பிச்சை ஏன் ஒரு தொழிலாக இல்லை?தி.நகரில் ஒரு நாற்பது வயதுள்ள பெண்ணைப் பார்த்தேன். நடைபாதையில் நின்று வருவோர் போவோரிடம் தன் தீயில் கருகிய முகத்தை காட்டி பிச்சை கேட்டார். ஒரு சிலர் கொடுத்தனர். கொடுக்காத போது அவரது முகம் கோபத்தில் கோண முணுமுணுத்தார். அது சரியாய் வியாபாரம் ஆகாத கடைக்காரரின் எரிச்சல் போல் இருந்தது. அல்லது மேலாளரிடம் தேவையின்றி திட்டு வாங்கிய பி.பி.ஓ ஊழியனின் முகபாவம் போல். அவரிடம் நியாயமாய் வேலை செய்யும் ஒருவரின் தன்னம்பிக்கை இருந்தது. கருகின முகம் தவிர அவரது மிச்ச உடல் வலுவாக ஆரோக்கியமாக தோன்றியது. சொல்லப் போனால் தன்னைக் கடந்து பையை இடுக்கி, வியர்வை கசகசக்க கொண்டையை அசைத்தபடி நடந்து வீட்டுக்கு போகும் அலுவலக பெண்களை விட வலுவாக இருந்தார்.

“இவர் ஏன் வேலை பார்க்கக் கூடாது?” என முதலில் தோன்றியது. அப்புறம் நினைத்தேன் “இவர் வேலை தான் பார்க்கிறார். தனது கருகின முகத்தை முதலீடாக கொண்டு சம்பாதிக்கிறார். ஒரு பெண் தன் அழகான முகத்தை முதலீடாக கொண்டு நடிகையாகி சம்பாதிக்கும் போது இவர் ஏன் கருகின முகத்தை காட்டி சம்பாதிக்க கூடாது?”. திரிஷாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு சரியாய் தும்மக் கூட வராது. ஆனால் தன் அழகிய முகம் மட்டுமே ஒரே முதலீடு. அதைக் கொண்டு நீண்ட காலமாய் நிலைத்து கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார். அவர் காமக் கிளர்ச்சியை தூண்டுகிறார் என்றால் இந்த பிச்சைக்காரி இரக்க உணர்வையும் குற்றவுணர்வையும் ஒரே சமயம் தூண்டுகிறார். சினிமாவில் சில குள்ளநடிகர்கள், மிக குண்டான நடிகர்கள் போன்றோர் உடல் மட்டுமே காரணமாய் வைத்து நிலைத்திருக்கிறார்கள். குண்டுமணி திடீரென அறுபது கிலோவானால் அவருக்கு யாராவது வாய்ப்பளித்திருப்பார்களா?

சுமார் ஒரு வருடம் முன்பு ஒரு செய்தி படித்தேன். ஒருவர் உடல் மற்றும் மனம் நலமில்லாதவர்களை வைத்து பிச்சை எடுத்ததற்காக கைது செய்யப்பட்டார். இவர் தன்னை ஒரு மனநல மருத்துவர் என பொய் சொல்லிக் கொண்டு சாலையில் தென்படும் மனம் பிறழ்ந்தவர்களை அழைத்து ஒரு மேன்ஷனில் அடைத்து வைத்து தினம் நகரத்தின் முக்கிய இடங்களில் அவர்களை விட்டு பிச்சை எடுக்க வைப்பார். அவரை மருத்துவர் என நம்பி தன் மகளை ஒருவர் ஒப்படைக்கவும் செய்தார். இவ்வாறு மூன்று பேர்களைக் கொண்டு அவர் மூன்று மாதங்களில் சுமார் ஐந்து லட்சம் சம்பாதித்தார். அவரது குற்றத்தை விட சம்பாதித்த பணத்தின் அளவு தான் கவனத்தை கவர்ந்தது. அதாவது ஒவ்வொருவரும் அவருக்கு மாதம் ஒரு லட்சத்துக்கு மேல் சம்பாதித்து கொடுத்திருக்கிறார்கள். அவர் ஒரு வணிக ஸ்தாபனம் நடத்தி இருந்தால் கூட ஊழியர்கள் இவ்வளவு லாபம் சம்பாதித்து கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகம்.

வித்தியாசாகர் தொண்டு நிறுவனத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தாம் நிர்வாக பொறுப்புகளில் இருக்கிறார்கள். இவர்கள் விலை உயர்ந்த கார்களில் தான் வேலைக்கு வருகிறார்கள். ஆனால் விளம்பரம் பார்த்தால் நிராதரவான நோயாளிகளும் முதியவர்களும் பரிதாபமாக காட்டப்படுவார்கள். வித்யாசாகர் நிறுவனத்தின் வரவேற்பறை மற்றும் அலுவலகங்கள் ஒரு தனியார் நிறுவனத்தின் அத்தனை வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இன்னொரு புறம் நோயாளிகளும் அவர்களை கவனித்து கொள்பவர்களும் சாதாரண வசதிகளுடன் இருப்பார்கள். அவர்களைப் பார்த்தால் உங்களுக்கு இரக்கமும் நளினமான பளபளப்பான வரவேற்பறையை பார்த்தால் நிறுவனம் மீது நம்பிக்கையும் ஏற்பட வேண்டும் என்பது நோக்கம். பெரும்பாலும் வெளிநாட்டினரின் கருணையை சுரந்து அதிக நன்கொடையை வாங்குவதில் கவனம் செலுத்துகிறார்கள். அங்குள்ள அனாதை குழந்தைகள் வருகை தருபவர்களைக் கண்டால் வணங்கி பெயர் கூறி பணிவுடன் தம்மை அறிமுகப்படுத்தும்படி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளார்கள். இது எந்தளவுக்கு தொண்டு நிறுவனமோ அந்தளவுக்கு ஒரு லாபநோக்கில் இயங்கும் தொழிற்சாலையும் தான்.
இதற்கு அடுத்த நிலையில் இருக்கும் அனாதை இல்லங்கள் உள்ளன. இவை சென்னைக்கு வெளியே இருந்தாலும் இவற்றை நட்த்துபவர்கள் நகரத்துக்குள் ஒரு அலுவலகம் வைத்து நமக்கு தினமும் போன் பண்ணி நன்கொடை கேட்டு நச்சரிக்க ஒரு பெண்ணை வேறு நியமிப்பார்கள். போன் எண்களை தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கி ஒரு ஊழியர் மூலம் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு போன் செய்து நன்கொடை வசூலிப்பதென்றால் அதற்கு எவ்வளவு செலவாகும், எவ்வளவு லாபம் இருந்தால் இவ்வளவு தொழில்முறை கரார்தன்மையுடன் இந்த இல்லங்கள் இயங்க முடியும் என யோசியுங்கள்.
அப்புறம் “இந்தியாவின் படிக்க வாய்ப்பில்லாத ஒரு ஏழைக்குழந்தையை தத்தெடுக்க இவ்வளவு தொகை, அவளுக்கு ஒரு வருடத்துக்கான சீருடைக்கு இவ்வளவு தொகை, பாருங்கள் நீங்கள் நன்கொடை தராவிட்டால் இக்குழந்தை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள், விபச்சாரத்துக்கு அனுப்பி விடுவார்கள். அதனால் இந்தியாவின் ஏழைப் பெண்குழந்தைகளை காப்பாற்றுங்கள். அதற்காக உங்கள் சொகுசு வாழ்க்கையில் இருந்து மாதம் 1500 ரூ ஒதுக்கி வைத்தால் போதும்” என்கிற வகை டி.வி மற்றும் இணைய விளம்பரங்கள். உதாரணமாய் savethechildrenindia.org எனும் நிறுவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஏழைக்குழந்தைக்கு அரசுப்பள்ளியில் படிக்கவும் பிற வாழ்க்கை செலவுகளுக்கும் எவ்வளவு அதிகம் ஆகி விடப் போகிறது? அதுவும் படிப்பும் உணவும் இலவசம் எனும் போது? அது ஏன் பெண் குழந்தைகளையே முன்னிலைப்படுத்துகிறார்கள்? இந்நிறுவனத்தில் டிரஸ்டிகளாக இருப்பவர்கள் நடிகர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் எனும் போது டி.வியில் அடிக்கடி தோன்றி சாதாரணமாய் அரைகிலோ தக்காளி வாங்கவே யோசிக்கும் நம்மை ஏன் நச்சரிக்கிறார்கள்? நன்கொடை செலுத்துவது இணையம் மூலம் கடன் அட்டை, நெட்பாங்கிங் போன்ற முறைகளில் எனும் போது யாரை லட்சியமாக்குகிறார்கள் என்பது தெளிவு.
தொண்டு நிறுவனங்கள், அனாதை இல்லங்களின் செயல்பாட்டை சந்தேகிப்பது அல்ல என் நோக்கம். இந்த நிறுவனங்கள் இன்று எந்தளவுக்கு மனிதனின் பச்சாதாபத்தை சுரண்டி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நோக்கில் செயல்படுகிறது என பார்க்க வேண்டும். சேவை என்பது இன்று ஒரு மிக லாபகரமான தொழில். அனாதைகள், ஊனமுற்றவர்களை காட்டி ஒரு நிறுவனம் நன்கொடை வாங்கி சம்பாதிக்கலாம் என்றால் பிச்சைக்காரர்களை காட்டி இன்னொருவர் ஏன் அதே முறையில் சம்பாதிக்க கூடாது? முழுக்க லாபமற்ற முறையில் இத்தொண்டு நிறுவனங்கள் நடக்கின்றன என்றால் இவ்வளவு படோபமான கட்டிடங்களும் விலையுயர்ந்த கார்களும், டிவி விளம்பரங்களும் எப்படி சாத்தியம்? ஆக இரக்கத்தை தூண்டி சம்பாதிப்பது நம் பிரச்சனை அல்ல – பிச்சை அதனளவில் நம்மால் ஏற்க முடியாத ஒரு நடவடிக்கையாக உள்ளது. பிச்சை எடுப்பதை மிக இழிவான காரியமாக பார்க்கிறோம். இதற்கு அடுத்த நிலையில் திருட்டு, கொள்ளை, விபச்சாரம் ஆகியவை உள்ளன. ஆனால் திருட்டு, விபச்சாரம் போல் பிச்சை சமூகத்தை ஒழுக்க, பொருளாதார நிலைகளில் பாதிப்பதில்லை. இருந்தும் அது ஏன் இழிவாக பார்க்கப் படுகிறது?
பிச்சை சோம்பலின் இன்னொரு வடிவமாக பார்க்கப்படுகிறது. ஒருவன் வேலை செய்ய ஆர்வமற்று இருக்கிறான் என்றால் அவன் சீரழிந்து இழிநிலைக்கு வரப் போகிறான் என நினைக்கிறோம். ஆனால் இது உண்மையா? உழைப்பவர்கள் மட்டும் தான் நம் சமூகத்தில் பிழைக்கிறார்களா? நம்மை சுற்றி குடும்பம், உறவு, சுற்றம் என பார்த்தாலே பத்தில் மூன்று பேராவது எந்த வேலையும் இல்லாமல் சும்மா திரிவதை பார்க்கலாம். அவர்களை ஏதோ ஒரு காரணத்துக்காக சகிக்கிறோம். தன் கணவன் குடிப்பதற்காக தினமும் வேலைக்கு போய் சம்பாதிக்கிற நிறைய மனைவிகள் இருக்கிறார்கள். ஒரு வகுப்பை எடுப்போம். அங்கே படிக்காத சோம்பேறி மாணவர்கள் 60% குறைந்தது இருப்பார்கள். ஒரு வேலையிடத்தில் பத்தில் மூன்று பேர் கடுமையாக உழைப்பார்கள். மீதி ரெண்டு பேர் சுமாராக உழைப்பார்கள். மிச்சம் ஐந்து பேர் சும்மா ஓப்பி அடிப்பார்கள். வேலையே செய்யாத எத்தனை ஊதாரி பிள்ளைகள் பணக்கார அப்பாக்களுக்கு இருக்கிறார்கள்! நம் சமூகம் சோம்பலை சகிக்கும் சமூகம். நம்முடைய எழுத்தாளர்களை விட பெரிய சோம்பேறிகள் இருக்க முடியுமா என்ன? எழுத்தாளர்களுக்கும் புரவலர்களுக்குமான உறவு சங்க காலம் தொட்டே நீண்டு வருகிறது. இன்னொரு பக்கம் சோம்பலாக வாழ விரும்புபவர்களின் பெருங்கூட்டம் காவி ஆடைக்குள் ஒளிந்து கொள்கிறது. காலங்காலமாக இங்கு தோன்றியபடி இருக்கும் சன்னியாசிகள் அத்தனை பேரும் ஆன்மீக லட்சியத்துக்காகவா வாழ்கிறார்கள்? இது போக உழைக்க உடல் வலு இல்லாதவர்கள், முதியவர்கள் என விளிம்புநிலையில் உள்ளவர்களை ஏதோ ஒரு வகையில் உள்வாங்கி தக்க வைக்கும் ஒரு பிரம்மாண்ட எந்திரமாக நம் சமூகம் இருந்து வந்துள்ளது. “பிச்சை புகினும் கற்கை நன்றே” என கூறிய ஔவையார் அவ்வாறு வாழ நேர்ந்த ஒரு அறிவுஜீவி தானே? பிச்சை எடுப்பது துறவறத்தின் ஒரு முக்கிய பண்பாக இருந்து வந்துள்ளதே! ஆனால் இன்று நாம் மாறி விட்டோம். ஒரு சாமியார் கூட இன்று ஏழையாக இருக்க தயங்குகிறார். ஏழை சாமியாரை சாமியார் என நம்பவே நாம் தயங்குகிறோம்.
இன்றைய துறவிகள் வசதியான ஆசிரமங்களில் சாம்பிராணி, மலர் வாசனைகள் சூழ அமர்ந்து வெளியே வராமல் ஜெபிக்கிறார்கள். அவர்களை பாதுகாக்க நன்கொடைகளும் மத நிறுவனங்களும் உள்ளன. இன்றைய சாமியார்கள் சொகுசான ஒரு மென்பொருள் ஊழியர் போல வசதிகள், கராறான நெறிமுறைகளுடன் வாழ்கிறார்கள். வேலைக்கு பதில் யோகா பயிற்சி, போதனை, திவ்ய தரிசனம் என வேறுவகையில் சமூக பங்களிப்பு செய்கிறார்கள். நான் சமீபமாக சில பௌத்த துறவிகளுடன் பேருந்தில் தொலைதூர பயணம் செய்தேன். அவர்கள் நொறுக்குத் தீனியாக ஒரு தபலா போன்ற உருளையான மரப்பெட்டியை திறந்து கால் கிலோ முந்திரிப் பருப்பை அள்ளி எடுத்து மொறுமொறுவென மெல்லுகிறார்கள். நானெல்லாம் ஐம்பது கிராம் பக்கோடாவுக்கே கணக்கு பார்ப்பேன்.
எழுத்தாளர்களும் இன்று சோம்பலாக இல்லை. அவர்கள் கூட்டம் நடத்தி ஆள் சேர்ப்பது, டிவியில் பேசுவது, பேஸ்புக்கில் சச்சரவில் ஈடுபடுவது, வெளிநாடுகளுக்கு உரையாற்ற செல்வது என பிஸியாக இருக்கிறார்கள். உண்மையில், யாருமே சோம்பலாக இல்லாத, இருக்க முடியாத ஒரு சமூகத்தில் வாழ்கிறோம்.
நம் சமூகம் ஏன் ஒரு காலத்தில் சோம்பலை ஏற்றுக் கொண்டது என நாம் யோசிக்க வேண்டும். சோம்பலில் தான் ஆன்மீகம், படைப்பூக்கம், அறிவார்த்தம் என எல்லாம் உள்ளது. எப்படி உழைப்பது மனித பண்போ அதே போல் ஒன்றும் பண்ணாமல் சும்மா இருப்பதும் மனித இயல்பு தான். ஒரு சமூகம் எல்லாவகை மனிதர்களையும் ஏற்றுக் கொண்டு சுமக்க வேண்டும். முன்பு இங்கே சோம்பேறித்தனம் ஒரு வாழ்க்கை நிலையாக இருந்தது. பரபரப்பாக இயங்க பிடிக்காதவர்கள் அன்று சோம்பேறிகளாக இருக்கலாம். சுந்தர ராமசாமியின் “கோவில் காளையும் உழவுமாடும்” இந்த இருநிலைகளும் எப்படி நம் பண்பாடும் ஆழமாய் வேரோடி உள்ளன என காட்டும் சிறுகதை. இன்று வேலையில் நம்பிக்கை இழப்பவர்களால் சோம்பேறிகளாய் காவி தரித்து தேசாடனம் போகவோ வீட்டுத் திண்ணையில் முடங்கவோ முடியாது. வேலையற்றவர்கள் இன்று சமூக அழுத்தம் தாளாமல் தற்கொலை நோக்கி செல்கிறார்கள். தற்கொலைக்கான ஒரு முக்கிய அறிகுறியாகவே வேலை செய்ய முடியாமல் போவதை தான் உளவியலாளர்கள் சொல்கிறார்கள். தான் பயனற்றவன் என்கிற எண்ணம் தருகிற சமூக அழுத்தம் இன்று கணிசமானது. முன்பு அத்தகைய அழுத்தம் நம் சமூகத்தில் இல்லாமல் இருந்தது. இன்று தொடர்ந்து எதையாவது உற்பத்தி பண்ணும்படியான அழுத்தம் நம் சமூகத்தின் ஆன்மீகம், படைப்பூக்கம் ஆகியவற்றை கொன்று விட்டது. ஒரு பைத்திய வேகத்தின் அச்சில் சுழன்று கொண்டிருக்கிறோம்.
நமக்கு, ஒரு அனாதரவான, ஊனமுற்ற ஒருவரைக் காட்டி நன்கொடை வாங்கி நிறுவனம் நடத்தினால் தவறில்லை. ஆனால் அதே ஆளைக் காட்டி பிச்சை கேட்டால் குற்றம். அதாவது ஒருவரைக் காட்டி பணம் வாங்கலாம், ஆனால் அவ்வாறு பணம் வாங்குவது ஒரு தொழிலாக இருக்க கூடாது. இது தான் நன்கொடை வாங்கி தொண்டு நிறுவனம் நடத்துபவர்களுக்கும் பிச்சைக்காரர்களை வைத்து தொழில் நடத்துபவர்களுக்கும் வித்தியாசம். ஒன்று தொழில் அல்ல சேவை. இன்னொன்று தொழில். தொழிலில் என்ன பிரச்சனை?
பிச்சை தான் உலகில் உற்பத்தியில்லாத ஒரே தொழில். அதை தொழிலற்ற தொழில் எனலாம். மதமும் தொண்டு நிறுவனங்களும் நம் இரக்கத்தை சுரண்டினாலும் அவை விழுமியங்களை உற்பத்தி செய்து பாதுகாக்கின்றன. நாகரிகத்துக்கு அடித்தளமிடுகின்றன. ஆனால் பிச்சை என்பது வேலையில்லாத வேலை. வேலையில்லாத எவ்வளவோ வேலைகள் நம் சமூகத்தில் உள்ளன. ஆனால் அவை மறைமுகமாக ஏனும் உற்பத்தியுடன் சம்மந்தப்பட்டவை. ஆனால் ஒரு பிச்சைக்காரன் உற்பத்தி சமூகத்தில் இருந்து முழுக்க விலகி நிற்கிறான். வேலை செய்வது மிக உயர்வானது எனும் நம்பிக்கையை எள்ளி நகையாடுகிறான். வேலையில்லாமல் இருப்பது மிக இழிவானது என நாம் நம்ப வைக்கப்படுகிறோம். இதன் மூலம் இந்த உற்பத்தி சமூகத்தின் ஒரு திருகாணியாக, சக்கரமாக மாற்றப்படுகிறோம். ஆனால் ஒரு பிச்சைக்காரன் முதலாளித்துவ சமூகத்தின் முதல் எதிரியாகிறான். ஒரு எந்திரம் போல் சமூக உற்பத்தியின் ஒரு பகுதியாகி தன் வாழ்நாட்களை அர்ப்பணிக்க மறுக்கிறான். வேலை செய்வதே வாழ ஒரே வழி என நம்ப வைக்கப்படும் போது வேலை செய்யாமலும் வாழலாம் என காட்சிபூர்வமாய் நிரூபிக்கிறான். வேலையின் அபத்தததை சுட்டிக் காட்டுகிறான்.
வேலை செய்வது பணம் சம்பாதிக்க என்பதை விட முக்கியமாய் அந்தஸ்தை, அடையாளத்தை சம்பாதிக்க தான். பணத்தினால் இன்பம் அதிகரிப்பதில்லை என ஒரு கட்டத்தில் புரிந்து கொள்கிறோம். அப்போது சம்பாதிப்பது அடுத்தவர் முன் நம்மை நிரூபிக்க என ஆகிறது. மேலும் மேலும் செல்வம் பெருக்க வேண்டும் என்பது லட்சியமாகிறது. இந்த செல்வத்தை கொண்டு என்ன செய்ய என யோசிப்பதில்லை. அதற்கு பாதுகாப்பு, வசதி என பல போலி காரணங்களை கூறி நம்மை சமாதானம் செய்கிறோம். ஒரு கட்டத்துக்கு மேல் பணம் ஒரு குறியீடாகிறது. அதன் மீது சமூகத்தின் அத்தனை விழுமியங்களும் குவிக்கப்படுகின்றன. சமூகத்தின் அத்தனை உயர்வான விசயங்களும் உழைப்பினால் கிடைக்கும் என ஒரு போலி பிம்பம் உருவாக்கப்படுகிறது. இந்த பிம்பத்தை அடைவதற்கான ஆவேசம் தான் மனித குலத்தின் ஒட்டுமொத்த ஆற்றலும். ஆனால் “சூது கவ்வும்” படத்தில் வரும் பாபி சிம்ஹா போல் ஒருவன் “மூன்று லட்சத்தை வைத்து எதுக்கு தொழில் செய்யணும்? ஏன் வீணாக்க கூடாது?” என நினைத்தால் இந்த ஒட்டுமொத்த ஆற்றலும் முடங்கி விடுமோ என சமூக அதிகார மையம் கவலை கொள்ளும். பிச்சைக்காரனை போல் நிறைய பேர் சும்மா இருந்தால் கூட நல்ல வாழ்க்கை தான் என யோசிக்கையில் உற்பத்தி மூலம் முதலீட்டை பெருக்க நினைக்கும் முதலாளித்துவத்திற்கு மலிவான மனிதவளம் கிடைப்பது குறையும்.
மனித சமூகம் மாய்ந்து மாய்ந்து வேலை செய்து ஒன்றும் பிரயோஜனமில்லை. இன்று உலகத்தின் ஒட்டுமொத்த செல்வத்தில் 80% ஒரு சில பேரிடம் தான் இருக்கிறது என எகனாமிக் டைம்ஸில் ஒரு அறிக்கை சொல்கிறது. கடுமையாக உழைத்தால் இந்தியா ஜப்பான், சிங்கப்பூர் மாதிரி ஆகி விடும் என முன்பு கூறினார்கள். ஆனால் அவர்கள் சொன்னது இந்தியாவின் 95% உழைத்தால் 5% பேர் ஜப்பான், சிங்கப்பூரில் உள்ளவர்கள் போல் பணக்காரர் ஆவார்கள் என்பதைத் தான். மிக அதிகமாக உழைக்கையில் மிக அதிகமாக சுரண்டப்படுகிறீர்கள் என்பது தான் இன்றைய உண்மை. இதை நாம் மெல்ல மெல்ல புரிந்து வருகிறோம்.
பிச்சை – இழிவு × உழைப்பு – மேன்மை எனும் இருமை எதிர்வை ஏன் தொடர்ந்து நம்ப வேண்டும்? இன்று எதுவுமே உயர்வு இல்லை. பணம் ஒரு குறியீட்டு உயர்வை எல்லா செயல்பாடுகளுக்கும் அளிக்கிறது. மேலோட்டமான கதைகளை நல்ல அட்டையுடன் பிரசுரித்து பிரம்மாண்டமாக வெளியிட்டால் அதற்கு ஒரு இலக்கிய அந்தஸ்து கிடைக்கிறது. ஷக்கீலாவை ஒரு பின்நவீனத்துவ கலகவாதியாகவும், நயன்தாராவை பெண்ணிய போராளியாகவும் உயர்த்தி விட்டோம். தமிழ்நாட்டின் மிகச்சிறந்த அறிவுஜீவியாக கோபிநாத் இருக்கிறார். பிச்சைக்காரர்களுக்கு என்று ஒரு தனி இடமும் விதிமுறைகளும் சமூக பாதுகாப்பும் நல்கி ஒரு துறையாக்கும் நாள் அருகில் உள்ளதோ? அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் தானத்தை ஒரு உயர்ந்த மதிப்பீடாக மீண்டும் வலியுறுத்தி, அதை கார்ப்பரேட்டாக்குவது தான். இன்று தொடர்ந்து சம்பாதிக்கும் பாய்ச்சலில் சமநிலை இழந்துள்ள மக்களுக்கு ஒரு வடிகாலாக ஆன்மீக சுற்றுலா போல் பிச்சை சுற்றுலா தோன்றலாம். பிச்சைக்காரர்களுக்கு தேவை ஒரு உற்பத்தி மதிப்பு. நேரடியாக உழைக்காதவர்களுக்கும் உற்பத்தி மதிப்பை உருவாக்கலாம் என்பதற்கு இன்றைய சாமியார்கள் நல்ல உதாரணம். அவர்களுடனான காலப் பயணத்தில் பிச்சைக்காரர்கள் தாம் சற்று பின்தங்கி விட்டார்கள். எனக்கென்னவோ, எதிர்காலம் அவர்களுடையது தான் எனத் தோன்றுகிறது.

நன்றி: அம்ருதா செப்டம்பர் 2014

Comments