Sunday, August 31, 2014

CWC: ஒரு புகைப்பட கண்காட்சி


நேற்று chennai weekend clickers புகைப்படக் குழுவினரின் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். லலித் கலா அகாதமியில் நடந்தது. இந்தியாவின் பலவிதமான மக்கள்பகுதிகளை ஒரே இடத்தில் ஆச்சரியமான வண்ணங்களில் பரிமாணங்களில் பார்க்கும் ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. நிறைய பயணித்திருக்கிறார்கள். கடுமையாக உழைத்திருக்கிறார்கள். 


கண்காட்சியில் பார்த்த பல அற்புதமான படங்களை என்னால் இணையத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. கிடைத்தவற்றை கொடுத்திருக்கிறேன். அது போல் இங்குள்ள படங்கள் பல கண்காட்சியில் இல்லாதவையும் தான். ஆனால் கண்காட்சியில் பங்கேற்றவர்கள் எடுத்தது.
சதீஷ் ராகவேந்திரன்

இந்த படத்தில் வெளிப்படையாகவே ஒரு நகைமுரணும் நக்கலும் உள்ளது.
மகேஷ் பாலசுப்பிரமணியம்
மகேஷ் பாலசுப்பிரமணியத்தின் படங்களில் அவர் பொருட்கள் அல்லது ஆட்களை பயன்படுத்தும் விதம் பிடித்திருந்தது. அவர் மனிதர்களை இடங்களை பதிவு பண்ணுவதில்லை. தான் நினைக்கிற ஒன்றை சுட்ட பயன்படுத்துகிறார். இது முக்கியம். இந்த படத்தில் உள்ள மூடுபனி, அதன் முன் படந்து போகும் ஆள், கறுப்புவெள்ளை ஆகியவை அலாதியான கவித்துவம் கொள்கின்றன. வாழ்க்கையை விட்டு விலகுகிற ஆளின் கதை போல் தோன்றுகிறது.

ரோஹன் ரங்கதுரை
இது போல் ஒரு கதையை சொல்லும் தனித்துவமான படங்கள் இருந்தன. இப்படடத்தில் திருநங்கை திரும்பி நிற்பது முக்கியம். அதன் வழி காட்சி அவளை பார்க்கும் பக்தர்களை நோக்கி - அவர்களின் பல பாவனைகள், உடல்மொழிகள் என - போகிறது. திருநங்கை ஆசீர்வதிக்கும் முறையை பாருங்கள். தனி ஸ்டைல்.
மகேஷ் பாலசுப்பிரமணியம்

மகேஷ் இது போன்ற படங்களில் பொருட்கள் இடையே உள்ள தூரத்தை பயன்படுத்துவது, இடைவெளியை உருவாக்கியது நமக்கு கற்பனை செய்ய நிறைய வாய்ப்பை அளிக்கிறது. இந்தியா பொதுவாக நெரிசலான நாடு என்பதால் நாம் எடுக்கிற படங்களை ஆட்களால் நிரப்ப வேண்டிய அவசியமில்லை.

அருண் டைட்டன்

குழந்தை அடிக்கப்படும் படத்தை இதுவரை பார்த்ததில்லை. அதனாலே பிடித்திருந்தது. அதுவும் அப்பெண் ஆட்டோ பின்னிருந்து தோன்றுவதால் ஒரு செயல்தன்மை படத்திற்கு வருகிறது. ஏதோ நமக்கு பின்னிருந்து தோன்றி அப்பையனை அடிப்பது போல் தோன்றுகிறது.

அருண் டைட்டன்
மேற்சொன்ன படம் போல் இதுவும் மற்றொரு வன்மம். அதை ஒரு தூய்மையான உக்கிரமான காட்சியாக மாற்றுகிறார்.

அருண் டைட்டன்

இது எனக்கு ரொம்ப பிடித்தது. வாழ்க்கை என்பது இருளின் ஊடான பயணம். அப்படித் தான் நாம் வளர்கிறோம். இக்குழந்தை இருளின் தீமையின் பாதையில் பயணிக்கிறது. அதன் நிழல் கூட தெரிகிறது. பயணத்தின் இலக்கு என்ன என்பதும் படத்திலேயே உள்ளது.

அஷோக் சரவணன்
அசோக்கின் படங்களில் வண்ணங்களை கொஞ்சம் வேறுபட்டதாக்கி ஓவியத்தின் அருகில் கொண்டு வருகிறார். இவரது படங்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கும். காரணம் அதிலுள்ள ஆட்களோ இடமோ பொருளோ அல்ல. வண்ணங்கள் தான். அது தான் அவரது வலிமை.

தொடர்ந்து அங்கு ஒரு கூட்டம் வந்து கொண்டிருப்பது பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. இன்னொரு பக்கம் புகைப்படம் பற்றின அரங்குகள் நடந்தன. நான் எழுத்தாளனும் புகைப்பட கலைஞனும் அடைகிற மூன்று நிலைகள் பற்றி பேசினேன். முதல் நிலையில் நம் கவனம் மொழியை அழகாய் துல்லியமாய் வித்தியாசமாய் பயன்படுத்துவது பற்றி இருக்கும். புகைப்படத்தில் இது தொழில்நுட்பமாய், புது சட்டகங்கள், அமைத்தல்களாய் (composition), வண்ணங்களை, வடிவங்களை பதிவு செய்தல் என இருக்கும். இதே கட்டத்தில் தான் நமக்கு பிடித்த கலைஞர்களை பின்பற்றி அவர்களின் சிறந்த படைப்புகளை போல செய்வோம். அடுத்த கட்டத்தில் இதில் இருந்து வெளிவந்து நமக்கான பாணியில் வாழ்க்கையை பதிவு செய்ய தொடங்குவோம். ஒருவர் விபச்சாரிகள், கஞ்சா விற்பவர்கள் பற்றி எழுதுவார். இன்னொருவர் பெண்கள், இன்னொருவர் அகச்சிக்கல், இன்னொருவர் சமூக பிரச்சனை என ஆளாளுக்கு ஒரு இடத்தை எடுத்து எழுதுவார்கள். இதில் யார் மிக புதிதாய் அதிக அழுத்தமாய் தம் இடத்தை சித்தரிப்பது என போட்டி இருக்கும். இது அடையாளத்தை ஸ்தாபிக்கும் கட்டம். புகைப்படக் கலைஞர்களும் தெரு, இயற்கை, அன்றாட வாழ்க்கை, மேக்ரோ, வனம், ஜல்லிக்கட்டு, கோயில், ஹோலி, ஆக்ரா, காசி, வாரணாசி, இமையமலை என போவார்கள். இதில் புகைப்பட கலையில் இப்போது நவீன புகைப்பட கருவிகளின் சாத்தியத்தால் கிட்டத்தட்ட எல்லாருமே ஒரு சிறந்த படத்தை போல செய்து ஆயிரம் படங்கள் எடுக்க வாய்ப்பிருக்கிறது. விளைவாய் அந்த அசல் படத்தின் மீது ஆயிரம் நகல் படங்கள் விழுந்து மூடி விடும். ஒரேயடியாய் கூத்தாண்டவர் விழாவை பதிவு செய்ய நூறு பேர் போவார்கள். அவர்கள் மாறி மாறி ஒரேவிதமான பல படங்களை எடுக்க நேரிடும். இதற்கு அடுத்ததாய் மூன்றாவது நிலை ஒன்று இருக்கிறது. அப்போது நாம் உண்மையான படைப்பு என்பது நம் தேடலின் புற வடிவம் என உணர்வோம். ஒரு இடத்தை, பொருளை அதுவாக அல்லாமல் நம் மனதின் வடிவாக பார்ப்போம். நாம் என்ன சொல்ல நினைக்கிறோம் என உணர்வோம். அதற்கான படங்களை எடுப்போம். புகைப்படக் கலை நம் தேடலில் போது ஏற்படும் கேள்விகளுக்கான விடையாக மாறும். அவசர அவசரமாய் ஒரு ஊருக்கு போய் கிடைக்கிறதை மாட்டுகிறதை படமாக்காமல் அந்த ஊரையும் அதன் வாழ்வையும் நாம் புரிந்து கொண்டதை படமாக்கலாம். அதற்கு ஒரு சித்திரம் என்பதை அதைக் கடந்த ஒன்றாக மாற்ற வேண்டும். முழுமையாக ஒன்றை பதிவு செய்வதை என்றில்லாமல் நம் பார்வையை அதைக் கொண்டு வெளிப்படுத்த முயல்வோம். அரூப புகைப்படங்கள், குறியீட்டு புகைப்படங்களை உதாரணமாய் சொல்லலாம். ஒரு இமேஜை உருவாக்கும் கலைஞன் அந்த இமேஜை தன் கலை மூலம் கடந்த செல்ல வேண்டும். அப்போது உயர்வான புகைப்படம் உருவாகும். எவ்வளவு பார்த்தாலும் தீராத ஒரு அர்த்தம், புதிர் அப்படத்தில் இருந்து கொண்டிருக்க வேண்டும். அதே போல் ஒரு புகைப்பட கலைஞன் வெறுமனே புகைப்படங்களின் உலகில் மட்டும் இராமல் அரசியல், சமூகவியல், தத்துவம், அறிவியல், வரலாறு, இலக்கியம் என பல துறைகளில் பயணிக்க வேண்டிய அவசியம் பற்றி பேசினேன். அத்துறைகள் வழி அவனுக்கு பல திறப்புகள் கிடைக்கும். உதாரணமாய் விநாயக சதூர்த்தி ஊர்வலத்தின் பின் ஒரு மறைமுகமான வன்முறை வெளிப்படலாம். அதை நேரடியாக பார்க்க முடியாமல் இருக்கலாம். ஆனால் உள்ளார்ந்து உணரலாம். அதை ஒரு இமேஜ் மூலம் வெளிப்படுத்த முடியுமா? இவ்வாறு ஒவ்வொரு துறை சார்ந்தும் யோசிக்கையில் நம் படைப்பு வெளி விரியும். அரசியல், சமூக பிரக்ஞை உள்ள, தத்துவார்த்த மனநிலை கொண்ட புகைப்பட கலைஞர்களை பார்க்க விரும்புகிறேன் என கூறினேன். இதுவே எனக்கும் பல புது எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். நாம் இந்த மூன்றாவது நிலை நோக்கிய பயணத்தில் இருக்கிறோம்.

No comments: