Friday, August 22, 2014

சென்னை: கிராமம் போல் தோன்றும் நகரம்

புகைப்படம்: காயத்ரி தேவி

சென்னைக்கு முதன்முதலாக வந்த போது சாலையில் வண்டி ஓட்டுவது தான் அச்சம் தந்தது. அப்புறம் உணவு. எனக்கு இங்குள்ள உணவு பழகவே இல்லை. காரமும் புளியும் தேங்காய்ப் பால் வாசனையும் தான் எங்கள் உணவின் சாரம். சென்னை உணவு வேறு மாதிரி. நான் தினமும் மீன் சாப்பிட்டு வளர்ந்தவன். ஊரில் மிக மிக ஏழைகள் கூட சின்ன துண்டு மீன் இல்லாமல் சோற்றை முழுங்க மாட்டார்கள். காய்கறி எங்களுக்கு ஊறுகாய் போல. ஆனால் சென்னை பெரும்பாலும் ஒரு சைவ நகரம். இங்கே மீன் உணவு கிடைக்கும் இடங்களை தேடிப் போக வேண்டும். அதுவும் விலை அதிகம். நான் சென்னை கிறுத்துவ கல்லூரி விடுதியில் தங்கி இருந்த பல நாள் மதிய உணவு இறங்காது. ஊரில் தினமும் ஏதாவது குழம்பை மாற்றி மாற்றி பண்ணுவார்கள். இங்கே தினமும் ரச சாதம் உண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள். எனக்கு அவர்களைப் பார்த்தால் வேற்றுநாட்டவர் போல தோன்றும். விடுதியில் ஒருநாள் கூட மீன் போட்டதில்லை. இது ரொம்ப விநோதமாய் பட்டது. கறி என்றால் சிக்கன் தான். எங்களுக்கு சிக்கன் மற்றொரு காய்கறி தான். உண்மையான கறி என்றால் எனக்கு மாட்டுக்கறி, பன்றிக்கறி பிறகு ஆட்டுக்கறி. துரதிர்ஷ்டவசமாக இந்த நகரத்தில் பிறந்து வாழ்பவர்களுக்கு மாடு, பன்றி போன்றவை ஒவ்வாமை. அல்லது மோஸ்தர் அல்ல.


உலகிலேயே ஆக சுவையான இறைச்சி பன்றி தான் என்பது என் நம்பிக்கை. காரணம் ரெண்டு. ஒன்று அது மிருதுவானது. இன்னொன்று அதில் நெய் அதிகம். சிக்கனை மென்றால் ரத்த சுவை தான் கரிப்பாக கிடைக்கும். ஆனால் பன்றித் துண்டை மெல்வது நெய்யில் பொரித்த பதார்த்தத்தை மெல்வது போல. பன்றியை பார்த்து கவனமாக சமைத்தால் புழுத்தொல்லை இராது. உடம்புக்கு குளிர்ச்சி.

சென்னையின் உணவுப் பழக்கம் நாகரிகம் சார்ந்தது. இங்குள்ள பல்வகையான தென்னிந்திய உணவுகளை விட நமக்கு வட இந்திய உணவுகள் மேல் மோகம் அதிகம். அது போல் ஸ்பானிய, அமெரிக்க, இத்தாலிய உணவுகள். பர்க்கர் அல்லது பாவ் தான் பிடிக்கும் என திரியும் நிறைய தமிழ் இளைஞர்களுக்கு நம்முடைய பல அருமையான தென்னிந்திய பண்டங்களை தெரியாது. அவர்கள் தம் அடையாளத்தை களையத்தான் இப்படியான உணவுகளை விரும்புகிறார்கள். தென்னிந்தியன் எனும அடையாளத்தை களைந்து தேசிய இந்தியன் ஆக வேண்டும். அடுத்து சர்வதேச இந்தியன் ஆக வேண்டும். இந்த விழைவு சென்னைவாசிகளிடம் ஆழ ஊறிப் போயிருக்கிறது.

எனக்கு சென்னை பிடிக்க ஆரம்பித்தது சுயமாக சமைத்த போது தான். இப்போது எனக்கு பிடித்தமான அனைத்து உணவுகளையும் நானே பண்ணிக் கொள்வேன். சென்னையில் என்னைப் போல் பலரும் தங்கள் உணவை சமைப்பதன் மூலம் தங்கள் ஊரையே இங்கே கொணர்ந்திருக்கிறார்கள் என அறிவேன். அப்படி அவர்கள் சென்னையில் இருந்த படி தம் ஊரிலும் இருக்கிறார்கள்.

சென்னையில் நான் வாழ்ந்த பகுதிகளில் திருவல்லிக்கேணி மீது தான் மோகம் அதிகம். அங்குள்ள ஜாம் பஜார் போன்ற சந்தைகளின் நெடியும் பரபரப்பான கூட்டமும் பிடிக்கும். அங்குள்ள மெத்தனம் பிடிக்கும். பொறுமையாக நடந்து ஒவ்வொரு கடையாக பார்த்து நகர்கிற கூட்டம் பிடிக்கும். அங்குள்ள அருமையான பல இஸ்லாமிய ஓட்டல்கள் பிடிக்கும். பார்த்தசாரதி கோயில் பிரசாதம் பிடிக்கும். அங்குள்ள சின்ன சின்ன சந்துகளில் திரிய பிடிக்கும். அது போல் கடற்கரை பகுதியில் உள்ள மீன் சந்தை. எனக்கு மீன் வாசனை குமட்டாது. அது அப்பாவின் அக்குள் வாசனை போல் எனக்குள் பதிந்து போனது. மீன் வாங்க வேண்டாத போதும் மீன் சந்தை பகுதிகளில் திரிவேன்.

புகைப்படம்: காயத்ரி தேவி

சென்னை மிகப்பெரிய நகரம் தான். இங்கே நீண்ட காலமாய் வசிக்கிற பல பேர் கூட சென்னையில் பெரும்பாலான இடங்களுக்கு சென்றிருக்க மாட்டார்கள். சென்னைக்குள் இலக்கில்லாமல் புது புது பகுதிகளில் வண்டியில் செல்வது அலாதியான அனுபவம். 2006இல் என நினைக்கிறேன். ஒரு வாரம் போல் அடைமழை பெய்து சென்னை மூழ்கியது. என் ஸ்கூட்டர் இங்கே மூன்று முறை நீர் புகுந்து பாழாகி இருக்கிறது. ஆனால் அதன் பிறகு அப்படியான மழை வரவில்லை.
சென்னைக்கு லஷ்மி மணிவண்ணன் முதன்முறை சென்ற போது அவரிடம் ஜெயமோகன் சொன்னாராம் “சென்னையில் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகம். அதனால் அங்கே வாயை அடக்கி பேசு. பார்த்து கவனம்” என்று எச்சரித்தாராம். பிராமணர்கள் சென்னைக்கு ஒரு நூற்றாண்டு முன்னரே குடி பெயர்ந்து விட்டார்கள். அதாவது காலனியவாத கட்டத்திலேயே குமாஸ்தா, வக்கீல் மற்றும் பிற அதிகார மட்ட வேலைகள் பெற இங்கு வந்து விட்டார்கள். அதனால் முக்கியமான அதிகார மட்டங்களில் அவர்களை நிச்சயம் பார்க்கலாம். இங்குள்ள வளமான பகுதிகளில் அவர்களுக்கு வீடுகள் இருக்கும். நிறுவனங்களில் மேலாளர்களாக அவர்கள் அதிகம் இருப்பார்கள். அப்புறம் மத்திய வர்க்க குடியிருப்புகளில் அவர்கள் நிச்சயம் சிலராவது எல்லா இடத்திலும் இருப்பார்கள். இரண்டு விசயங்கள். ஒன்று அதிகாரத்தில் இருக்கிறார்கள். (இதுவும் மாறி வருகிறது). குறிப்பாய் சென்னையில் மேலாதிக்கம் செலுத்துவது பிராமணிய பண்பாடு தான். நான் கோயில், சங்கீத கச்சேரிகளை சொல்லவில்லை. மென்பொருள் நிறுவனங்களில் நீங்கள் மீன் கொண்டு போய் சாப்பிட முடியாது. பிராமணர்கள் அதை எதிர்க்க மாட்டார்கள். ஆனால் இடைநிலை சாதிகளை சேர்ந்த பலரே அதை எதிர்ப்பார்கள். அப்படி எதிர்ப்பது கௌரவம் என நினைப்பார்கள். இது தான் பிராமணியம். இரண்டாவதாய் வேறு சாதிகளை விட அவர்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படையாய் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் சென்னையில் பல்வேறு வித சமூகங்கள் வாழ்கிறார்கள். நாம் புதுப் புது பகுதிகளுக்கு சென்று மக்களை கவனித்தால் எத்தனை எத்தனை பேச்சுவழக்குகள், சடங்குகள், பாணிகள் உள்ளன என பார்க்கலாம். குளத்தில் குளிக்கும் பெண்கள் தலை மட்டும் வெளித்தெரிய மூழ்கி இருப்பது போல் பலவகை வேறுபட்ட சமூகங்கள் இங்கே தம்மை வெளிப்படுத்தாமல் பொது ஒழுக்கின் பகுதியாக வாழ்கிறார்கள்.

சென்னையில் வண்டி ஓட்டுவது பற்றி சொன்னேன். இங்கு ஒழுங்கீனத்தின் நடுவே ஒரு ஒழுக்கம் உள்ளது. அதை உணர்ந்தவர்கள் நிம்மதியாக ஓட்டலாம். ஆனால் விதிமுறைகளை பற்றி கவலைப்படுபவர்களுக்கு நிச்சயம் ரத்த கொதிப்பு ஏற்படலாம். எனக்கு ஒருமுறை கூட விபத்து ஏற்பட்டதில்லை. ஒருதடவை ஒரு பெரிய வேன் என் பின்னால் வந்து மோதியதில் டெயில் லைட் உடைந்து விட்டது. கொஞ்சம் பயந்து போனேன் அவ்வளவு தான். போக்குவரத்து அதிகம் என்றால் வண்டி ஓட்டுவதில் பாதுகாப்பும் அதிகம். மெல்ல போகிற போக்கில் நாமும் நம்மை செலுத்தி விடலாம். எனக்கு சென்னை போக்குவரத்து ஒரு நீண்ட மலைப்பாம்பு போல் தோன்றும். அதன் வயிற்றுக்குள் புகுந்து கொண்டு நாம் வண்டி ஓட்டுவதாய் கற்பனை பண்ணிக் கொண்டு விட்டால் போதும்.

எங்கள் ஊரான பத்மநாப்புரத்தில் எப்போதும் ஒரு ஜிலுஜிலு குளுமை தான். அங்கே மோசமான வெயிலும் இல்லை கடுமையான குளிரும் இல்லை. முதன்முதலில் 12 வயதில் சென்னைக்கு சுற்றுலா வந்த போது என் சருமம் பற்றி எரிவதாய் உணர்ந்தேன். அப்படி ஒரு எரியும் வெயில். ஆனால் சென்னை வெயிலும் கொசுவும் கொஞ்சம் பழகி விட்டது. 

முக்கியமாய், இங்கு பிடித்தமான இரண்டு விசயங்கள் அமைந்தால் வெயிலும் வேறு பிரச்சனைகளும் பொருட்டாக இருக்காது.
ஒன்று நண்பர்கள். இரண்டு வேலை. ரெண்டுமே பிடித்தமானதாய அமைய வேண்டும். அப்புறம் சென்னை தான் உங்கள் உலகமாய் தோன்றும். எனக்கு சில நல்ல நண்பர்கள் இப்போதைக்கு உள்ளார்கள். அவர்கள் தான் என் சென்னை.

ஒருவிதத்தில் சென்னை நிறைய வாகனங்களும் டிராபிக் சிக்னல்களும் மக்களும் கொண்ட ஒரு சின்ன கிராமம் போலத் தான் தோன்றுகிறது. நமக்கான நண்பர்களும் பிடித்த வேலையும் அமைந்து விட்டால் தனிமை தோன்றாது, ஓரளவு. மற்றபடி இது எனக்கு புதிர்பாதைகளும் கண் கூசும் வெளிச்சங்களும் கொண்ட பிரம்மாண்ட நகரமாக தோன்றியதில்லை. இங்கே போதை மருந்தும் இரவு கொண்டாட்டங்களுக்கான நிறைய இடங்கள் இல்லை. துப்பாக்கி விற்கும் மாபியா சந்தை இல்லை. தில்லியில் போல் வெளிப்படையாக திருட்டு பொருள் விற்கும் சந்தையோ கொல்கொத்தா போல் விபச்சாரிகளின் வெளிப்படையான பிராந்தியமோ இல்லை. இங்கே மாபியா குழுக்கள் இடையே துப்பாக்கி சண்டைகள் இல்லை. மதக்கலவரங்கள், மாபெரும் மத ஊர்வலங்கள், வேற்று இனத்தவரை விரட்டும் கலவரங்கள், மக்களை உருத்தெரியாமல் சிதறடிக்கும் தீவிரவாத தாக்குதல்கள் இல்லை. சூதாட்ட தெருக்கள் இல்லை. பெண்கள் மீதான நேரடியான வன்முறை இல்லை. (இதெல்லாம் வேண்டுமென சொல்லவில்லை) ஆனால் தீவிரவாதம் தவிர வேறு எல்லாம் ஒரு சின்ன அளவில் மறைமுகமாய் இயங்குகிறது. இரவில் சீக்கிரம் உறங்கி விடுகிறது இந்நகரம். வட இந்தியாவில் போல் நாம் பிரிவினை கலவரங்களையோ போரின் தாக்கத்தையோ இங்கு உணர்ந்ததில்லை.

 கிராமம் போல் தோன்றுகிற நகரம் இது. நகரம் போல் தோன்றுகிற நகரம் அல்ல.1 comment:

ஜீயெஸ்கே said...

//தமிழ் இளைஞர்களுக்கு நம்முடைய பல அருமையான தென்னிந்திய பண்டங்களை தெரியாது. அவர்கள் தம் அடையாளத்தை களையத்தான் இப்படியான உணவுகளை விரும்புகிறார்கள்//

மிகச் சரியான கருத்து.