Wednesday, August 27, 2014

நீயா நானா: மருத்துவர்கள் அத்தியாயமும் சர்ச்சையும்


நீயா நானா: மருத்துவர்கள் அத்தியாயமும் சர்ச்சையும்
மருத்துவர்கள் பற்றின நீயா நானா நிகழ்ச்சி முன்பு எப்போதும் இல்லாத வகையில் மருத்துவர் சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சில நாட்களுக்கு முன் வரை முகநூல் முழுக்க மருத்துவர்களின் பல்வேறு கண்டனங்கள் பெருக்கெடுத்தன. சில மருத்துவர்களுக்கு பேசுவது கோபிநாத்தாக இருந்தாலும் கருத்துக்கள் இயக்குநர் ஆண்டனியுடையது என புரியவில்லை. கோபிநாத்தை அடிங்கடா என கூவிக் கொண்டிருந்தனர். மருத்துவர்கள் சீக்கிரம் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள். இணையத்தில் எங்குமே அவர்களை விமர்சிக்க முடியாது. குறைந்தது பத்து பேராவது அடிக்க வருவார்கள். இது அவர்கள் அடிப்படையில் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள் எனக் காட்டுகிறது. தம்மைப் பற்றின பெயர் கெட்டுவிடக் கூடாது எனும் பதற்றத்தில் உண்மையை ஒத்துக் கொள்ள தயங்குகிறார்கள்.


 இது முக்கியமான நிகழ்ச்சி. மிகவும் நெகிழ்ச்சியாக மனதை பாரம் கொள்ள வைத்தது. இறுதியில் ஒரு தம்பதியினர் தம் குழந்தையுடன் வந்தனர். குழந்தைக்கு சரியான சிகிச்சை இன்மையால் இரண்டு கண்களூம் போய் விட்டது. சிசேரியன் மூலம் குழந்தை பிறந்ததும் இன்குபேட்டரில் வைக்கிறார்கள். பிறகு எப்படியோ ஒரு அபூர்வ நோய் தொற்றுகிறது. மருத்துவமனை நான்கு நாட்கள் வரை உண்மையை சொல்ல தயங்குகிறது. பெற்றோர்களிடம் மறைக்கிறது. இது அவர்கள் செய்த முதல் குற்றம். நான் குளோபல் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த போது அங்கே எல்லா இடங்களிலும் ஒரு அறிக்கை ஒட்டியிருந்தார்கள். “நோயாளிகளின் நிலை, அவர்களின் மருந்து, சிகிச்சை பற்றின எந்த கேள்விக்கும் விடையளிக்கிற பொறுப்பு இம்மருத்துவமனைக்கு உண்டு” என. ஆனால் இந்த ஆஸ்பத்திரியில் நிர்வாகமும் மருத்துவமும் தம் தவறை உணர்ந்ததும் அதை மேலும் மேலும் மறைக்கவும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கவுமே பார்த்தார்கள். 

எனக்கு நேர்ந்த ஆபத்து பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஒரு மருத்துவருக்கு ketoacidosis எனும் வழக்கமான சர்க்கரை நோய் பக்க விளைவு பற்றி தெரியவில்லை என்பதற்காக நான் என் உயிரையே கிட்டத்தட்ட இழந்தேன். எந்த சிகிச்சையும் இன்றி என்னை நான்கு நாட்கள் ஆஸ்பத்திரியில் வைத்திருந்து 40,000 கட்டணம் வாங்கினார்கள். இறுதியில் என் உடல் உள்உறுப்புகள் சீரழிய தொடங்கிய நிலையில் நான் கோமாவிற்கு செல்ல அம்மருத்துவர் என் மனைவியிடம் வேண்டுமென்றால் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என்று சொன்னார். இன்னும் ஒரு நாள் இருந்தால் செத்திருப்பேன். அவர் 50,000 ரூபாய் வாங்கி இருப்பார். பிறகு அவர் எனக்கு மூளையில் வியாதி என தவறாக குறிப்பு எழுதியதால் அடுத்த ஆஸ்பத்திரியில் அது சம்மந்தமாக பரிசோதனைகள் பண்ண மேலும் இருநாட்கள் பிடித்தன. அதில் இன்னும் ஒரு 30,000 வீண். அதாவது அவருக்கு ஒரு சின்ன தகவல் தெரியவில்லை என்பதால் எவ்வளவு வீண், ஆபத்து பாருங்கள். அந்த மருத்துவர் படிக்கும் போதே மக்கு மருத்துவராக இருந்திருக்க வேண்டும். கூகுளில் நீங்கள் மூச்சடைப்பு + பிரமை + சர்க்கரை நோய் எனத் தேடிப் பாருங்கள். Ketoacidosis என வரும். அவர் குறைந்தது கூகிளிலாவது தேடி இருக்கலாம்.

என் அக்காவுக்கு இது போல் நடந்தது. கடுமையான் வயிற்று வலி. ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார். மருத்துவரால் என்ன காரணம் என கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் தொடர்ந்து பல மருந்துகளை முயன்று பார்த்தார். இரண்டு வாரங்கள் துடித்தார். அவர் வலி தாங்காமல் கத்தும் போது மருத்துவர் அவருக்கு உளவியல் பிரச்சனை என்று கூறினார். இறுதியில் இன்னொரு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரது குடலில் ஒரு அபூர்வமான கிருமி தாக்கியுள்ளதை கண்டுபிடித்தார்கள். அதுவும் அம்மருத்துவர் கூகிளில் தேடிப் பார்த்து தான் செய்தார். இரண்டே நாளில் சில மாத்திரைகளில் சரியாகி விட்டது. அவரது இரண்டு வார துன்பமும் மற்றொரு மக்கு டாக்டரால் விளைந்தது தான்.

ரெண்டு பிரச்சனைகள். ஒன்று மருத்துவர்கள் தம்மால் இயலாது என்றால் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். இது ஈகோவா அல்லது அட்மிஷனில் இருக்கிற ஒவ்வொரு கூடுதல் நாளும் கூடுதல் வருமானம் என்பதாலா தெரியவில்லை. பல வியாதிகள் மோசமாகி ஆட்கள் சாவதற்கு இந்த பிடிவாதம் ஒரு காரணம். நோயாளிகளும் மருத்துவர்களை கண்மூடித்தனமாய் நம்புகிறோம். ஒருவரால் சரி செய்ய முடியாவிட்டால் இன்னொருவரிடம் போவதில்லை. ஒரு மருத்துவமனையில் சேர்த்து விட்டால் ஒன்று நலமாகி வெளியே வர வேண்டும். அல்லது நேரடியாய் மின்சார மயானம். அது போல் அவசரத்துக்கு கண்ணில் பட்ட மருத்துவமனைக்கு போகிறோம். அதுவும் கட்டிடம் பளிச்சென்று நவீனமாய் இருந்தால் நுழைந்து விடுகிறோம். அப்படி செய்யாமல் நம் பகுதியில் அல்லது சற்று தொலைவில் உள்ள சிறந்த மருத்துவர் பற்றி விசாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவசர நிலையில் எவ்வளவு சிரமம் என்றாலும் அவரிடம் தான் செல்ல வேண்டும். பிராண்ட் பெயரைப் பார்த்து செல்லக் கூடாது.

நம்மூரில் எந்த துறையை வேலையிடத்தை எடுத்துக் கொண்டாலும் 2:10 என்ற விகிதத்தில் தான் சிறந்த, திறமையான ஆட்கள் இருப்பார்கள். மிச்ச நான்கு பேர் சராசரியாகவும் கடைசி நாலு பேர் வேலையே தெரியாதவர்களாகவும் இருப்பார்கள். வகுப்பிலும் மாணவர்கள் இப்படித் தான் இருக்கிறார்கள். ஆக இவர்கள் படித்து வேலைக்கு வருகையில் இவர்களின் உண்மையான பயிற்சி என்ன, பரீட்சை மதிப்பெண் என்ன என நமக்கு தெரியாது. ஒருவர் ரொம்ப சுமாரான மாணவராக இருக்கலாம். ஆனாலும் பிற்பாடு நல்ல மருத்துவராக உருவாகலாம். சிலர் பிரமாதமான மாணவராக இருந்து வேலையில் ஆர்வமற்றவராகவோ அல்லது நோயை ஊகிக்கும் திறன் அற்றவராகவோ இருக்கலாம். இதை எப்படி கண்டுபிடிப்பது?

என்னைப் பொறுத்த வரையில் ஒரு சுதந்திரமான அதிகாரபூர்வ அமைப்பு (CAG, தேர்தல் கமிஷன் போல) மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் பற்றின தரவரிசையை உருவாக்கலாம். இதற்கு நோயாளிகள் ஆதாரத்துடன் தம் புகார்களை அளிக்கலாம். அது இணையத்தில் பதிவேற்றப்பட வேண்டும். அதைக் கொண்டு மருத்துவரின் தரவரிசையை தீர்மானிக்க வேண்டும். பத்திரிகைகள் மற்றும் இணையத்தில் இதை வெளியிடலாம். அதிகமாக புகார் பெறும் மருத்துவர்கள் தடை செய்யப்படலாம். இதில் ஒரே சிக்கல் இந்தியா மாதிரியான பிரம்மாண்டமான தேசத்தில் நோயாளிகளின் எதிர்வினைகளை தொகுப்பது தான்.

இப்படி ஒரு பரிந்துரை முன்னால் வைக்கப்பட்டதாம். ஆனால் இந்திய மருத்துவ கவுன்சில் கிடப்பில் போட்டு விட்டது. இப்படி தரவரிசை வந்தால் மருத்துவர்கள் ரிஸ்க் எடுத்து மிக சிக்கலான கேஸ்களை கையாள தயங்குவார்கள். ஒருவேளை சிரமமான நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி விடுவார்கள். அது கூட நல்லது தான். சிறந்த திறமையான மருத்துவர்கள் மட்டுமே சிக்கலான கேஸ்களை பார்க்கட்டும். சராசரிகள் ஜலதோசத்துக்கும் சொறிக்கும் மருந்து கொடுக்கட்டும்.

இந்தியர்களின் முக்கியமான பிரச்சனை எதையும் போகிற போக்கில் எடுத்துக் கொள்வோம். இன்று அந்த குழந்தைக்காக கண்ணீர் விடுவோம். அடுத்த நாள் பழையபடி இது போன்ற சராசரித்தனங்கள், கவனமின்மையிலான ஆபத்துகள் தொடரும். நாம் கராறான எதிர்பார்ப்புகளை கொண்டிருக்க வேண்டும். சராசரி சேவைகளை ஏற்று ஏற்று மரத்து போய் விட்டோம். நாம் முதலில் மாற வேண்டும்.
அந்த குழந்தை ஒருவேளை வாழ்க்கை முழுக்க குருடனாகவே ஆகலாம். அது குறித்த குற்றவுணர்வு பெற்றோருக்கும் நீங்காது இருக்கும். ஆனால் அது தேவையில்லை. கச்சிதமான வாழ்க்கை என ஒன்று இல்லை. முழுமையான ஆரோக்கியம் இருந்தும் அடையார் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை பண்ணிக் கொள்கிறார்கள். ராகுல் காந்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு வாழ்க்கையில் எல்லாம் இருக்கிறது. ஆனால் எதையுமே பயன்படுத்தத் தெரியாது. எல்லா வசதி வாய்ப்பு முழு ஆரோக்கியத்துடன் பிறப்பதல்ல சிறப்பு. எதை எப்படி எடுத்து அனுபவிக்க என தெரிய வேண்டும். யுவன் சங்கர் ராஜாவுக்கோ, பவதாரணிக்கோ அல்லது அவர்களுக்கு அப்பாவுக்கோ அபஸ்வரமாய் அல்லாது பாட வராது. ஆனால் எவ்வளவு நல்ல பாடல்களை பாடியிருக்கிறார்கள்.
எல்லாவற்றையும் அனுபவிப்பது அல்ல வாழ்க்கை. தேவையானதை அடைவதே வாழ்க்கை. அச்சிறுவன் வளர்ந்து நிம்மதியாக மகிழ்ச்சியாக இருப்பான். கண்ணில்லாமை வாழ்க்கையை துக்கமானதாய் ஆக்காது. அது நம் கற்பனை தான். பார்வையின்றி எப்படி சிக்கலில்லாமல் மகிழ்ச்சியாய் வாழ்வது என கற்றுக் கொள்வான். பார்வையில்லாமல் இருப்பது என்றால் பார்வையில்லாமல் இருப்பது தான். கண் என்பது மனிதன் குரங்காக இருக்க தொடங்கிய போது நன்றாக பரிணாம வளர்ச்சி அடைந்த உறுப்பு. கண்ணே இல்லாத உயிர்கள் உலகில் உள்ளன. ஏனெனில் அவை வாழ கண் தேவையில்லை. அதனால் பரிணாமத்தின் போது கண் எனும் உறுப்பு தோன்றவில்லை. உங்கள் வீட்டு நாயை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு உங்களைப் பார்த்தால் துல்லியமாக ஒன்றும் தெரியாது. மூட்டமாய் ஏதோ இட்லி குக்கரை திறந்ததும் ஆவி கிளம்புமே அது போல் தெரியும். நாய் உங்களை முழுக்க தன் மோப்ப சக்தியால் தான் உங்களை “பார்க்கிறது”. அதற்கு மேல் துல்லியமான பார்வை அதற்கு தேவையில்லை. நான் வீட்டுக்கு வந்ததும் நான் யார் யாருடன் இருந்திருக்கிறேன், எதாவது நாய் என்னை நக்கியதா என ஒவ்வொன்றையும் துல்லியமாய் மோர்ந்து என் மொத்த நாளையும் படமாக பார்த்து விடும். மனிதனுக்கு பரிணாமவியலில் வண்ணங்கள் பார்க்கும் நரம்பணுக்கள் தோன்ற காரணம் மரங்கள் பளிச்சென்ற நிறங்களில் பழங்களை காய்க்க தொடங்கியது தான். நமது சுட்டு விரல் பெருவிரலோடு இடுக்கி போல் இணைவதற்கு காரணம் நம் மூதாதையர் மரக்கிளைகளில் பற்றி தொங்க தேவையிருந்தது தான் என்கிறார் வி.எஸ்.ராமசந்திரன் எனும் விஞ்ஞானி. Tell Tale Brain எனும் நூலில். அதாவது நாம் வேறு பிராணியில் இருந்து பரிணமித்திருந்தால் இந்த மாதிரி பெருவிரல் சுட்டு விரல் அமைப்பு இருந்திருக்காது. பேனா தோன்றியிருக்காது. அதைப் பிடித்து இவ்வளவு புத்தகங்கள் எழுதியிருக்க மாட்டார்கள். ஸ்பூனால் ஐஸ்கிரீம் சாப்பிட முடியாது.


எதற்கு சொல்லுகிறேன் என்றால் எதேச்சையாய் அமைகிற உடல் கூறுகளை நமக்கு சாதகமாய் மாற்றிக் கொள்கிறோம். அதுவே நம் வரலாற்றில் பல கண்டுபிடிப்புகளுக்கு காரணமாகிறது. சிறு வயதில் பார்வையிழந்தால் அதையும் எப்படியாவது சாதகமாய் மாற்றிக் கொள்வார்கள். பார்வையில்லாமல் இருப்பது வாழ்க்கை இல்லாமல் இருப்பது அல்ல. 

1 comment:

வசந்தன் வசந்தன் said...

I was expecting your views on this.. you gave it at your best.. if they are not open to all questions and criticism why do they come and talk in a public space.. let them be in the air conditioned hospitals, who cares.. Everybody thinks that Gopi is "all in all azhaguraja in Neeya Naana.. He is just a mirror" Antonys effort to bring this was great..

I felt pity at the doctors after the show.. they didnt see the way Vijay Tv created business mantra out of Director.Ram's atrocious views on Vijay Awards..