Saturday, September 20, 2014

புத்தரும் அவர் மனைவியும்


நேற்று அண்ணா நூலகம் போனேன். தமிழ் நூல்கள் ரெண்டாவது நிலையில். நான் தவறுதலாய் மூன்றாவது நிலைக்கு போய் விட்டேன். அங்கே தத்துவ நூல்கள் இருக்கும். சரி படிப்போமோ என தேடி எடுத்தேன். புத்தர் பற்றின மூன்று புத்தகங்கள். அதில் ஒன்று புத்தரின் வாழ்க்கையின் கதைகள். சின்ன நூலாய் அழகாய் இருந்தது. எழுதியவர் பெயர் சின்னதாய் கீழே போட்டிருந்தார்கள். கவனிக்கவில்லை. உள்ளே மிக அழகான படங்கள் இருந்தன. வழவழ தாள்கள். கெட்டி அட்டை. இங்கிலாந்தில் பதிப்பித்திருக்கிறார்கள். வெள்ளைக்காரர்களுக்கான நூல் என நினைத்துக் கொண்டேன்.
போக போக மொழி இவ்வளவு கவித்துவமாய் கூர்மையாய் இருக்கிறதே என நினைத்தேன். அதனோடு ஒரு அபாரமான சரளத்தன்மையும். பின்னட்டையை பார்த்தேன். ஓஷோவின் ஒரு மேற்கோள். ஓஷோவை ஏன் போட்டிருக்கிறார்கள் என முன்னட்டையை கவனமாய் பார்த்தால் ஓஷோவின் நூல் அது. அட!

ஆனால் ஓஷோவின் வழக்கமான இந்திய பதிப்புகள் போல் அல்லாது நன்றாக எடிட் செய்திருக்கிறார்கள். பொதுவாக ஓஷோவின் நூல்கள் அவர் பேசியதன் நேரடி நூல் வடிவமாய் இருக்கும். இதன் ஒரு பிரச்சனை வளவள தன்மை. ஒன்றையே திரும்ப திரும்ப கூறுவார். யாரோ காது பக்கத்தில் நின்று தம்புரா சகிதம் ஏதோ ஒரு மந்திரத்தை உச்சரிப்பது போல் சதா கொய்ங் என்று இருக்கும். ஆனால் இந்த நூலை ஓஷோ எழுதினது போல் கச்சிதமாக வந்துள்ளது. அந்தளவுக்கு நல்ல எடிட்டிங்.
வழக்கமாய் நாம் அறிந்த புத்தர் கதைகள் தாம். மிகவும் நெகிழ வைத்தது இரு கதைகள். உன்னதமான இலக்கியத்தின் உயரத்தை தொடும் கதைகள். இதில் ஓஷோவின் தனித்துவமான அவதானிப்பும் நுண்ணுணர்வும் தெரிந்தது.
அதற்கு முன் சில குட்டி விசயங்கள். புத்தர் பிறந்ததும் மொத்த பிரபஞ்சமும் குதூகலிக்கிறது. வழக்கமாய் யாரையும் பார்க்க விரும்பாத, யாருடனும் பேசாத ஒரு 120 வயது துறவி இமையத்தில் இருந்து ஓடோடி வந்து ஒரு வயதான அக்குழந்தையை பார்த்து போகிறார். அப்போது ஓஷோ சொல்கிறார்: 120 வயதுகள் ஒரு வயதை வந்து சந்திக்கிறது. ஆனால் இங்கு இரண்டுமே ஒன்று தான். இருவருக்கும் வயது வேறுபாடுகள் இல்லை என்று. அது போல் எப்படி புத்தரின் பிறப்பை உலகமும் அதிலுள்ள பல உயிர்களும் 120 வயது சாமியாரும் உள்ளுக்குள் உணர்ந்து ஆனந்தம் கொள்கிறார்கள் எனக் கூறும் போது இந்த உணர்தல் மிக இயல்பானது என்கிறார். அதாவது நம் மூளையை கொஞ்சம் கழற்றி வைத்து உலகைப் பார்த்தால் காலம் இடம் சார்ந்த வேறுபாடுகள் கடந்து பல உண்மைகள் தெரியும். ஏனென்றால் இந்த உலகின் அத்தனை ஜீவன்களும் ஜீவனற்ற பொருட்களும் ஒரே பிரக்ஞையின் பகுதி தானே. அப்பிரக்ஞையின் ஒரு மூலையில் புத்தன் தோன்றும் போது இன்னொரு மூலையில் இருக்கும் ஒருவனுக்கு தன் உடலை யாரோ ஸ்பரிசிக்கிற உணர்வு ஏற்படத் தான் செய்யும். அவன் உடனே உணர்வான். மொத்த பிரபஞ்சமும் ஒரு உடல். இப்படி யோசிப்பதில் ஒரு பைத்தியக்காரத்தனம் உள்ளது, ஆனால் பைத்தியக்காரத்தனத்தில் தான் உண்மை உள்ளது என்கிறார் ஓஷோ. ஓஷோ ஜென் தத்துவத்தை தான் இங்கு பேசுகிறார். ஆனால் பேர் குறிப்பிடாமல் அதன் ஒளியில் புத்தரை விளக்குகிறார்.
புத்தர் சாமியாராகாமல் இருக்கும் பொருட்டு அவரது அப்பா அவருக்கு இரண்டு மாளிகைகள் கட்டி அதில் தங்க வைத்து எந்த துக்கமும் அறியாமல் பார்த்து கொள்கிறார்கள். இப்படி 28 வயது வரை அவர் பாதுகாக்கப்படுகிறார். ஆனால் இப்படி செய்வதன் மூலம் அவர் புத்தரை வாழ்வின் துக்கங்களை சந்திக்கும் வண்ணம் மிக தீவிரமாக முடுக்கி விடுகிறார். ஏனென்றால் திடீரென ஒரு நாள் துக்கத்தை, மரணத்தை, அழிவை பார்க்கிற போது அவரது மனம் வெடித்து விடுகிறது. நிறைய பேருக்கு காமம் இப்படி வாழ்வில் ஒரு நாள் பலூன் போல வெடிக்கும். எதையொன்றை பார்க்காமல் தவிர்க்கிறோமோ அது ஒருநாள் நம் கண்முன் பிரம்மாண்டமாய் வெடித்து பூதாகரமாய் தோன்றும். நாம் அதற்கு பின் கண்மூடிக் கொள்ளவே முடியாது. அதனால் தான் புத்தர் சட்டென தன் அரண்மனையை துறந்து உண்மையை தேடி தீவிரமாய் பத்து வருடங்கள் முயல நேர்கிறது. அல்லாவிட்டால் இன்னும் பொறுமையாய் இயல்பாய் உண்மையை தேடி சென்றிருப்பார். இப்படி ஓஷோ விளக்குகிறார். அபாரமான அவதானிப்பு இது.
இறுதியாக அந்த ரெண்டு கதைகள். ஒன்று புத்தருக்கு ஞானம் வருவது பற்றி. நாம் பொதுவாய் புத்தர் போதி மரத்தின் கீழ் அமர்ந்திருக்கையில் திடீரென ஞானம் வந்ததாய் கேள்விப்பட்டிருப்போம். அதெப்படி மரத்தின் கீழ் அமர்ந்தால் ஞானம் வரும் என நான் கூட யோசித்திருக்கிறேன். ஓஷோ இந்த கதையை மறுக்கிறார். ஒருநாள் புத்தர் வழக்கம் போல் ஒரு சின்ன ஆற்றில் குளிக்க போகிறார். பத்து வருடங்களுக்கு மேலான கடும் தியானம், யோகம், விரதங்களால் அவர் உடல் மிகவும் பலவீனப்பட்டு போயிருக்கிறது. திடீரென ஆற்றில் வெள்ளம் அதிகமாக அவர் ஒழுக்கில் மாட்டி தப்பிக்க முடியாமல் அல்லாடுகிறார். மிகவும் சிரமப்பட்டு அவர் கரையை வந்து சேர்கிறார். அப்போது அவருக்கு சட்டென படுகிறது நாம் இப்படி நம் உடலை தேவையின்றி வருத்தி பலவீனமாக்கி வைத்திருக்கிறோமே என. அப்போது தான் அவருக்கு ஞானம் பிறக்கிறது. அந்த சின்ன நொடியில் அவருக்கு புரிதல் கிடைக்கிறது: நாம் எதையும் தேடிப் போக வேண்டியதில்லை. அதன் பாட்டுக்கு விட்டு விட தெரிந்தாலே நாம் விடுதலை ஆகிடுவோம் என. நம் பிரக்ஞையை, நம்முடைய பல்வேறு எண்ணங்களை விட்டு விட வேண்டும். அவற்றை அழிக்க வேண்டியதில்லை. ஒரு குழந்தையை விளையாட அனுமதிப்பது போல் விட வேண்டும். அதேவேளை குழந்தையை கண்காணிப்பது போல் நம்மை கண்காணிக்கவும் வேண்டும். மனதை தயக்கமின்றி எதிலும் ஈடுபடுத்தலாம். ஆனால் மனம் ஈடுபடுவதை இன்னொரு புறம் விலகி நின்று கவனிக்க வேண்டும். ஒருவித இரட்டை பிரக்ஞை இது. பட்டம் விடுவது போல். பட்டம் வானில் பறந்து கொண்டிருக்கும் அதன் பாட்டுக்கு, ஆனால் நூல் நம் கையில் இருக்கும். பட்டத்தை பூட்டி வைக்கவும் தேவையில்லை. ஒரேயடியாய் அறுக்கவும் தேவையில்லை. அது தான் உண்மையான விடுதலை. அப்போது நாம் எதையும் செய்யலாம். பாவமோ புண்ணியமோ எதிலும் நாம் இல்லாது இருக்க கற்றால் அது பாவமோ புண்ணியமோ அல்லாது ஆகும். இன்னும் சாதாரண மொழியில் சொன்னால் ஒருவன் நன்றாக சாப்பிடலாம், சம்போகம் செய்யலாம், வேலைக்குப் போகலாம். ஆனால் நூலை நன்றாக விட்டு ஒரு பட்டம் போல் இந்த அனுபவத்துள் பறக்க கற்க வேண்டும். இது தான் புத்தரின் ஞானம்.
தனது ஞானத்தை தக்க வைக்க முதலில் உடலை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார். ஒரு மரத்தின் கீழ் போய் உட்கார்கிறார். அந்த ஊரில் ஒரு பெண் தன் குழந்தையின் உடல் நலனுக்காய் ஒரு நேர்ச்சை செய்திருக்கிறார். அதற்காய் சாமிக்கு படையல் பண்ண மரத்தடிக்கு வர அங்கு புத்தரை பார்த்ததும் தான் கொண்டு வந்த இனிப்புகளை அவருக்கு படைக்கிறாள். புத்தர் முதன்முறையாக எந்த குற்றவுணர்வும் இன்றி மன அலைகழிப்பும் இன்றி இனிப்பை உண்கிறார். அன்றிரவு மிக அமைதியாய் கனவுகள் இன்றி தூங்குகிறார். அது தான் புத்தர். ஒரு புத்தன் அமைதியாக உண்ணவும் அமைதியாக தூங்கவும் கற்கிறான். அவன் ஓம் கிரீம் சொல்லி யாகம் வளர்க்க வேண்டியதில்லை. இதைத் தான் அவர் போதிக்க நினைக்கிறார்.
அடுத்த கதை. புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார். மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?”
புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார். மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார். அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள். அது இது தான்: “நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?”
புத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல”

இந்த இடத்தைப் பற்றி ஓஷோ எழுதும் போது ஒரு உன்னதமான கவிதையை படிப்பது போல் இருந்தது. ஞானம் புத்தரில் மட்டுமல்ல அந்தப்புரத்தில் அன்றாட விசயங்களை பார்த்து வாழும் ஒரு சாதாரண பெண்ணிடமும் இருந்திருக்கிறது பாருங்கள். புத்தர் அதுவரை கண்டடைந்ததைத் தான் அவரது மனைவி ஒரே கேள்வியில் சுருக்கமாய் கொண்டு வருகிறார்.

1 comment:

Jo said...

புத்தர் ஒரு தீர்கதரிசி என்பது போல் இந்த கதைகள் சொல்லுகின்றன.
ஏனென்றால் , புத்தர் பிறக்கும்போதே ஒரு துறவி ஆவார் என்பதை இந்.த உலகம் அறிந்துள்ளதாகவும் , ஒரு துறவி அந்த குழந்தையை பார்க்க வந்ததாகவும் சொல்கிறது.

ஆனால், என் எண்ணத்தில் புத்தர் நம்மை போல ஒரு மனிதர் தான் . தன்னுடைய விடாமுயற்சியானால் இறை நிலையை அடைந்தார்.
அவ்வாறு எல்லா மனிதர்களும் அடைய வேண்டும் என்று நினைத்தார். அதையே தன் மறைவு வரையில் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

இயேசு , முகம்மது நபி, மகாவீரர் , போன்றவர்களும் இதையே செய்தனர். காலம் செல்ல செல்ல அவர்கள் கூறிய வற்றில் உள்ள உண்மைகளை விடுத்தது , அதில் உள்ள சடங்குகளை பெரிதாக மக்கள் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்.