Sunday, October 19, 2014

உயிரெழுத்துப் பேட்டி பகுதி 2

யுவ புரஸ்கார் விருதை ஒட்டி உயிர் எழுத்து போனதற்கு முந்தின இதழை எனக்கு சிறப்பிதழாக கொண்டு வந்தார்கள். அதில் என் நீண்ட பேட்டி வெளியானது. அப்பேட்டியின் ஒரு பகுதி இது:

கேள்வி: உங்கள் எழுத்துகளின் வழி மனுஷ்ய புத்திரனுடைய இலக்கிய செயல்பாடுகள் தங்களை வளர்ச்சிக்கு துணையாக இருந்தது என அறிய முடிகின்றது. அவரைப் பற்றிச் சொல்லுங்கள்.

ஆர்.அபிலாஷ்: உண்மையை சொல்வதானால் நான் கட்டுரை, நாவல், கதைகள் எழுதவெல்லாம் உத்தேசிக்கவில்லை. கவிதை மீது மிகுந்த மோகம் கொண்டவன் நான். என் கவிதைகளுடன் தான் மனுஷ்யபுத்திரனை சந்தித்தேன். அவர் அப்போது உயிரோசை ஆரம்பித்திருந்தார். முதல் இதழில் இருந்தே என்னை கட்டுரைகள் எழுத வைத்தார். அப்போதெல்லாம் வாரத்துக்கு ஒரு கட்டுரை எழுதுவது பெரிய சவாலாக இருந்தது. ஆனால் போக போக நிறைய எழுதுவதும் வேகமாய் எழுதுவதும் பழகியது. ஒரு மன ஒழுங்கு ஏற்பட்டது. என்னை தொடர்ந்து எழுத தூண்டியவர் அவர் தான். எனக்கே அறியாத என்னுடைய ஆளுமையின் இன்னொரு பக்கத்தை திறந்து விட்டார். அவர் என் வாழ்க்கையில் குறுக்கிட்டிரா விட்டால் நான் இத்தனை கட்டுரைகள் எழுதியிருக்க மாட்டேன். கட்டுரைகள் தான் நாவல் எழுதும் துணிச்சலை தந்தன. இது விநோதமானது தான், ஆனால் உண்மை.
நான் மெல்ல ஒரு எழுத்து எந்திரமாகி விட்டேன். நீண்ட காலமாய் அந்த எந்திரம் தூங்கிக் கொண்டிருந்தது. மனுஷ்யபுத்திரன் அந்த எந்திரத்தின் ஸ்விட்சை கண்டுபிடித்து ஆன் செய்து விட்டார். இப்போது வரை தடங்கல் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. நிறைய எழுதுவதில் எனக்கு இவ்வளவு இன்பம் உண்டு என கண்டறிய வைத்தவர் அவர் தான்.


ஒரு பதிப்பாளனாய் நான் மனுஷ்யபுத்திரனின் கண்டுபிடிப்பு. அவர் எனக்கு ஒரு mentor. மனிதர்களை கையாள்வது, சிக்கலான விசயங்களை கையாள்வது, சாமர்த்தியமாய் பேசுவது என பல விசயங்களை அவரை அணுக்கமாய் அவதானித்து கற்றிருக்கிறேன். 2007இல் ஒரு நாள் எதேச்சையாய் என் அலுவலகத்தில் விடுப்பு எடுத்து என் எழுத்துக்களுடன் அவரை பார்க்க சென்றேன். அது என் வாழ்க்கையை (நல்லதற்கோ கெட்டதற்கோ) மாற்றி விட்டது. அவருக்கு என் நன்றிகள்.

கேள்வி: தங்களுடைய அடுத்த நாவல் விரைவில் வெளியாக உள்ளது. கட்டுரையாளராக, சிறுகதை ஆசிரியராக, கவிஞராக இருந்துகொண்டு மட்டுமல்லாமல் லௌகீக வாழ்கையின் நிமித்தமான வேலைப்பளுகளுக்கிடையே இது எவ்வாறு சாத்தியமாகின்றது?

ஆர்.அபிலாஷ்: இது மிக மிக சிரமமானது. வேலை செய்து கொண்டு எழுதுவதானால் நீங்கள் தினம் நான்கு மணிநேரம் தான் தூங்க முடியும். குடும்ப உறவுகளில் சிக்கல் வரும். வெளியே அதிகம் பயணிக்க முடியாது. நண்பர்களுடன் உரையாட முடியாது. எல்லாருக்குமான நேரத்தையும் எடுத்து எழுத்துக்கு கொடுக்க வேண்டும். இது இரக்கமற்ற காரியம் தான். ஆனால் இதைச் செய்யாமல் நீங்கள் எழுத்தாளனாக தொடர்ந்து இயங்க முடியாது. என் நண்பர் விநாயக முருகன் மென்பொருள் பொருளாளர். கடுமையான வேலைப்பளு நடுவே அவர் தொடர்ந்து இரண்டு நாவல்களை ஓய்வு நேரத்தில் எழுதி முடித்திருக்கிறார். தினமும் ஒரு சுவாரஸ்யமான் கட்டுரை எழுதும் வா.மணிகண்டனும் இது போல் தான் எழுதுகிறார். லஷ்மி சரவணகுமார் தனது கானகன் நாவலை படப்பிடிப்பு அலுவல்கள் இடையே இரவில் விழித்திருந்து எழுதி முடித்ததாக சொன்னார். இப்படி எழுத்தாளன் ரத்தக்காட்டேறியாக வாழ வேண்டி இருக்கிறது.

கேள்வி: உங்களுடைய ஒரு பதிவில் இன்னும் இருபது ஆண்டுகள் வாழ விரும்புகிறேன் எனச் சொல்லி இருந்தீர்கள். மரணத்தைப் பற்றிய உங்களது பார்வை என்ன?

ஆர்.அபிலாஷ்: மூன்று வருடங்களுக்கு முன் மரணத்தின் விளிம்பிற்கு சென்று திரும்ப வந்தேன். நான் இறந்து போவதற்கான அனைத்து நியாயங்களும் இருந்தன. ஆனாலும் நான் சாகவில்லை. என்னை விட சின்ன வயதில் அல்லது நல்ல ஆரோக்கியமாய் இருப்பவர்கள் திடீரென இறக்கிறார்கள். நான் ஏன் சாகவில்லை? எனக்கு அப்போது இது புதிராக இருந்தது. பின்னர் நான் இந்த காலத்தால் எழுதுவதற்காகவே வாழ வைக்கப்பட்டிருக்கிறேன் எனத் தோன்றியது. பின்னர் எனக்கு எழுதும் உத்வேகம் அதிகமானது. ஒரு உறுதிப்பாடு கிடைத்தது. அந்த கிட்டத்தட்ட மரணம் காலம் எனக்கு தந்த சமிக்ஞையாக நினைத்துக் கொள்கிறேன். இன்று வரை எந்த சன்மானமும் சமூக கவனமும் இன்றி எதற்கு எழுத வேண்டும் என தோன்றும் போதோ அல்லது வேறு எழுத்து சார்ந்த ஏமாற்றங்கள் வரும் போதோ நான் இதைத் தான் நினைத்துக் கொள்வேன்: “நான் எழுதுவதற்காக வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். இந்த வாழ்வு காலம் எனக்கு அளித்த கடன். ஆக எழுத வேறெந்த சன்மானமும் தேவையில்லை”. இன்றளவும் இந்த எண்ணம் தான் எனக்கு மன உறுதியை அளித்துள்ளது. எழுத்துக்கான ஒரே நியாயம் வாழ்கிறேன், இங்கு இருக்கிறேன் என்பது தான்.

அந்த இருபது வருடங்கள் கணக்கு குத்துமதிப்பானது தான். என் பணி தீரும் போது - அல்லது அவ்வாறு காலம் கருதும் போது - நான் சென்று விட வேண்டும். எனக்கு ஒரு ரொமாண்டிக்கான ஆசை உள்ளது. அது ஐம்பத்தைந்து வயதில் ஹெமிங்வே போல் துப்பாக்கியால் என் தலையை சுட்டுக் கொண்டு சாக வேண்டும் என்பது. இந்த வாழ்க்கையின் அர்த்தமின்மையை நோக்கி ஒரு தோட்டாவை சீற விட வேண்டும். இது ஒரு விடலைத்தனமான ஆசை. அவ்வளவு தான்.

கேள்வி: ஏதோ ஒரு வகையில் நீங்கள் இடதுசாரி இயக்கங்களோடும் அந்த தத்துவங்களோடும் தொடர்புகொண்டது உங்கள் எழுத்தை வளப்படுத்தியுள்ளதா? ஏனெனில் இடதுசாரி கருத்துகளை உடையவர்களுக்கு மொழிவளம் குறைவு என்கின்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது.

ஆர்.அபிலாஷ்: எழுத்தாளனை இடதுசாரி, வலதுசாரி என பிரித்து பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. சி.சு செல்லப்பா வத்தலகுண்டு பிராமண சங்கத்தின் தலைவராக இருந்தார் என்றால் அவர் பிராமண எழுத்தாளரா? இல்லை. தமிழில் இடதுசாரிகளை கடுமையாக எதிர்த்த சுந்தர ராமசாமி ஒரு மென்மையான இடதுசாரி தான். அவர் தன் இடதுசாரி தாக்கம் காரணமாய் சமூகத்தின் மீதான ஒரு தீவிர அக்கறையை பெற்றார். இதை அவரதுதண்ணீர்”, “கோயில் காளையும் உழவுமாடும்போன்ற கதைகளில் காணலாம். பின்னர் அவர் இடதுசாரிகளிடம் முரண்பட்டதும் அதை ஒரு மனிதநேயமாக மடை மாற்றிக் கொண்டார். ஆனால் இறுதிவரை அடியாழத்தில் அவர் ஒரு மார்க்ஸியராக தான் இருந்தார். இன்று கடுமையான இடதுசாரி எழுத்தாளராய் தோன்றும் ஜெயமோகனிடம் முரணியக்க சிந்தனை சார்ந்து ஒரு இடதுசாரித்தனம் உள்ளது. தமிழில் உள்ள கவிஞர்களில் நான் மிக முக்கியமானவர்களாய் கருதும் மனுஷ்யபுத்திரன், என்.டி ராஜ்குமார் போன்றவர்கள் இட்துசாரி பின்னணி கொண்டவர்களே. யவனிகா ஸ்ரீராம், ஆத்மாநாமிடம் கூட நான் இடதுசாரி தாக்கத்தை பார்க்கிறேன். சொல்லப் போனால் தமிழில் இன்றுள்ள அரசியல் எழுத்து கணிசமாய் இடதுசாரி போக்கு கொண்டது தான். தமிழின் முக்கிய நவீன கட்டுரையாளர்களான தமிழவன், ராஜ் கௌதமன், ரவிக்குமார் ஆகியோரும் பின்னை இடதுசாரிகளே. இன்று புழக்கத்தில் உள்ள பல கோட்பாட்டு சொற்களை தமிழில் உலவ விட்டவர்கள் இவர்கள் தான். இன்று விகடனில் கூட ஒருவர் கட்டுடைத்தல் என எழுதுகிறார் என்றால் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இங்கு இயங்கிய இடதுசாரி சிந்தனையாளர்களின் பண்பாட்டு தாக்கம் தான் என்ன என நாம் உணரலாம். இன்று தமிழில் முக்கியமான கட்டுரையாளர்களாக இருக்கும் ஸ்டாலின் ராஜாங்கம், பீர்.முஹம்மது போன்றவர்களும் இதே பின்னணி கொண்டவர்களே. தமிழில் தலித்தியம், பெண்ணியம் ஆகியவை முக்கிய தரப்புகளாக தோன்றுவதற்காக இம்மொழியை தயார்ப்படுத்தியர்கள் இடதுசாரிகள் தான். இன்றும் பல ஊர்களில் இருந்தும் புறப்பட்டு வரும் பல இளைய எழுத்தாளர்களுக்கு இலக்கியத்தை கோட்பாடுகளையும் அறிமுகப்படுத்துவது ஏதாவது ஒரு இடதுசாரி அமைப்பாக இருக்கும். இதையெல்லாம் நான் தமிழ் இடதுசாரிகளை நியாயப்படுத்த கூறவில்லை. நான் கட்சி உறுப்பினன் அல்ல. நான் யார் சார்பில் இருந்தும் இதைக் கூறவில்லை. தமிழில் எதிர்-இடதுசாரிகள் செய்து வரும் பொய்ப் பிரச்சாரத்தை மறுக்கவே இத்தனையும் கூறினேன்.

இந்த எதிர்-இடதுசாரிகளில் - அதாவது எழுத்து போன்ற சிறுபத்திரிகைகளின் எழுத்தாளர்கள் துவங்கி இன்றுள்ள எதிர்-இடதுசாரிகள் வரை - சார்த்தருக்கு நிகரான ஒரு மேதையாவது, தத்துவஞானியையாவது உருவாக்கி இருக்கிறார்களா? இல்லை. அல்லது உங்களது வெங்கட் சாமிநாதனோ அரவிந்தன் நீலக்ண்டனோ ஷிஷெக்கின் பக்கத்தில் நிற்க முடியுமா? அவரது அறிவுப்பின்புலம் இவர்களில் யாருக்காவது உண்டுமா? தமிழிலுள்ள வலதுசாரி சிந்தனையாளர்கள் அறிவில் மிக பலவீனமானவர்கள்.
இன்னொரு விசயத்தையும் கூற விரும்புகிறேன். தமிழில் இலக்கிய எழுத்தாளர்கள் மக்களிடம் இருந்து மிகவும் அந்நியப்பட்டதற்கு இந்த அரசியலற்ற எழுத்தாளர் முன்னோடிகளே காரணம். இங்கு கா..சு போன்றவர்கள் சிறந்த எழுத்து அரசியலற்றதாக இருக்க வேண்டும் என ஒரு போலியான கருத்தை பரப்பினார்கள். .நா.சு முதலில் சு.ராவை மதம் மாற்றினார். பின்னர் சு.ரா ஒரு தனி பள்ளியான பின் இத்தரப்பு வலுப்பட்டது. ஆனால் .நா.சு, சி.சு செல்லப்பா, வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் அன்று மைய நீரோட்ட அரசியலை, ஊடகங்களை தாக்கினதற்கு முக்கிய காரணம் திராவிட இயக்கங்கள் பிராமணர்களை கடுமையாக தாக்கியதும், அறுபதுகளில் ஆரம்பித்து எண்பதுகள் வரை நவீன தீவிர இலக்கியவாதிகளில் பலர் பிராமணர்களாக இருந்ததும் தான். நீண்ட காலம் திராவிட இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்ற இவர்கள் ஆழ்மனதில் ஒரு கடுமையான கசப்பும் வெறுப்பும் அரசியல் பால் ஏற்பட்டது. அதனால் எழுத்தில் அரசியல் கூடாது என்றார்கள். ஆனால் இவர்கள் கொண்டாடிய உலக எழுத்தாளர்களில் ஜேம்ஸ் ஜாய்ஸ் தன் நாவலான Portrait of an Artist as a Young Manஇல் ஐயர்லாந்து அரசியலை பின்னணியில் கொண்டு வருகிறார். ஹெமிங்வே போர்களின் அரசியலை பேசினார். சார்த்தர் ஒரு நேரடியான இடதுசாரி. காம்யுவின்அந்நியன்இங்கு மொழிபெயர்ப்பில் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதே காம்யு தூக்குத்தண்டனைக்கு எதிரான ஒரு முக்கிய நூலையும் எழுதினார். அதில் அவரது சமூக அக்கறையும் அரசியல் ஆர்வமும் தெரிகிறது. ஆனால் .நா.சுவோ அசோகமித்திரனோ இப்படியான ஒரு நூலை ஒருநாளும் எழுத மாட்டார்கள். திராவிட இயக்க வெறுப்பு அல்லது பிராமணர்களை சமூகம் ஒடுக்குகிறது எனும் அச்சம் அவர்களை முழுக்க சமூகத்தில் இருந்து ஒதுக்கியது. அவர்கள் தமக்கும் சமூகத்துக்கும் இடையே ஒரு இரும்புத்திரையை போட்டுக் கொண்டார்கள். நம்முடைய முக்கியமான பல படைப்புகள் பொது சமூகத்தை போய் சேராததற்கு இந்த தீவிர இலக்கியவாதிகள் தமக்குள் இவ்வாறு ஒடுங்கிக் கொண்டதும் ஒரு காரணம்.

கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் இலக்கியவாதிகளுக்கு உள்ள பெரும் மதிப்பை பற்றி பெருமூச்சு விடுகிறோம். ஆனால் அதற்கான வேலையை அங்கு செய்தவர்கள் இடதுசாரிகள். துரதிஷ்டவசமாக இங்கு திராவிட இயக்கங்களின் வளர்ச்சி காரணமாக இடதுசாரிகளால் தம்மை முன்னெடுக்க இயலவில்லை. அதன் விளைவாக திராவிட கட்சிகள் முன்னெடுத்த சினிமா இன்று ஒரு அணு உலை போல் ராட்சத உருவெடுத்து நிற்கிறது.
எதிர்-இடதுசாரிகளான சி.சு.செல்லப்பா, .நா.சு போன்றோர் நவீனத்துவத்தையும் சரியாக அறிமுகப்படுத்தவில்லை. கடவுள் மறுப்பு, மத எதிர்ப்பு ஆகியவற்றை ஒதுக்கி விட்டு அதை ஒரு சமரசத் தன்மையுடன் அணுகினர். அன்று மிகவும் தாக்கம் செலுத்திய இருத்தலியம் கூட கடவுள் பற்றி எழுப்பிய கேள்விகளை இங்கு விவாதிக்க அவர்கள் தயங்கினர். அவர்கள் அதை ஒரு வைதிக சூன்யவாதமாக சுருக்கி கொண்டனர். சமூக வெறுப்பு காரணமாய் தமக்குள் மென்மேலும் ஒடுங்கிப் போகும் ஒரு சுய பிரதிபலிப்பு எழுத்தை உருவாக்கினர். ஆனால் தம்மைப் பற்றியே எழுதும் போது இரண்டு பிரச்சனைகள் உருவாகும். 1. ஒரு கட்டத்திற்கு மேல் தன்னைப் பற்றி எழுத ஒன்றும் இருக்காது. 2. விளைவாக எழுத்து மிகவும் சுருங்கிப் போகும். நீர்த்து விடும். அதுமட்டுமல்ல எழுத்தின் நோக்கம் பற்றி சஞ்சலம் தோன்றி ஒரு கட்டத்தில் களைத்து நின்று விடுவார்கள். அப்புறம் சுயபுலம்பலை எழுத்தாக முன்வைத்துக் கொண்டிருப்பார்கள்.

என் எழுத்தில் இடதுசாரி சிந்தனையின் தாக்கம் உள்ளதா எனத் தெரியவில்லை. ஆனால் அந்த தாக்கம் ஒரு விதத்தில் எழுத்தாளனுக்கு நல்லது தான். சமூக பிரக்ஞை உள்நோக்கி சுருங்கி விடாமல் எழுத்தாளனை காப்பாற்றும். எழுத்துக்கு ஒரு பாதை உருவாகும். சமூகம் குறித்த பல கேள்விகளுக்கு விடை காண நிறைய படிப்பீர்கள், தேடுவீர்கள். அது உங்கள் எழுத்தை விரிவாக்கும்

1 comment:

chitra chitra said...

சந்திரன், எனக்கு இப்போது 51 வயது. எனக்கும் உங்களைப் போலவே நான் 55 வயதில் இறந்து விடுவேன் என்ற நினைப்பு அல்லது ஆசை உள்ளது. மரணத்தை வெகு ஆவலாக எதிர்பார்த்தப் படி உள்ளேன். ஒரு வேளை இறக்காவிட்டால், வீட்டை விட்டு ஓடிவிட வேண்டும் என்றும் யோசித்து வைத்துள்ளேன்.