ஜென் பிரக்ஞை

எஸ்.ஆர்.எம் பல்கலையில் நடந்த பிரக்ஞை பற்றின கருத்தரங்கில் இன்று பேசினேன். அதன் எழுத்து வடிவம்.மேற்கத்திய உளவியலில் மனதை மூன்றாக பிரிக்கிறார்கள்
Conscious – போத மனம்
Subconscious - ஆழ்மனம்
Unconscious - நனவிலி
கீழைத்தேய மரபில் நமக்கு அப்படி ஒரு பிரிவு இல்லை. நாம் பொதுவாக பிரக்ஞையை உணர்தல் எனும் பொருளில் புரிந்து கொள்கிறோம். அதாவது ஒரு கூட்டத்தின் பகுதியாக, இயற்கையின் பகுதியாக உணர்தல்.
மேற்கத்திய மரபில் மனிதனை சமூகத்தின் ஒரு தனிக்கூறாக பிரித்து பார்க்கிறார்கள். அவனுக்கு ஒரு தனி அடையாளம் உண்டு. அவன் தனிமனிதன். அவன் தனியாக தன் பார்வையில் இருந்து சிந்திக்கிறான். சிந்தித்து உலகை தொகுத்துக் கொள்கிறான்.

கீழைத்தேய மரபில் இது போல் தொகுப்பதோ தனிமனித இருப்போ இல்லை. அங்கு மனிதன் தான் வாழும் சமூகத்தின், சடங்குகளிம், சூழலின், இயற்கையின், பருவ மாற்றங்களின் ஒரு பகுதியாக இருக்கிறான். மேற்கத்திய மனிதன் யோசித்து திட்டமிட்டு இயங்க கீழைத்தேய மனிதன் தன் உள்ளுணர்வு படி வாழ்க்கையை எதிர்கொள்கிறான். இந்த உள்ளுணர்வு செயல்பாடு தான் உயர்ந்த செயல்பாடு என்கிறது ஜென்.
ஜென்னை அறிய முடியாது. ஆனால் ஜென் குறித்த விழிப்புணர்வு கொள்ளலாம். ஆனால் விழிப்புணர்வு கொள்ளும் போது நாம் அதனுள் ஒரு பகுதியாக இருப்பதால் அதை தனித்து உணர்வதில்லை. நீரில் இருக்கும் மீன் எப்படி தான் நீரில் இருப்பதாய் நினைப்பதில்லையோ அது போல்.
ஜென்னை புரிந்து கொள்ள முதலில் நாம் அதை கருத்தாக்கமாக கருதக் கூடாது. அது ஒரு உணர்வு நிலை. ஒரு கவனம் கழன்ற பிரக்ஞை. ஒரு ஒட்டுமொத்தமான உணர்வு நிலை. இந்த வாழ்வின் நகர்வில் நாமும் இருக்கிறோம் எனும் உணர்வு. நான், எனது, பிறிது என பிரித்து நோக்காத மனநிலை. அதாவது ஒரு மலையை பார்த்ததும் அதுவும் நானும் ஒன்று என நினைக்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு மலையை பார்க்கிறீர்கள். உடனே ஆஹா மலை என புளகாங்கிதம் அடைய வேண்டியதில்லை. எதிரே ஒரு கல்லை பார்க்கிறீர்கள். அது போல ஒரு மலையையும் பார்க்கலாம். உற்று விழிப்போடு பார்க்கலாம். உலகில் எல்லாம் ஆச்சரியம் தாம், ஆச்சரியமற்ற சாதாரண பொருட்களும் கூட எனும் உணர்வு இதற்கு உதவும்.
ஒன்றை மிக சீரியசாக எடுத்துக் கொள்ளலாம். தர்க்கரீதியாய் அலசலாம். கவனமாய் திட்டமிடலாம். தவறில்லை. அதேவேளை அதை செய்யும் போது பொருட்படுத்தாமல் அலட்டாமல் ஒரு குழந்தையை அம்மாவின் முலையை பற்றி உறிஞ்சுவது போல் செய்தால் நாம் ஒரு முழுமை உணர்வை அடையலாம். இது தான் ஜென்.
கிறித்துவ சிந்தனை மனித மனதை சாத்தான் – கடவுள் என ரெண்டாக பிரிக்கிறது. ஒரு பக்கம் சாத்தான் மனிதனை பல இச்சைகள் மூலம் கீழ் நோக்கி சதா இழுக்கிறான். கடவுள் அவனை உன்னத உணர்வுகள் மூலம் மேலே எழ தூண்டுகிறார். மனிதன் இடையில் தவிக்கிறான். இதையே பின்னர் பிராயிட் போத மனம் – ஆழ்மனம் – நனவிலி மனம் என தொகுத்துக் கொள்கிறார். நனவிலியை அவர் சாத்தானாகவும் ஆழ்மனதை கடவுளாகவும் பார்க்கிறார்.
ஆனால் ஜென் தத்துவம் பிரக்ஞையை இப்படி மூளை சார்ந்ததாக, தொகுக்கக் கூடியதாக காண்பதில்லை. அதில் படிநிலை இல்லை. தொகுக்க முடியாததே பிரக்ஞையாக ஜென்னில் இருக்கிறது. புத்தர் ஞானமடைந்த கதையைப் பற்றி ஓஷோ கூறுவது இங்கு முக்கியமானது. அதாவது புத்தர் கடவுளை தனியான நம்மில் இருந்து மேலான சக்தியாக பார்க்கவில்லை. எதுவொன்று விடுதலையாக இருக்கிறதோ அதுவே கடவுள். புத்தர் சடங்கு சம்பிரதாயங்கள், நோன்புகளில் இருந்து தன்னை விடுவித்ததும் ஞானம் பெறுகிறார்; சும்மா அன்றன்றைக்காக காரியங்களில் ஆழமாகவும் அதேவேளை பற்றிக் கொள்லாமலும் இருக்க அறிகையில் ஞானம் பெறுகிறார். ஒரு கவித்துவமான ஜென் கதை உண்டு. ஒரு மடாலயத்துக்கு ஒரு பயணி வருகிறார். கதவை தட்டுகிறார். துறவி ஒருவர் திறக்கிறார். அவர் பயணியை உள்ளே அனுமதிக்கும் முன் அவர் ஞானம் பெற்றவரா என அறிய விரும்புகிறார். “நீ ஞானம் பெற்றவரா?” என கேட்கிறார். வந்தவர் தன் செருப்பை கழற்றி துறவியின் கன்னத்தில் அடிக்கிறார். துறவி உடனே புரிந்து கொண்டு அவரை உள்ளே அனுமதிக்கிறார். எந்த சங்கோஜமும் இன்றி முன் தீர்மானமும் இன்றி சட்டென செருப்பை கழற்றி அடிக்கிறாரே அங்கு ஜென் உள்ளது. அதில் கோபமற்ற வெறுப்பற்ற ஒரு அடி. அதனாலே துறவி அதனால் கோபமடையாமல் ஏற்கிறார்.
எதையும் வலுவாக பற்றாமல் இருந்தாலே மனிதன் ஆழமான பிரக்ஞையை அடைய முடிய முடியும் என புத்தர் அறிகிறார். அது தான் அவர் அடைந்த ஞானம். அதையே அவர் தாமரை இலையில் நீர்த்துளி போல் என்கிறார். தாமரையால் எப்போதும் நீரில் இருக்க முடிகிறது. ஏனெனில் நீர் அதில் ஒட்டிக் கொண்டு உருள்கிறது, ஊறி உள்ளே நுழைவதில்லை. அதனாலே தாமரை அழுகுவதில்லை. மனித மனமும் உணர்ச்சிகளோடு இருக்க வேண்டும். அதேவேளை சற்று விலகி இருக்க முடிய வேண்டும். அப்போது தான் உணர்ச்சியில் ஆழ்ந்து போக முடியும். ஒன்றை கவனமின்றி செய்வதும் மிகுந்த கவனத்துடன் செய்வதும் ஒன்று தான். எந்த வேலையிலும் உள்ளார்ந்து பயணிக்க அதை செய்கையில் நம் மனதை அதை தொடர அனுமதித்தால் போதும். குங் பூ பயிற்சி ஒரு நல்ல உதாரணம். ஓங்கி அடிக்க முதலில் கையை தளர்வாய் வைத்துக் கொள்ள வேண்டும். எதிரி மீது கோபம் கொள்ளக் கூடாது. அடிப்பதன் இறுதி நொடி வரை கை முறுக்கேறக் கூடாது. அப்போது தான் அபாரமான வலு வெளிப்படும். அதே போல் எதிரி அடிக்க வருகையில் அவனை பார்க்கக் கூடாது, உணர வேண்டும். அடியை வலுவாய் எதிர்க்க கூடாது. மென்மையாய் வாங்கி தட்டி விட வேண்டும். இந்த எதிரியின் அடியை ஒரு அனுபவமாக கற்பனை பண்ணுங்கள். உங்கள் குத்தும் இன்னொரு அனுபவம் தான். முழுமையாக எதிலும் வெளிப்பட அதில் முழுமையாக இருக்கக் கூடாது. இது இலக்கியம் எழுதும் போது, பரீட்சை எழுதும் போது, பேசும் போது எல்லாம் பயன்படும் உத்தி. பிரக்ஞையற்று இருங்கள். எப்போது தேவையோ அப்போது பிரக்ஞையில் நுழைந்தால் போதும்.
 புத்தர் ஒருமுறை ஒரு கிராமத்துக்கு சென்ற போது அங்குள்ள பிராமணர்கள் அவரை சூழ்ந்து கொண்டு வைதார்கள். புத்தர் அமைதியாக கேட்டுக் கொண்டு சொன்னார் “நீங்கள் திட்டிய எதையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு நீங்கள் இனிப்பு கொண்டு வந்து நான் ஏற்க வில்லை என்றால் திரும்ப நீங்களே பகிர்ந்து கொள்வீர்கள். இப்போது இந்த வசைகளை நீங்கள் யாருடன் பகிரப் போகிறீர்கள்?” எனக் கேட்டார். Awaken the Giant Within நூலில் ஆந்தனி ராபின்ஸ் இதையே சொல்கிறார். உங்கள் மேலாளர் உங்களைத் திட்டினால் நீங்கள் வருந்த வேண்டியதில்லை. அவர் குரலுக்கு பதில் மிக்கி மௌஸின் குரலை கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள் என்கிறார். பிரச்சனையை எதிர்கொள்வது இந்தளவுக்கு எளிது தான். இன்னொருவர் கோபத்தை ஏற்க வேண்டுமா வேண்டாமா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டாம். வேண்டாம் என நினைத்தால் நம் வாழ்வில் இருந்து பதற்றமும் துயரமும் இல்லாமல் ஆகும். நிதானம் வரும்.
புத்தருக்கு ஞானம் கிடைத்த பின் அவர் மனைவியை சந்திக்கிறார். மனைவி கேட்கிறார்: “இங்கு இந்த அரண்மனையில் இருந்திருந்தால் இதே ஞானம் கிடைத்திராதா?”
புத்தர் சொல்கிறார்: “நிச்சயம் கிடைத்திருக்கும்.” ஞானம் எங்கும் இருக்கிறது. அதை நாம் தேடாத போது அது நம்மை தேடி வருகிறது. தேடாமல் உலகை விழிப்பாய் கவனிப்பது தான் அசலான ஞானத் தேடல்”
 நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சரியங்கள் உள்ளன. பழகி விடுவதால் நாம் அவற்றை கவனிப்பதில்லை. விழிப்பாய் இருக்க முதலில் புதிய விசயங்களை நாடிச் செல்ல வேண்டும். புதிய நண்பர்கள், புதிய புத்தகங்கள், புதிய அறிவுத்துறைகள் என புதிய தளங்களை நாட வேண்டும். பழகின இடங்களில் இருந்து மாற வேண்டும். நீங்கள் ஒரு நல்ல ஓவியன் என்றால் ஓவியம் பற்றி மட்டுமே யோசிக்கக் கூடாது. முற்றிலும் மாறாக ஏதாவது ஒன்று – இலக்கியம், கட்டிடக் கலை, அரசியல், இசை, சினிமா – என ஆர்வத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது மனம் விழிப்பாகி புது கருத்துக்கள் தோன்றும். அதுவரை பழகாத எதுவொன்றை செய்தாலோ நமது புதிய திறமை ஒன்று தெரிய வரும். சச்சினுக்கு ஒருமுறை வலது கை காயம்பட்டது. அவர் ஓய்வு நேரத்தில் டேபிள் டென்னிஸ் ஆடுவார். காயம் காரணமாய் இடது கையில் ஆட ஆரம்பித்து கொஞ்ச நாளில் சிறந்த இடது கை ஆட்டக்காரர் ஆனார். முன்பு பௌத்த துறவிகள் ஒரு விதிமுறை பின்பற்றினார்கள். யார் வீட்டிலும் மூன்று நாட்களுக்கு மேல் தங்க மாட்டார்கள். ஏனென்றால் நான்காவது நாள் மனித மனம் எந்த ஒரு இடத்தின் மீது பற்றுதல் கொள்ளும். பற்றுதல் வந்தால் மனம் பழகி விடும். பிறகு மனம் குருடாகி விடும். அதனால் நகர்ந்து கொண்டே இருங்கள். புது புது தளங்களை நோக்கி செல்லுங்கள்.
உண்மையான பிரக்ஞை என்பது நாம் இந்த பிரபஞ்சம் எனும் பிரக்ஞையின் ஒரு சிறு பகுதி என உணர்வது. இந்த உலகில் நிழலும் எதனுடன் நம்மை பிரித்து பார்க்காமல் இருப்பது. சாலையில் சும்மா திரியும் ஒரு நாயும் நிறைய படித்து மேம்பட்ட நாமும் ஒரே செயலின் இரு பகுதிகள் என உணர்வது. எந்த ஒரு விசயத்தையும் சிறப்பாய் செய்வது, அதேவேளை அதையே பொருட்படுத்தாமல் இருப்பது. சேம்பியன்ஸ் டுரோபி இறுதி ஆட்டத்தில் தோனி இஷாந்துக்கு ஓவர் கொடுத்தது நல்ல உதாரணம். நமது செயல்கள் எதுவும் இந்த உலகை தீர்மானிப்பதில்லை. அது வென்றாலும் தோற்றாலும் நாம் பொறுப்பல்ல. தோனி அதைத் தான் செய்கிறார். அதனால் தான் மிகப்பெரிய பொறுப்பை, சவால்களை எளிதில் எதிர்கொள்கிறார். தோல்விக்கு பொறுப்பேற்பது தான் மனிதக் கவலைகளின் துவக்கம். வெற்றிக்கு பொறுப்பேற்பது மிகையான சுயபிம்பத்தை ஏற்படுத்தும். நாம் அந்த பிம்பங்களில் மாட்டிக் கொண்டு துயரப்படுவோம்.
உலகம் ஒரு பக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் நம் விருப்பப்படி வேலை செய்கிறோம். இலக்கை அடைய முயற்சிக்கிறோம். அது உலகின் போக்கிற்கு எதிராகவே இருக்கலாம். ஆனாலும் நாம் உலகின் போக்கின் ஒரு பகுதியாகவே இருக்கிறோம். நம் பாட்டுக்கு வேலை செய்து விட்டு உலகின் ஒழுக்குக்கு ஒப்புக் கொடுத்து விட வேண்டும். அது தான் ஜென் பிரக்ஞை. ஆற்றில் மீன் நீந்துவது பார்த்திருக்கிறீர்களா? சிலவேளை மீன் ஆற்றின் ஒழுக்கிற்கு எதிராக நீந்தி தன்னை தக்க வைக்கும். கொஞ்ச நேரத்தில் தன் திசையை மாற்றும். ஆனாலும் அது ஆற்றின் பகுதி தான். அதனால் ஆற்றின் திசையை மாற்ற முடியாது. திசையின் பகுதியாக இருக்க முடியும். எதிர்ப்பது மீனின் அடையாளத்தை உருவாக்கும். ஆனால் ஒழுக்கின் பகுதியாக இருப்பதனாலே மீனால் அங்கு இருக்க முடிகிறது.

இதை செய்ய மனதை காலியாக ஒரு டீ கோப்பையை போல் வைத்திருக்க வேண்டும். ஒரு ஜென் குருவை சீடன் நாடிப் போனான். ஞானம் வேண்டும் என்றான். குரு ஒரு டீ கோப்பையில் டீயை நிறைத்தார். தளும்பி வழியும் வரை ஊற்றினார். பிறகு சொன்னார் “இனி நாம் இந்த கோப்பையில் டீ ஊற்ற முடியாது. அது போல் காலியாகாத உன் மனதில் ஞானமும் தோன்றாது”. இன்றைய தகவல் தொழில்நுட்ப, ஊடக உலகில் நாம் மனதை காலியாக்கி, பல்வேறு தகவல்களை பரிசீலித்து ஆனால் பின்னர் மறந்து விடுவது முக்கியம். ஏனென்றால் மறந்தால் தான் புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும். நிறைய தெரிந்தவர்கள் குறைவாக கற்கிறார்கள். குறைவாக கற்கிறவர்கள் நிறைய தெரிந்து கொள்கிறார்கள்.  

Comments

ரமணா திருவண்ணாமலையை விட்டு எங்குமே சென்றதில்லை.