Friday, October 17, 2014

உயிரெழுத்துப் பேட்டி பகுதி 1


யுவ புரஸ்கார் விருதை ஒட்டி உயிர் எழுத்து போனதற்கு முந்தின இதழை எனக்கு சிறப்பிதழாக கொண்டு வந்தார்கள். அதில் என் நீண்ட பேட்டி வெளியானது. அப்பேட்டியின் ஒரு பகுதி இது:

வணக்கம் அபிலாஷ். விருது பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.
உயிரெழுத்து இதழுக்காக உங்களிடம் சில கேள்விகள்.

உயிரெழுத்து: நீங்கள் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தாலும், உங்கள் மீது விழுந்த வெளிச்சம் குறைவு. இன்றைக்கு 'யுவ புரஸ்கார்' விருது மூலம் இந்திய ஒளி உங்கள் மீது படர்ந்துள்ளது. எப்படி உணர்கின்றீர்கள் இத்தருணத்தை?

ஆர்.அபிலாஷ்: வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வது உண்மை தான். தமிழில் சில எழுத்தாளர்கள் முதல் நூலில் பிரபலமடைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிகச் சிலர் தான். இன்னொரு புறம் இடைநிலை எழுத்தை அல்லது வணிக எழுத்தை சேர்ந்தவர்கள் இலக்கியத்திலும் சினிமாவிலும் ஒருமித்து இயங்கும் போது பிரபலமடைகிறார்கள். இறுதியாக, இன்று நம்மிடையே வெறும் பேஸ்புக், டிவிட்டர் வரிகள் எழுதி ஆயிரக்கணக்கான பாலோயர்களை பெற்று பிரபலம் அடைபவர்களும் இருக்கிறார்கள். நூல் பிரசுரம் கூட தீவிர எழுத்தாளனை விட பேஸ்புக் எழுத்தாளனுக்கு தான் இன்று சுலபமாகி உள்ளது. இப்படி வணி, இடைநிலை எழுத்துக்களிடம் இருந்து கடும் நெருக்கடியில் தீவிர எழுத்து உள்ளது. அதனால் முழுக்க தீவிரமாக மட்டும் இயங்குபவர்களுக்கு சின்ன மெழுகுவர்த்தி வெளிச்சம் தான் கிடைக்கும். தீவிரமாக மட்டும் எழுதி கவனம் பெற இங்கு நீண்ட காலம் பிடிக்கும் தான். அப்படி இருக்க, இது போன்ற ஒரு தேசிய விருது சட்டென ஒரு கவனத்தை நம் மீது ஒன்றிரண்டு நாள் திருப்பும். வெகுஜன மீடியாவில் இருந்து பேட்டி எடுப்பார்கள். நம் புத்தகங்களின் பெயரை அங்கங்கே உச்சரிப்பார்கள். ஐ.சி.யுவில் அட்மிட் ஆகியிருப்பவருக்கு இறுதியாக பத்து நிமிடம் ஆக்ஸிஜன் கொடுப்பது போன்றது இது.

இன்னொன்று, இந்த விருதும், அதை ஒட்டின பரபரப்பும் எனக்கு புறம்பான ஒன்று தான். அவர்கள் ஒரு விருதையும் அதை ஒட்டின பரபரப்பையும் தான் கொண்டாடுகிறார்கள். இவ்விருதை ஒட்டி என்னை பேசுகிற, கவனிக்கிற 75% பேருக்கு என்னை உண்மையில் தெரியாது. என் எழுத்தை அறிந்த மீத 25% இருக்கிறார்கள். அவர்கள் என் வாசகர்கள். விருது வந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் என்னுடன் இருப்பார்கள். இறுதி வரை என்னுடன் உரையாடுவார்கள். விருது கிடைத்த இரண்டாவது நாளில் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். நேற்று காலையில் இருந்து இதோ இப்போது வரை போன் இடையறாது ஒலித்தபடி இருக்கிறது. ஆனால் அவர்கள் அழைத்து பேசுவதும் வாழ்த்துவதும் என்னிடம் அல்ல, என்னுடைய ஒரு மெல்லிய பிம்பத்திடம் என அறிவேன். எனக்கு ஒரு கல்யாண மாப்பிள்ளையின் உணர்வு ஏற்படுகிறது. இது கடந்து போகும் என அறிவேன். என் வாழ்வில் நான் தீவிரமாக நிரந்தரமாக விரும்பி செய்கிற விசயங்கள் இருக்கின்றன, நான் ஆத்மார்த்தமாய் உரையாடுகிறவர்கள் இருக்கிறார்கள்., அவர்களுடன் என் வாழ்வு தொடரும்.

உயிரெழுத்து: நீங்கள் சிறுபத்திரிகை மரபின் தொடர்ச்சியா? ஏனெனில் உங்களது புழங்கு தளம் சிற்றிதழ்களையே மய்யம் கொண்டுள்ளது.

ஆர்.அபிலாஷ்: சிறுபத்திரிகை மரபு இன்று பட்டுப் போய் விட்டது. அதனால் அதன் தொடர்ச்சியாக இருக்க முடியாது. நான் ஒரு இடைநிலை மரபில் தீவிரமாக இயங்க முயலும் எழுத்தாளன். ஆனால் என் முன்னோடிகள் வெகுஜன எழுத்தாளர்கள் அல்ல. நான் படித்து வளர்ந்தது சிறுபத்திரிகைகளைத் தான். பல முக்கியமான கருத்துக்களை, படைப்புகளை, விழுமியங்களை எனக்கு சொல்லித் தந்தது இந்த மரபு தான். ந.பிச்சமூர்த்தி, சி.சி.செல்லப்பா தொடங்கி இன்றுள்ள ஜெயமோகன், எஸ்.ரா, தமிழவன், ராஜ் கௌதமன், ரவிக்குமார் வரை என் முன்னோடிகள் தான். இவர்கள் உருவாக்கிய ஒரு வலுவான ஆழமான மொழித்தளத்தில் தான் இயங்குகிறேன். இவர்கள் பிடிவாதமாய் பின்பற்றிய பல மதிப்பீடுகளை நானும் பின்பற்ற முயல்கிறேன். இதை இன்று வலுப்பெற்றுள்ள இடைநிலை, கேளிக்கை எழுத்துலகில் செய்வது தான் பெரும் சவால். பெருநகர சாலையில் இருக்கிற ஒரு புராதன கட்டிடம் போன்றவன் இன்றைய தீவிர எழுத்தாளன். என் மீது கரிக்கட்டியால் எழுதுவார்கள், மூத்திரம் பெய்வார்கள். ஏதாவது ஒரு புல்டோசர் வந்து இடித்து விடக் கூடாதே என்கிற பயத்தில் சதா இருந்து கொண்டிருக்கிறேன்.

காவ்யா வெளியிட்ட தமிழவனின் கட்டுரைத் தொகுப்பை சமீபமாய் படித்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு ஆழமான விசயங்களை அந்த காலத்திலேயே அறிந்து எழுதியிருக்கிறார் என வியந்தேன். அவரைப் போன்று ராஜ் கௌதமன் படிக்கையிலும் நானெல்லாம் வெறும் தூசு என நினைத்துக் கொள்வேன். பழைய நிறப்பிரிகை இதழ்களை படிக்கையிலும் எனக்கு இதுவே தோன்றும். இவர்கள் வேலை செய்த மொழியில் செயல்படுகிறேன் என்பதே பெருமை தான். யுவ புர்ஸ்காரை விட பெரிய பெருமை. ஆனால் அதை சொல்ல யுவ புரஸ்கார் தேவையுள்ளது.
நான் பதினாலு வயதில் எங்கள் ஊரில் உள்ள கலை இலக்கிய பெருமன்றம் மூலம் பயிற்றுவிக்கப்பட்டவன். எழுத்து ஒரு சமூகக் கடப்பாடு எனும் எண்ணம் அவர்களால் தான் எனக்கு அப்போதில் இருந்தே ஏற்பட்டது. எங்கள் ஊரில் எந்த வெகுமதியும் பெறாமல் தொடர்ந்து தீவிர பண்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளவர்கள் இன்று வரை இருக்கிறார்கள். பொன்னீலன், ஹமீம் முஸ்தபா, என்.டி. ராஜ்குமார், நட.சிவகுமார் போல. அவர்கள் எல்லாம் சன்னியாசிகள் போல. இன்றுள்ள கேளிக்கை கலாச்சாரத்தில் மனம் துவளும் போது அவர்களை நினைத்துக் கொள்வேன். நான் செய்வதெல்லாம் ஒரு வேலையே அல்ல எனத் தோன்றும். அப்போது மனதுக்கு தைரியம் கிடைக்கும்.

உயிரெழுத்து: கவிதைப் பித்தனாகிய நீங்கள் கவிதையிலிருந்தே உங்கள் இலக்கியப் பயணத்தைத் துவக்கினீர்கள். ஆனால், உங்களுக்கு புனைவிலக்கியத்திற்காக விருது கிடைத்திருப்பது வருத்தமளிக்கின்றதா?
ஆர்.அபிலாஷ்: இல்லை. நான் கவிதை, புனைவு, கட்டுரை என ஒவ்வொன்றையும் பலவகையான சமூக உரையாடல்களாக பார்க்கிறேன். வாசகனுடன் உறவாடுவதும், புது கருத்துக்களை உருவாக்குவதும் முக்கியம். சில நண்பர்கள் என்னிடம் அதிகமாய் கட்டுரை எழுதாதே, புனைவில் அதிக கவனம் செலுத்து என்பார்கள். சிலர் கட்டுரைகளில் இன்னின்ன விசயங்களில் அதிக கவனம் செலுத்து என்பார்கள். ஆனால் நான் என்னென்ன விசயங்களில் ஆர்வம் கொள்கிறேனோ அதை அதற்கு தோதான எழுத்து வடிவில் வாசகனிடம் பகிர்ந்து கொள்வேன். இது பேச்சு போலத் தான். ஒரு காதலி கன்னத்தில் அறைந்தலும் அடுத்த சில நிமிடங்களில் வந்து முத்தமிட்டாலும் ரெண்டுமே ஒன்று தானே.
இந்த விருது எனக்கு இரண்டாம் பட்சமானது. அதனால் வருத்தமும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை. ஆனால் இந்த சூழலில் தீவிரமாக இயங்க முயலும் எழுத்தாளர்களில் ஒருவனாய் இதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். என்னைப் போல் இயங்கும் இன்னொருவருக்கு கிடைத்திருந்தாலும் இதே போல் மகிழ்ந்திருப்பேன்.

விருது அறிவித்த உடனே குழந்தைத்தனமாய் மகிழ்ச்சி ஏற்பட்டது. பிறகு பரபரப்பு தொடங்கி நிறைய பேர்கள் வாழ்த்தத் தொடங்கி மீடியா செய்திகள் குவிந்ததும் சட்டென ஒரு அந்நிய உணர்வு ஏற்பட்டது. இதெல்லாம் வேறு யாருக்கோ நிகழ்வது போல. நானும் நண்பர் சர்வோத்தமனுமாய் கவிதைக்காக “இன்மை” எனும் ஒரு இணைய இதழ் நடத்துகிறோம். போன மாதம் நகுலனுக்காய் ஒரு சிறப்பிதழ் கொண்டு வந்தோம். அவ்விதழை கடுமையாய் உழைத்து வெளிக்கொண்டு வர வேளையில் இந்த விருதை கிடைத்த போது உணர்ந்ததை விட பல மடங்கு அதிகமான சந்தோசம் ஏற்பட்டது. ஆத்ம திருப்தி இருந்தது. இந்த விருது வாங்கும் நான் நானில்லை. நாளை எனக்கு கல்லூரியில் ஒரு வகுப்பு உள்ளது. அதற்காய் தயாரிக்க போகிறேன். அங்கு போய் மாணவர்களிடம் பேசும் போது உள்ள நான் தான் உண்மையான நான்.

உயிரெழுத்து: 'கால்கள்' நாவலை எழுதத் தூண்டியது எது? ஒரு பிரபல பதிப்பாளரைச் சந்தித்த கசப்பான அனுபவத்திற்குப் பின் இது நிகழ்ந்ததா? அவரைப் பற்றி சொல்ல ஏதாவது உண்டா?

2005இல் நான் புத்தக சந்தையில் ஜெயமோகனை சந்தித்த போது “நீங்கள் எழுத்தாளனாய் ஒன்றும் உருப்படியாய் பண்ணவில்லை” எனக் கூறினார். இது என்னை அழமாய் புண்படுத்தியது. அடுத்த வருடம் எப்படியாவது எழுத்துலகில் தடம் பதிக்க வேண்டும் என நினைத்தேன். அப்போது நான் அதிகமாய் மொழியாக்கங்கள் செய்து கொண்டிருந்தேன். 2006இல் நான் ஆலன் ஸ்பென்ஸ் என்பவரின் “இதயத்தின் பருவங்கள்” எனும் முக்கியமான கவிதை நூலை தமிழில் மொழிபெயர்த்து வைத்திருந்தேன் (இது பின்னர் “இன்றிரவு நிலவின் கீழ்” நூலின் பகுதியாக 2010இல் வெளிவந்தது).
முக்கியமான நாவல்களை பிரசுரித்துள்ள ஒரு பதிப்பாளர். ஜெயமோகன் அவரை போய் சந்திக்க சொன்னார். அவர் ஒரு நல்ல வாசகர் என்றும், அவருடனான உறவு எனக்கு உதவும் என்றும் சொன்னார். நான் அவரை புத்தக சந்தையின் போது ஸ்டாலில் சென்று சந்தித்தேன். நான் என் மொழியாக்க நூலை பிரசுரிக்க கூட கேட்கவில்லை. அவரை வெறுமனே சென்று சந்திக்கவும் நட்பாகவும் கேட்டேன். அவர் வேண்டாம் என்றார். ஏன் என்றேன். “நீங்கள் தொடர்ந்து என்னை வந்து சந்தித்தால் பிறகு எனக்கு இரக்கம் தோன்றி உங்கள் நூலை பிரசுரிக்கும் மறைமுக கட்டாயம் தோன்றும்” என்றார். அவர் என் ஊனத்தை தான் குறிக்கிறார் என புரிந்து கொண்டேன். நான் ஆழமாக புண்பட்டேன். எனக்கு தன்னிரக்கம் சற்றும் இருந்ததில்லை. என் ஊனத்தை கொண்டு இரக்கம் சம்பாதிக்கவும் முயன்றதில்லை. ஆனால் அவர் அப்படி கருதுகிறார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் நாவல் “கால்களில்” இந்த மாதிரியான பொதுப்புத்தியை தான் எதிர்க்க முயல்கிறேன். ஊனமுற்றவர்களுக்கு தன்னிரக்கம் அதிகம் என்பது ஒரு தேய்வழக்கு. அது உண்மை அல்ல. ஊனமில்லாத ஆனால் தன்னிரக்கத்தில் மூழ்கி உள்ள எத்தனையோ பேரை எனக்கு தெரியும். ஊனம் உங்கள் மனப்போக்கை தீர்மானிக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அது தன்னிரக்கத்தை உருவாக்குவதில்லை. சிறுவயதில் இருந்தே ஊனத்துடன் இருந்து பழகி விடுவீர்கள். பிறரைப் போல் முழுமையான வாழ்வு வாழ கற்றுக் கொள்வார்கள். நிறைய புத்தகங்கள் படித்து கருத்தியல்கள் விவாதிக்கிறவர்களுக்கு இந்த எளிய உண்மை புரிவதில்லை என்பது நகைமுரண்.

அந்த பதிப்பாளர் இன்று என் நண்பர்களிடம் சிலரிடம் நெருக்கமான நட்பில் இருக்கிறார். நான் அவர்களை விட நுண்ணுணர்வும் வாசிப்பும் எழுத்துத் திறனும் அதிகம் கொண்டவன் தான். ஆனால் அவருக்கு என் ஊனம் ஒரு தடையாக இருக்கிறது.


1 comment: