Tuesday, September 2, 2014

எனக்கு இன்னும் மனம் பேதலிக்கவில்லை


மூன்று வகையான வாழ்த்துக்கள் உள்ளன. எனக்கு யுவ புரஸ்கார் கிடைத்ததை ஒட்டி பேசிய ஆட்கள் மூலம் தெரிந்து கொண்டேன். ஒன்று என்னை வாசிக்கிறவர்களின் வாழ்த்துக்கள். நான் இதை மதிக்கிறேன். அவர்கள் என் குடும்பம் போல.
ரெண்டாவது என்னைத் தெரிந்த, ஆனால் என்னை வாசிக்காதவர்களின் வாழ்த்துக்கள். அவர்கள் நான் கபடிப் போட்டியில் தங்க பதக்கம் வென்றாலும் இதே போல் வாழ்த்துவார்கள். அவர்களின் அன்புக்காக நன்றி கூறி ஏற்றுக் கொண்டேன்.
 அடுத்து நான் யாரென்றோ என்ன எழுதுகிறேன் என்றோ தெரியாமல் பத்திரிகையில் என் படம் பார்த்து அழைத்து வாழ்த்துபவர்கள். இவர்களிடம் பேசத் தான் ரொம்ப சங்கடமாக இருந்தது. நான் முன்னர் ஒரு மலையாளப் படம் பார்த்தேன். குருவாயூர் கோயில் மண்டபத்தில் கூட்டமாக பல ஜோடிகளுக்கு திருமணம் நடக்கும். அதில் ஒரு அவசரத்தில் ஒரு ஜோடி மாறி விடும். நாயகனுக்கு அப்படி ஒரு அழகான பெண் மனைவியாவாள். அப்பெண் மிக கடுப்பாகி அவனுடன் பேசவோ வாழவோ மறுப்பாள். இந்த பெண்ணைப் போலத் தான் இந்த மூன்றாவது வகை வாழ்த்தாளர்கள்.

தினமலர் மதுரைப் பதிப்பில் என் பேட்டியுடன் போன் எண்ணையும் போட்டு விட்டார்கள். அதில் இருந்து மதுரையை ஒட்டிய பகுதிகளில் இருந்து பல குண்டக்கா மண்டக்கா வாழ்த்துக்கள். ஒருவர் என்னை வாழ்த்தி விட்டு அவருக்கு ஏதாவது காவலாளி பணி நான் வாங்கித் தர முடியுமா என்று கேட்டார். அவரது அம்மா இறந்து போய் விட்டதாகவும் அவரது குடும்பத்தினர் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருப்பதாகவும் கூறினார். நான் தெரிந்தால் சொல்கிறேன் என்றேன். ஒரு பெண் தன் பெயரை சொல்லி விட்டு என் பிறந்தநாளை கேட்கிறார். பிறந்தநாள் அன்று வாழ்த்தப் போகிறாராம். அவர் யாரென்று எனக்கோ நான் யாரென்று அவருக்கோ தெரியாது. அவர் ஏன் என்னை பிறந்தநாள் அன்று வாழ்த்த வேண்டும்? இன்னொருவர் அழைத்து “நான் கொடைக்கானலில் உள்ள என் கெஸ்ட் ஹவுசில் இருந்து பேசுகிறேன்” என ஆரம்பித்தார். இளைய தலைமுறையினர் பலரும் என்னைப் போல் சாதனை பண்ணி மேலே வர வேண்டும் என்றார். நான் அவரிடம் “சாதனை பண்ணாமல் சாதாரணமாய் வாழ்ந்தால் கூட நல்ல வாழ்க்கை தான்” என்றேன். அவருக்கு புரியவில்லை போல. எனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயார் என்றார். நான் ”உங்களைச் சுற்ற பார்த்தால் உதவி தேவையான நிறைய பேர் இருப்பார்கள். அவர்களுக்கு உதவுங்கள்” என்றேன். இன்று காலை இன்னொரு பெண் அழைத்தார். யாரோ சொல்லிக் கொடுத்த தயாரித்தது போல் வானொலியில் செய்தி வாசிப்பது போல் பேசினாள். எனக்கு விருது கிடைத்த செய்தி அறிந்து மகிழ்ந்ததாகவும் அதற்கு வாழ்த்துவதாகவும் சொன்னார். சரி. அவள் ஊனமுற்றவளாம். அவளைப் போன்றவர்களுக்கு ஒரு அமைப்பு திருமணம் செய்து வைக்கிறதாம். நான் அதற்கு சென்று வாழ்த்த வேண்டுமாம். பிறகு நான் பண உதவியும் செய்ய வேண்டுமாம். நான் கடந்த ஒரு வருடமாக வேலை செய்யவில்லை, அதனால் பணம் இல்லை என்றேன். அவ்வளவு தூரம் பயணிக்க முடியாது என்றேன். அப்பெண் கார் அனுப்புகிறேன் என்றாள். அப்புறம் கார் செலவையும் என்னை செலுத்த வைத்து விடுவார்கள் என உணர்ந்து என்னால் வர முடியாது என தெளிவுபடுத்தினேன். எனக்கு ரொம்ப எரிச்சலானது அப்பெண்ணை யாரோ சொல்லி பேச வைக்கிறார்கள் என்பது தான். ஏன் அப்பெண்ணை பேச வைக்கும் அந்த ஆணே பேசக் கூடாதா? பெண் பேசினால் நாங்கள் மயங்கி ஓடிப் சென்று விடுவோமா?
ஒரு பெண் அழைத்து உங்கள் விளம்பரம் பத்திரிகையில் பார்த்தேன் என்றாள். நான் எந்த விளம்பரமும் தரவில்லை என்றேன். அவள் மீண்டும் அழைத்து என்னைப் பற்றிய சேதி படித்ததாய் சொல்லி வாழ்த்தினாள். இது போல் செய்தி படித்து வாழ்த்துபவர்கள் ஒரு எழுத்தாளனை வாழ்த்தவில்லை. அவனைப் பற்றிய செய்தியை தான் வாழ்த்துகிறாள். தமிழகத்தில் இருந்து ஒரு பெண் ஹாக்கி போட்டியில் பதக்கம் வெல்கிறாள் என படத்துடன் சேதி வருகிறது என கொள்வோம். ஒரு ஆயிரம் பேர் அப்பெண்ணை அழைத்து வாழ்த்துவார்கள். ஆனால் அவர்கள் ஜென்மத்தில் ஹாக்கி பார்க்க மாட்டார்கள். அதன் பிறகு அப்பெண் என்ன விளையாடுகிறாள், அவள் கதி என்ன எனவும் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்கு அப்பெண்ணைப் பற்றி அக்கறை இருக்காது. பதக்கம் மீது தான் அக்கறை. பதக்கம் என்றால் வெற்றி. வெற்றி என்றால் மீடியா உருவாக்கும் ஒரு பிம்பம். அதை வாழ்த்த வேண்டும்.
என் ஊரில் இருந்து தெரிந்தவர் அழைத்து அங்கு நடக்கும் விழா ஒன்றில் என்னை கௌரவிக்க போவதாகவும் அதற்கு நான் அடுத்த வாரம் ஊருக்கு வர வேண்டும் என்றும் கூறினார். நான் மாத இறுதியில் ஊருக்கு போக ஏற்பாடு பண்ணி விட்டேன். கலை இலக்கிய பெருமன்றம் எனக்கு எழுத்தை இலக்கியத்தை பயிற்றுவித்த அமைப்பு. அவர்கள் என் குடும்பம். மன்றம் ஒரு நிகழ்ச்சி என்னை கௌரவிக்க நடத்துகிறது. அவர்கள் மீதுள்ள மரியாதையால் போகிறேன். ஆனால் ஊர்க்காரர்களுக்கும் எழுத்தாளனான எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மேலும் என்னால் இரண்டு முறை ஊருக்கு பயணிக்க முடியாது என்றேன். போக வரவே 28 மணிநேரம் ஆகும். அவர் நிகழ்ச்சியில் மந்திரி. எம்.எல்.ஏ எல்லாம் இருப்பார்கள் என திரும்ப திரும்ப கூறினார். இருக்கட்டுமே. முடியாது என்று விட்டேன். யாராவது ஒருவருக்கு விருது கிடைத்தால் அப்போது கைகுலுக்க சால்வை போர்த்த வரும் இவர்கள் இவ்வளவு காலமும் எங்கே போயிருந்தார்கள்? இப்போதும் அவர்கள் கௌரவப்படுத்த விரும்புவதை ஒரு விருதைத் தான். என்னை அல்ல.
பிறருக்கு எப்படியோ தெரியவில்லை. எனக்கு இதெல்லாம் அபத்தமாக தெரிகிறது. இந்த மாநிலமும், அதன் ஊடகங்களும் திடீரென ஒருநாள் இலக்கியம் மீது மதிப்பும் ஆவேசமான ஈடுபாடும் கொண்டு விட்டதாய் நான் நம்பவில்லை. என்னதான் நடந்தாலும் நான் உயிர்மையிலும் இன்னும் சில சிறுபத்திரிகைகளிலும் தான் எழுதப் போகிறேன். வேறெந்த பத்திரிகையிலும் என்னை வாசல் தாண்டி கூட உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். எப்போதும் என்னை வாசிக்கிறவர்கள் தான் இனியும் வாசிக்க போகிறார்கள். அந்திமழை பத்திரிகை ஆரம்பித்த புதிதில் நான் அதில் எழுதினேன். நன்கு கவனிக்கப்பட்ட கட்டுரை அது. பிறகு அதில் எழுத விரும்பிய போதெல்லாம் கௌரவமாக மறுத்து விடுவார்கள். விருதை ஒட்டி என்னிடம் பேட்டி கேட்டார்கள். அதில் ஒரு கேள்வி “எழுத்தாளனாய் உங்களுக்கு படைப்புகளை பிரசுரிப்பது இப்போது எளிதாக இருக்கிறதா?”. நான் சொன்னேன் “உங்கள் பத்திரிகையிலேயே என்னை இத்தனைக் காலமாய் பிரசுரிக்க மறுத்தீர்களே. பிறகு வேறு பத்திரிகைகள் எப்படி இருக்கும்?”. அதன் பின் பேட்டி எடுத்த பெண் என் பேட்டியில் நடை சுவாரஸ்யமாக இருப்பதாகவும், அவர்களின் இணையத்தில் நான் எழுதலாம் என்றும் சொன்னார்.
எப்போதும் என்னுடன் உள்ள நண்பர்கள் தான் இனியும் இருக்க போகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் என்னிடம் பேச விரும்பின அத்தனை புது ஆட்களிடமும் பேசியிருக்கிறேன். தவறின அழைப்புகளின் எண்களுக்கு திரும்ப அழைத்திருக்கிறேன். குறைந்தபட்சமாய் மனிதர்களுக்கு கொடுக்கிற மரியாதைக்காகத் தான். ஆனால் இவர்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என நன்றாக அறிவேன்.
விருது கிடைத்ததில் இருந்து நீ ஏன் ஜாலியாக இல்லை என மனைவி கேட்கிறாள். சில குழந்தைகளை பெற்றோர்கள் கடற்கரை, சந்தை என அழைத்து போவார்கள். கிளம்பின கொஞ்ச நேரத்தில் அது வண்டியில் அம்மா மடியில் இருந்தே தூங்கி விடும். களைப்பில் அழத் தொடங்கும். அந்த நிலை தான் எனக்கும். எனக்கு என ஒரு சின்ன உலகம் உள்ளது. அதற்குள் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அந்த உலகம் என்றும் எனக்கும் உண்மையானது. ஆனால் மீடியா உருவாக்கும் போலி வெளிச்சம் என்னை களைப்பூட்டுகிறது.
ஊடகங்களுடன் இன்று ஒரு எழுத்தாளன் நல்லுறவை பேண வேண்டும். நானும் பேண முயல்கிறேன். ஆனால் ஊடகம் ஒரு பொறி. அதில் மாட்டி விடக் கூடாது என தெளிவாக இருக்கிறேன். என் எழுத்தாள நண்பர் ஒருவர் ஒரு படத்தில் நடித்தார். அதன் மூலம் கோடிக்கணக்கான பார்வையாளர்களின் கவனத்தில் விழுந்தார். அடுத்து அவர் ஒரு மாதமாக தொடர்ந்து தன் சினிமா பற்றியே பேசிக் கொண்டிருந்தார். அடுத்து பல படங்களில் நடிக்க போவதாய் கூறினார். சினிமாவுக்கு வசனம் எழுதிக் கொண்டிருப்பதாய் கூறினார். ஆனால் அவரது பிரதான உண்மையான அடையாளம் எழுத்து. அதை விட்டு விட்டார். சமீபமாக ஒரு கல்லூரிக்கு சென்றிருந்தேன். அங்கே காண்டீனில் ஒருவர் வித்தியாசமான ஆடை மற்றும் தாடி மீசையுடன் தோன்றினார். பொதுவாக சினிமாவுக்கு நடிக்க போகிறவர்கள் அது போல் தோற்றத்தை ஏதோ “நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது” என்கிற மாதிரி மாற்றிக் கொள்வார்கள். அவர் இறுக்கமாக ஏதோ போட்டோ ஷூட்டுக்கு தயாராவதை போல் தோன்றினார். தோசையை கூட ஒரு மார்க்கமாய் தான் பிய்த்தார். அவர் “சதுரங்க குதிரை” படத்தில் சிறுவேடத்தில் நடித்துள்ளதாய் நண்பர் கூறினார். நான் அப்படம் பார்க்கவில்லை என்றதும் “நடிகர்” ஏமாற்றமானார். கல்லூரிக்குள் சதா தன்னை பலரும் வந்து கைகுலுக்கி பட்த்தை பற்றி வாழ்த்துவதாய் கூறினார். ஆனால் நாங்கள் அங்கிருந்த வேளையில் அவரை யாரும் கண்டுகொண்டதாய் தெரியவில்லை. ஆனால் அவர் அப்படி நம்பினார். ஏதோ முறுக்கி விட்டது போல் தோன்றினார். விட்டால் துள்ளி குதித்து விடுவார் போல. எனக்கு பரிதாபமாக இருந்தது.
கடற்கரையில் சில பிரபலங்கள் நடிகர்கள் நடைபயிற்சி பண்ணுவதை பார்த்திருக்கிறேன். யாரும் அவர்களை தொந்தரவு பண்ண மாட்டார்கள். ஆனால் அவர்கள் ஏதோ திருடன் போல் முழியை வைத்து இறுக்கமாக இருப்பார்கள். என் முனைவர் பட்ட நெறியாளர் தான் சமீபமாய் ஒரு மேம்பாலம் அருகே நடிகர் விவேக் காரை விட்டு வெளியேறுவதை பார்த்ததாய் சொன்னார். விவேக் ஏதோ தன்னை உளவுப்பிரிவு போலீஸ் கண்காணிக்கும் தோரணையில் இருந்தாராம். ஆனால் ரோட்டில் போகிற யாரும் அவரை பொருட்படுத்தவில்லை. நெறியாளர் முன்னர் மேன்சனில் தங்கி இருந்த காலத்தில் விவேக் பிரபலமாகவில்லை. அவர் தன்னுடன் மெஸ்ஸில் சாப்பிட்டுள்ளதாகவும் அப்போது நார்மலாக இருந்ததாகவும் கூறினார். புகழடைந்தால் தம்மால் எங்கும் சாதாரணமாய் போக முடியாது, மக்கள் மொய்க்கிறார்கள் என நடிகர்கள் அடிக்கடி கூறுவார்கள். பிரபலத்தின் விலை என்பார்கள் ஆனால் ரஜினி போல் மிகச் சில நடிகர்களுக்கே அது பொருந்தும். வேறு பல “பிரபலங்கள்” தங்களுக்குள் அப்படி நினைத்துக் கொண்டு அவஸ்தைப்படுகிறார்கள்.
உண்மையில் சினிமா நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் பரிதாபமானவர்கள். மீடியா அவர்களை வைத்து ஒரு பெரிய நீர்க்குமிழியை உருவாக்குகிறது. பிறகு பிரபலமும் அவரது ரசிகர்களும் பொதுமக்களுமாய் அதை வைத்து புட்பால் ஆடுகிறார்கள். உடையும் வரை ஆடுவார்கள்.
பிரச்சனை உள்ளே இருக்கிறது. ஒரேநாளில் நாம் வேறு யாரோ ஆகி விட்டதாய் நினைப்பதில் இருக்கிறது. நம்முடன் நிறைய பேர்கள் இருப்பதாய் நினைப்பதில் இருக்கிறது. நாம் அப்படியே அதே இடத்தில் தான் இருக்கிறோம். மீடியா ஒரு கற்பனையை உருவாக்கும். அதை நம்பினால் அது மெல்ல மெல்ல நம்மை அரித்து கொன்று விடும். பிறகு நாம் நம்மைப் பற்றின வாழ்த்துக்களுக்காக, பேஸ்புக் லைக்குகளுக்காக, தொலைபேசி அழைப்புகளுக்காக, பத்திரிகை பேட்டி, படங்களுக்காக ஏங்க ஆரம்பிப்போம்.
இந்த ஏக்கம் ஒரு விதத்தில் நாம் நம்மை விரும்பவில்லை எனக் காட்டுகிறது. யாருமே வாழ்த்தாத லைக் செய்யாத கொண்டாடாத ஒரு சுயம் நமக்குள் உள்ளது. அதை வெறுக்கிறவர்கள் தான் வெளியே உருவாகும் பிம்பத்தை வழிபடுவார்கள். ஆனால் நான் என்னை வெறுக்கவில்லை.
எனக்கு கிடைத்ததை விட ஆயிரம் மடங்கு வெளிச்சம் ஒரு நடிகனுக்கோ கோடி மடங்கு வெளிச்சம் ஒரு கிரிக்கெட் வீரனுக்கே கிடைக்கிறது. இது கூட்ட நெரிசலில் விழுந்து சிக்கி மிதிபட்டு சாவதற்கு சமம். இது போன்ற பிரபலங்களை நினைத்தால் எனக்கு பரிதாபமாக உள்ளது. அவர்களுக்கு நிச்சயம் உளவியல் சிக்கல்கள் வரும். மிகுந்த அதிர்ஷ்டமிருந்தால் தப்பிக்கலாம். அதற்கு இந்த வெளிச்சம் வெளியே நம் பிம்பத்தின் மீது விழுகிறது நம் மீது அல்ல என புரிய வேண்டும். ஆனால் மீடியா புயல் போல் அடிக்கையில் அந்த நிதானம் ஒருவருக்கு வாய்க்குமா என்பது சந்தேகமே.

சில நண்பர்கள் தாமதமாக அழைத்தார்கள். “நீ இந்நேரம் உதவியாளன் வைத்திருப்பாய். போன் செய்தால் அவர் எடுத்து சார் ஒய்வாக இருக்கிறார் என சொல்லுவார் என நினைத்தேன். பரவாயில்லை நீயே போன் எடுக்கிறாயே” என்றார்கள் நக்கலாக. நான் சொன்னேன் “ரொம்ப நாளாகவே எனக்கு நான் தான் உதவியாளன்”. எனக்கு மனம் பேதலிக்கவில்லை நண்பர்களே. எல்லா புலிகளும் இலைதழைகள் இட்டு மூடப்பட்ட கூண்டுக்குள் போய் மாட்டாது.

6 comments:

Umashankar M said...

”ஒரேநாளில் நாம் வேறு யாரோ ஆகி விட்டதாய் நினைப்பதில் இருக்கிறது. நாம் அப்படியே அதே இடத்தில் தான் இருக்கிறோம். மீடியா ஒரு கற்பனையை உருவாக்கும். அதை நம்பினால் அது மெல்ல மெல்ல நம்மை அரித்து கொன்று விடும்.
யாருமே வாழ்த்தாத லைக் செய்யாத கொண்டாடாத ஒரு சுயம் நமக்குள் உள்ளது. அதை வெறுக்கிறவர்கள் தான் வெளியே உருவாகும் பிம்பத்தை வழிபடுவார்கள்.”
உண்மையான வார்த்தைகள். நல்ல பதிவு.

Manoj said...

நீங்கள் பிரபலங்களை பற்றி சொல்லுகிறீர்கள் இப்பொழுது சில நண்பர்கள் தங்களை வாங்கும் சம்பளத்தை வைத்து உயர்தவர்கள் என நினைத்து நம்மிடம் இருந்து விலகி செல்கிறார்கள். கேட்டால் தனது வாழ்கை தரம் உயர்ந்துவிட்டது என சொல்கிறார்கள்

டேய் நீயும் நானும் ரோட்டு கடையில் இட்லி சாபிட்டது நினைவில் இருந்து போய்விட்டது. நான் இன்னும் அதே கடையில் இட்லி சாப்பிடுகிறேன் அன்று அமிர்தமாக இருந்த விஷயம் அவமானமாக மாறியது இன்று.

நாம் நாமாக இருந்தால் போதும் மகிழ்ச்சி என்றும் நம்முடன்

ஜீயெஸ்கே said...

வாழ்த்துக்கள் !

வசந்தன் வசந்தன் said...

அருமை அபிலாஷ்.. //“ரொம்ப நாளாகவே எனக்கு நான் தான் உதவியாளன்”. எல்லா புலிகளும் இலைதழைகள் இட்டு மூடப்பட்ட கூண்டுக்குள் போய் மாட்டாது.//

புகழ்ச்சியால் உவகை அடைந்தவர்கள் அந்த மதமதப்பிலே வாழத்தலைப்பட்டு அடையாளத்தை இழந்து விடுவார்கள்..

கார், பங்களா, உதவியாளர்கள் இத்யாதிகள் ஒட்டிக்கொள்ளும்!! இதை தான் எம் கிராமங்களில் சொலவடையாக சொல்வார்கள்.. "குடிக்கறது கஞ்சினாலும், கொப்பளிக்க பன்னீரா" "சந்தனம் மிஞ்சினால் குண்டில பூசுவான்களாம்"

தன்னிலை மாறாதவனே தழைத்தோங்க முடியும்!!

Sahaya Antony said...

ஒரு நல்ல அருமையான பதிவு அபிலாஷ் ... இது கணினி துறையில் அதிகமாக இருக்கிறது... நண்பர்கள் பலர் தங்கள் அலுவலகம் மூலமாக வெளிநாட்டிற்கு சென்று வந்த உடன் உயர்தவர்கள் என நினைத்து நம்மிடம் இருந்து விலகி செல்கிறார்கள்

poornam said...

எனது ப்ரவுஸரில் புக்மார்க் சரியாக வேலை செய்யாததால் உங்கள் ஊட்டிப்பயணம் பற்றிய கட்டுரைக்குப்பின் எதுவுமே அப்டேட் ஆகவில்லை. அதை நேற்றுதான் கண்டுபிடித்தேன். இன்று தங்கள் தளத்தைப் புதிதாக ஒரு முறை புக்மார்க் செய்து சமீபத்திய பதிவுகளைப் படிக்கத் துவங்கியபின்தான் தங்களுக்கு விருது கிடைத்த விஷயமே தெரிந்தது. தாமதமான வாழ்த்துகள். உங்களது நடையின் விசிறி நான்.

தமிழை வெகு லாகவமாகக் கையாள்கிற வெகு சிலரில் நீங்கள் ஒருவர். யுவ புரஸ்கார் ஆரம்பம்தான். அங்கீகாரங்கள் தொடரட்டும். மனமார்ந்த வாழ்த்துகள்.