு பயணமாவது போகிறார். மிச்ச நாட்களில் டி.வி அலைவரிசைகள் இடையே பயணித்துக் கொண்டே இருக்கிறார். அவருக்கு இது அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களில் இருந்து ஒரு தப்பித்தலாக உள்ளது. கூண்டுக்கு பயந்து தினமும் படப்பிடிப்புக்கு போகிற ஒரு சர்க்கஸ் புலியை போல் இருக்கிறார். முந்தா நாள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நானும் அவருடம் சேர்ந்து தான் பேச போயிருந்தோம். அவர் உரையாற்றிய பின் டியூசனில் இருந்து திரும்பிய குழந்தை போல் இருந்தார். ஒரு நல்ல வகுப்புக்கு போன பின் நாம் எவ்வளவு உற்சாகமாய் துடிப்பாய் மாறுவோம் என அறிவேன். ஆனால் பார்வையாளர்கள் அகலிகையாக மாற தெரியாமல் கல்லைப் போல் வீற்றிருக்கும் கூட்டங்கள் ஒரு பேச்சாளனுக்கு கசையடிக்கு சமம். கணிசமான கூட்டங்களுக்கு வருபவர்கள் அன்றாட வாழ்வின் செக்கில் மாட்டி அலுத்துப் போனவர்கள். அவர்களுக்கு இலக்கியம், அரசியல், அறம், உளவியல் போன்ற எதிலும் ஈடுபாடில்லை. அவர்களுக்கு உண்மையில் தேவை மைக்கை அணைத்து, வெளிச்சத்தை அணைத்து “நண்பர்களே சற்று நேரம் தூங்குங்கள்” என யாராவது சொல்வது தான். அவர்கள் கூட்டங்களில் தூங்கி வழிகிறார்கள் என நான் கூற வரவில்லை. ஆனால் தினமும் ஒவ்வொரு மணிநேரமும் அவர்கள் தலையில் சம்மட்டியால் அடித்துக் கொண்டு வருகிறார்கள். ஒரு உரையாடலுக்கான தயார்நிலையில் அவர்கள் இல்லை.

என்றாவது ஒருநாள் நான் மேற்சொன்னது போல் எல்லாவற்றையும் அணைத்து விட்டு “சற்று நேரம் அமைதியாக ஓய்வெடுங்கள்” என பார்வையாளர்களை நோக்கி ஒரு மேடையில் சொல்லப் போகிறேன். இவ்வளவு பேர் பேசி பேசி அதைக் கேட்டு நாம் என்ன சாதித்து விடப் போகிறோம்? கொஞ்ச நேரம் அமைதியாக இருப்போம். சத்தமில்லாமல், அர்த்தமில்லாத கருத்துக்களின் சில்லறைகள் நம் தட்டில் வந்து விழாமல், நம் எண்ணங்களை பின் தொடர்ந்த படி சும்மா இருப்போம். இவ்வளவு பேசி என்ன சாதித்து விட்டோம்? 

1 comment:

jude raj said...

எழுத்தாளனின் பயணம் குறித்த பார்வையை தெளிவாக கூறி இருக்கிறீர்கள் . குறிப்பாக மேடையில் பேசும் போது நம்மை சுற்றி இருப்பவர்கள் ரசனை , ஆர்வம் இல்லாதவர்கள் இருந்தால் பேசுபவருக்கு எவ்வளவு எரிச்சல் , ஆதங்கத்தை ஏற்படுத்தும் என்று கூறி இருக்கிறீர்கள்.


பார்வை இல்லாதவர் கையில் வைரம் கிடைத்தாலும் அது வெறும் கல். அதை போன்று தான் ரசனை இல்லாதவரிடம் நீங்கள் எதை பேசியும் பயன் இல்லை சார்.
இவ்வளவு பேசி என்ன சாதித்து விட்டோம்?
கண்டிப்பாக உங்கள் பேச்சு, எழுத்தை நேசிப்பவர்கள் சாதனையாளர்களாக வருவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. குறைந்த பட்சம் நல்ல மனிதர்களாக வாழ முயற்சி செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்.