Thursday, September 11, 2014

மலைச்சொல் சார்பில் அபிலாஷிற்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம் - லக்‌ஷ்மி சரவணகுமார்


எழுத்தாளனாய் வாழ்வது குடும்பத்துக்கு செய்யும் துரோகம் தான்.
முன்பாக மனுஷ்யபுத்திரனின் ஒரு கவிதையிலிருந்து
யாரைப் பார்த்தாலும்
ஒட்டுவேன் என் கால்களின் ஆல்பத்தில் எல்லாக் கால்களையும்
பெட்டிக்கடியில் ஒளித்து வைத்துவிடுவேன்
அந்நியர் பார்த்துவிடாமல்
என் போலியோ கால்களை மட்டும்….”
இது ஊனமுற்ற ஒருவரின் வலியைச் சொல்வதாக இருந்தாலும் அவர்களின் உலகை எப்போதும் தன்னிரைவு அற்றதாகவும் நம்பிக்கையற்றதாகவும் மாற்றிவிடுகிறது. ஆனால் அபிலாஷின் எழுத்துக்கள் இதில் இருந்து வேறு ஒன்றை நமக்குக் காட்டுவதாய் இருக்கிறது. அபிலாஷின் எழுத்துக்களில் மிகுந்திருப்பது வாழ்வையும் சமூகத்தையும் ஊடறுக்கும் பார்க்கும்
புதுவிதமான பார்வை. எள்ளலும் பகடியுமிக்க இந்த எழுத்துக்களின் வழி தான் எதிர்நோக்கும் எல்லாவற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்தும் வல்லமை இருக்கிறது அபிலாஷிற்கு. தமிழ் எழுத்தாளர்கள் அதிகம் கவனிக்க மறந்து போன விளையாட்டு அரசியலை விலாவரியாய் பேசுவதாக இருக்கும் அபிலாஷின் கட்டுரைகளின் மீது எனக்கு தனித்த கவனம் உண்டு. ஏனெனில் குத்துச் சண்டையை அதிகம் காதலித்த ஜாக் லாண்டனையும், எர்னஸ்ட் ஹெம்மிங்வேயையும் ஆதர்ஸ்மாகக் கருதுகிறவன் நான். எனக்கும் குத்துச் சண்டைதான் விருப்பம். நான் பயிற்சி பெறாத ஒரு குத்துச் சண்டைக் காரனாகவே என்னை எப்போதும் உணர்கிறேன். பிம்பத்தோடு சண்டையிட்டுப் பழகும் ஒரு எளிய மனிதன். அது தான் எனக்குக் கிடைத்த பயிற்சி. அபிலாஷின் புரூஸ் லீ சண்டையிடாத வீரன் என்னும் புத்தகம் இந்த மாதிரியாகத்தான் எனக்கு நெருக்கமான ஒன்றாக மாறியது. நாங்கள் பேசிக் கொண்ட சில முறைகளும் கூட இலக்கியத்தைப் போலவே விளையாட்டு குறித்தும் தற்காப்பு கலைகள் குறித்தும் பேசியது அதிகம். விளையாட்டுக்கும் காமத்திற்கும் நெருங்கியதொரு தொடர்பு இருப்பதாய் மனநிலை ஆய்வாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். எனக்கு அந்த விவரம் தெரியவில்லை. ஆனால் விளையாட்டிற்கும் கலைக்கும் நெருக்கமானதொரு தொடர்பு இருப்பதாகவே நம்புகிரேன். குத்துச் சண்டை என்பது சல்சா நடனம் ஆடுவதைப் போல் வசீகரமான ஒன்று. சல்சா ஆடுவதை விடவும் வசீகரமானது குத்துச்சண்டை.
அப்படியாகத்தான் தற்காப்பு கலைகள் ஒவ்வொன்றும். தற்காப்பு கலைகள் குறித்து எழுதுவதை வாசிப்பதும் அப்படியான சுவாரஸ்யம் தான். ஜப்பானிய கெய்ஷா நடனம் பார்க்கிற உனர்வு அபிலாஷின் புத்தகத்தை வாசிப்பது.
இருப்பிற்கும் தொலைதலுக்குமான இடைவெளியில் இருக்கிறது எழுத்தாளனின் வாழ்க்கை. எழுதுவதன் மூலமாக மட்டுமே ஒவ்வொரு முறையும் எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக் கொள்வதும் ஏதாவதொன்றை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு நகர்ந்து செல்ல நினைப்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. எழுத்தாளன் திருடனுக்கு சமீபமாகவோ அல்லது குரூபிக்கு சமீபமாகவோதான் வாழ வேண்டி இருக்கிறது. ஏனெனில் ஊடகங்கள் அவனை ஒவ்வொரு நாளும் விழுங்கிச் செரிக்கும் அதீத வேட்கையுடன் துரத்தியபடியேதான் இருக்கிறது. சிலர் சினிமாவிற்குப் போய்விட துடிக்கிறார்கள். இன்னும் சிலர் ஓசியில் மைக் கிடைத்ததே என்பதற்காக தொலைக்காட்சிகளின் இருக்கைகளில் நிரந்தர இடம் கேட்டு நிற்கிறார்கள். இவர்கள் எல்லோரும் தொலைத்து விட்ட எழுத்து ஆகாயத்தில் காயடிக்கப்பட்ட நாயென கதறிக் கொண்டிருக்கிறது.
நான் ஏன் அபிலாஷைக் குறித்து பேச வேண்டி இருக்கிறது?
எழுத்தை மதிப்பவர்கள். எழுத்தாளனாய் மட்டுமே வாழ வேண்டும் என நினைப்பவர்கள் எப்போதும் எனக்கு முக்கியமானவர்கள். அபிலாஷ் அப்படி முக்கியமானதொரு ஆள். நாங்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் எழுத வந்தவர்கள். இருவருமே இடதுசாரி இயக்கத்தின் பிண்ணனியில் இருந்து வந்தவர்கள். எனக்கு அபிலாஷை அறிமுகம் செய்து வைத்தது கற்றது தமிழ் குறித்து அபி எழுதின விமர்சனம் எனக்குப் பிடித்திருந்தது. அதன் பிறகு அபிலாஷைத் தொடர்ந்து வாசிப்பதற்கு காரணம் அவரின் எழுத்தில் இருக்கும் தனித்துவம். இலக்கியத்தின் மீது அவருக்கு இருக்கும் அசாத்தியமான நம்பிக்கயும் அந்த வாழ்க்கை ஏற்படுத்தும் நிறைவு போதும் என்கிற எண்ணமும் எனக்கு ஆச்சர்யங்கள். ,மிகச் சிலரிடம் மட்டுந்தான் உலகின் எது குறித்து வேண்டுமானாலும் நாம் உரையாடலாம் என்கிற எண்ணம் தோன்றும் ( நான் ஜெயமோகனைச் சொல்லவில்லை. ) எனக்க்கு அது மாதிரி தோன்றுகிற ஒருவர் அபி. நிறைய புத்தகம் வாசிப்பது மட்டுமே ஒருவனை அறிவுஜீவியாகவோ கலைஞனாகவோ ஆக்கிவிடாது. நிறைய புத்தகம் படித்து மண்டை வீங்கி கலை என்றால் என்ன என்பதே தெரியாத சிலரையும் எனக்குத் தெரியும் நிறைய படித்ததாலேயே தாங்கள் இலக்கியத்தின் ஞானத்தந்தை என்கிற கர்வம் அவர்களுக்குள். ஆனால் அபிலாஷ் உரையாட மிக எளிய மனிதன். அப்படியே நட்பிற்கும்.
ஊடகம் குறித்து எனக்கும் அவருக்கும் சில விசயங்களில் மாற்றுக் கருத்துக்களும் சில விசயங்களில் நேர்மறையான கருத்துக்களும் இருக்கவே செய்கின்றன.
ஊடகங்களுடன் இன்று ஒரு எழுத்தாளன் நல்லுறவை பேண வேண்டும். நானும் பேண முயல்கிறேன். ஆனால் ஊடகம் ஒரு பொறி. அதில் மாட்டி விடக் கூடாது என தெளிவாக இருக்கிறேன். என் எழுத்தாள நண்பர் ஒருவர் ஒரு படத்தில் நடித்தார். அதன் மூலம் கோடிக்கணக்கான பார்வையாளர்களின் கவனத்தில் விழுந்தார். அடுத்து அவர் ஒரு மாதமாக தொடர்ந்து தன் சினிமா பற்றியே பேசிக் கொண்டிருந்தார். யாராவது அப்படம் பிடிக்கவில்லை என்றால் எரிச்சலானார். அடுத்து பல படங்களில் நடிக்கபோவதாய் கூறினார். சினிமாவுக்கு வசனம் எழுதிக் கொண்டிருப்பதாய் கூறினார். ஆனால் அவரது பிரதான உண்மையான அடையாளம் எழுத்து. அதை விட்டு விட்டார்.”
இங்கு எனக்கு ஊடகங்களின் மீது நம்பிக்கை இல்லாமல் போவதற்கு காரணம் அவர்கள் மிகப்பெரிய சுரண்டல்வாதிகள் என்பதால் மட்டுமல்ல, அவர்கள் அறிவையும் கலையையும் நிர்வாணப்படுத்தி வியாபாரம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். முக்கியமாக சேனல்காரர்கள். சினிமாவிலும் இது இருக்கிறதுதான் ஆனால் எழுத்தாளன் இப்போது சினிமாவிற்கு தேவைப்படுகிறவனாக இருப்பதால் அவர்களிடம் கொஞ்சம் மரியாதை வந்திருக்கிறது. ஆனால் சேனல்காரர்கள் முடிந்தவடை கொலை செய்யவே நினைக்கிறார்கள்.
விருது வாங்கியதை ஒட்டி அபிலாஷ் எழுதியிருந்த நெகிழ்ச்சியான பதிவைப் படித்தேன். அதன் கடைசி பத்தி என்னை நிலைகுலையச் செய்து விட்டது.
எனக்கும் தவசிக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. நாங்கள் இருவரும் ஐந்து நூல்கள் எழுதினோம். ஆனால் யுவ புரஸ்கார் தான் நாங்கள் வாழ்க்கையில் பெறும் முதல் விருது. இருவரும் நாவலுக்காக தான் விருது பெற்றோம். யுவ புரஸ்கார் பெற்ற சில மாதங்களில் கடவுள் அவரை திரும்ப அழைத்துக் கொண்டார். நான் இன்னும் இருபது வருடங்களாவது வாழ விரும்புகிறேன்.”
தன்னைச் சுற்றி இருக்கும் எல்லோரையும் சபிக்கும் குறை சொல்லும் எழுத்தாளர்களுக்கு மத்தியில் அபி இந்த வாழ்வையும் அதன் அற்புதங்களையும் கொண்டாடும் மனிதன். கால்கள் நாவல் முழுக்க ஒரு மாற்றுத் திறனாளியின் வாழ்க்கை குறைகளை மட்டும் பேசவில்லை, அதன் வழியாய் நாம் இதுவரை எதிர்கொள்ளாத ஆகப் பெரிய நம்பிக்கைகளைப் பேசுகிறது. அபிலாஷின் மொழி ஒரு புனைவை கவிதையாக எழுதிச் செல்லும் லாவகத்துடன் இந்த நாவல் முழுக்க விரிந்து கிடக்கிறது . ஒரு புனைவில் வாசகன் பெரிதும் எதிர்பார்ப்பது அதன் காட்சிப்படுத்தல் தான். அது இந்த நாவலின் மிகப்பெரிய பலம்.
புனைவு எழுதுகிறவர்களுக்கு -புனைவு எழுதுவதில் சிரமம் இருக்கும், அல்லது கவிதை தடுமாறும் ஆனால் மிகச் சிலருக்கு மட்டுந்தான் எல்லா ஏரியாவிலும் சிறப்பாக எழுதக் கூடிய திறமை இருக்கும் அது அபிக்கும் இருக்கிறது. அபிலாஷின் நாவலில் இருக்கும் வசீகரம் கவிதையிலும் இருக்கிறது. வசீகரமான புனைவை வாசிப்பது போல் அவர் கவிதைகளை வாசிக்கிற பொழுது தோன்றும்.

அபிலாஷ் இந்தத் தலைமுறையின் தமிழ் எழுத்தாளர்களில் எல்லா வகைகளிலும் தனித்துவமானவர். அவர் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

No comments: