Saturday, August 16, 2014

“ஜிகிர்தண்டா”: பவர்ஸ்டார் உளவியல்


சிலநேரம் வணிக இயக்குநர்கள் பரீட்சார்த்தமாய், கொஞ்சம் கலை ரசிகர்களும் பாராட்டும்படி ஒரு படம் எடுத்துப் பார்க்க ஆசைப்படுவார்கள். “ஜிகிர்தண்டா” அப்படியான முயற்சி. இந்த படத்தில் மூன்று கதைகள் உள்ளன. சினிமா எடுக்கிற ஒரு இளைஞனின் போராட்டங்கள், தடைகள் பற்றியது. இன்னொன்று ஒரு சைக்கோத்தனமான ரௌடி பற்றியது. மூன்றாவது பவர்ஸ்டார் பற்றியது. படம் இளைஞனில் ஆரம்பித்து சைக்கோவில் வந்து பவர்ஸ்டாரில் முடிகிறது. மூன்றுமே தீவிரமுள்ள கதைகள் தாம். ஆனால் எதிலும் நிலைகொள்ளாமல் படம் தத்தளிக்கிறது.
இது பெரும் கனவுடன் எழுதப்படுகிற கதைகளுக்கு ஏற்படுகிற சிக்கல் தான். கார்த்திக் சுப்புராஜ் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு கதை சொல்ல முயல்கிறார். ஆனால் இது கதைக்கு தேவையற்ற அலங்காரமாய் இருக்கிறது. உதாரணமாய் சித்தார்த்திடம் ஒரு தயாரிப்பாளர் கேங்ஸ்டர் கதை இருந்தால் படம் பண்ணலாம் என்கிறார். இது தான் படத்தின் முதற்காட்சியாக இருக்க வேண்டும். ஆனால் படம் ஒரு ரியாலிட்டி ஷோவில் இரண்டு ஜட்ஜுகள் மோதுவதில் ஆரம்பித்து சுவாரஸ்யமாக ஆனால் தேவையற்று தயாரிப்பாளர் சித்தார்த்திடம் கேங்ஸ்டர் படம் பண்ண கேட்பதை நோக்கி மெதுவாக திருப்பதி பக்தர் அணிவகுப்பு போல் நகர்கிறது. அதே போல் லஷ்மி மேனனும் அவர் அம்மாவான அம்பிகாவும் சேலை திருடும் சுவாரஸ்யமான மற்றொரு காட்சி. லஷ்மி மேனனின் திருட்டு சுபாவம் கதையில் வேறெங்கும் வராத நிலையில் இக்காட்சியும் மற்றொரு திணிப்பு காட்சி தான். ஆனால் நகைச்சுவை இந்த இழுவைத்தன்மையை கவனிக்க செய்யாமல் வேகமாய் நகர்த்தி கொண்டு போகிறது.


திரைக்கதை ஒரு புறம் ஒரு நவீனப்பெண் கட்டத் தெரியாமல் கட்டின சேலை போல் அங்கங்கே அவிழ்ந்தும் துருத்தியும் தெரிந்தாலும் நலன் குமாரசாமி பாணியிலான காட்சி நகர்த்தல் ஒரு வேகத்தை, கச்சிதத்தை அளிக்கிறது. ஒவ்வொரு காட்சியும் ஆரம்பத்திற்கு சம்மந்தமில்லாமல் ஒரு திருப்பத்துடன் முடிகிறது. கார்த்திக் ரியாலிட்டி ஷோவில் தோற்றிட அவனுக்கு ஒரு தயாரிப்பாளர் வாய்ப்பளிக்க முன்வருகிறார். ஆனால் அடுத்த காட்சியில் அவன் நம்பிக்கையோடு கதை கூற அவர் அக்கதையை நிராகரிக்கிறார். இப்படி ஒவ்வொரு காட்சியிலும் மெனக்கட்டிருக்கிறார்கள். இப்படி கதையின் நகர்வில் மெனக்கெடுவது எண்பது, தொண்ணூறுகளில் தமிழில் இருந்த ஒரு பழைய பாணி. இந்த பாணி நடுவே தொலைந்து ரெண்டாயிரத்தில் தமிழ் சினிமாவுக்கு வயிற்றுப்போக்கு வந்த பின் “சூது கவ்வுமில்” மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கொண்டு எந்த சாதாரண கதையையும் சுவாரஸ்யமாக்கலாம். ஆனால் “சூது கவ்வுமில்” இருந்த ஒரு உளவியல் ஆழம், அபத்தம் “ஜிகிர்தண்டாவில்” இல்லை. இப்படத்தின் கதையமைப்பில் ஒரு பிளாஸ்டிக் தன்மை மற்றும் கார்ட்டூன் தன்மை தான் அதிகம். அதனால் படம் உணர்ச்சிகரமாய் நம்மை கவராமல் விலகி நின்று பார்த்து சிரித்து ரசிக்க செய்கிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் வாழ்க்கை பற்றி ஒரு தட்டையான பொதுப்புத்தி உள்ளது. நல்லவன் × கெட்டவன் என மனிதர்களை இருமையாய் பார்க்கிறவர் அவர். “பீட்ஸாவில்” மூடநம்பிக்கை கொண்டவர்களை எப்படி ஒரு ஜோடி சாமர்த்தியமாய் ஏமாற்றுகிறார்கள் எனக் காட்டினார். பேய் குறித்த மிகை நம்பிக்கையை மூடநம்பிக்கையாய் கருதுவதே ஒரு பொதுப்புத்தி தான். ஏனென்றால் பேயை நம்புகிற ஒரு கிராமத்து ஆள் முட்டாள் என்றால் சாய்பாபாவின் மந்திரதந்திரங்களை நம்பின அப்துல் கலாம், சச்சின் டெண்டுல்கள், நரசிம்ம ராவ் போன்ற பல பிரபலங்களை என்ன சொல்லுவீர்கள்? நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ளவர்கள் பலர் முனைவர் பட்ட ஆய்வாளர்கள். நம்முடைய பல விஞ்ஞானிகள் அறிவுஜீவிகளுக்கு தர்க்கத்தை விட மூடநம்பிக்கையிலே பிடிப்பு அதிகம். கற்பனையை நம்புவதில் இந்தியர்களின் பண்பாட்டு உளவியல் உறைந்துள்ளது. இது பகடி பண்ண வேண்டிய வேடிக்கை விளையாட்டு அல்ல. இதை அலசுவதில், இதனுள் பயணிப்பதில் சுப்புராஜுக்கு ஆர்வமில்லை. இது போக தவறு செய்கிற விஜய் சேதுபதி, ரம்யா ஜோடியை கிறித்துவர்களாக, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் தம்பதியினராக, அனாதைகளாக காட்டி மேலும் பல பொதுப்புத்திகளை வைத்து விளையாடி இருப்பார். இப்படியான ஒருவரால் என்றுமே ஆழமான கலைத்தன்மை கொண்ட சினிமா எடுக்க முடியாது. அவரால் தீவிரமான விசயத்தை தொலைவில் நின்று பார்த்து மேலோட்டமாய் கார்ட்டூன் வரைய மட்டுமே முடியும்.
“ஜிகிர்தண்டாவில்” இயக்குநர் ஒரு சைக்கோ கொலைகாரன், பவர்ஸ்டார் மனப்பான்மை என இரு முக்கியமான உளவியல் ஆழமுள்ள விசயங்களை எடுத்துக் கொள்கிறார். ஆனால் அவற்றை பெரியவர்களிடம் இருந்து குழந்தைகள் செல்போனை பிடுங்கி கேம்ஸ் ஆடுவது போல் கையாள்கிறார். “அசால்ட் சேது” கதை “புதுப்பேட்டை” அளவுக்கு உயர வேண்டியது. அதற்கான சாத்தியங்களை உள்ளடக்கியது. ஆனால் சுப்புராஜ் ஜாலியாக ஸ்டைலாக சித்தரிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறார். தன்னைப் பற்றி அரைகுறையாய் தெரிந்து கொண்டு மட்டமாய் படத்துடன் ரிப்போர்ட் எழுதியதற்காய் ஒரு பத்திரிகையாளனை கொளுத்துகிறவன் அசால்ட் சேது. இங்கு தான் பிரபலத்தை மோகிக்கும் அவனது அற்ப ஆசைகளும் அதற்கான மிகையான தன்னம்பிக்கையும் துவங்குகிறது. ஆனால் சுப்புராஜ் இந்த இழையை பின் தொடராமல் அவனை மைக்கேல் கோர்லியானோவாக காட்டுவதில் முனைப்பு காட்டுகிறார். அசால்ட் சேது ஏன் தாதாவானான் என்பதற்கு ஒரு கதை வருகிறது. பள்ளி நாடகம் ஒன்றில் நடிக்கும் சிறுவனான சேதுவை நோக்கி பிற மாணவர்கள் சிரிக்க அவன் கோபமாகி அவர்களை அடிக்கிறான். தன்னைப் பார்த்து யார் சிரித்தாலும் தாங்கிக் கொள்ள முடியாது என்கிறான். ஆனால் ஒருவர் அப்படி இருப்பதும் நியாயம் தானே, நம்மில் பலரும் அப்படித் தானே! ஆனால் சுப்புராஜ் அப்படி யோசிப்பதில்லை. சேதுவின் இந்த குணம் அற்பமானது என காட்டுகிறார். அதனால் தான் சித்தார்த் அவனை வைத்து பின்னர் பகடியாய் படம் எடுப்பதை இயக்குநர் நியாயப்படுத்துகிறார். ஒரு “விளிம்புநிலைத்தனம்” இந்த படத்தின் உருவாக்கத்தில் தான் உள்ளது; ஆனால் மையத்தில் இது கீழே உள்ளவனை அற்பமாய் பார்த்து சிரிக்கும் ஒரு மேலே உள்ளவனின் மனநிலையில் எடுக்கப்பட்டது.
அசால்ட் சேது எனும் தாதா நடிகனாகி நட்சத்திரமாக ஆசைப்படுகிறான். இந்த “பவர்ஸ்டார்த்தனம்” பகடி பண்ண வேண்டிய ஒன்று தான். ஆனால் ஒரு நல்ல கலைஞன் இந்த பவர்ஸ்டார் குணம் சமூகத்தில் வேறெங்கெல்லாம் உள்ளதென்றும் பார்ப்பான். தனக்குத் தானே விருதுகள் தருகிற ஒரு அரசியல்வாதியிடம், விஜய் அவார்ட்ஸில் சுரணையின்றி விருது வாங்கும் சிவகார்த்திகேயனிடம், சதா தன் ஸ்டேட்டஸுக்கு லைக் தேடும் பேஸ்புக் வெறியர்களிடம், பத்தாயிரம் பாலோயர்கள் வந்ததும் எழுத்தாளனாகி விட்டதாய் உணர்ந்து மேடை அமைத்து பிரமுகர்களை அழைத்து புத்தகம் வெளியிடும் போலிகளிடம், அன்றாட வாழ்க்கையில் சுயகவனமும் பாசாங்கும் மிகுந்து விட்ட சாமான்ய மக்களிடம் எங்கும் இந்த பவர்ஸ்டார் இருக்கிறான். ஊடக பெருக்கத்தால் மக்கள் தம் சுய அடையாளங்களை சதா முன்னிறுத்தும் நிலையில் கேமரா முன் நிற்காத ஒவ்வொருவரும் தம் அடையாளம் காணாமல் போவதாய் பதறுகிறார்கள். டிவியில், திரையரங்கில் சில நொடிகள் தோன்ற எவ்வளவு பாடுபடவும் அவர்கள் தயார். இது மந்தை மனப்பான்மை கொண்ட மக்களிடம் ஊடகம் ஏற்படுத்துகிற ஒரு கலாச்சார நெருக்கடி. இந்த நெருக்கடி இன்று அங்கீகரிக்கப்பட்ட ஒரு பண்பாடாகி விட்டது. இதன் சமூகவியல் பின்னணி என்ன, உளவியல் என்ன என விசாரித்திருந்தால் இப்படம் “Little Miss Sunshine போல் இன்னொரு நிலைக்கு உயர்ந்திருக்கும். ஆனால் கொலு அடுக்குவதிலேயே இயக்குநரின் கவனம் உள்ளது.
இந்த படத்தை ஒரு விதத்தில் உதிரி உதிரியான “காட்சிகளின் சினிமா” எனலாம். எனக்குப் பிடித்த காட்சிகள் இவை. பிட்டு பட விரும்பியான ஒரு ரௌடியின் பாத்திரம். அவருடைய முரட்டுத் தோற்றத்தில் குழந்தைத்தனமான சிரிப்பு. அந்த கதை சொல்லும் பெட்டிக்கடைக்காரர் வரும் இடங்களில் படத்துக்கு ஒரு மிகுகற்பனை (fantasy) தொனி கிடைப்பது. அவரது குருவம்மா பற்றின கதை, அப்பாத்திரம் சித்தார்த்துக்கும் அவனது நண்பனுக்கு கண்ணில் தோன்றுவது ஆகியவை லத்தீன் அமெரிக்க கதைகளை சில நிமிடங்கள் நினைவுபடுத்தின. சேது தன் நண்பனுடன் சேர்ந்து ஒரு போலி கட்டப்பஞ்சாயத்து நடத்துகிற காட்சியும் புதுமையாக இருந்தது. அது போல் சேதுவின் அடிதடி, கட்டபஞ்சாயத்துகளை சித்தார்த் அவனது அனுமதியுடன் படம்பிடிக்கிற காட்சிகள், நடிப்புப் பயிற்சியாளர் வந்து சேதுவுக்கும் குழுவினருக்கும் நடிப்பு சொல்லித் தரும் இடங்கள் போன்றவை - கொஞ்சம் மேலோட்டமாக தான் என்றாலும் - ஒரு மெட்டாசினிமா தன்மை கொள்கின்றன. கட்டப்பஞ்சாயத்தின் போது சேதுவிடம் சித்தார்த் அடிக்கும் படி சமிக்ஞை காட்டி அதை படம் பிடிக்கிற இடம் ஆரம்பத்தில் வந்த ரியாலிட்டி ஷோ காட்சியுடன் நன்றாக பொருந்துகிறது. இந்த விசயங்கள் முழுக்க தமிழுக்கு புதுசு. “ஜிகிர்தண்டாவை” நிச்சயம் இந்த புதுமைக்காக பாராட்டலாம்.
சேது பாத்திரத்துக்கு “பருத்தி வீரன்” கார்த்தியை நினைவுபடுத்தும் மேக் அப் போட்டிருப்பது இப்படத்தின் மற்றொரு அடுக்கு. பாபி சிம்ஹா தலையை வெட்டி உயர்த்துவது, அவரது உடல்மொழி கூட “பருத்திவீரனை” போல செய்கிறது. “பருத்தி வீரன்” உண்மைக் கதை எனச் சொல்லி உண்மையான பருத்தி வீரன் வழக்கு தொடுத்த சர்ச்சை நினைவிருக்கும். அது போல் ஒருவரை கேலி செய்து உண்மைக் கதை எடுத்தால் இன்றுள்ள சூழலில் என்னவாகும்? ஒன்றும் ஆகாது. மக்கள் பகடியையும் பகடி பண்ணப்படுகிற ஆளையும் ஒருமித்து ரசிப்பார்கள். “ஜிகிர்தண்டாவின்” மிக அழகான இடம் பருத்திவீரனை பவர்ஸ்டார் உளவியலோடு இணைப்பது தான்.
மலையாளத்தில் “உதயனானு தாரம்” மற்றும் அதன் இரண்டாம் பாகமான “பத்மஸ்ரீ டாக்டர் சரோஜ் குமார்” ஆகிய படங்கள் இது போன்ற பவர்ஸ்டார் தொல்லையை பகடி பண்ணும் படங்கள் என வெளியில் இருந்து பார்க்க நமக்கு தோன்றும். ஆனால் அதில் கேலி பாத்திரமும் வில்லனுமாக சரோஜ்குமாராக வரும் ஸ்ரீனிவாசன் உண்மையில் மலையாள ”சூப்பர்ஸ்டார்” மோகன்லால் தான் என அதைப் பார்க்கிற மலையாளிகளுக்கு தெரியும். மோகன்லால் ரெண்டாயிரத்துக்கு பிறகு தன் தனித்துவத்தை இழந்து ஒரு பவர்ஸ்டாராக மாறினார். எந்த காட்சியில் எந்த சட்டகம் என்றம் என்றாலும் மோகன்லால் நடுவில் நிற்க சுற்றி உள்ளவர்கள் அவரைப் புகழ்வார்கள் அல்லது அவர்கள் கேட்க மோகன்லால் தன்னை தானே புகழ்ந்து நீளமான வசனங்கள் பேசுவார். இந்த நட்சத்திர வெறி மலையாள சினிமா பத்தாண்டுகளாய் சாக்கடைக்குள் முக்கி வைத்திருந்தது. லால், மம்முட்டி, சுரேஷ் கோபி மூவரும் நமது “சிம்மா சிம்மா நரசிம்மா” வகை படங்களை தான் பத்து வருடங்களாய் எடுத்தார்கள். இப்போது தான் மலையாளிகளுக்கு விடிவு கிடைத்திருக்கிறது. இதைத் தான் ஸ்ரீனிவாசன் கேலி பண்ணுகிறார். அதுவும் “பத்மஸ்ரீ டாக்டர் சரோஜ் குமாரில்” இன்னும் உக்கிரமாய் லாலை பகடி பண்ணினார். சரோஜ் குமாருக்கு படப்பிடிப்பின் போது நாயகியை வளைப்பதிலேயே முழு ஆர்வமும் இருக்கும். இது வேறு யாருமில்லை, கேரளாவில் பெயர் போன ஸ்த்ரிலோலரான மோகன்லால் தான். சுவாரஸ்யம் இதன் முதல் பாகமான “உதயனானு தாரத்தில்” லாலே நடித்திருந்தார் என்பது. இதைத் தான் நாம் கவனிக்க வேண்டும். லாலைப் பற்றி லாலே நடிக்க ஒரு பகடி படம். அது வெற்றியும் பெறுகிறது. ஹீரோயிசத்தையும், பவர்ஸ்டார் பண்பாட்டையும் கேலி பண்ணி விமர்சிக்கும் அப்படம் வந்து அதை ரசிக்கும் மக்கள் தொடர்ந்து லால் நடிக்கிற அதே ஹீரோயிச படங்களையும் தான் ரசிக்கிறார்கள். இரண்டாம் பாகம் வெளியானதும் லாலின் மீதான பகடி இன்னும் பட்டவர்த்தமாக இருந்தது. இதில் லால் தனக்கு பிடிக்காதவர்களின் படங்களை முடக்குகிறார், வரி கட்டாமல் டபாய்க்கிறார், தன்னிடம் யானைக்கொம்பு உள்ளதாய் பந்தா பண்ணுகிறார் போன்ற குற்றச்சாட்டுகள் வருகின்றன. லாலுக்கு ராணுவத்தில் கௌரவ லெப்னெண்ட் ஜெனரெல் பதவி கொடுத்தது போல் இப்படத்திலும் சரோஜ் குமார் எனும் ஹீரோவுக்கு கொடுக்க அவன் ஊரெல்லாம் பீற்றிக் கொண்டு திரிகிறான். இப்படம் வெளியானதும் லாலுக்கும் ஸ்ரீனிவாசனுக்கும் உறவு கசந்தது என பேச்சு கிளம்பியது. ஆனால் மோகன் லால் அப்படத்தில் பகடி பண்ணப்படுவது தான் அல்ல என பேட்டி கொடுத்தார். மக்கள் மோகன்லால் பகடி பண்ணப்படுவதையும் ரசித்தார்கள், பகடிக்குள்ளாகிற அவரது ஹீரோயிசத்தையும் பிறகு வந்த படங்களில் ரசித்து வெற்றி பெற செய்தார்கள். சரோஜ்குமாரான மோகன்லாலுக்கும் கைதட்டு. மோகன்லாலான சரோஜ்குமாருக்கும் கைதட்டு.
உண்மையில் எதுவுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படாத இந்த காலத்தில் நீங்கள் ரசிகர்களையே கிண்டல் பண்ணி ரசிகர்களையே ரசித்து கை தட்ட வைக்கலாம். இயக்குநர் ராம் விஜய் அவார்ட்ஸை கடுமையாய் விமர்சித்து அவர்கள் மேடையிலேயே பேச அதன் விளம்பர சாத்தியத்தை உணர்ந்து விஜய் டீவி ராம் தன்னை திட்டுவதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது. “இப்படி விமர்சிக்கப்படுவது எங்கள் மீதான நம்பிக்கையை காட்டுகிறது” என தன்னை அசட்டுத்தனமாய் நியாயப்படுத்தவும் செய்தது.
நடிகர் ஜான் விஜயின் பிறந்தநாள் அன்று அவர் ஒரு திரையரங்கை வாடகைக்கு எடுத்து தானும் நண்பர்களுமாய் டி.ராஜேந்தரின் “வீராச்சாமி” பார்த்து சிரித்து கலாட்டா செய்து திரையரங்கை கிழித்து குப்பையாக்கி அதகளம் பண்ணினார்கள். காலையில் திரையரங்கின் மோசமான நிலையை பார்த்த உரிமையாளர் அதற்கான நஷ்ட ஈடை கோரினார். ஆனால் இவ்வாறு தனது படத்தை ஒருவர் பிறந்தநாள் அன்று பார்க்க தனியாய் திரையரங்கை வாடகைக்கு எடுத்து நண்பர்களுடன் ரசித்ததாய் கேள்விப்பட்ட டி.ராஜேந்தர் உற்சாகமாகி ஜான் விஜயை உடனடியாய் அழைத்தார். நன்றி தெரிவித்து திரையரங்குக்கான நஷ்ட ஈட்டையும் தானே செலுத்துவதாய் சொன்னார். இந்த மனப்பான்மை தான் அசால்ட் சேதுவிடமும் உள்ளது. நம்மை யார் கேலி பண்ணினாலும் நாம் சகிக்க மாட்டோம் தான். ஆனால் கேலி மூலமாய் ரசிக்கப்பட்டால், புகழ் வந்தால் தாராளமாய் கேலியை ஏற்போம். பேஸ்புக்கில் உள்ள கணிசமான பேர் தம்மை யாராவது கேலி பண்ணினால் அதற்கு லைக் போடுகிறவர்களே! “ஜிகிர்தண்டாவில்” சேது தன்னை கேலி பண்ணி படம் எடுத்த சித்தார்த்தை பழி வாங்க துரத்துவதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். லட்சம் பேர் தன்னை ஏதோ ஒரு விதத்தில் ரசிக்கிறார்கள் என்பதே அவனுக்கு புளகாங்கிதம் கொடுத்திருக்கும். அது தான் பவர்ஸ்டார் உளவியல்.
ஒரு காலத்தில் பாலசந்தர் பரீட்சார்த்தமான கதைக்களன், கருவுடன் நிறைய படங்கள் எடுத்திருக்கிறார். ஆனால் அவற்றின் மையமாய் ஒரு பொதுப்புத்தியும் ஜனரஞ்சக அசட்டுத்தனமும் தான் இருக்கும். சாம்பார் கரண்டியை எடுத்து பாயசத்தில் போடுவார். பாயசக் கரண்டியை மோரில் போடுவார். கடைசியில் வெந்நீரை எடுத்து ரசம் என விளம்புவார். என்ன தான் தொடர்ந்து தன் புதுமைக்காக கவனிகப்பட்டாலும் பாலசந்தருக்கு ஒரு நிலைத்த மதிப்பு இல்லாமல் போனது இந்த ஆழமின்மையால் தான். கார்த்திக் சுப்புராஜ் அந்த பாலசந்தரை நினைவுபடுத்துகிறார்.

4 comments:

Meena Narayanan said...

super abilash chandran;

Muthuram Srinivasan said...

எல்லாரும் நீங்க நெனைக்கிற மாதிரியே படம் எடுக்கணும்னு நெனைக்கிறது என்ன மாதிரியான உளவியல் பாஸு?

Abilash Chandran said...

எல்லாரும் படத்தில் உள்ளதை அப்படியே ஏற்கணும் என்பது என்னமாதிரியான உளவியல்? வெகுஜன உளவியல். அதாவது சினிமா, பத்திரிகையில் எது வந்தாலும் ஓரளவு சுவாரஸ்யமாய் இருந்தால் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஏது என்ன என வினவக் கூடாது. வெகுஜன மீடியா அப்படித் தான் பலரது மனங்களை உருவேற்றி வைத்திருக்கிறது.

Abilash Chandran said...
This comment has been removed by the author.