Wednesday, September 3, 2014

ஒரு கடிதமும் பதிலும்

இரு வட்டங்கள்: உள்ளே வெளியே

//நான் பொதுவாக எனக்கு வரும் கடிதங்களை பிரசுரிப்பதில்லை. அவை தனிப்பட்ட பரிவர்த்தனைகள். ஆனாலும் சிலவேளை ஆழமான கேள்விகளை எழுப்பும் கடிதங்கள் வரும். அவற்றை பிரசுரிப்பதன் மூலம் நல்ல ஒரு விவாதத்தை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். அதில் ஒன்று கீழே தாமஸ் சூசன் எழுதியிருப்பது. அவருக்கான என் பதிலையும் இங்கு தந்திருக்கிறேன். (முறையாக அவரிடம் அனுமதி பெற்றே பிரசுரிக்கிறேன்)//


அன்பிற்குரிய அபிலாஷ் அவர்களுக்கு,

'உயிர்மை'யில் தங்களின் 'கருணைக்கொலை' பற்றிய கட்டுரையை நேற்று தான் வாசிக்க நேர்ந்தது. விவாதத்தை தத்துவார்த்தமான விளக்கங்கள் மூலம் எடுத்து சென்றமை சிறப்பு.


உண்மையில், 'துன்பமும் வாழ்வின் ஓர் அங்கமே' என்ற புரிதல் இன்று நம்மிடையே வாய்த்திருக்கவில்லை. இருத்தலியல் சிந்தனைகள் கூட 'வாழ்க்கை தவிர்க்க முடியாத துன்பங்களை எப்போதும் தன்னிடத்தே கொண்டுள்ளதாகச்' சொல்கின்றன. தோல்வியையும், வலியையும், ஏமாற்றத்தையும், ஏற்று சகித்துப் போவதில் நிறைய இருக்கிறது. உதாரணமாக, வேலைக்காக ஒவ்வொரு அலுவலகமாய் ஏறி இறங்குவதில் நிரம்ப சுவாரஸ்யம் இருக்கிறது. ஒவ்வொரு தோல்விக்கும், ஒவ்வொரு வெளியேற்றத்திற்கும், ஒவ்வொரு ஏமாற்றத்திற்கும் பின்னால் நான் என்னை ஒரு கணம் உற்று நோக்கி நிற்கிறேன்; நிறை குறைகளை காண்கிறேன்; அவைகளை களைய பிரயத்தனம் எடுக்கிறேன்; அதன் வழி வேறொன்றாய் பரிணமிக்கிறேன். இங்கு ஒரு இயக்கம் நிகழ்கிறது. தோல்வியும், வலியும், ஏமாற்றமும் செயலற்றுப் போகவே வைக்குமென்றால் இந்த பரிணமிப்பின் சாத்தியம் இல்லாமலே போகும். தோல்வியும், வலியும், ஏமாற்றமும் அப்படியாக மட்டுமே இருப்பதில்லை. "ஆம், இங்கு எதுவுமே அதுவாக மட்டுமே இருப்பதில்லை, அதுவல்லாததுமாகவும் இருக்கிறது". இந்த புரிதலை எட்டும் அவகாசம் தான் யாருக்கும் அளிக்கபடுவதில்லை.

ஒரு ரயில் நிலைய வாசலில் சிறு புத்தகக்கடை வைத்திருப்பவனாகவோ, ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஷூக்களுக்கு பாலிஷ் போடும் ஒருவனாகவோ இருக்க வாய்த்திருக்குமெனில் அதில் நிச்சயம் அலாதி கொள்வேன். பல்வேறு மனித சாயல்களையும், வாழ்வின் வேறுபட்ட பரிணாமங்களையும் புரிந்துக் கொள்ளும் ஒரு கோணம் அதில் கிடைக்கலாம். ஆனால் படிப்பு, வேலை, வருமானம், திருமணம், சந்ததி பெருக்கம், பதவி உயர்வு, சமூக அந்தஸ்து, சொத்து வளமை என நிறுவனமயப்பட்ட வாழ்கை கூறுகள் நம்மை அதற்கான வழிகளில் விட்டு வைப்பதில்லை. குடும்பம், சமூகம் என்ற இரு பெரும் நிறுவனங்களும் நம்மை எப்போதும் அவைகளுக்கு உபயோகமுள்ளவர்களாகவே வாழப் பணிக்கின்றன.

தத்துவப் புலத்தில் என்றைக்கும் நிலைத்திருக்கும் ஒரு கேள்வி 'வாழ்தல் எதன் பொருட்டு ஆவது?'. வாழ்தல் இருத்தலின் பொருட்டாவது. எனில், இருத்தல் என்பது? இருப்பது. 'Being is what it is' அவ்வளவுதான். இதை எவர் சொல்லி புரிவது. 'ஊரோடு ஒத்து வாழ்' என்னும் பழைமை சித்தாந்தமோ இருத்தலின் தனித்துவ சாத்தியத்தை மறுக்கச் செய்கிறது. முழுக்க நிர்பந்தங்களுக்காவே வாழும் வாழ்கையில் நம் இருப்பை நம்மால் மட்டுமே நிரப்பிக் கொள்ளவோ, நம் இருப்பில் நாம் மட்டுமே தனித்திருக்கவோ வேண்டுமாயின், 'முற்றிலும் மனித முகங்களே அற்ற ஒரு ஏகாந்தத்தில் தொலைந்து போதலன்றி அதற்கு வேறு வழிகளில்லை'. ஆதலின், அந்நிலை எட்டுதலின்றி வாழ்வில் பெருகும் அபத்தமும் தணியாது.
அன்புடன்,
தோமஸ் சூசன்
*******************************************************************************************************
நன்றி தாமஸ் சூசன்

உங்கள் பார்வை சரி தான். நுட்பமான மனம் கொண்டவர்கள் சமூகத்தின் இழுவிசைகளில் மாட்டி தவிக்கிறார்கள். அவர்கள் என்ன செய்ய முடியும்?

ஒன்று, சமூகத்தை இரண்டாய் பிரிக்கலாம். தமக்கு அணுக்கமான, மனரீதியாய் தம்முடன் உரையாட முடிகிற சமூகம். இது ஒரு உள்வட்டம். அடுத்து தம்மை புரிந்து கொள்ள எத்தனிக்காத, அல்லது முடியாத ஒரு சமூகம். இது வெளிவட்டம். உள்வட்டத்தில் மிகச் சில பேர் தான் இருப்பார்கள். இவர்களிடம் ஓரளவு நாம் மனம் திறந்து பேசலாம். ஆத்மார்த்தமாய் இருக்கலாம்.

வெளிவட்டத்தில் நாம் ஈடுபாட்டோடு இருப்பது போல் நடிக்க வேண்டும். ஆனால் அப்படி இருக்க வேண்டியதில்லை. வெளிசமூகத்தில் ஒரு முகமூடி அணிந்து வெறுமனே ஒரு இடத்தில் பொருந்தி இருந்தால் போதும். வேலையிடத்தில், உறவினரிடத்தில், இணையத்தில், சிலநேரம் முகநூலில், அந்நியர்களிடத்தில், எதிரிகளிடத்தில் என. அங்கு நடப்பது எதுவுமே நம் மனதை தொடக் கூடாது. ஆனால் தொட்டது போல் பாவனை செய்ய வேண்டும்

அதேவேளை உள்சமூகத்தில் நடப்பது நம்மை பாதிக்க வேண்டும். ஆனால் ஓரளவு தான். எங்கு எது நடந்தாலும் நம் மனம் அதிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். அதேவேளை நாம் மும்முரமாய் செயல்பட்டுக் கொண்டும் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு சிறந்த குமாஸ்தாவாக வேலை செய்வதாக நடித்துக் கொண்டே உள்சமூகத்தில் ஒரு எழுத்தாளனாய், வாசகனாய் ஆத்மார்த்தமாய் செயல்பட வேண்டும். இரண்டு சமூகங்களையும் சமனம் செய்ய தெரிய வேண்டும். அப்போது இன்று நாம் சந்திக்கும் கணிசமான நெருக்கடிகள், துயரங்களில் இருந்து மீண்டு விடலாம்.

நான் இங்கு சொல்வது ஒரு நவீன உளவியல் கோட்பாடு. அதன்படி உங்கள் சுயத்தை நீங்கள் முழுமையாக எல்லாரிடத்தும் காட்டக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் எந்தளவு நம்மை காட்ட வேண்டும் எனத் தெரிந்தாலே வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.

இது சற்று தத்துவார்த்தமானதும் தான். ஒருமுறை புத்தர் தன் ஆசிரமவாசிகளை வெளியேற சொன்னார். ஏனென்றால் அவர்கள் சடங்கு, சம்பிரதாயம், விவாதம் என ஒரு சுழற்சிக்குள், பாதுகாப்பு வளையத்துக்குள் மாட்டிக் கொண்டார்கள். வாழ்க்கையை நேரடியாய் சந்திக்காமல் விதிமுறைகளுக்குள் ஒளிந்து கொண்டார்கள். புத்தர் அவர்களை பொதுமக்கள் அதிகம் உள்ள சந்தை போன்ற இடங்களில் சென்று சகஜ வாழ்க்கை வாழ சொன்னார். அதேவேளை அங்கு நடக்கும் எதுவும் தம் மனதை பாதிக்காதபடி பார்த்துக் கொள்ள சொன்னார். அதாவது சாமியாராகவும் இருக்க வேண்டாம். சாமான்யனாகவும் இருக்க வேண்டும். இரண்டுக்கும் இடையே இருக்க கேட்டார். இந்த அளவுக்கு நம்மால் செல்ல முடியாது தான். ஆனால் இதையே ஒரு சின்ன அளவில் அன்றாட வாழ்வில் முயன்று பார்க்கலாம். உணர்ச்சிகளோடு இருப்போம். ஆனால் உணர்ச்சிகளற்று இருப்போம்.

இருப்பு பற்றி நீங்கள் சொல்லுவதில் சற்று மாறுபடுகிறேன். இருப்பு என்பது உண்மையானது, தீவிரமானது என நான் நினைக்கவில்லை. எதுவோ அதுவே இருப்பு என்றால் அந்த “எது” என்ன? இது ஒரு முடிவற்ற அரூப விவாதத்துக்கு கொண்டு செல்லும். கீர்க்ககாட் எனும் தத்துவஞானி இருப்பை ஒரு கண்ணாடி போல் பார்க்கிறார். அதற்கு ஒரு நிலைத்த குணமில்லை. நீங்கள் ஒரு அழகான பெண்ணிடத்து இருக்கையில் காமம் உங்கள் இருப்பு. தனியாக இருக்கையில் தனிமை உங்கள் இருப்பு.
இருப்பை நாம் சுயமாய் உற்பத்தி செய்தவாய் கூட அவர் கூறுகிறார். அதாவது ஒரு கணினியில் நீங்கள் உள்ளிடுவது ஒரு கட்டுரையாக அல்லது புகைப்படமாகவோ திரையில் தோன்றும். அதாவது கணினி தனக்கு கிடைக்கிறதை கொண்டு ஒரு அர்த்தத்தில் தன்னையே உற்பத்தி பண்ணுகிறது. அதேவேளை யாரும் உள்ளிடாவிட்டால் அது வெறும் இருட்டான திரையாகி விடும். நாமும் நம்மை இப்படித் தான் உருவாக்குகிறோம் என்கிறார் கீர்க்ககாட் (அவர் கணினியை பற்றி சொல்லவில்லை, அது நான் சேர்த்தது).
இந்த சிந்தனையில் ஒரு விடுதலை உணர்வு உள்ளது என்பதை பார்க்கலாம். நாம் சரியான இடத்திலோ மோசமான இடத்திலோ இருப்பதில்லை. நாம் குற்றவுணர்வு கொள்ள வேண்டியதில்லை. நம் உலகை நாமே பிரதிபலித்து உருவாக்குகிறோம். இது நம் உலகம். இதை நாம் இயக்குகிறோம். கீபோர்டுக்கும் திரைக்குமான உறவு உங்களுக்கும் உங்கள் வாழ்வுக்கும் (அதாவது “இருப்புக்கும்”) உள்ளது.


2 comments:

Katz said...

உங்களது வலைப்பூவை சில நாட்களாக படித்து வருகிறேன். உங்களது விவாதங்களும் விளக்கங்களும் அருமை. வாழ்த்துக்கள் உங்களது பணிக்கு.

chitra chitra said...

yes, that's the fate of destiny makers.