Saturday, September 27, 2014

ஜெயா வழக்கு தீர்ப்பும் அதிமுகவினரின் நாடகமும்


ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 வருடங்கள் சிறைத்தண்டனை மற்றும் 100 கோடி அபராதம் என்பது ஒரு முக்கியமான தீர்ப்பு. அந்த நீதிபதியின் குசும்பைப் பாருங்கள். 3 வருடம் என்றால் இன்றே ஜாமீன், அல்லாவிட்டால் இன்றைக்காவது சிறையில் இருப்பார் என ஒரு வருடம் கூட்டிக் கொடுத்துள்ளார். ஏனென்றால் தண்டனை பெயருக்குத் தான், ஜெயலலிதா ஜெயிலில் தண்டனை அனுபவிக்க மாட்டார் என அவர் அறிவார். அதனால் குறைந்தது ஒன்று ரெண்டு நாளாவது உள்ளே இருக்கட்டும் என நினைத்திருக்கிறார் போலும்.

 அரசியல் தலைவர்கள் நீண்ட நாள் சிறையில் இருப்பது என்பது நம் வரலாற்றிலேயே இல்லை. சும்மா பெயருக்கு தண்டனை வாசிப்பார்கள். அதற்கு தடை, ஜாமீன், அப்பீல் என போய்க் கொண்டே இருக்கும். தண்டனைக்குள்ளானவரை குறைந்தது முப்பது வருடமாவது தொடர்ந்து தேர்தலில் தோற்கடித்து மக்கள் தான் இவர்களுக்கு எல்லாம் தண்டனை அளிக்க முடியும். அரசியல்வாதிக்கு வேறெதுவும் பொருட்டான தண்டனை இல்லை.

தமிழகம் பூரா ஆர்ப்பாட்டம் செய்து கடைகளை அடித்து நொறுக்கி பேருந்துகளை எரிக்கும் ஆதிமுகவினர் ஏதோ உணர்சசி வேகத்தில் செய்வதாக நான் நினைக்கவில்லை. இப்படி ஒரு தீர்ப்பு வரப் போகிறது என ஏற்கனவே கட்சியினருக்கு தெரியும். அதற்காக தயாராக தான் இருந்திருக்கிறார்கள். அவரக்ளின் இலக்கு எப்போதுமே பொதுமக்களும் சாதாரண வியாபாரிகளும் தான். ஒரு நட்சத்திர ஓட்டலுக்குள் போய் தாக்குவார்களா? நீதிமன்றம் முன்பு போய் தர்ணா பண்ணுவார்களா? மாட்டார்கள். டாஸ்மாக் அதன் பாட்டுக்கு திறந்தே ஜெகஜோதியாக இயங்குகிறது. அதை உடைக்க மாட்டார்கள். ஏனென்றால் அங்கு போய் குடித்து விட்டு கிடைக்கிற மிதப்பில் தானே ஆர்ப்பாட்டம் பண்ண முடியும். பொதுச்சொத்தை ஆளுங்கட்சியினர் உடைப்பதை வேடிக்கை பார்க்கும் போலீஸ்காரர்கள் ஏதோ பள்ளிக்கூட பிள்ளைகளை விளையாட விட்டு கண்காணிக்கும் டீச்சரை போல் தோன்றுகிறார்கள். கடைகுள் புகுந்து குண்டர்கள் உடைத்ததுமே அங்கு ஒரு போலீஸ்காரர் போய் “போதும் போங்க என அமைதிப்படுத்துகிறார். மாணவர்கள் சாலை மறியல் செய்தால் மாட்டடி அடித்து சிறையில் ஏற்றும் இவர்கள் ஏதோ குடித்து விட்டு கலாட்டா பண்ணும் மாப்பிள்ளையை சமாதானம் பண்ணும் மாமனாரை போல் நடந்து கொள்கிறார்கள். இதைப் போல் மற்றொரு அவலம் இல்லை. இதையெல்லாம் சேர்த்து பார்க்கையில் இந்த ஆர்ப்பாட்டம் ஜெயலலிதா, போலீசார் மற்றும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் இணைந்து நடத்தும் ஒரு நாடகம் எனத் தெரிகிறது. ஜெயலலிதாவுக்கு தேவை கட்சியில் தான் இன்னும் ஒரே தலைவர் என வலுவான ஒரு சேதியை விடுப்பது; இன்னும் கட்சியினர் தன் மீது மட்டுமே விசுவாசமாக இருப்பதாய் சித்தரத்தை உருவாக்குவது. அந்த காட்சி கச்சிதமாக நடந்தேறி விட்டது.
எப்படியும் அடுத்தது திமுக ஆட்சி தான். ஜெயலலிதாவுக்கு இந்த தீர்ப்பு வராதிருந்தாலும் கூட விலைவாசி உயர்வு. மின்சார பிரச்சனை காரணமாய் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதனால் எப்படியும் அடுத்த தேர்தல் முடிவுகள் திமுகவும் சாதமாகத் தான், இந்த தீர்ப்பு எப்படி இருந்தாலும், இருக்கும். ஜெயலலிதா அதுவரை சோனியா காந்தி போல் நிழல் அரசாங்கம் நடத்தலாம். ஆனால் அடுத்த தேர்தலுக்கு அடுத்த தேர்தல் தான் முக்கியம். அப்போது அவரால் தேர்தலில் நிற்க முடியுமா என்பது தான் பிரதான கேள்வி. எப்படியும் அவர் சிறைக்கு போகப் போவதில்லை. கட்சி அதிகாரம் வழியாய் மொத்த அதிகாரமும் அவரிடம் தான் இருக்க போகிறது. ஆனால் ஜெயலிதாவின் நஷ்டம் இரண்டு விசயங்களில் உள்ளது. ஒன்று அவர் கௌரவத்துக்கு ஏற்பட்டுள்ள சின்ன இழுக்கு. புறங்கையால் துடைத்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார். அடுத்தது 100 கோடி அபராதம். அவரது சொத்து மதிப்பு லட்சங் கோடிகளில் இருக்கும். 100 கோடி என்பது பத்து பைசாவுக்கு சமானம். சல்லிப்பைசா அபராதம் விதித்து அவரை இப்படி அவமானப்படுத்துவது நியாயமல்ல!


இதைப் பார்த்து பிற அரசியல் தலைவர்கள் ஊழலில் இருந்து விலகி இருப்பார்களா? பரவலாக அரசியல் தலைவர்களுக்கு இது போல் தண்டனை அளிப்பது மட்டுமல்ல தண்டனைகளை முழுமையாக நிறைவேற்றினால் மட்டுமே அப்படி ஒரு அச்சம் ஏற்படும். ஆனால் ஊழலை கொண்டாடுகிற, ஈனமான முறையில் ஈட்டும் பணத்துக்கு பெரும் சமூக கௌரவம் உள்ள ஒரு நாட்டில் ஊழல் செய்ய யாரும் தயங்க மாட்டார்கள்.

3 comments:

ஜீயெஸ்கே said...

//ஈனமான முறையில் ஈட்டும் பணத்துக்கு பெரும் சமூக கௌரவம் உள்ள ஒரு நாட்டில் ஊழல் செய்ய யாரும் தயங்க மாட்டார்கள்//

உண்மை... உண்மை... உண்மை...

Unknown said...

Hi....ur articles r superb ......

Udhaya Kumar said...

How can we change our country?