Wednesday, August 20, 2014

ஷிஷெக்: முரண் இயக்கத்தின் ஆன்மீகம்


என் முனைவர் பட்ட நெறியாளர் சமீபமாக வாங்கின நூலொன்றை பார்க்க தந்தார். ஸ்லெவொய் ஷிஷெக்கின் Agitating the Frame. எடுத்து புரட்டினேன். வசீகரமான தலைப்புகள் ஆர்வம் கொள்ள வைத்தன. எழுத்தாளர் யாரென Traces of a Virtual Event: On the Dark Knight Rises கட்டுரை படிக்கும் வரை கவனிக்கவில்லை. பாதியில் தான் ஷிஷெக் என கவனித்தேன். அதுவும் நல்லது தான். ஏனென்றால் முதலில் பார்த்திருந்தால் ரொம்ப ஹெவி டோஸ் என நினைத்து தள்ளி போட்டிருப்பேன். ஆனால் ஷிஷெக் நமக்கு பரிச்சமுள்ள கோட்பாட்டு எழுத்தாளர்களைப் போல் முதல் வரியை பாதி பக்கம் வரை நீட்டக்கூடியவர் அல்ல. மென்மையான வாசனையற்ற வோட்கா போல் எளிதான இதமான ஆனால் சூடான மொழி அவரது. அவர் ஒரு கலவை: லட்சியவாதி, அதேவேளை பிடிமானங்களை உதறும் ஒருவகை கலகவாதி, மார்க்ஸியவாதி அதேவேளை ஒரு ஆழமான ஜென் ஆன்மீகவாதமும் உள்ளோடுகிறது. ஒரு சிக்கலான விசயத்தை பேசும் போது சட்டென ஒரு அட்டகாசமான ஜோக்கை எடுத்து விடுவார். பிற கோட்பாட்டாளர்களைப் போல் அவர் சம சிந்தனையாளர்களுடன் பட்டம் விட்டு போட்டி போடுவதில்லை. எல்லாவிதமான எழுத்துக்களையும் வாசித்து மேற்கோள் காட்டுகிறார். பிளாகை கூட விடுவதில்லை. பேட்மேன் படம் பற்றி பேசுகையில் இந்தியாவில் இருந்து கார்த்திக் எனும் ஒருவரின் வெர்ட்பிரஸ் கட்டுரை ஒன்றைக் கூட மேற்கோள் காட்டுகிறார். 


அவரது பாணி சிக்ஸ் பேக் ஆய்வுக்கட்டுரைகளின் பாணி அல்ல. ஒரு கருத்தை உருவாக்கி அல்லது இன்னொரு கருத்துக்கு பதில் சொல்லி சட்டென நகர்ந்து செல்கிறார். ஒன்றை நிறுவி விளக்க தலைப்படுவதில்லை. இது பத்தியாளர்களின் பாணி. ஷிஷெக் ஒரு உயர்தர பத்தியாளர். அவர் ஒரு செலிபிரிட்டி தத்துவஞானி. அவரை கோட்பாட்டாளர்களின் எல்விஸ் பிரஸ்லி என்கிறார்கள். மூன்று முறை திருமணம் செய்திருக்கிறார். இரண்டாம் மனைவி ஒரு மாடல்.

சில பெண்கள் அடிக்கடி உதட்டை கடித்துக் கொண்டே பேசுவார்கள். நீங்கள் அவர்களை கவனிக்காமல் இருக்க முடியாது. ஷிஷெக் எந்த வாக்கியத்தையும் சின்ன அதிர்ச்சி ஏற்படும் படி கொஞ்சம் வளைத்து திருகி நகைமுரணுடன் சொல்கிறார். உதாரணமாய் வலதுசாரிகளின் சந்திப்பிடத்தில் வெடிகுண்டு வைக்க வேண்டும் என்று எழுதுவார். அடுத்த வரியில் இதை நான் நேரடியான அர்த்தத்தில் சொல்லவில்லை என உங்களுக்கு தெரியும் தானே என்பார். இந்த கட்டுரையில் காந்தி தான் ஹிட்லரை விட பயங்கரமான வன்முறையாளர் என்கிறார். ஆனால் இதை சும்மா ஒரு அதிர்ச்சிகரமான வரி என்றும் கூற முடியாது. இது ஒரு கவித்துவமான வாக்கியம். வன்முறை என்றால் அடிதடி, கொலை, ரத்தம் அல்ல என்கிறார் ஷிஷெக். வன்முறை ஒரு அமைப்பினுள் மறைமுகமாக சதா நிகழும் உருவமற்ற செயல். ஒரு வன்முறை நிகழும் போது அதற்கு எதிரான இன்னொரு வன்முறையையும் அமைப்பு உருவாக்கும். இரண்டும் மோதுகையில் உருவாகும் சமநிலையில் உலகம் இயங்குகிறது. இதைப் படிக்கையில் உங்களுக்கு இயங்கியல் (dialectics) நினைவு வரும். ஆம் ஹெகலின் தாக்கம் ஷிஷெக்கிடம் வலுவாக உள்ளது.

காந்தியின் சத்தியாகிரக் போராட்டம் என்பது ஒரு கருத்தியல் மூர்க்கத்தனமும் பிடிவாதமும் கொண்டது. அதைக் கொண்டு ஒரு ரத்தமற்ற வன்முறையை சமூக ரீதியாக திரட்டி ஆங்கிலேய அரசு மீது செலுத்துகிறார். காலனிய அரசின் வன்முறையும் முழுக்க ஆயுதம் சார்ந்ததல்ல, அதுவும் அமைப்பின் வழி நுணுக்கமாய் நம் மீது பாய்வது தான். ஷிஷெக் இதைத் தான் வலுவான வன்முறை என்கிறார். அவர் ஹிட்ரலுடையதை பலவீனமான வன்முறை என்கிறார். ஏனென்றால் ஹிட்லர் தன்னுடைய தேசம் சந்தித்த அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு யூதர்களை போலி காரணமாய் சித்தரித்தார். அதன் மூலம் முதலாளித்துவ அமைப்புகள் மீது திரும்ப வேண்டிய சமூக கோபத்தை யூதர்கள் மீது திருப்பி விட்டார். இது கோழைத்தனமான, பலவீனமான வீரம். கோபத்தில் அடிப்பவன் கோழை என்பது ஒரு ஆன்மீக கருத்தும் தான். இதைத் தான் சீன தற்காப்பு கலைகளும் கூறுகின்றன. கோபப்படாத வன்முறை உன்னதமானது, படைப்பூக்கம் கொண்டது. காந்தி வன்முறையாளர் எனும் ஷிஷெக்கின் வரி அதனால் தான் சட்டென ஜென் தத்துவத்தை நினைவுபடுத்துகிறது. காந்தி சமூகம் எனும் அமைப்பினுள் எற்கனவே உள்ள ஒரு வன்முறைக்கு எதிர்-வன்முறையை அதே போல் நுட்பமாய் முன்னெடுக்கிறார். அதனால் வெல்கிறார்.

ஜோஸ் சரமாகொவின் Seeing எனும் கதையைப் பற்றி ஷிஷெக் கூறுகிறார். ஒரு ஊரில் தேர்தல் நடக்கிறது. 80 சதவீதம் வரை மக்கள் வாக்களிக்கிறார்கள். ஆனால் வாக்காளர் பெட்டியை திறந்து பார்த்தால் இருபது சதவீதம் கூட ஓட்டு இல்லை. மக்கள் கூட்டம் கூட்டமாய் வாக்காளர் மையத்துக்கு சென்று ஓட்டளிக்காமல் ஒரு வன்முறை நிகழ்த்தி இருக்கிறார்கள். அனைத்து முக்கிய கட்சிகளும் பதறுகின்றன. எமர்ஜென்ஸி நடைமுறைப்படுத்தி, வாக்காளர்களை கைது செய்து விசாரிக்கிறார்கள். ஆனால் கைது, விசாரணையினூடே நகரம் மிக அமைதியாக இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஷிஷெக்கை பொறுத்தவரை இது தான் உண்மையான உக்கிரமான மக்கள் புரட்சியின் வன்முறை. இது ஒரு அரசை உலுக்குவது போல் குண்டுவெடிப்புகள் செய்யாது. சொல்லப் போனால் குண்டு வெடிப்புகள் அரச அதிகாரத்தை இன்னும் வலுவாக்கும். ராணுவம் அதிக அதிகாரம் பெறும்.

எந்த அன்பிலும் பாதிக்கு பாதி வன்முறை இருக்கும். மிக அதிகமாய் அன்பு கொண்டவன் தான் மிக அதிகமாய் வன்முறையை வெளிப்படுத்துகிறான். ஷிஷெக் கர்த்தரைப் பற்றி பேசுகிறார். “நீங்கள் என்னிடம் வர வேண்டும் என்றால் உங்கள் அப்பா அம்மா சகோதர சகோதரிகளை வெறுத்திடுங்கள்” என கர்த்தர் சொல்லுவதை மேற்கோள் காட்டுகிறார். எவ்வளவு கவித்துவமான வரி! இந்த சமூகத்தை மிக அதிகமாய் நேசிக்க நீங்கள் இச்சமூகத்தை மிக அதிகமாய் வெறுக்க வேண்டும். இச்சமூகத்தில் இருந்து எந்தளவு வெளியே இருக்கிறீர்கள் அந்தளவு அதன் உள்ளே நெருக்கமாய் இருப்பீர்கள். ஷிஷெக் படிக்கையில் நமக்கு சீன தத்துவத்தின் யின் யாங் கோட்பாடு நினைவு வருகிறது. அதன் படி மிக அதிகமாய் அடித்துக் கொள்ளும் ஜோடியினால் தான் மிக உக்கிரமாய் முத்தமிடவும் மிக அமைதியாய் நிலைத்து வாழவும் முடியும். அமைதி வலது கை என்றால், வன்முறை இடது கை. இரண்டும் சேராமல் போகையில் வாழ்க்கை நிம்மதி இழக்கிறது. வீட்டில் சண்டையே போடாத திருமண ஜோடிகளை பாருங்கள், அவர்கள் அன்பே இல்லாதவர்களாக இருப்பார்கள். அதே நேரம் ஒருவர் சண்டை போட்டவுடன் இன்னொருவர் பயந்து சரணடைந்தாலும் அந்த உறவு தோற்று விடும். அது பலவீனமான வன்முறை. மாறி மாறி மோதி ஒரு சமனம் உருவாகும்: அதுவே அன்பு; அதுவே அரசியலும் சமூக அமைதியும் கூட.

இக்கட்டுரை ஒரு அரசியல் கட்டுரை. சினிமா கட்டுரையும் தான். பேட்மேன் படம் பற்றி விரிவாக நுணுக்கமாக அலசுகிறார். அதேவேளை மிகவும் மன எழுச்சி தருகிற வரிகளும் உள்ளன. ஒரு ஞானி அரசியல் சமூகம் பற்றி எழுதினால் எப்படி இருக்குமோ அது போல் எழுதுகிறார். எனக்கு ஷிஷெக்கின் அடாவடித்தனமான தர்க்க செறிவுள்ள பாணியை பார்க்கையில் தமிழில் அவரோடு ஒப்பிடத்தக்கவராய் ராஜ் கௌதமன் படுகிறார். ஆனால் ராஜ் கௌதமனின் ஒரு முக்கிய குறையும் நமக்கு ஷிஷெக் படிக்கையில் புரிகிறது. ஷிஷெக்கிடம் உள்ள ஆன்மீக ஆழம் ராஜ் கௌதமனிடம் இல்லை. ராஜ் கௌதமன் ஒரு மறுப்புவாதி. தான் மறுக்கிற இடத்தில் அவர் இன்னொன்றை உருவாக்குவதில்லை. அவர் எந்தளவு அறிவுகூர்ந்தவராக உள்ளாரோ அந்தளவுக்கு கொஞ்சம் தட்டையாகவும் ஆகிறார். ஆனால் ஷிஷெக் ஒன்றை மறுக்கும் போதே உலகின் ஒவ்வொரு செயலின் பின்னும் முரண் சக்திகளின் மோதல் உள்ளது, இம்மோதல் உருவாக்கும் சமநிலை வாழ்வுக்கு எவ்வளவு அவசியம் என்பதை சுட்டுகிறார். இது அவருக்கு ஒரு ஆழத்தை அளிக்கிறது.

ஷிஷெக்கின் “Crisis what crisis என்னும் கட்டுரை ஒன்றும் படித்தேன். சுவாரஸ்யமான பொருளாதார அலசல் அது. அவரது வாசிப்பின் விரிவும், மாற்றுப்பார்வைகளும் பெரிய பலம். அவரது நல்ல பேட்டி ஒன்று இம்மாத “சிற்றேடு” பத்திரிகையில் ஆர்.சிவகுமாரால் மொழியாக்கப்பட்டு வந்துள்ளது. படித்து பாருங்கள். 

No comments: