நகுலன்: ஒரு ஆளுமை, பல பார்வைகள் - ஆர்.அபிலாஷ்


இன்மை.காமில் நகுலன் சிறப்பிதழுக்காக அவரைப் பற்றி எழுத்தாளர்களிடம் பேட்டி எடுத்த போது இவ்வளவு வேறுபட்ட கருத்துக்கள் தமிழில் வேறெந்த கவிஞனைப் பற்றியும் எழுமா என வியப்பேற்பட்டது. சில எழுத்தாளர்களை அவர்களின் பின்புலம், சிந்தனைப்பள்ளி, அரசியல் சார்ந்து வெறுக்கலாம். படிக்கலாமலேயே நிராகரிக்கலாம். கடுமையாக திட்டலாம். அது போல் கொண்டாடலாம். ஆனால் வெவ்வேறு விதமாய் ஒருவரது கவிதைகளை வாசகன் வாசித்து அர்த்தப்படுத்துவது, அதன்வழி பல முரண்பட்ட கருத்துநிலைகளை அடைவது என்பது வேறு. நகுலனுக்கு இது நிகழ்கிறது.


குறியீட்டு கவிஞனான பிரமிளைக் கூட கிட்டத்தட்ட ஒரே அர்த்தநிலையில் தான் வாசிக்கிறோம். ஆனால் நகுலன் எழுதுகிற “ராமசந்திரனா என்று கேட்டேன்” கவிதை என் நண்பர் ஒருவருக்கு அடையாளத்தின் அபத்தம் பற்றின பிரதியாக தோன்றுகிறது. எனக்கு இது பல தரப்பட்ட சுயங்கள் தனக்குள்ளதாய் உணர்கிற ஒருவன் எதுவுமே தான் இல்லையோ, வெறும் பிம்பங்களோ என உணரும் பரிதவிப்பை பற்றிய கவிதையாக தோன்றுகிறது. இரண்டுமே சரிதான். இன்னும் பத்து பேரும் பத்து விதமாய் முற்றிலும் மாறுபட்டு தோன்றலாம். ஒருவருக்கு இது வெறும் திருகின வாக்கியங்கள், கவிதை அல்ல என தோன்றலாம். அதுவும் நியாயம் தான். இதற்கு இரு காரணங்கள்.

நகுலன் தமிழில் ஒரு தனி தத்துவத்தை உருவாக்குகிறார். நீட்சேயின் சிந்தனை, தர்க்க அறிவு, தொலைநோக்கு அவருக்கு இல்லையென்றாலும் கிட்டத்தட்ட நகுலன் அவரை மாதிரி தான். அவரைப் போன்று முன்போ பின்போ இன்னொருவர் இல்லை. அவரது அடிப்படை வினா “நான்” என்பது என்ன என்பது. நான் என்றால் தனி அடையாளம் என்று ஒரு புறமும், அது ஆன்மாவின் மீதுள்ள சட்டை என வேதாந்திகள் இன்னொரு புறமும் கூறுவார்கள். ஆனால் நகுலன் “நான்” என்பது பொய்த் தோற்றம் என்பது மட்டுமே நமது பிரச்சனை அல்ல என்கிறார். “நீ”, “நாம்”, “அவர்கள்” “அது” எல்லாமே “நானின்” பல சொரூபங்கள் என்கிறார். இது கூட மதங்களும், மேற்கத்திய, கீழைத்தேய தத்துவங்களூம் பேசின கருத்து தான். “நான் யோசிக்கிறதனால் தான் நானே இருக்கிறேன்” எனும் டெகார்டெயின் பிரபல வாக்கியம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நகுலன் அடுத்த படி போய் இவை – அதாவது நான், நீ, நாம், அவர்கள், அவன், அவள், அது, நாற்காலி, சுசீலா – எதுவுமே பொய்யில்லை என்கிறார். எல்லாமே ஒரு ஆளின் வெவ்வேறு சுயங்கள்.
இப்படி யோசிக்கிற நகுலனுக்கு அடிப்படையாய் தான் யார் என்கிற கேள்வியும் இல்லை. அதற்காய் பற்றிக் கொள்ள கொம்பாய் அவர் கடவுளை நாடுவதும் இல்லை. “இதுவும் இல்லை அதுவும் இல்லை” என சுயத்தை ஒவ்வொரு சட்டையாய் கழற்றி போட்டுக் கொண்டே போகிறார். இந்த கழற்றலின் சுதந்திரம் தான் வாழ்க்கையின் பொருளாக, ஒரு விடுதலையாக அவரிடம் இருக்கிறது.
நகுலன் எழுதிய பல சிறப்பான வரிகள் தமிழின் தனி கண்டுபிடிப்புகள். “மனம் ஊர்ந்து போகிறது, பார்க்க பயமாக உள்ளது” என்பது அதில் ஒன்று. மனம் ஊர்ந்து போவதை பார்ப்பது ஒரு ஆள். ஊர்கிற மனமும் அதே ஆள். பார்க்கையில் இது பயமான ஒன்று என நினைப்பது மூன்றாவது ஆள். இந்த வெளியில் இருக்கும் மூன்றாவது ஆளும் நகுலனே. உற்று தன் மனதை கவனித்தவர்களுக்கே மனதின் இந்த நுட்ப நடனம், தோலுப்புகள் புரியும். நகுலனிடம் அந்த அவதானிப்பு இருந்துள்ளது.

நகுலனிடம் உள்ளது ஒரு மையமற்ற சுயம். இது இன்றைய பின் – அமைப்பியல், பின்நவீனத்துவ காலத்தில் நமக்கு மிகவும் நெருக்கமாய் படுகிறது. இன்று பல்வேறு ஊடக பிம்பங்கள், அதிகார சக்திகள் நம்மை சூழ்கின்றன. நம் குரலும் பார்வையும் தொடர்ந்து அமுக்கப்படுகின்றன. இன்று நாம் நம்மை தனித்து வலியுறுத்தி ஒலிக்க வைக்க முடியாது. நான் இப்படியானவன் என கூறும் நம்பிக்கையை இழந்து விட்டோம். எந்த பிடிப்பும் அற்று வாழ்கிறோம். அதேவேளை நம்மை ஒரு அமைப்போ ஊடகமோ பக்கத்தில் உள்ள இன்னொரு ஆளோ பயன்படுத்திக் கொள்வாரோ என்கிற பயம் இன்று ஆழமாய் வேரூன்றி இருக்கிறது. அதனால் ஒலிக்கும் பல்வேறு குரல்களில் ஒன்றாய் நம்மையும் மாற்றிக் கொள்கிறோம். மீடியாவில் ஆவேசமாய் பங்கேற்கிறோம். பிறகு நம் குரல் கூச்சலில் மறைந்து போக இன்னொருவரின் குரலை மிமிக்றி பண்ணுகிறோம். இதை அடுத்து இன்னொருவரின் குரலை போல செய்கிறோம். இதற்கு முடிவில்லை. இப்படி பண்ணி பண்ணி நாம் காணாமல் போகிறோம். இதை எழுத்தில், நடிப்பில், படைப்பாக்கத்தில், மீடியாவில் எங்கும் பார்க்கிறோம். ஆனால் இப்படி போல செய்து காணாமல் போவதை விட தப்பிக்க நமக்கு வேறு வழியில்லை. இதையே தான் நகுலனும் இருப்பின் நெருக்கடியை கடக்க தத்துவார்த்தமாய் கவிதைகளில் செய்கிறார். நமக்கு நகுலன் நெருக்கமாய் இருப்பதற்கு இது ஒரு பிரதான காரணம். அவரும் நம்மைப் போல் நொடிக்கொரு சட்டை உரிக்கும் ஒரு பாம்பு.

நகுலனின் படைப்பு மொழி, பாணி முற்றிலும் புதிது. அதற்கு சித்தர் மரபின் தன்மை உள்ளதாய் சுகுமாரனும் யவனிகாவும் பேட்டியில் கூறி இருக்கிறார்கள். ஆனால் நவீன கவிதையில் அவரைப் போல் இன்னொருவரை நான் ஆங்கிலத்திலோ தமிழிலோ படித்ததில்லை. ஆனால் சு.ரா, பிரமிள் போல் சிலரை காட்ட முடியும். மனுஷ்யபுத்திரனைப் போல் ஆங்கில மெட்டாபிசிக்கல் கவிஞர்களும், சுகுமாரன், சில மலையாளக் கவிஞர்கள், உலகக்கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் நகுலன் ஒரு சுயம்பு. அதனாலே அவர் தனதான தடத்தை தோற்றுவிக்கையில் நிறைய சறுக்கி இருக்கிறார். அவரது தொகுப்பில் பெரும்பாலானவை அப்படி சறுக்கி விழுந்த கவிதைகளே. சிலதோ அழகான கவிதைக்கான சில உதிரி வரிகளாக இருக்கும். ஆனால் அது ஒரு சுயம்பு கவிஞனால் தவிர்க்க முடியாத சறுக்கல்கள். நகுலனை மேம்போக்காய் மேய்கிறவர்களுக்கு அவர் ஒரு கவிஞரே அல்ல எனத் தோன்றலாம். அல்லது வெறும் துணுக்கு வரிகளை எழுதியவர் என நினைக்கலாம். அப்படி யோசிக்கவும் அவர்களுக்கு சுதந்திரம் உண்டு தான். ஆனால் நகுலன் ஒரு கராறான நவீன கவிதை வடிவை பிரமிள், ஆத்மாநாம் போல் தழுவியதில்லை என்பது தான் அவர் இத்தகைய தாக்குதல்களுக்கு ஆவதற்கு பிரதான காரணம். அவரைப் போன்ற நவீன தன்மை குறைவான வேறு இரு கவிஞர்கள் தேவதேவன் மற்றும் மனுஷ்யபுத்திரன். இவர்களையும் கவிஞர்களாக ஏற்காதாவர்கள் இருக்கிறார்கள். கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய முரண்பாடுகளின் விளைவு தான் இத்தகைய மறுப்புகள்.

நகுலனை எதிர்த்த இன்னொரு முக்கிய தரப்பு ஜெயமோகனுடையது. நகுலன் ஜெயமோகனை எரிச்சலூட்டுகிறார் என்பது தெளிவு. ஏன் என நாம் யோசிக்க வேண்டும். ஜெயமோகனுக்கு இது போல் காப்கா, ஹெமிங்வேயும் எரிச்சலூட்டுகிறார்கள். சொல்லப் போனால் அவருக்கு இருத்தலிய, மறுப்புவாத எழுத்தாளர்கள் மொத்தமாய் எரிச்சலூட்டுகிறார்கள். இந்திரன் சுட்டுவது போல நகுலன் இந்த மேற்கத்திய இருத்தலிய கவிஞர்களின் மரபில் வந்து இந்திய வேதந்தத்தை வெட்டி செல்பவர். அதாவது இந்திய, மேற்கத்திய இருத்தல் சார்ந்த கருத்தாக்கங்களை தனதான முறையில் இணைப்பவர். முக்கியமாக அவரிடம் உள்ள பிடிப்பின்மை நம் வேதாந்தத்தில் உள்ளது தான். ஒரே வித்தியாசம் வேதாந்திகள் வாழ்க்கை இன்மையானது, வெறும் சூன்யம் என்று விட்டு ஒரு பேருண்மையை தழுவிக் கொள்வார்கள். இது தான் இன்மையில் இருந்து முழுமை நோக்கிய அவர்களின் பயணமாக இருக்கும். இப்பயணத்தை நாம் தேவதேவனிடம் காண்கிறோம். தேவதேவன் பூமியில் இருந்து வானம் நோக்கி ஏகும் ஒரு மரமாக, பறந்து பூரணத்துவத்தை தொட முயலும் ஒரு பறவையாக இருக்கிறார். ஆனால் நகுலன் உண்மையை சட்டையாக வெறுமனே உரிந்து கொண்டே இருக்கிறார். அவர் எந்த பேருண்மையையும் – அதாவது ஒரு ஆன்மீக மையத்தை – ஏற்பதில்லை. அதனால் தான் ஒரேவித விசாரம் கொண்ட இரு கவிஞர்களில் தேவதேவனை கொண்டாடும் ஜெயமோகன் நகுலனை கடுமையாய் மறுக்கிறார். ஏனென்றால் நகுலன் பூரணத்துவத்தை ஏளனம் செய்கிறார். வாழ்க்கையில் ஒருவனால் எதையும் பற்றிக் கொள்ள இயலாது, அப்படி ஒன்றை அடைந்து பூரணமடைவதாய் எண்ணுவது ஒரு சுயபாசாங்கு என்கிறார் நகுலன். இந்த பூரணமின்மை, மையமின்மை தான் ஜெயமோகனை கடுமையாய் எரிச்சலூட்டுகிறது. நான் மேலே குறிப்பிட்ட காப்கா, ஹெமிங்வேயிடமும் இந்த பூரணமின்மை உள்ளது. ஜெயமோகன் கூறியதை தான் போகன் சங்கர் தனது பேட்டியில் “நோய்மையை” மட்டும் எழுதிய, அதேவேளை வாசகனின் நோய்மையை குணப்படுத்த தெரியாத எழுத்தாளன் நகுலன் என வேறு மொழியில் கூறி இருக்கிறார்.

நான் சொன்னதற்கு முற்றிலும் மாறுபட்டு தமிழவன் கூறியிருப்பதை நீங்கள் கவனிக்கலாம். தமிழவனிடம் முரண்பட்டு இந்திரன் பேசி இருக்கிறார். முற்றிலும் வித்தியாசமாக நகுலன் மனிதர்களை நேசித்த ஆள் என எஸ்.ரா கூறுகிறார். நேசிக்க நம்ப வேண்டும். மனிதர்களை நகுலன் நம்பினார் என்பது நிச்சயம் வித்தியாசமான பார்வை. இப்படி ஒவ்வொருவரிடமும் வேறுபட்ட பார்வைகள் உள்ளன. ஆனால் ஒன்று – அனைவரும் நகுலனை ஒரு சரக்கடித்து பித்து பிடித்து உளறுகிற கலக ஆளூமையாக பிம்பம் கட்டியமைத்த ஒரு தரப்பினரை விமர்சிக்கிறார்கள். நகுலன் மறைந்த போது எழுதப்பட்ட கணிசமான அஞ்சலிக் கட்டுரைகள் அப்படியானவை என நாம் அறிவோம். ஆனால் இன்று நகுலனை வெறும் ஒரு வயதான ஆளாக, நினைவு பிறழ்ந்தவராக ஒரு கூண்டு மிருகம் போல் பார்க்க வேண்டாம் என நாம் நினைக்க தொடங்கி இருக்கிறோம். இங்கு கருத்து கூறியுள்ளவர்கள் மீண்டும் நகுலனின் ஆளுமை மீதல்லாமல் அவரது கவிதைகள் நோக்கி பார்வையை குவித்திருப்பதை கவனிக்கலாம். இது வரவேற்கத்தக்க போக்கு.


நகுலன் குறித்து ஏராளம் எழுதப்பட்டுள்ளன. அவர் அதற்கு தகுதியானவர் தாம். இந்த சிறப்பிதழில் உள்ள பதிவுகள் நகுலன் எனும் ஒரு ஆழியில் எழும் சிறு அலைகள். மேலும் பல அலைகள் எழட்டும். நவீன கவிதைக்குள் புதிதாய் அடியெடுத்து வைக்கிற ஒவ்வொருவரும் இந்த அற்புதமான கவி ஆளூமையை அறிந்து கொள்ள இது உதவட்டும்.

நன்றி: www.inmmai.com இதழ் 8

Comments