Thursday, August 14, 2014

ஒரு இலை உதிர்வது போல் நாம் சாகக் கூடாதா?ஜூலை 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் கருணைக்கொலையை சட்டபூர்வமாய் ஏற்கும் விதியை கொண்டு வருவது பற்றி பரிசீலிக்க அரசாங்கத்தை கேட்டது. இதை ஒட்டி ஒரு கருணைக்கொலை தேவையா என்கிற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. தூக்குத்தண்டனை விவாதத்தை இது மிகவும் நினைவுபடுத்துகிறது. ஏனெனில் கருணைக்கொலை ஆதரவாளர்களின் வாதங்கள் கிட்டத்தட்ட அதே வகையானவை. இன்று நம்மிடம் பரவி வரும் ஒரு எதிர்-வாழ்க்கை, பாஸிச, கேளிக்கை மனநிலை நோயுற்றவர்களையும், குறைபாடனவர்களையும் சகிக்க முடியாத மனநிலைக்கு இவர்களை தள்ளி விட்டது. வாழ்க்கையை ராட்சத ராட்டினத்தில் கூவியபடி பயணிக்கும் ஒன்று மட்டுமேயாக நாம் ஒற்றைபட்டையாய் நம்ப துவங்கி இருக்கிறோம். விளைவாக நிறைய படித்தவர்கள் எந்த ஈரமும் இன்றி கூசாமல் ஒருவரை கொல்லுவது பற்றி புறநிலையாக, வறட்டு தர்க்கத்துடன் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று வாழ்க்கை பற்றியும் மரணம் பற்றியும் வேகமாய் பரவி வரும் மேலோட்டமான நம்பிக்கைகள் கருணைக்கொலை விசயத்தில் மட்டுமல்ல பொதுவாகவே ஒரு ஆபத்தான சிவில் சமூகமாக நாம் மாறி வருவதை காட்டுகிறது.

மனவளர்ச்சி குன்றின தன் குழந்தையை பார்த்துக் கொள்ள வசதி இல்லை என்றும், அவரை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் ஒரு அம்மா தமிழகத்தில் இருந்து கோரிக்கை விடுக்கிறார். என் நினைவில் முன்பு கருணைக்கொலைப் பேச்சு மீடியாவில் எழுந்த போதும் ஒருமுறை அவர் இதே போல் கோரினார். அவருடையது உண்மையில் தன் மகளை வளர்ப்பதற்கான உதவிக்காக சமூக மனசாட்சி நோக்கி விடுக்கப்பட்ட ஒரு வேண்டுதல். இமாச்சலத்தை சேர்ந்த ஒரு பெண் பல வருடங்களாய் முட்டி அழற்சியால் அவதிப்படுகிறார். அவரால் நடக்க இயலவில்லை. அவர் தன்னைக் கருணைக்கொலை செய்யும் படி வேண்டுகிறார். இது போல் ஆயிரக்கணக்கான கோரிக்கைகள் அரசாங்க மேஜைகளில் குவிகின்றன. இவர்கள் வலியை, ஊனம் மற்றும் நோய்கள் ஏற்படுத்தும் செயலின்மை மற்றும் பணச்செலவை தாங்க இயலாமல் மரணத்தை கோருகிறார்கள். ஆனால் இவர்களும் மரணத்தை நெருங்கும் இறுதி நொடிகளில் தாம் நினைத்தது போல் மரணம் உண்மையில் ஒரு இனிப்பு மருந்தல்ல என புரிந்து கொள்வார்கள்.
மூன்றாவதாய் ஒரு தரப்பு உள்ளது. இது தீரா வியாதிகளால் துவண்டு போன நோயாளிகளை பார்த்துக் கொள்ளும் குடும்பத்தினர், மருத்துவர்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் சேர்ந்து உருவாகும் கூட்டணி. இது ஆபத்தான தரப்பு. இவர்கள் தாம் கருணைக்கொலையை மிக அதிகமாய் வலியுறுத்துபவர்கள். அதற்காக விநோதமான குதர்க்கமான காரணங்களை கூறுபவர்கள். தாங்க முடியாத வலியை அனுபவிக்கிறவர்களை கொன்று விடலாம் என கூறுபவர்கள். இக்கூற்றை முதலில் ஆய்வோம்.
ஒருவர் மிகக்கடுமையான வலியால் துடிக்கும் போது அவரை விட பார்க்கிற நமக்கே இவர் பேசாமல் செத்துப் போகட்டுமே எனத் தோன்றும். அவரும் கூட தன்னைக் கொல்லும்படி கேட்கலாம். ஆனால் இதன் பின்னால் ஒரு தவறான நம்பிக்கை உள்ளது. அது வாழ்வு என்பது வலியற்றது, ஆரோக்கியமானது என்பது. இந்த நூற்றாண்டில் மருந்துத் துறையின் கவனம் முழுக்க வலிநிவாரண மருந்துகளில் இருக்கிறது. இத்துறை மிக விரிவாக ஆய்வுக்குள்ளாகி வலி மேலாண்மை பற்றி பல நூல்கள் வெளியாகின்றன. நோயாளிகள் மருத்துவர்களிடம் இறைஞ்சுவது உடனடியாக இந்த வலியை போக்குங்கள் என்று தான். வலியில் இருந்து தப்பிக்க எவ்வளவு செலவழிக்கவும் எப்படியான சிகிச்சைகள் மேற்கொள்ளவும் நாம் இன்று தயாராகி விட்டோம்.
முன்பு நாம் இந்த வலிகளை பொறுத்து சாதாரணமாய் வாழ்ந்து கொண்டிருந்தோம் என்பதை மறந்து விடுகிறோம். இன்று ஒருவித மேலோட்டமான கேளிக்கை கலாச்சாரம் உலகம் முழுக்க பரவுகிறது. இது சிறந்த வாழ்க்கை என்பது முடிவற்ற கேளிக்கை, புலன் நுகர்ச்சி, நீடித்த இளமை என நம்மை நம்ப வைக்கிறது. விளைவாக இம்மூன்று துறைகளும் – கேளிக்கை துறை, வயதை நீட்டிப்பதற்கான சிகிச்சைகள், அழகுசாதன பொருட்கள், அழகு சிகிச்சைகள் துறை, மற்றும் வலி மேலாண்மை துறை– பெரிதாய் வளர்ந்துள்ளன. இதன் ஒரு கிளைத்துறை தான் வலியை மறைத்து, நோய்க்குறிகளை ஒத்திப் போடும் மருத்துவத் துறை. இன்று நோயை நிரந்தரமாய் தீர்க்கும் ஆர்வமும், அதற்கான ஆய்வுகளும் பெருமளவில் குறைந்து விட்டன. நமது மருத்துவத் துறை பதிலுக்கு அப்பழுக்கற்ற வாழ்க்கை தரமான வாழ்க்கை எனும் போலி பிரச்சாரத்தை மேற்கொள்ளுகிறது.
உடல் பல்வேறு கோளாறுகளுடன் நீண்ட காலம் இயங்கும் ஒரு அபாரமான எந்திரம். பெரும்பாலான மோசமான மருத்துவர்கள் தம்மிடம் வருபவர்களின் சின்ன சின்ன கோளாறுகளை கண்டுபிடித்து அவற்றை உடனடியாய் தீர்ப்பதற்கு மருந்தும், சிகிச்சையும் பரிந்துரைப்பவர்கள். தயங்கினாலும் உங்களை அச்சுறுத்தி ஏற்க வைப்பார்கள். எனக்கு சமீபமாக பல்லுக்குள் உணவுப்பொருள் நுழைந்து வீங்கி விட்டது. மருத்துவர் நான் உடனடியாய் பத்தாயிரம் ரூபாய்க்கு பல்லை எலும்போடு வெட்டிக் கொள்ள வேண்டும் என அடம்பிடித்தார். இல்லாவிட்டால் அடிக்கடி இது போல் ஆகும் என்றார். நான் பரவாயில்லை, எவ்வளவோ கோளாறுகளுடன் இருக்கிறேன், இதையும் சகித்துக் கொள்கிறேன் என்று விட்டு வந்தேன். பல மருத்துவர்களிடம் இப்படியான மனப்பான்மை இன்று வந்து விட்டது. நம் உடம்பை முழுக்க முறுக்கி திருகி கச்சிதமாக்க வேண்டும் என துடிக்கிறார்கள். இன்னொரு புறம், தம் வாழ்நாள் முழுக்க எந்த மருத்துவரையும் பார்க்காமல் வாழ்ந்த ஆட்களை என் ஊரில் பார்த்திருக்கிறேன். ஆனால் நாம் இன்று தினமும் ஓட்டலுக்கு போவது போல் ஆஸ்பத்திரிக்கு போய்க் கொண்டிருக்கிறோம். இதனால் நம் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விட்டதாய் எண்ணுகிறோம். அது ஒரு மாயத்தோற்றம். நம் வாழ்க்கை நீண்டிருக்கிறது. ஆனால் அதனாலே நாம் திருப்தியாய் மகிழ்ச்சியாய் இல்லை. நோய், வயோதிகம் மற்றும் வலி குறித்த பயம் நம்மை இன்னும் கடுமையான நெருக்கடியில் ஆழ்த்தி இருக்கிறது. நோயும், அது தரும் துக்கங்களும் இன்றி நம் வாழ்க்கை இன்று அதன் ஆழத்தையும் அர்த்த்தையும் இழந்து விட்டது என்று கூட கூறலாம்.
வாழ்க்கையை மகிழ்ச்சி – துயரம், நல்லது – கெட்டது என எதிரிடையாய் பார்க்கும் மனோபாவம் ஐரோப்பிய பண்பாட்டில் இருந்து தான் வருகிறது. அங்கிருந்து தான் மேற்சொன்ன பயமும், அதன் ஒரு தீவிர நிலையான கருணைக்கொலை கோரிக்கைகளும் உருவாகின்றன. ஐரோப்பியன் மரணத்தை ஒரு தண்டனையாக பார்க்கலாம். அவன் அத்தண்டனையை எப்படி தள்ளிப் போடலாம் அல்லது தப்பிக்கலாம் என நினைக்கலாம். ஆனால் கீழைத்தேய பண்பாடுகள் வலியை, நோய்மை, மரணத்திற்கான காத்திருப்பை வாழ்வின் ஒரு பகுதியாகவே பார்த்தன. ஒரு இலை தளிராக தோன்றி, வளர்ந்து, சூரியனை நோக்கி முகம் விகாசித்து, மெல்ல மஞ்சளித்து, சிவப்பாகி கனிந்து, உலர்ந்து, உதிர வேண்டும். இலை இலையாகவே இருப்பது அல்ல வாழ்க்கை. மஞ்சளித்த இலைக்கு பச்சையம் பூசி பாசாங்கு காட்டுவதும் அல்ல. இலை பச்சையாக ஜொலிப்பது எவ்வளவு முக்கியமோ அந்தளவு அது பழுத்து காய்வதும் முக்கியம். வயோதிகமும் நோய்மையும் வலிகளும் நமக்கு கற்றுத் தருகிற உண்மைகள் தனியானவை. வலியும் துன்பமும் வாழ்க்கையை இன்னும் அர்த்தமுள்ளதாய் ஆழம் கொண்டதாக்குகின்றன. அதனால் தான் கீழைத்தேய பண்பாடு ஐம்பது வயதுக்கு பின்னான காலத்தில் நாம் செய்ய வேண்டியதை வகுத்தது. வாழ்க்கையை கவனிப்பது, கடந்து போகிற நிலைகளுடன் ஒழுகிப் போவது, நோய்மையில் கனிந்த புரிதலுடன் அல்லது ஞானத்துடன் மரணத்தை நோக்கி ஒவ்வொரு காலடியாய் வைப்பது என.
நோய்மை வாழ்க்கையை எவ்வளவு ஆழமுள்ளதாக ஆக்குகிறது என்பதை சித்தரித்த நாவல் “முள்”. அந்நாவலின் நாயகிக்கு சிறுவயது குஷ்டம் வர ஒரு விடுதியில் தங்கி சிகிச்சை எடுக்கிறாள். அவளது இளமைக்காலம் இப்படி வலியில், அதற்கான சிகிச்சையில், சமூகத்திடம் இருந்து ஒடுங்கின தனிமையில் கழிகிறது. ஒரு மருத்துவரிடம் கேட்டால் அவளது தரமற்ற வாழ்க்கை என்பார். ஆனால் அப்படி அல்ல. நோய் முழுக்க குணமாகி அவள் வெளிவரும் போது அவள் மனம் ஒரு பூவைப் போல் முழுக்க விரிந்திருக்கிறது. வாழ்க்கை என்றால் இன்ப, துன்பம் என்கிற எதிரிடையை கடந்த ஒரு இருப்பு என அறிந்து கொள்கிறாள். ஊரில் விட்டு வந்த அவளது தோழிகள் உணர்ச்சிகளின் பால் பட்டு வாழ்க்கையை ஒரு உத்வேக பாய்ச்சலாக மட்டும் பார்க்கிறவர்கள். அவர்கள் ஒவ்வொருவராக தம் முதிர்ச்சியின்மையால் அழிகிறார்கள். ஆனால் அவள் தன் இளமையிலேயே வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் எனும் புரிதல் கொண்டவளாக இருக்கிறாள். நோயும் வலியும் எப்படியான வரம் என இந்நாவல் பேசுகிறது.
நோயையும் அதன் துன்பங்களையும் நாம் நாடிப் போக வேண்டியதில்லை. அதுவாகவே நம் வாழ்வில் அமையும் போது தப்பித்தும் ஓட வேண்டியதில்லை. அது மரண வேதனையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறவன் தான் உண்மையில் வாழ்கிறான். என்னதான் தன்னை கொன்று விடும் படி ஒருவன் கோரினாலும் அவனுக்கு தன் வாழ்க்கை வலிக்கு அப்பாற்பட்டது, எல்லாவற்றுக்கும் மேலானது என தெரியும்.
ஆனால் வலியில் துடிப்பவர்களை பார்க்கிற நாம் ஒருவித தன்னிரக்கம் அடைகிறோம். இதை நோயாளி மீதான கருணையாக மாற்றி அவரை கொல்ல வேண்டுகிறோம். என்ன மாதிரியான கருணை இது? பாஸிசமும் போலி கருணையும் இணையும் புள்ளி தான் கருணைக் கொலை.

கடுமையான வலியில் துடிப்பவரை அப்படியே வாழ விடலாமா? இதற்கு இரண்டு பதில்கள். ஒன்று மிகக்கடுமையான வலியில் இருப்பதும் வாழ்க்கை தான். நல்ல வாழ்க்கை, கெட்ட வாழ்க்கை என்று ஒன்றில்லை. சரி, இன்பமும் துன்பமும் ஒன்று என்றால் வாழ்க்கையை எப்படி விளக்குவது? வாழ்க்கை என்றால் இருப்பது. இருப்பது என்றால் நாம் “இது” என உணர்வது. நான் ஆன்மீக தரிசனத்தை குறிக்கவில்லை. இருப்பு ஒரு பிரக்ஞை. அதற்கு வலியோ உணர்வோ அறிவோ நம்பிக்கைகளோ இல்லை. ஆனால் இவை எல்லாவற்றையும் அதன் முன் காட்டினால் பிரதிபலிக்கும் அவ்வளவு தான். ஆனால் இவை நாம் அல்ல. நமக்கு வெகு ஆழத்தில் இந்த உண்மை தெரியும். அதனால் தான் மாபெரும் மனித அழிவுகள் நடந்து அத்தனை நம்பிக்கைகளை இழந்தாலும் மிச்சமுள்ள மனிதர்கள் வாழ்வில் இருக்கிறார்கள். இருப்பதன் ஒரே நியாயம் இருப்பது தான் என அவர்களுக்கு உள்ளுணர்வு உள்ளது.
இருத்தலுக்கு உண்மை பொய்யோ, சரி தவறோ, வலி, இன்பமோ கிடையாது. அதனால் தான் நீங்கள் பார்க்கிற உல்லாச வாழ்க்கையில் உள்ளவர்கள் ஆழத்தில் ஏதோ ஒரு வேதனையில் தத்தளிக்கிறார்கள். அவஸ்தை அதிகமாகும் போது கொண்டாட்டமும் கூடுதலாகிறது. அதே காரணத்தினால் தான் அகநெருக்கடியோ உடல் வலியோ தாளாமல் ஒரு பக்கம் பத்து பேர் தற்கொலை பண்ணினால் அதே நிலையில் உள்ள நூறு பேர் சாதாரணமாய் தயிர் சாதம் தின்று செய்தி வாசித்து வாழ்கிறார்கள். மருத்துவர்கள் இவர்களுக்கு வலியை தாங்கும் சக்தி உண்டு என்பார்கள். ஆனால் அப்படி அல்ல. அவர்கள் தம் வலியை வேறொங்கோ வடிகாலாக்குகிறார்கள். வாழ்க்கை உண்மையில் ஒரு நீண்ட வலி அனுபவம். உண்மையில் இங்கு யாரும் மகிழ்ச்சியாக இல்லை. பெரிய கசப்பின் மீது நின்று புன்னகைக்க கற்றுக் கொள்கிறோம். பிறகு நாம் கசப்பாக இருக்கிறோம் என்பதை மறந்து சிரிக்கிறோம்.
சந்தோசமாக இருப்பது இல்லை என்றால் நாம் வாழ்வதற்கு என்ன அர்த்தம், நோக்கம்? உண்மையில் நாம் இதைப் பற்றி எல்லாம் யோசிப்பதில்லை. வாழ்வின் வலைப்பின்னலில் நம் இருப்புக்கு ஒரு தேவை உள்ளது. இத்தேவையை வாழ்வின் ஏதோ ஒரு தருணத்தில் உணர்ந்து கொள்ள இயலும். அதன் பின்னர் நாம் வலியை, இழப்புகளை, ஏமாற்றங்களை வெறுக்க மாட்டோம். நீண்ட காலமாய் பேச்சு அசைவில்லாமல் மருத்துவமனையில் “காய்கறி” நிலையில் தக்க வைக்கப்பட்டுள்ள அருணா ஷென்பக்குக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. வாழ்க்கை என்பது செயல் மட்டும் அல்ல. செயலின்மையும் தான். முழுக்க செயலற்றவர்களை நோக்கி நாம் பச்சாதாப்படுகிறோம். அவர்களை கொன்று விடலாம் என கருணைக்கொலையாளர்கள் நினைக்கிறார்கள். நாம் மேலே சொன்ன இரண்டாவது கேள்வி இவர்களைப் பற்றியது.
செயலற்று சமூக பயனின்றி இருப்பவர்களை கொன்று விடலாமா? அப்படி கொல்வதென்றால் நாம் ஒரு பெரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும். படித்த வேலை பார்க்காத பிள்ளைகள், அறிவில்லாதவர்கள், சோம்பேறிகள், வேலையில்லா குடிகாரர்கள், வேலைத்தகுதி இல்லா ஊனமுற்றவர்கள், வேலை செய்யாத அரசு ஊழியர்கள், காவலர்கள், அரசியல்வாதிகள் என நாம் கொன்றொழிக்க வேண்டியவர்களின் பட்டியல் மிக மிக நீண்டதாக இருக்கும். எந்த சமூக பயனும் இல்லாத ஏகப்பட்ட பேர் நம் சமூகத்தில் இருக்கிறார்கள். இவர்களை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இவர்கள் வீண் அல்ல. மொத்த சமூக இருப்பில் இவர்களும் முக்கியமானவர்களே. இவர்களைப் போலவே அரசாங்கம் நோயால் ஊனமுற்று செயலற்றவர்கள், காய்கறி ஆனவர்களையும் ஆயுள் முழுக்க பாதுகாக்க வேண்டும். இது ஒரு கடமை. இதை ஒரு கால, பண விரயமாக பார்ப்பது முட்டாள்தனம்.
இறுதியாய் இன்னொருவரை வாழ வைக்கிறோம், இன்னொருவர் உயிரை பறிக்கலாம் என்பது போல் நம்மிடம் பல கற்பிதங்கள் உள்ளன. யாரையும் வாழ வைக்கவோ வாழாமல் தடுக்கவோ நம்மால் முடியாது. அது நம்மைக் கடந்த ஒன்று. எல்லா மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டும் நம் கண்முன்னே சாகிற, வாழ்கிற மக்கள் கூட்டத்தை வரலாற்றில் போர் எனும் பெயரிலான இன அழித்தொழிப்புகளில் கண்முன்னே பார்க்கிறோம். இந்த போர்களை நடத்துறவர்களால் கூட அது பல சமயங்களில் நிறுத்த முடிவதில்லை. எதிர்ப்பவர்களாலும் முடிவதில்லை. ஆனால் மனிதனுக்கு ஆழத்தில் தான் வாழ்வை கொடுக்கிறவன் எனும் கிளுகிளுப்பும், தன் இன்னொரு கையில் வாழ்வை பறிக்கிற ஒரு கொலைவாள் உள்ளது என மதமதப்பும் உள்ளது. இது இரண்டும் தருகிற அதிகார மமதை அலாதியானது. நமது அத்தனை சட்டங்களும் விதிமுறைகளும் தண்டனைகளும் சிகிச்சை மையங்களும் மனிதனின் இந்த அகங்காரத்தை தூண்டி எரிய வைக்கின்றன. கருணைக்கொலை ஆதரவாளர்களிடம் இந்த வேடிக்கையான மனநிலை தான் தெரிகிறது. பகுத்தறிவாளர்கள் என அறிவித்துக் கொள்ளும் இவர்கள் ஒரு சட்டத்தை இயற்றுவதன் மூலம் கடவுளின் நிலைக்கு உயர்வதாய் நம்புகிறார்கள். அதற்காக இன்னும் எத்தனை கொலைகள் செய்யவும் தயங்க மாட்டார்கள்.
கருணைக்கொலை ஆதரவாளர்கள் ஒருவேளை தாமாக மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டு வந்தால் இப்படி பேச மாட்டார்கள். கருணைக்கொலை என்பது மட்டுமல்ல கொலை என்பதே ஒரு அபத்தம் என அவர்களுக்கு அப்போது விளங்கும்.
ஒரு மனிதன் கடும் வலியிலோ, உடல் அழுகியோ, மனம் பேதலித்தோ, காய்கறியாகவோ எப்படியும் இருக்கலாம். அவன் இருப்பது, அதன் மூலம் அவன் இருப்பு, தான் முக்கியம். மிகுந்த செயலூக்கத்துடன் இருப்பவனும் படுக்கையில் செயலற்று கிடப்பவனும் இந்த உலகுக்கு ஒரே ஆள் தான். விஞ்ஞானம் கற்றுத் தேர்ந்தவர்கள் இந்த எளிய உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
“மரணம் நம் எதிரி அல்ல
ஏனெனில் அது நம் இருப்பின் ஒரு பகுதி
இருப்பு நம்மை பெற்றெடுத்தது
இருப்பு நமக்கு முலையூட்டுகிறது” என்றார் ஓஷோ. நமக்கு பாலூட்டுகிற முலையில் இருந்து மனிதனை பறித்து எடுக்க ஏன் இவ்வளவு பிரயாசைப்படுகிறீர்கள்? உங்களால் அது முடியாது.

நன்றி: உயிர்மை ஆகஸ்ட் 2014

No comments: