Wednesday, September 17, 2014

கேணி கூட்டம்: ஒரு கேள்வியும் பதிலும்

நான் கேணி கூட்டத்தில் போன ஞாயிறு பேசினதை ஒட்டி பிரேம் என்பவர் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். இது முக்கியமான விவாதமாக படுவதால் அவரது அனுமதி பெற்று என் பதிலையும் சேர்த்து பிரசுரிக்கிறேன்.

வணக்கம் அபிலாஷ்,

நேற்று நடைபெற்ற கேணி கூட்டத்தில் நானும் ஒரு பார்வையாளனாக இருந்தேன். Extemporic ஆக இருந்தாலும் அது ஒரு சிறந்த உரையாகவே இருந்தது. ஆனால் கருத்தின் பின்புலத்தில் எனக்கு சில முரண்பாடுகள் உள்ளன.


எழுத்தாளனையும் அவனின் அரசியலையும், மறைந்த சிந்தனை புலத்தையும் (Hidden agenda) வேறு படுத்தி பார்க்காமல், எழுத்தை எப்படி அணுகவது? ஜோ டி க்ருஷ், வலது சாரியா அல்லது இடது சாரியா என்பதை அறிந்து கொள்வதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. தனிப்பட்ட மனிதராக அவர் மோடியை ஆதரிக்கலாம். நான் மோடி எதிர்பாளனாக இருக்க்கலாம். அனால் நான் அவருடைய படைப்பில் மதம் குறித்த அரசியலையும், வரலாறு குறித்த நோக்கையும் கொண்டு நான் நிராகரிக்க வேண்டி உள்ளது. உங்கள் கூற்றின் படி, நான் வெறும் மொழி நடைக்காகவோ, கட்டமைபிற்க்காகவோ நான் அவரின் படைப்பை தொடர வேண்டுமா? தனி மனிதனும் படைப்பும் வேறு ஆனால் அந்த தனி மனிதனின் அரசியலும் அவனின் படைப்பு கூறும் பொருளும் ஒன்றல்லவா? 

ஒரு எழுத்தாளனின் நிலைபாடு மாறலாம் அனால் அடிப்படை அறம் மாறலாமா? அவ்வாறு மாறும் எழுத்தாளனின் படைப்பை வாசகன் நிராகரிக்கவில்லை என்றால் எழுத்தாளன் எல்லை எது?

இதை நான் திரைப்படத்திற்கும் பொருத்தி பார்க்கிறேன். தனி மனித ஒழுக்கத்தை மீறி, முன் வைக்கப்படும் சிந்தனைக்கும் அரசியலுக்கும் மட்டுமே கதாநாயகன் ஏற்க படுகிறான். பெண் வெறுப்பு, கவலை அற்ற தன்மை, sense of laziness rendering, கொண்ட கதாநாயகனே அடித்தட்டு மக்களை சேர்கிறான். அங்கே அவனை நீக்கி யாரும் படைப்பை பார்ப்பதில்லை அல்லவா?

Thanks,
Prem

அன்புள்ள பிரேம்
நான் மூன்றாவதாக ஒன்றையும் அங்கு கூற இருந்தேன். ஆனால் அந்த சூழலில் ஏனோ சொல்ல தோன்றவில்லை. எழுத்தாளன் எதற்கும் பொறுப்பாக வேண்டியதில்லை என்பதே என் சாரம். அதேவேளை அவனுக்கு சில நம்பிக்கைகளும் லட்சியங்களும் வேண்டும். அவற்றை அவன் ரொம்ப சீரியஸாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு கத்தியில் உறையில் இருந்து வெளிப்பட்டு மீண்டும் உறைக்கு திரும்புவது போல் இருக்க வேண்டும்.

எழுத்தாளனுக்கு அரசியல் வேண்டும் எனக் கூற மாட்டேன். ஏனென்றால் அது அவனை குறுக்கி விடும். ஆனால் அரசியலுடன் உரையாடுபவனாக இருக்க வேண்டும். நமக்கான அரசியல் என ஒன்றை பற்றிக் கொண்டிருக்க கூடாது. உதாரணமாக இரா.நடராஜன இதே கூட்டத்தில் பேசும் போது வகுப்பறை ஒழுக்கத்தின் ஒடுக்குமுறையை கண்டித்தார். ஆனால் அவர் ஒழுக்கவாதத்துக்கு எதிரானவரா? அவரே இன்னொரு இடத்தில் சினிமாவும், டி.வியும் பார்த்து குழந்தைகள் கெட்டுப் போவதாக கூறுகிறார்? பெற்றோர் பொய் சொன்னால் குழந்தையும் பொய் சொல்லும் என்கிறார். அப்படி என்றால் குழந்தைகளை ஆசிரமங்களில் வளர்க்க வேண்டுமா?  இப்படியான முரண்பாடு எழுவதற்கு காரணம் சிந்தனை தெளிவின்றி அவர் ஏதோ ஒரு அரசியலை இறுக்க பற்றுவது தான்.
மேலும் நடராஜன் சொல்வது உளவியல் ரீதியாய் சரியும் அல்ல. மோசமான பெற்றோருக்கு மோசமான பிள்ளைகள் அமையும் என்பது ஒரு பொதுப்புத்தி மட்டுமே.
உதாரணமாய், என் அப்பா தினமும் மூன்று வேளை குடிப்பார். வாய் திறந்தால் கெட்டவார்த்தை தான். அம்மாவை அடிப்பார். ஆனால் நான் தினமும் குடிப்பதோ, கெட்டவார்த்தை பேசுவதோ மனைவியை அடிப்பதோ இல்லை. அதேவேளை மிக நல்ல பெற்றோர்களின் மகன்கள் இதையெல்லாம் (குடிப்பது அடிப்பது) செய்வதையும் பார்க்கிறேன். இதை எப்படி புரிந்து கொள்வீர்கள். டி.வி பத்திரிகை இல்லாத சூழலில் வளரும் ஒரு குழந்தையின் மனதில் வளர்ந்ததும் வக்கிரமே இராதா?

 எதன் அரசியலையும் முழுக்க புரிந்து கொள்ள அதில் இணையாது இருக்க வேண்டும். தள்ளி நின்று பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் இரா. நடராஜன் போல் ஒழுக்கவாதத்துக்கு எதிராக பேசிக் கொண்டே அதற்கு துணை போகவும் நேரிடும்.

நீங்கள் கூறும் அடிப்படை அறம் எழுத்தாளனுக்கு வேண்டும் தான். ஆனால் அவன் அதை இறுக்கமாக பற்றிக் கொள்ள கூடாது. அதை பயன்படுத்தி விட்டு விலக்கி வைத்து பரிசீலிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

சினிமா வெகுமக்கள் கலை. மக்களின் செண்டிமன்டுகள் வழியாக தான் இயங்கும். அங்கு ஒரு தெளிவான அறத்தை எதிர்பார்க்க முடியாது. சினிமா மக்களுக்கு தம்மை புரிந்து கொள்வதற்கான கலை அல்ல. மக்களை ஆய்வு செய்யும் ஒருவனுக்கான ஒரு கருவி. பிராய்ட் கனவுகளை ஆய்வு செய்வதது போல் நாம் சினிமாவை ஆய்வு செய்யலாம்.


அன்புடன்
ஆர்.அபிலாஷ்


No comments: