Wednesday, September 3, 2014

பேஸ்புக்கும் ஜெயமோகனும்


எழுத்தாளனுக்கு பேஸ்புக் தேவையா?” என்ற ஜெ.மோவின் கட்டுரை படித்தேன். அவர் சொல்வது போல் பேஸ்புக் எழுத்தாளனின் மொழியை தட்டையாக்கும் என நான் நம்பவில்லை. எழுத்து நடை உங்கள் ஆளுமையின் வெளிப்பாடு. ஆளுமை மாறாவிட்டால் அதுவும் மாறாது.

பேஸ்புக்கை சரியாக பயன்படுத்தி நிறைய புது வாசகர்களை அடைய முடியும். அவர்கள் எல்லாரும் தரமான வாசகர்களா என்றால் இலக்கிய பத்திரிகை வாசிப்பவர்கள் எல்லாம் தரமான வாசகர்களா? இல்லை. அவர்களுக்கு இலக்கிய வாசிப்பு சார்ந்து ஒரு சின்ன பயிற்சி இருக்குமே அன்றி அவர்களில் கணிசமாய் முதிர்ச்சியற்ற வாசகர்கள் இருப்பார்கள்.

பேஸ்புக்கில் ஒரே பிரச்சனை அங்கு விரிவான எழுத்தை படிக்க மாட்டார்கள் என்பது. அதற்கான மன அவகாசம் இல்லை. அதனால் அங்கு அரைமணிக்கு மேல் இருக்கக் கூடாது என ஜெ.மோ சொல்வது சரி தான். ஆனால் இணையத்தில் வாசிப்பது என்பது நேர வீணடிப்பு மட்டும் அல்ல. இணையத்தில் பல நல்ல கட்டுரைகள் படித்திருக்கிறேன். என் ஆய்வுக்கான ஏகப்பட்ட தரவுகளை எடுத்திருக்கிறேன். புனைவு எழுதும் போது கூட இணையம் ஆய்வுக்கு பயன்படுகிறது.

இணைய வாசிப்பை ஒரு நோக்கத்துடன் வடிவமைக்க வேண்டும். கிடைத்ததை கிடைத்த நேரத்தில் வாசிப்பேன் என இருக்க கூடாது. உதாரணமாய் சில குறிப்பிட்ட இணையதளங்களை தொடர்ந்து வாசிக்கலாம். அல்லது ஏதாவது ஒரு தலைப்பு பற்றி படிக்கப் போகிறோம் என உத்தேசித்து மேயலாம். அது வாசிப்பை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அவ்விசயத்தில் ஒரு நூலகத்தை தேடிப் போய் படிக்கும் விசயங்களை நொடியில் இணையம் வழி அடையலாம். அது பெரிய கொடுப்பினை.

பேஸ்புக்கில் நிறைய சராசரித்தனம், பொதுப்புத்தி உள்ளது. அங்குள்ள மொழி அன்றாட புழக்கத்தில் உள்ள ஒன்று. ஒரு எழுத்தாளன் இதன் மத்தியில் இருக்க வேண்டுமா அல்லது விலகி இருக்க வேண்டுமா? இது தான் ஜெ.மோவின் மைய வினா. ஒரு எழுத்தாளன் அதன் மையத்தில் இருந்து கொண்டே அதேவேளை விலகி இருந்து தன் அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என்பேன். அது சாத்தியம் தான்.

 முக்கியமாக லைக்குகளை பொருட்படுத்த கூடாது என அவர் கூறுவது சரி. ஆனால் மையசமூகத்தின் மனநிலை என்ன, போக்கு என்ன எனத் தெரிய நீங்கள் பேஸ்புக்கில் நிச்சயம் இருக்க வேண்டும். அது உங்கள் படைப்பூக்கத்தை எல்லாம் முடக்காது. அப்படி அடக்கப்பட அது அவ்வளவு எளிமையான உணர்வா? ஜெ.மோவிடம் ஒரு ஒழுக்கவாதம், தூய்மைவாதம் உள்ளது. அது சார்ந்த பதற்றம், மேட்டிமைத்தனம் உள்ளது. இது எல்லாருக்கும் தெரிந்தது தான். இதே ஜெ.மோ வேறு பெயரில் அடிக்கடி பேஸ்புக் வருகிறார் என்றும் நமக்கெல்லாம் தெரியும்.

பேஸ்புக்கில் அவரைப் போன்றவர்களுக்கு இன்னொரு சிக்கல் உள்ளது. இங்கு எல்லாரும் சமம். எதிர்கருத்துக்கள் வரும். பல சமயம் ஒன்றும் தெரியாதவர்கள் கூட நம்மை கடுமையாக கண்டித்து உளறுவார்கள். கிண்டலடித்து தலைகீழாய் கவிழ்ப்பார்கள். இவர்களை பிளாக் செய்யலாம் அல்லது உதாசீனிக்கலாம். ஆனால் ஜெ.மோவுக்கு தன்னை யாராவது கிண்டலடிப்பதை தாங்கிக் கொள்ள முடியாது. அவருடைய ஈகோ தொட்டால்வாடி செடி போன்றது. ஊரில் சின்ன பையன்கள் தொட்டால்வாடி செடி மீது ஒன்றுக்கடித்து அது சுருங்குவது பார்த்து விளையாடுவார்கள். தன்னை யாராவது பேஸ்புக்கில் அப்படி கேலி பண்ணுவார்களோ என பயப்படுகிறார். ஜெயமோகனின் கேள்வி எழுத்தாளன் பேஸ்புக்கில் இருக்கலாமா என்பதல்ல பொதுசமூகத்தில், அதன் மத்தியில், அங்குள்ள மக்களோடு புழங்கலாமா என்பதே.

பேஸ்புக்கில் எழுதி உருவாகிற எழுத்தாளர்கள் பற்றின கவலை பலருக்கும் உள்ளது. அதாவது இயல்பாகவே நீங்கள் ஒரு சில வாக்கியங்கள் மட்டும் எழுத பயின்று விடுவீர்கள். அதைக் கடந்து விரிவாக எழுத முடியாமல் போகும். அதுவும் இலக்கிய வாசிப்பு பின்னணி இல்லாதவர்களுக்கு குறிப்பாய் அப்படி ஆகும். எனக்கு சில பத்திரிகை சப் எடிட்டர் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எதை எழுதினாலும் இருநூறு சொற்களுக்கு மேல் போகாமல் நின்று விடும். அப்படி எழுதி எழுதி கை பழகி விடும். மேலும் பேஸ்புக்கில் நீங்கள் ரொம்ப தீவிரமான விசயங்களிலும் பெரிய அறிமுகம் இன்றி கருத்து சொல்லலாம் என்பதால் அதையெல்லாம் ஆழமாய் படித்து அறியும் ஆர்வம் போய் விடும். எல்லாவற்றையும் மேலோட்டமாய் தெரிந்து கொண்டு கருத்து சொல்லி பழகி விடுவார்கள். ஒரு இலக்கிய பத்திரிகை அப்படி அல்ல. அதை வாசிக்க வாசிக்க நீங்கள் சிக்கலான புது விசயங்களை சிரமப்பட்டு புரிந்து கொள்ள தொடங்குவீர்கள். போராடி ஒன்றை புதிதாய் கற்க மனம் தயாராகும். ஆனால் பேஸ்புக்கில் எதையும் சிரமப்பட்டு படிக்க வேண்டாம் எனும் மனநிலை உருவாகும்.

பேஸ்புக்கின் வழி மட்டும் தோன்றி பிரபலமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் விநாயக முருகன் மட்டும் தான் நாவல், சிறுகதை, கட்டுரை என பரிணமித்தார். ஏனென்றால் அவர் ஏற்கனவே இலக்கிய பத்திரிகைகள், நூல்கள் படித்து வந்தவர். ஏற்கனவே ஒரு கவிதைத் தொகுப்பு போட்டிருந்தார். மற்றபடி இலக்கிய சுயம்புக்கள் பேஸ்புக் வழி மட்டும் தோன்ற முடியாது.

 இதில் ஒரு சிக்கல்: நீங்கள் இன்று அதிகமான ஆட்களின் கண்ணில் படி பேஸ்புக்கில் எழுத வேண்டும். ஆனால் செறிவாகவோ விரிவாகவோ பேஸ்புக்கில் எழுத முடியாது. ஆக நீங்கள் குறைவாக மேலொட்டமாக எழுதி பேஸ்புக்கில் நிலைக்கலாம். இப்படி நம் வளர்ச்சி குன்றி விடும்.

இதைத் தவிர்க்க வலைப்பூ வைத்திருக்க வேண்டும்.  பிரதானமாய் அதில் எழுத வேண்டும். நான் பெரும்பாலும் பேஸ்புக் ஒற்றை வசன நிலைத்தகவல்களில் கவனம் செலுத்துவது இல்லை. நிலைத்தகவல் எழுத அது நான்கு வரிகளுக்கு மேல் சென்றால் விரிவாக்கி வலைப்பூவில் கட்டுரையாக்கி விடுவேன்.

பேஸ்புக் வந்ததும் வலைப்பூக்கள் அழிந்ததாய் நான் நம்பவில்லை. இன்றும் காத்திரமாய் தீவிரமாய் அல்லது தொடர்ச்சியாய் ஓரளவு ஈடுபாட்டுடன் நடத்தப்படும் வலைப்பூக்கள் உள்ளன. ஏற்கனவே அதை நடத்தி பின்னர் ஷட்டரை மூடி பேஸ்புக் பக்கம் சென்றவர்கள் சரியான இடத்துக்கே சென்றுள்ளார்கள். அவர்கள் முன்பும் கூட வலைப்பூக்களை வலைதொடர்பாக்கத்துக்காக தான் நடத்தினார்கள். இப்போது பேஸ்புக் வந்ததும் அவர்களுக்கு வலைப்பூ தேவையில்லாமல் ஆனது. வலைப்பூக்களின் உலகமும் போலிகள் நீங்கி சுத்தமானது.

வலைப்பூக்கள், இணைய பத்திரிகைகள் மூலம் தீவிரமாக செறிவாக எழுதி நீங்கள் ஒரு கணிசமான வாசகர்களை சென்று சேர முடியும். குறிப்பாக பத்திரிகைகள் கிடைக்காத இடத்தில் இருப்பவர்கள் இணைய பத்திரிகைகள், எழுத்தை தான் நம்பி இருக்கிறார்கள். ஒரு சிறுபத்திரிகையில் நீங்கள் எழுதி கூடிய பட்சம் மூவாயிரம் வாசகர்களை அடையலாம். அதில் எல்லாரும் உங்களைப் படிப்பார்கள் என சொல்ல முடியாது. பத்திரிகையிலும் தமக்கு பிடித்ததை தான் படிப்பார்கள். ஆக ஒரு ஆயிரம் வாசகர்களை சொல்லலாம். சில பத்திரிகைகளை மொத்தம் 300 பேர் தான் படிப்பார்கள். அவர்களை இணையத்திலே அடையலாம்.

இணைய வாசகர்களை அவர்கள் அளவுக்கு ஆழமானவர்களா? இந்த கேள்விக்கு எளிதில் விடை காண இயலாது. என்னளவில் நான் எந்த வேறுபாட்டையும் கண்டதில்லை. நான் அச்சிலும் இணையத்திலும் எழுதுகிறேன். இரண்டையும் ஒரேவித ஆட்கள் தான் படிக்கிறார்கள் என எதிர்வினைகள் உணர்த்துகின்றன.

இறுதியாக ஒரு கேள்வி: பேஸ்புக் நம் நடையை அரட்டைத்தன்மை கொண்டதாக மாற்றுகிறதா? கடந்த பத்து வருடங்களில் ஓரளவு தமிழ் எழுத்து நடை இணையத்தினால் மாற்றமடைந்துள்ளது. இலக்கிய பத்திரிகைகளில் கூட இணைய மொழி வருகிறது. ஜெயமோகனின் நடை கூட சற்றே மாறியுள்ளது. இது ஒரு பிரச்சனையா? எழுத்து நடை அல்லது மொழி என்பது பேசுபொருளை சார்ந்தது என நம்புகிறேன். நான் நாளை நீட்சே அல்லது கீர்க்ககாட் பற்றி எழுதினால் என் நடை சட்டென வேறுவிதமாய் மாறும். கோட்பாடு பற்றி எழுதினால் சொற்களும் வாக்கிய அமைப்புகளும் மாறும். ஆக நாம் எதைப் பற்றி எழுதுகிறோம் என்று தான் கவலைப்பட வேண்டும். எப்படி எழுதுகிறோம் என்று அல்ல. வாசகனுக்கு சினிமாவும் அரட்டையும் பிடிக்கும் என அதைப் பற்றி மட்டும் எழுதினால் நம் மொழியும் பலவீனமாகும். ஆனால் பல துறைகள் சார்ந்து தெரிந்து கொண்டு எழுதினால் நம் நடை செறிவாகிக் கொண்டே போகும். உங்கள் மொழியை காப்பாற்ற அதை வங்கி லாக்கரில் வைத்து பூட்ட தேவையில்லை. அது ஒரு பெண் தன் தாலியை ஜாக்கெட்டுக்குள் பதுக்குவது போன்றது.

No comments: