Monday, August 18, 2014

உலகமில்லாத உலகில் எழுதப்படும் கவிதைகள் – தமிழவன்


ஆர்.அபிலாஷ் சமீபத்திய தமிழ்க் கவிதையை எழுதுபவர். நான் மூன்று தலைமுறையைத் தாண்டி (ஒரு தலைமுறை பத்து ஆண்டுகள்) அவரைப் படிக்கிறேன். இவருக்கு முன்பு முப்பது வருடங்கள் தமிழ் மொழி எப்படி கவிதையை உருவாக்கியது, கவிதைத் தமிழ் மொழியை மாற்றியது, கருத்து புலப்பாட்டு முறையில் நடந்த விளைவுகள் என்ன என்றெல்லாம் நான் யோசித்தபடி வாழ்ந்து கொண்டிருப்பவன். புதுக்கவிதை உதித்த போது இளைஞனாக அக்கவிதையை உச்சரித்தபடி இருந்த தலைமுறை நான். எனக்கு இன்றைய – மிகவும் மாறிப் போன – தமிழ்மொழியைக் கவிதைமுறையில் தொடர்ந்து மாற்றி அமைக்கும் அபிலாஷ் என்ன மாதிரி தெரிகிறார்? இது பற்றி எழுத அவரது முதல் கவிதைத் தொகுப்பு “இன்னும் மிச்சமுள்ளது உனது நாள்” மீதான என் கருத்துக்கள் இவை.

முதலில் தொகுப்பின் 25 கவிதைகளையும் வாசித்த போது அவர் முன்னுரையில் எழுதியது ஞாபகம் வந்தது. இவற்றை எல்லாம் முதன்முதலில் வலைப்பக்கத்தில் பிரசுரித்திருக்கிறார். நான் என் வாழ்நாளில் இதுவரை வாசித்த 1000க்கும் அதிகமான புதுக்கவிதைகள் அச்சில் முதன்முதலில் எழுதப்பட்டவை. ஊடகம் உள்ளடக்கத்தை தீர்மானிக்கிறது என்கிற தத்துவத்தைச் சொன்ன மக்ளூகன் சரிதான் என்று அபிலாஷ் கவிதைகளை படிக்கையில் பட்டது.

அதாவது எல்லாம் புரியக் கூடிய கவிதைகள். புரியாமை இல்லை. ஆனால் ஒரு அழகியலின் லாவகம் இயல்பாய் கவிதைகளில் காணப்பட்டது. வாசிக்கிறவர்கள் முன்கூட்டிய கவிதை வாசிப்பு அனுபவம் ஏதும் இல்லாமல் இக்கவிதைகளுக்குள் பிரவேசிக்கலாம். கணினி கவிதைகளுக்கான முதல் இலக்கணம் இது. அபிலாஷ் கவிதை மையமிட்டு உருவாகும் பூமி இது. அதனால் 33 வயதாகும் அபிலாஷ் 63இல் கவிதையா நான் எழுதினேன் எனக் கேட்கும் நிலைமைக்கு போகலாம் அல்லது கவிதைகளில் புதுப்பாதைகளை திறந்தபடியே தொடர்ந்து பயணிக்கவும் செய்யலாம். எனக்கு தெரியவில்லை.

இவர் கவிதைகளை தொடர்ந்து படிக்கும் போது வீட்டுப்பிராணிகள் என் கண்ணில் தட்டுப்பட்டார்கள். பூனை, நாய் போன்றவை “வேட்டை நாயும் காவல் நாயும்” என்ற கவிதையில் வரும்.

“என் நாய் சரியாய்
தூங்குவதே இல்லை
என மருத்துவரிடம்
காண்பித்தேன்...”
போன்ற உரைநடையை அதிகம் நம்பும் வரிகளே இவர் கவிதை முழுவதும் வருகின்றன. நாய் பற்றி சொல்லும் கவிதையில் நாய் பற்றி மட்டும் அவர் பேசுவதில்லை. டி.வி விவாதம் நடந்து கொண்டிருக்கிற காட்சிக்கிடையில் நாய் பற்றி அபிலாஷ் பேசுகிறார். நாய்க்கு டி.வி விவாதங்களில் ஒருவர் சற்று அதிகமாகக் குரலை உயர்த்திய விசயம் புரியவில்லை. இது அபிலாஷின் நாய். இதே கவிதையில் வேட்டை நாய்க்கும் காவல் நாய்க்கும் உள்ள வித்தியாசத்தை ஒரு நாய்க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் கூறுகிறார்: “இலக்கு தொலைவில் இருந்தால் வேட்டை நாய். அருகில் என்றால் காவல் நாய்”. பிராணிகள் இலக்கை வைத்து நிர்ணயிக்கப்படும் நுட்பமான விஷயம் ஆர்ப்பாட்டமில்லாமல் இவரது உரைநடை என்ற சாதாரணத்தை கவிதையாக்குகிறது. பொதுவாய் அபிலாஷின் கவிதையாக்கல் உத்தி என்பது இந்த எதிர்பாராத, சாதாரண விசயத்தை கவனித்து எதிர்பாராத இன்னொரு பார்வையை அதில் பதிய வைத்து கவிதையாக மாற்றுவது தான். இது பல கவிதைகளில் காணப்படுகிறது. ஞானக்கூத்தனிடம் கடைசி காகத்தை பற்றிய கரிசனை போன்ற விசயம் இது. ஞானக்கூத்தன் அப்புறம் கவனிக்காமல் விட்ட விசயம் அபிலாஷிடம் அவரை அறியாமல் முக்கிய விசயமாகிறது. “வேட்டை நாயும்...” என்கிற கவிதையின் வரிகள் இவை.
“பிரச்சனை முக்கியமே அல்ல
பல சமயங்களில்
அது நாலாபக்கமும் ஓடிக் குரைக்கும் முன்
பிரச்சனை முடிந்தே போகிறது”

நாயின் பிரச்சனை வேறுவிதமான பிரச்சனை. நாய் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் முறையும் வேறு. மனிதர்கள் அப்படியா? நாமோ எதையும் நம்மோடு நினைவில்லாமலே இணைத்துக் கொண்டே இருக்கிறோம். அதற்கு வாழ்க்கை என்ற பெயரும் கொடுக்கிறோம் இல்லையா? இப்படி நாம் இருப்பதனால் பிரச்சனையை நம்மைப் போல் பார்த்து மண்டையை உருட்டாத நாய் செய்யும் காரியத்தை ஒருவர் அறியும் போது அந்த அறிதல் கவிஞனுக்கு மட்டுமே அறிந்த “அறிவாகி” விடுகிறது. கவிஞன் தனக்கு மட்டுமே அறிந்த அறிவைக் கண்டுபிடிக்கிறவன். அபிலாஷ் அப்படிப்பட்ட கவிதைகளை கவிதைகளை எழுதும் திறம் படைத்தவர் என்பதற்கு இந்த தொகுப்பில் அனேகம் கவிதைகள் சாட்சியாகின்றன. அது போல் இன்னொரு கவிதையில்
“நாய்க்கு கதவின் பொருள்
புரிவது இல்லை” (இடைப்பட்ட வெளியில்)
என்கிறார். நான் உடனே கவிதையை வாசிப்பதை நிறுத்தி விட்டு யோசிக்க ஆரம்பித்தேன். கதவு அர்த்தம் உள்ளதா இல்லாததா என்ற கேள்வி தோன்றியது. வழக்கமான பொருள்களையும் நாம் அறிந்தவற்றையும் வழக்கமற்றதாயும் நாம் அறியாதவையாயும் மாற்றும் கவித்துவ செயல் நடைபெறுகிறது. கவிதையின் பிரதியல் தளம் மேலும் கீழுமாய் வாசிப்பின் போது ஏற்படும் அதிர்ச்சியால் இடமாற்றம் செய்கின்றது.

இவருடைய பூனை பற்றிய கவிதைகளை பற்றியும் ஓரிரு வரிகளாவது பேச வேண்டும். இந்த பூனை
“நடக்க அதிகம் பிரியமில்லாத
உயரங்களை வெறுக்கும்
தண்ணீரைக் கண்டு நடுங்கும்
பூனை” (பூனையின் முதல் பருவ காலம்)

இந்தப் பூனை என்னும் பிராணியும் அதீத அறிவின் (அல்லது கவிதையின்) வாரிசாகவே உள்ளது என்று என் மனம் சொல்லுகிறது. ஏனெனில் பூனைக்கு உயரங்களை வெறுக்கும் குணம் உண்டு என்று யாரும் இதுவரை கண்டுபிடித்ததில்லை. கவிதை எழுதுகிறவன் மட்டுமே கண்டுபிடிக்கும் சமாச்சாரம் இது.

இந்த கவிதையில் முடிவு வரிகள் இப்படி முடிகின்றன:
“பூனையும் நானும்
யோசிக்க ஆரம்பித்தோம்
வெயிலோ மழையோ காற்றோ
அடிக்காத ஒரு வேளையில்”

அதாவது வெயிலோ மழையோ காற்றோ அடிக்காத ஒரு வேளை என்று ஒன்றில்லை. எனவே இது இல்லாத ஒரு நேரத்தை பற்றி பேசுகிறது. அந்த இல்லாத நேரம் இல்லாத இடம் தான். காலமும் இடமும் இல்லாதது என்பது உலகமற்ற தன்மை. உலகமற்ற தன்மையை பூனை உணர்த்துகிறது. பூனை என்பது கவிதையைப் போல இல்லாததன் குறியீடோ இவர் கவிதைகளில் என்று எனக்கு கேட்க தோன்றுகிறது.

இவ்வளவு மட்டுமல்ல. நிறைய எழுதலாம். இக்கருத்துக்கள் எல்லா கவிதைகளுக்கும் பொருந்தும்.

அபிலாஷின் அடுத்த தொகுப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இந்த கவிதைகளை பற்றி எனக்கு அவர் சொன்னதற்கு நன்றி.

No comments: