Friday, August 29, 2014

லஷ்மி சரவணகுமார் கவிதைகள்: யவனிகாவும் கோணங்கியும் சந்திக்கும் புள்ளி - ஆர்.அபிலாஷ்


லஷ்மி சரவணகுமாரின் முதல் கவிதைத் தொகுப்பு “மோக்லியை தொலைத்த சிறுத்தை”.
லஷ்மி சரவணகுமாரின் கதைமொழி நமக்கு பரிச்சயமானது. வாழ்க்கை பின்புலம் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களுடையதாக, ஒருவித எதிகலாச்சார காரத்துடன் இருக்கும் என்பதையும் அறிவோம். அதிகம் பேசப்படாத விசயம் அவர் மிக மிக கவித்துவமான மொழியையும் கொண்டவர் என்பது. முற்போக்கு எழுத்தாள அண்ணாச்சிகளுக்கும் கோணங்கி வாரிசுகளுக்கும் நடுவே ஒரு குறுக்குசந்து அமைத்து வாழ்பவர் லஷ்மிசரவண குமார். கோணங்கி பாணியிலான கதைகளில் சிலவேளை அவர் கவித்துவத்தின் உச்சத்தை தொடுவார். அது போக தோற்கடிக்கப்பட்ட மனதின் உளவியல் மீதும் ஒரு வலுவான பிடிப்பு அவருக்கு உண்டு. இந்த இரண்டு தன்மைகளும் லஷ்மி சரவணகுமாரின் எழுத்தாளுமை.

இந்த மொழி நுண்மையான விவரணைகளும் காட்சி படிமங்களும் கொண்டது. கோணங்கியிடம் இயல்பில் ஒரு கதை உணர்வு இல்லை. ஆனால் லஷ்மி சரவணகுமாரிடம் கதையை அடவு வைத்து வீடு கட்டி இலக்கை நோக்கி கருத்தாய் நகர்த்தி போகும் முனைப்பு அதிகம். சுருக்கமாய் சுவாரஸ்யமாக கதைகளை நல்லி எலும்பை கடிக்கிற வேகத்தில் முடிப்பார். இது அவரது கதைகளின் வெகுஜன தன்மை.

இம்மூன்று விசயங்களும் – நுண்மையான கவித்துவமான விவரணைகள், வீழ்த்தப்பட்டவனின் உளவியல், நறுக்கென்ற கதைத்தன்மை – அவரது “மோக்லியை தொலைத்த சிறுத்தையில்” உள்ளன. பொதுவாக கவிதைகள் அவற்றின் செறிவும் குறிப்புணர்த்துலும் காரணமாய் கொஞ்சம் வாசித்ததுமே ஒரு சுயமௌதுனத்தின் பிறகான களைப்பை ஏற்படுத்தும். அதனாலேயே கவிதைத் தொகுப்புகளை தொடர்ச்சியாய் படிக்க முடியாது. ரெண்டு மூன்று கவிதைகளில் லயித்தபின் கண்ணை மூடி சாய்ந்து விடுவோம். ஆனால் இத்தொகுப்பின் கவிதைகள் ஒரு சிறுகதைத் தொகுப்பை போல் சரேலென வாசிக்க கூடியவை. ஏனெனில் அவை பூடகமும் இருண்மையும் கொண்டு நம் வாசிப்பை சோதித்து அதிக வேலை வைப்பதில்லை. இதிலுள்ள கவிதைகள் மிக மிக திறந்தவை. குறிப்புணர்த்தல் அநேகமாய் இல்லை. சொல்ல வந்ததை அவராகவே சிரத்தை எடுத்து வெளிப்படையாய் கூறி விடுகிறார். இது சரளத்தன்மைக்கும், லாவகத்துக்கும் உதவுகிறது. இன்னொரு புறம் இக்கவிதைகளை பலவீனப்படுத்தவும் செய்கின்றன.
லஷ்மி சரவணகுமாரின் கவிதை பாணி யவனிகா ஸ்ரீராமுனுடையது. ஸ்ரீராமின் மேற்கத்திய கௌபாய் தாக்கம் இல்லை. அவரைப் போல் லஷ்மி கவிதையை சரியான இட்த்தில் முடித்து ஒரு பூடகத்தை உருவாக்குவதில்லை. மற்றபடி இயல்புலகிற்கு அப்பாலான ஒரு இருட்டுலகில் நிகழும் சம்பவங்களில் இருவரின் கவிதைகளும் ஆர்வம் செலுத்துகின்றன. ஒரு வேட்டையாடும் மனதுடன் இருவரின் கவிதைசொல்லிகளும் நள்ளிரவின் தெருக்களில், ஜிப்ஸிகளின் உடல்களில் பயணிக்கிறார்கள். ஆனால் ஸ்ரீராமின் மாற்றுமனிதர்களின் மாயத்தன்மை லஷ்மியின் பாத்திரங்களில் இல்லை. லஷ்மியிடம் குற்றமனம் மீதான விசாரணை தான் பிரதானமாய் உள்ளது. மற்றபடி புலம் கவனிக்கப்படாத நகரத்தின் மற்றொரு பக்கம் தான். மனிதர்கள் ஏதோ ஒரு கோணலும் விசித்திர எண்ணங்களும் கொண்டவர்கள் தாம்.
ஆரம்பத்தில் சொன்னது போல் ஒரு கவிஞராக லஷ்மியின் மிகப்பெரிய வலிமை மொழியின் பிரத்யேகத் தன்மை தான். அது எப்படி உருவாகிறது எனப் பார்ப்போம். ஒன்று, அதிர்ச்சியூட்டும் தன்மை. ஒரு கவிதையில் கடவுள் பூமிக்கு ஒரு நள்ளிரவில் வருகிறார். இறந்து கிடக்கிற குழந்தை ஒன்றை பார்க்கிறார். கணிசமான நவீன கவிதைகள் குழந்தையின் சவம் எழுப்பும் மன உணர்வுகளை பேசும். லஷ்மி சரவணகுமாரின் கவிதைசொல்லி வாழ்வோடு அந்நியப்பட்டு போனவன். அவனுக்கு குழந்தையிடம் உள்ள விநோதங்கள் தான் படுகின்றன. அவனது கடவுள் கூட விட்டேந்தியாய் அப்படித் தான் கவனிக்கிறார்:
“முந்தைய இரவில் கொல்லப்பட்டிருந்த
ஒரு குழந்தையின் சவம்
இறுக்கமற்ற அக்குழந்தையின் முகத்தில்
படர்ந்து கிடந்தது உயிர்ப்பான
புன்னகையின் மிச்சங்கள்...
அழகானதொரு பொம்மைக்காகவோ
சில சாக்லேட்டுகளுக்காகவோ
விலையுயர்ந்த ஓர் ஆடையின் தேவையினாலோ
என ஏராளமாய் இருக்க்க் கூடும் காரணங்கள்”

இங்கு “முகத்தில் படர்ந்து கிடந்தது உயிர்ப்பான புன்னகையின் மிச்சங்கள்” என்ற சொற்றொடரை பாருங்கள். இது கோணங்கி வகையான கதைகளின் மொழி. குறிப்பாய் “படர்ந்து கிடந்ததில்” உள்ள விவரிப்பு. இதையே ஒரு நவீன கவிஞன் “முகத்தில் புன்னகையின் மிச்சங்கள்” என சொல்லி கடப்பான். லஷ்மி சரவணகுமாரின் பிரத்யேகமான மொழி அவரது புனைவுகளில் இருந்து கவிதையை நோக்கி பைக்கில் போகும் பெண்ணின் துப்பட்டா போல் பறந்து வந்து தொடுகிறது.
லஷ்மியின் மொழியின் இன்னொரு பொதுத்தன்மை கவிதை ஆரம்பமாகும் பாணி. வாக்கியங்களின் துவக்கம் பெயரடைகள், வினையடைகளின் தோரணமாக உள்ளது. உதாரணமாய் சில கவிதைகளின் துவக்க வரிகள்:
“பொம்மையொன்றை கடவுளிடமிருந்து பரிசாய் பெறும் சிறுமி”
“வெம்மை மிகுந்த இத்தினத்தின் மஞ்சள் நிற தூசியடர்ந்த இரவினை”
“கனவுகள் கொலையுண்டதொரு தினத்தில்”
“பாதி வளர்ந்திருந்த நகர்க்குருவிகளென நிறைய பேர் நம்ம சுற்றியிருந்தனர்”
“உறங்க மறுத்த ஒரு மிருகமென அலைவுறுந்த படியேயிருக்கிறது பசி”
“சாம்பல் நிறம் உதரத் துவங்கியிருந்த ஆகாயத்தின்...”
சிறுமி, இரவு, தினம், பசி, ஆகாயம் ஆகியவற்றுக்கு முன்னால் வருகிற தோரணச் சொற்களை கவனியுங்கள். இவை தான் லஷ்மி சரவணகுமாரின் மொழிக்கு ஒரு தனி நிறம் அளிக்கின்றன. அதேவேளை பொதுவாய் சமகால நவீன கவிதைகளில் இத்தனை பெயர், வினை அடைகள் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த பாணி ஆங்கில வாக்கிய அமைப்பின் இயல்பு காரணமாய் ஏற்பட்ட ஒன்று. லத்தீன் அமெரிக்க புனைவுகளில் இது போல் பல வரிகள் உண்டு. மொழியாக்கங்கள் வழி இப்பாணி தமிழ் நடைக்கு வந்து சேர்ந்தது. கோணங்கி, மற்றும் ஆரம்பகால எஸ்.ராவின் முத்திரைத்தன்மை இந்த மொழியாக்க ஹேங் ஓவர் கொண்ட அடைகளின் தோரணம் தான். லஷ்மி சரவணகுமார் நடக்கும் போது முன்விழும் நிழலின் ஒரு பாதி கோணங்கியுடையதாக இருக்கும். அது கவிதையிலும் இவ்வாறு வந்து விழுந்திருக்கிறது.
லஷ்மியின் கதைகளில் அழகாய் முடிச்சுட்டு விடும் எத்தனிப்பு இருக்கும் என்றேன். இந்த வடிவ பிரக்ஞை ஒரு 25 வரி கவிதையில் கூட தான் உள்ளது என்பது ஆச்சரியமானது. தமிழ் கவிதைகளில் கதைகள் வரும். ஆனால் அவை இளகலான முடிவை கொண்டிருக்கும். ஆனால் லஷ்மி தன் கவிதைகளின் தலைப்பின்னல் ரிப்பனை அழகாய் முடிந்து விடுவதில் தனி அக்கறை காட்டுகிறார். ஒரு சிறு குறிப்பு, பாத்திரம், அதன் செயல்பாடு கூட சம்மந்தமின்றி இருப்பதில்லை. “இறகுப்பந்து விளையாடும் சிறுமிகள்” கவிதையை உதாரணம் காட்டலாம். அது ஒரு குட்டி சிறுகதை. இறகுப்பந்து விளையாடும் சிறுமிகளை ஆரம்பத்தில் இளைஞர்களிடம் இருந்து பாதுகாக்க விழையும் அம்மாக்கள் பின்னர் இளைஞர்கள் மீதான தம் காமம் காரணமாய் அச்சிறுமிகளை தம் போட்டியாளர்களாய் நினைக்க துவங்குகிறார்கள். இறகுப்பந்தின் ஊசலாட்டம் ஒரு அழகான குறியீடாய் கூட செயல்படுகிறது.
சலிப்பூட்டாத தொகுப்பு இது. விவரணைகளின் திளைப்பில் மூழ்கி போக முடிகிறவர்களுக்கு பிடித்தமான தொகுப்பாகவும் இருக்கும். கசாப்பு கடைக்காரனிடம் உள்ள தட்டையான கனமான கத்தியை போன்றது இக்கவிதைகள். நுணுக்கமாய் தோலி உரித்து வெங்காயம் நறுக்க விரும்பும் கவிதை வாசகர்களும் அசௌகர்யமாய் இருக்கலாம். ஆனால் கறிவாசனை பிடிக்கிறவர்களுக்கு ஏற்றவை.
வெளியீடு: புதுஎழுத்து

விலை ரூ 60

1 comment:

Meena Narayanan said...

ayya nan. vengayam urikkera alueee-