Wednesday, September 24, 2014

இந்தியாவின் முதல் தூக்குத்தண்டனைப் பெண்களும் அறம் பற்றின சில கேள்விகளும்


கோலாப்பூரை சேர்ந்த அஞ்சனா பாய் ஒரு திருடி. அவர் ஒரு லாரி ஓட்டுநரை மணந்தார். அவர் ஓடிப் போனார். அதன் பின் அவர் மோகன் என்பவருடன் வாழ்ந்தார். அஞ்சனா பாய்க்கு இரு பெண்கள்: ரேணுகா மற்றும் சீமா. போலீஸ் அடிக்கடி வீட்டுக்கு வந்து தொந்தரவு பண்ண மோகன் தாங்க முடியாமல் தன் திருட்டு மனைவியை விட்டு இன்னொரு பெண்ணை மணந்து இரு குழந்தைகள் பெற்றுக் கொண்டார். கணவன் பிரிந்த பின் அஞ்சனா திருட்டுத் தொழிலை தன் இரு பெண்களுடன் இன்னும் மும்முரமாக செய்தார். ஒருநாள் திருடும் போது பிடிபடுகிறார். அப்போது அவரது பெண்ணின் குழந்தை கீழே விழுந்து விட கூட்டத்தின் கவனம் கலைகிறது. இந்த இடைவெளியில் மூவரும் தப்பிக்கிறார்கள். அன்று அஞ்சனா கூட்டத்தில் திருடும் போது குழந்தைகளை வைத்திருந்தால் பொதுமக்கள் சந்தேகப்பட மாட்டார்கள் என உணர்கிறார். அதற்காக அவர் குழந்தைகளை கடத்தி பயன்படுத்துகிறார். பிடிபடும் போது குழந்தையை காட்டி இரக்கத்தை உருவாக்கி தப்பிக்கிறார்.


அஞ்சனா தன் கணவரின் இரண்டாம் மனைவியின் முதல் குழந்தையை கடத்தி கொண்டு வந்து சில காலம் வைத்து விட்டு பின்னர் கொன்று விடுகிறார். அதன் பின் அஞ்சனா தான் தான் கடத்துகிற குழந்தைகள் சொல்பேச்சு கேட்காவிட்டால் அவற்றை இரும்புத் தூணில் தலையை மோதி கொல்லுகிறார். அல்லது பட்டினி போட்டு கொல்லுகிறார். ஒரு குழந்தையை தலைகீழாக தொங்கப் போட்டு தலையை சுவரில் மோதி கொல்லுகிறார். சில ரெண்டு வயது குழந்தைகள் பசியிலோ பயத்திலோ விடாது அழ ஆரம்பிக்கையில் அவற்றை கொல்லுகிறார். இப்படி அவர் எப்படியும் முப்பது நாற்பது குழந்தைகளையாவது கொன்றிருப்பார். ஆனால் நிரூபிக்கப்பட்டுள்ளது 6 குழந்தைகளின் கொலை தான். இறுதியாக அவர் தன் கணவரின் இரண்டாம் மனைவியின் இரண்டாம் குழந்தையை கடத்த சென்ற போது பிடிபட்டார். வழக்கு விசாரணை நடந்த காலத்தில் அஞ்சனா பாய் இறந்து விட்டதால் நீதிமன்றம் அவரது இரு பெண்களுக்கு தூக்குத்தண்டனை விதித்தது. சமீபமாக ஜனாதிபதி அவர்களின் கருணை மனுவை நிராகரித்தார். இந்தியாவில் தூக்கிலப்படப் போகும் முதல் பெண்களாக கோலாப்பூர் சகோதரிகள் இருக்கப் போகிறார்கள்.
இங்கே ஒரு கேள்வி எழுகிறது. குழந்தை என்றால் நாம் அனைவருக்கும் இரக்கமும் மென்மையான உணர்வுகளும் தோன்றும். பிறகு எப்படி அஞ்சனாவும் அவரது இரு பெண்களாலும் இவ்வளவு குழந்தைகளை இரக்கற்று கடத்தவும் கொல்லவும் முடிந்தது. ரேணுகாவுக்கு நான்கு குழந்தைகள். ஜெயிலில் இருக்கும் அவருக்கு தன் குழந்தைகள் மீது பாசம் அதிகம். சதா அவர்களின் நினைப்பு தான். அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு கணக்கு வாத்தியார். அவரின் குழந்தையும் அஞ்சனாவின் பெண்களும் சேர்ந்து வெளியே போவார்கள். ஆனால் அக்குழந்தையை எந்த விதத்திலும் இவர்கள் தொந்தரவு பண்ணவில்லை. நீதிபதி அஞ்சனா மற்றும் இரு பெண்களை மனம் பேதலித்த திருந்த வாய்ப்பற்றவர்கள் என கூறி மரண தண்டனை அளித்தார். ஆனால் அவரது புரிதலில் ஒரு பிழை உள்ளது.
குழந்தைகளை கொண்டு வந்து வலுக்கட்டாயமாய் விபச்சாரம் செய்யும் மாமாக்கள் உள்ளார்கள். அவர்களுக்கு குடும்பமும் குழந்தையும் கூட இருக்கும். ஆனால் தான் பயன்படுத்துகிற குழந்தையும் தன் வீட்டில் உள்ள குழந்தையும் வேறுவேறு என அறிவார். அவருக்கு இரக்கம், அன்பு இருக்கும். ஆனால் தொழில் என வந்து விட்டால் தான் பயன்படுத்துகிற குழந்தைகளை “பொருள்” ஆகத் தான் பார்ப்பார். பொருள் மீது எதற்கு இரக்கம் காட்ட வேண்டும்? இடுக்கி மாவட்டத்தில் உள்ள சூரியநெல்லி எனும் கிராமம். அங்கு 1996இல் ஒரு பதினாறு வயது பெண்ணை தர்மராஜன் எனும் வக்கீல் ஏமாற்றி அழைத்து சென்று ஒரு லாட்ஜில் வைத்து கற்பழித்தார். பிறகு அப்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து தமிழ்நாடு, பெங்களூர், கேரளா உட்பட பல ஊர்களுக்கு காரிலும் பேருந்திலும் அழைத்து சென்று அடித்து மிரட்டி விபச்சாரத்திற்கு கட்டாயமாக உட்படுத்தினார். அப்பெண்ணை நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் கற்பழித்தனர். அவர்கள் சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்கள். அதில் ஒருவர் நீண்ட காலம் மத்திய மந்திரியாகவும் ராஜ்யசபா துணைத்தலைவராகவும் இருந்த கேரள காங்கிரஸ் தலைவர் பி.ஜெ குரியன். பெப்ரவரி 19 ஆம் தேதி அவர் குமிலி பஞ்சாயத்தில் உள்ள விருந்தினர் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்த அப்பெண்ணை பார்க்க வந்தார். அப்படி ஒரு “சரக்கை” பற்றி ஜேக்கப் ஸ்டீபன் எனும் ஒரு அரசியல்வாதி நண்பர் புகழ்ந்து கூறியதில் குரியன் ஆர்வமுற்றிருந்தார். அவர் தன் அறைக்கு வரும் முன் தர்மராஜன் அவளிடம் ”வரப்போகிறவர் பெரும்புள்ளி, ரொம்ப கவனமாய் நடந்து கொள்” என்கிறார். அப்பெண் குரியனிடம் மண்டியிட்டு தன்னை காப்பாற்றும்படி அழுகிறாள். ஆனால் அவரோ பொருட்படுத்தாமல் அவளை கற்பழித்து விட்டு போகிறார். ஒரு கட்டத்தில் அவளுக்கு மிக உடல் நலமில்லாமல் ஆகி சாகிற நிலைக்கு போக தர்மராஜன் அவளுக்கு கொஞ்சம் பணம் தந்து ஊருக்கு போக சொல்கிறார். அப்பெண் வீட்டுக்கு வருகிறாள். 40 நாட்களாய் தன் மகளை தேடி இருந்த அப்பாவுக்கு தன் மகளை அடையாளம் தெரியவில்லை. அந்தளவுக்கு உடல் வீங்கி புடைத்து வேறொரு பெண் போல் இருக்கிறாள். அவர் வழக்கு தொடுக்கிறார். கற்பழிப்பை நிரூபிக்க மருத்துவ சோதனை செய்ய வேண்டும். அதில் ஒன்று புழையில் நுழைத்து பரிசோதிப்பது. ஆனால் மருத்துவரோ தொட்டால் உடைந்து குருதி கொட்டும் அளவுக்கு அவரது பிறப்புறுப்பு சிதைந்து விட்டதாக கூறி பரிசோதனையை தவிர்த்தார். ஒரு பெண் வலியில் துடித்து அழ அதைக் கேட்டபடி அப்படி ஒரு பாலுறுப்பில் உறவு கொள்ள எப்படி குரியனால் முடிந்தது? அது ஒரு ஆறாத புண்ணை பிசைவது போன்றதல்லவா? அவள் வலியில் கதறுவது அவருக்கு கிளர்ச்சி தந்ததா? மாறாக அவரது சொந்த மகள் இப்படி அழுதால் கிளர்ச்சி அடைவாரா? மாட்டார். ஏனென்றால் அப்பெண் வெறும் “பொருள்”. அழுத்தினால் சத்தம் எழுப்பும் ஒரு வெறும் பொம்மை. அவர் பயன்படுத்தலாம்.
ராஜ்யசபாவில் சமீபமாக பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் பற்றி விவாதம் வந்த போது அதை தலைமை தாங்கியவர் இதே பி.ஜெ.குரியன் தான். அவருக்கு அந்த தகுதி உண்டா என்பதை விடுவோம். அவரை காங்கிரஸ் தலைவர்களான ஏ.கெ ஆண்டனி, வயலார் ரவி மட்டுமல்ல முதலமைச்சர் உம்மன் சாண்டி கூட இத்தனைக் காலமாய் ஆதரிக்கிறார்கள். பெண்ணுரிமை அமைப்புகள் எவ்வளவோ போராடியும் சோனியா காந்தி கூட அவரை பதவி நீக்க மறுத்து விட்டார். இப்போது பா.ஜ.க அவரது ராஜினாமாவை கோருகிறது. ஆனால் பா.ஜ.க தலைவரான அருண் ஜேட்லி தான் அவருக்காக வழக்காடி காப்பாற்றியவர். அவர் குரியன் குற்றமற்றவர் என கூறுகிறார். இது ஏன் என்று யோசிப்போம்.
இத்தலைவர்கள் குரியனை பாதிக்கப்பட்டவராக பார்க்கலாம். குரியன் செய்த தவறு விபச்சாரியிடம் சென்றது. அந்த விபச்சாரி பலவந்தமாய் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவள் என்பது வேறு விசயம். ஆனால் அவர் பார்க்க செல்லும் போது அவள் விபச்சாரி என நினைத்தார். அதனால் அப்பெண் வெறும் ஒரு “பொருள்”. அவளிடம் அவர் எப்படி நடந்து கொண்டிருந்தாலும் அது தவறல்ல. ஏனென்றால் தில்லியில் கற்பழிக்கப்பட்ட நிர்பயா ஒரு மத்திய வர்க்க பெண். அதனால் அவள் கற்பழிப்பை ஒட்டி நாடே கொந்தளித்தது. ஆனால் இவளோ வெறும் விபச்சாரப் பொருள் (அப்படி அல்லாவிட்டாலும்). ஆக பி.ஜெ குரியன் கற்பழிக்கவில்லை. நாளை விபச்சாரியை நாடிச் செல்லும் எந்த அதிகாரத்தில் உள்ள ஆணுக்கும் இந்த ஆபத்து நேரலாம். அதனால் அவரை ஆதரிக்க வேண்டும், இவ்வாறு தான் அதிகார மட்டத்தில் உள்ள இரு கட்சியின் தலைவர்களும் யோசிப்பார்கள். நீதிபதி கூட அப்பெண் ஒரு விபச்சாரி, அதனால் அவளை கற்பழித்திருக்க முடியாது எனும் கணக்கில் தான் யோசித்தார். அதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தார். ஆனால் இவர்கள் ஒன்றை பார்க்க தவறுகிறார்கள். தில்லியில் கற்பழித்த மூன்று ஆண்களுக்கும் கூட நிர்பயா ஒரு “பொருள்” தான். இரவில் ஒரு ஆணுடன் தனியாக பஸ் ஸ்டாண்டில் நிற்கும் அவள் சமூக நெறிகளை மீறிய ஒரு பெண் – அதனால் ஒரு “பொருள்” – என்றாகிறாள். அந்த ஆண்களின் கண்ணோட்டத்தில் அவர்கள அவளை ஒரு மனித ஜென்மமாக பார்த்திருக்க முடியாது. பி.ஜெ குரியனைப் போல் அவர்களும் சாலையில் சாதாரணமாய் போகும் குடும்பப் பெண்ணிடம் அப்படி நடந்து கொள்ள மாட்டார்கள்.
பி.ஜெ குரியனும் தர்மராஜனும் தில்லி கற்பழிப்பாளர்களும் அப்நார்மலான கொடூரர்கள் அல்ல. நம்மைப் போல் நாரமலானவர்கள் தான். தண்டனை என்கிற பெயரில் குழந்தைகளின் கண்ணை குத்துகிற ஆசிரியர்களும், லேசாய் எரிச்சல் வந்தால் மனைவியின் கொண்டையை பிடித்து தலையை சுவரில் மோதுகிற கணவர்களும் நம்மில் ஒருவர் தான். மதக்கலவரங்கள் நிகழும் போது சிறுபான்மையினரின் வீடுகள் குறி வைக்கப்பட்டு தாக்கப்படுகின்றன. இவ்வேலையை செய்பவர்கள் அதே ஊரில் கொல்லப்பட போகிறவர்களை ஏற்கனவே நன்கு அறிந்தவர்கள் தான். அதுவரை பரஸ்பரம் அன்பாய் பழகியவர்கள் தாம் வெட்டியும் பெட்ரோஸ் ஊற்றி கொளுத்தியும் கொல்வார்கள். இக்கலவரங்களை கராறாய் திட்டமிடுபவர்கள் சமூகத்தில் மதிக்கப்படும் கண்ணியமான தலைவர்கள், அவர்களுக்கு உதவுபவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள். ஏதோ ஒரு தருணத்தில் கலவரக்காரர்களுக்கு தம் எதிரில் உள்ளவர்கள் “பிறிதாக” வெறும் “பொருளாக” தோன்றுகிறார்கள். திட்டமிடும் நிர்வாகிகளுக்கு மனம் மரத்து போகிறது. ஏன் நம் தமிழகத்தில் ஒரு காதல் ஜோடியை பிரிக்க ஒரு மொத்த கட்சியுமே மும்முரமாய் இயங்கியதே. அதற்காக அக்கட்சியின் மொத்த வக்கீல் படையினரும் களத்தில் இறங்கினரே. இவர்கள் எல்லாரும் கெட்டவர்களா? இல்லை. இவர்களுக்கு அறவுணர்வு இல்லையா? உள்ளது. ஆனால் தன் எதிர்த்தரப்பை வெறும் ”பொருளாக” பார்த்து எந்த உணர்வுமற்று நடந்து கொள்ளும் அபார திறன் மனிதனுக்கு உள்ளது. அப்படி செய்கிறவர் நாளை பத்து பக்கம் அறம் பற்றி கட்டுரை எழுதுகிறவராகவும் இருப்பார். டி.வியில் தோன்றி வன்முறைக்கு எதிராகவும் பேசுவார். இது பாசாங்கோ முரண் நடத்தையோ அல்ல. இதை நாம் கண்டிப்பது வீண். ஆதரிப்பதும் முடியாது. ஆனால் இது மனிதனின் மாறாத ஒரு அடிப்படை இயல்பு.
ஒரு போலீஸ்காரர் கஸ்டடியிலோ என்கவுன்சரிலோ ஒரு குற்றவாளியை கொல்லும் முன் அவனது மனிதன் என்கிற பண்பை ரத்து பண்ணுகிறார். அவருக்கு சாகப் போகிறவன் வெறும் பொருள். அலுவலகங்களில் நம்மை பதினாலு மணிநேரம் பிழிந்து வேலை வாங்கி ஆனால் சம்பள உயர்வு தராத மேலாளர்களும் நம்மை “பொருளாகத்” தான் பார்க்கிறார்கள். வாடகைக் கொலையாளிகளும் அப்படித் தான் இலக்கை பார்க்கிறார்கள்.
94இல் வக்கீல் விஜயன் தாக்கப்பட்ட போது ஒரு “நிறப்பிரிகை” கூட்டு விவாதத்தில் ஒருவர் கேட்கிறார். “நாம் இதை கண்டிப்பதா அல்லது ஆதரிப்பதா?”. இருவிதமாகவும் பதில் வருகிறது. அவர் சிறுபான்மையினருக்கு எதிராக இருக்கலாம். அதனால் அடிக்கலாம். இல்லை, நாளை இதே வன்முறை அரசியல் பாசிசமாக நம் மீதும் பாயும். அப்பாவி இந்தியர்களை கொன்ற அஜ்மல் கசாபும் மனிதன் தானே. அவனுக்கு பதினெட்டு வயது கூட நிறைவடையவில்லை. அவன் குழந்தை தானே. அவனை தூக்கிலிட்ட போது மொத்த தேசமும் ஆர்ப்பரித்து கொண்டாடி ஸ்வீட் கொடுத்தோமே! அது எப்படி முடிகிறது?
கும்பகோணத்தில் அந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளை பூட்டிப் போட்டுக் கொண்டு கோயிலுக்கு செல்ல ஆசிரியர்களுக்கு ஏன் தோன்றியது? தீ பற்றிய போது கூச்சலிடும் குழந்தைகளை திறந்து விட ஏன் யாருக்கும் தோன்றவில்லை? கடந்த இரு பத்தாண்டுகளில் கொடூரமான போர்கள் நடந்திருக்கின்றன. கணிசமாய் அப்பாவிகளும் குழந்தைகளும் தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் குறி வைத்து குண்டு போடப்பட்டன. இது ஏன்? விக்கி லீக்ஸின் போது வெளியான ஒரு காணொளியில் ஈராக்கில் சில அமெரிக்க விமானப்படை வீர்ர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஒரு ஆம்புலன்ஸ் தெரிகிறது. யாரோ சிலர் காயமுற்றவர்களை தூக்கி இட்டு கொண்டு போகிறார்கள். அதை கவனிக்கும் வீரன் அந்த வண்டியை பின் தொடர்ந்து குண்டு வீசி தாக்குகிறான். பிறகு எல்லாரும் செத்து விட்டார்களா என பார்க்கிறான். ஒரே ஒருவர் – வாகன ஓட்டி – தள்ளாடியபடி வெளியே இறங்குகிறார். மேலே இருந்து அவரை குறி வைத்து சுடுகிறான். அவனது மனநிலை ஒரு வீடியோ கேம் ஆடுபவனுடையது போல் கிளர்ச்சியாக உள்ளது என்பது அவனது உரையாடல்கள், குரலில் இருந்து தெரிகிறது. ஏன் மனித உயிர்கள் வெறும் வீடியோ கேம் பாத்திரம் ஆகிறார்கள்? அந்த அமெரிக்க வீரனின் மனம் அங்கு ஈராக்கியரை வெறும் பொருளாக மாற்றுகிறது. அதனால அதற்கு பின் அவனுக்கு பச்சாதாபம் தோன்றாது. தீவிரவாதிகளில் பொது இடங்களில் ஏன் குண்டு வைக்கிறார்கள்? அப்போது தான் அதிகம் பொதுமக்கள் சாவார்கள். ஒரு சமூக விடுதலைக்காக செயல்படும் அவர்கள் ஏன் சம்மந்தமில்லாத மக்களை கொல்ல வேண்டும்? அப்போது தான் உலகம் பூரா கவனம் கிடைக்கும். பொதுமக்கள் வெறும் கச்சாப்பொருள். தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய இயக்கம் ஒன்று இந்திய பிரதமரை கொல்ல முயன்ற போது அத்துடன் பல தமிழர்களும் சாவார்கள் என அறிந்திருந்தனரே! ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக போராடுகிற குழுவால் எப்படி இன்னொரு சம்மந்தமில்லாத மக்கள் திரளை கொல்ல முடிகிறது? எப்படி என்றால் அவர்கள் மனம் கொல்லப்படுபவர்களின் மனிதன் எனும் தகுதியை முதலில் நீக்கி விடுகிறது. இதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. மனம் இது மிக சாதாரணமாக செய்கிறது.
அஞ்சனாவும் அவரது பெண்களும் குழந்தைகளை ஏன் கொன்றிருக்க கூடும் என யோசிப்போம். ஒரு கட்டத்தில் அக்குழந்தைகளால் தமக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறார்கள். திரும்ப தெருவில் விட்டால் அக்குழந்தைகளால் காட்டிக் கொடுக்கப்படலாம். அவர்களுக்கு கொல்லுவதை தவிர வேறு வழியிருக்கிறதா என்ன? திருந்தலாம். சரணடையலாம். ஆனால் நாம் குற்றம் செய்யும் போது மனம் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. ஒருவேளை மனம் பலவீனமாகும் போது குற்றவுணர்வு எழும். ஆனால் செயலில் இருக்கையில் மனம் ஒரு போதும் குற்றத்தை ஏற்காது.

இது போன்ற வழக்குகளில் குற்றவாளி அப்நார்மலான பிறழ்வு மனப்பான்மை கொண்டவர் என கூறும் நீதிபதிகளுக்கு அடிப்படையான மனித உளவியல் புரியவில்லை. மனிதனிடம் அற உணர்வு, இரக்கம், அன்பு எல்லாம் உள்ளது. ஆனால் அதன் அருகே ஒரு ஸ்விட்சும் உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் அணைக்கலாம், ஆன் செய்யலாம். மின்சாரம் போய் வந்தது போல் இருக்கும். ஒன்றுமே தெரியாது.
நான் கோலாப்பூர் சகோதரிகளையோ அவர்களின் அம்மாவையோ பி.ஜெ.குரியனையோ, தில்லி கற்பழிப்பாளர்களையோ நம்மில் இருந்து தனியாக பார்க்க மாட்டேன். ராஜபக்‌ஷேவை இரக்கமற்ற ராட்சன் என்றும் கூற மாட்டேன். அப்படிக் கூறுவது நமக்குள் உள்ள ஒரு முக்கிய கோளாறை பார்க்க விடாமல் பண்ணும் தப்பித்தல் நடவடிக்கையாகும். இவ்வாறு பிறரை ஒரு “பொருளாக” பார்த்து நடந்து கொள்வது மனித இயல்பு. அது சில நேரம் அடுத்தவருக்கு உதவி செய்யாமல் தவிக்க விடுவது, கண்முன்னால் நடக்கிற குரூரங்களை பார்க்காதது போல் நடிப்பது என சின்ன நிலையிலோ கற்பழிப்பு, கொலை, இன அழிப்பு என தீவிர நிலையிலோ இருக்கலாம்.

நாம் மானிட அறம் பற்றி பேசுகிறோம். அறத்தை பின்பற்றும் போது மனிதன் எவ்வாறு மேம்படுகிறான் என பேசுகிறோம். ஆனால் குழந்தைகளையும் பெண்களையும் அப்பாவிகளையும் கொல்பவர்களிடத்தும் நம்மைப் போன்று அதே அறம் செயல்படுகிறது. அறம் நம் அனைவருக்குள்ளும் இயல்பான நிலையில் செயல்படுகிறது. ஆனால் சில குறிப்பிட்ட சூழல்களில் கர்ணனுக்கு மந்திரங்கள் மறந்து போனதை போல் அறமும் நமக்குள் வேலை செய்வதில்லை. இது அறத்தின் பிரச்சனை அல்ல. நம் உளவியல் அப்படி. இது ஏன் எனப் பார்ப்போம்.
மனிதனின் மூளை தன் எதிரில் உள்ளவற்றை அரைகுறையாகத் தான் பார்க்கும். அது போல் எப்போதும் தொலைநோக்காக கச்சிதமான அற அடிப்படையில் யோசிப்பதில்லை. தான் பார்ப்பதில் தேவையானதை மட்டுமே எடுத்துக் கொண்டு தனக்கு தோதான ஒரு சித்திரத்தை உருவாக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட உண்மைகள் உண்டெனில் அதில் நமக்கு வசதியானதை தான் எப்போதும் தேர்ந்தெடுப்போம். இது நிதானமாக பிரக்ஞைபூர்வமாய் நடப்பதில்லை. வேறு உண்மைகளை நம் மனம் நமக்கு காட்டவே செய்யாது. கயிறை பார்த்தால் பாம்பு என நினைப்போம். குல்லா, தாடி பார்த்தால் தீவிரவாதி என அஞ்சுவோம். ஒரு கொலைகாரன் தூய வெள்ளை வேட்டி சட்டை போட்டு நெற்றியில் பட்டையுடன் வந்தால் மனம் அவனை நல்லவன் என மனம் கூறும். காஸாவில் இத்தனை குழந்தைகள் கொல்லப்படும் போது இஸ்ரேல் ஜனாதிபதி “இது போதாது காஸாவை ஒரு சிறு சதுர நிலமாக கூண்டுவீசி அழிக்காதவரை அடங்க மாட்டோம்” என கூறுகிறார். அவருக்கு இரக்கம் இல்லையா? தாராளமாக உள்ளது. ஆனால் அவரது மனம் அவருக்கு தனக்கு பாதகமான உண்மையை மூடி விட்டு சாதகமான தரப்பை மட்டுமே காட்டும். இரண்டு வகையில் மூளை சிந்திக்கும். ஒன்று குறுகின கால சிந்தனை. இன்னொன்று தொலைநோக்கு சிந்தனை. உடனடியாக செய்ய வேண்டிய எந்த செயலிலும் குறுகலான நோக்குடன் தான் நம்மால் செயல்பட முடியும். ஒரு அவசர நிலை வரும் போது குறைந்தபட்சமாய் நமக்கு தேவையான பரிச்சயமான செண்டிமெண்டலான அல்லது பாதுகாப்பு அல்லது கிளர்ச்சி தருகிற தகவல்களை மட்டுமே மூளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும். தொண்ணூறு சதவிதம் நாம் அவசரமாக தான் எதையும் செய்கிறோம். அதனால் தான் மிக முதிர்ச்சியான சிந்தனை கொண்டவரின் உடனடி செயல்களில் ஒரு முதிர்ச்சியின்மை அதிகம் இருக்கும். இதனால் தான் மனிதனை “ஒரு மகத்தான சல்லிப்பயல்” என ஜி.நா பார்த்தார்.
 மனிதன் வனத்தில் வாழ்ந்த போது எந்த பிரச்சனையையும் ஒட்டுமொத்தமாய் அலசி தொலைநோக்கோடு புரிய அவனுக்கு நேரமிருந்திருக்காது. ஒரு புலியை பார்த்தால் மட்டுமல்ல புலியின் குரலை தொலைவில் கேட்டால் கூட அது புலிதானா என சிந்தித்து தாமதித்தால் அவன் உயிர் தப்ப மாட்டான். பாய்ந்து தப்பி விட வேண்டும். இந்த மனப்பான்மை தான் நவீன வாழ்க்கையிலும் நெருக்கடி சந்தர்பங்களில் நம்முள் செயல்படுகிறது. 1) ஒரு செயலில் இருக்கும் போது அந்த நேரத்தில் நமக்கு எது சாதகம் எனத் தான் மூளை யோசித்து அதன் படி ஒரு சித்திரத்தை அளிக்கும், முடிவுகள் எடுக்கும். 2) பொறுமையாக உட்கார்ந்து யோசிக்கையில் அறவுணர்வு விழிக்கும். இந்த இருவகை சிந்தனைகளும் இணையும் போது நாகரிக சிந்தனை தோன்றும். அதனால் தான் மனிதன் கீழ்மையும் நன்மையும் சேர்ந்தவனாக இருக்கிறான். அதனால் தான் எப்போதும் உடனடியாய் கீழ்மை வெல்கிறது. நம் உயிரியல் அமைப்பு அப்படி.
அற மனம் எப்போது கடந்த காலத்திலும் எதிர்காலத்திலுமே வாழ்கிறது. அதனால் தான் மிக நாகரிகமாய் உயர்ந்த சமூகத்தில் அறம் பற்றி நிறைய விவாதங்களும் கோட்பாடுகளும் உருவாகும். ஆனால் அதே வேளை அச்சமூகம் மிக அநாகரிகமாயும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். போர், மனித உரிமை மீறல், வர்க்க சுரண்டல், குற்றங்கள் என அநாகரிகமாய் இருப்பது தான் சமூகத்தை தழைக்கவும் நிலைக்கவும் வைக்கிறது. அற சமூகத்தையும் இது தான் வாழ வைக்கிறது. ஏனென்றால் இதை ஒரு கட்டுப்பாட்டில் சமநிலையில் வைக்க நாகரிக, அற சமூகமும் இன்னொரு பக்கம் தேவையாய் உள்ளது.
மனிதன் அறத்தின் பால் செயல்படுவதானால முதலில் அவன் செயல்படவே இயலாது. இந்த உளவியல் இல்லாமல் நம் சமூகமே இயங்க முடியாது.
கோலாப்பூர் பெண்களின் விசயத்தில் குற்றம் எந்தவித லட்சியவாத நியாயமும் அற்றது என்பது தான் வித்தியாசம். எந்த தேவையும் இல்லாமல் குழந்தைகளை ஏன் கொன்றார்கள் என நமக்கு புரியவில்லை. மற்றபடி இப்பெண்களின் அதே செயல்களை வேறு ரூபங்களில் வேறு நியாயங்களுடன் நம் சமூகம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு மனிதனை வதைக்கும் முன் கொல்லும் முன் அவனை மிக எளிதாக ஒரு குப்பை பொருளாக கற்பனை பண்ணும் மனம் இச்செயல்களின் பின் உள்ளது. ஒரு குற்றம் நிகழும் போது அறம் பிரத்யட்சமாகி நம்மை தடுக்கும் என இனியும் நாம் நம்பி இருக்கலாகாது.
நம் அனைவர் மனங்களிலும் ஒரு பிசகு உள்ளது. நாம் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். முக்கியமான கட்டங்களில் வாழ்க்கையை பார்க்கும் நம் பார்வை பழுதுபட்டதாய் உதிரியாக உள்ளது கால்வாசி உண்மையை கண்டு ஒட்டுமொத்தமாய் புரிந்து கொள்கிறோம். அதர்க்கமாய் செயல்படுகிறோம். அதனால் தான் வாழ்க்கையை புரட்டிப் போடுகிற முக்கிய முடிவுகளை (ஒரு உயிரை கொல்வது அல்லது காப்பாற்றுவது) எடுக்கும் சந்தர்பங்கள் நமக்கு வரக் கூடாதே என கடவுளை வேண்டுகிறோம். நம்மால் செய்ய முடிந்தது அது மட்டுமே.
நன்றி: உயிர்மை, செப்டம்பர் 2014