கத்தாழக் கண்ணாலே


சமகால கவிதை மொழியில் ஸ்கூல் பெண்ணின் தலை ரிப்பன் போல் பளிச்சென தெரிவது உவமைகள். கவிதையில் உவமை ரொம்ப பழைய உதிரிபாகம். அதாவது மிகப்பழைய கவிதைகளான சங்கப்பாடல்களில் நீங்கள் குறியீடு படிமம் எல்லாம் பார்க்க முடியாது. ஆனால் உவமைகள் விரவிக் கிடக்கும். பள்ளியிலும் படித்திருப்போம். ”செம்புலப் பெயல் நீர் போல்” நினைவிருக்கும். நவீன கவிதை வந்ததும் குறியீடுகளும் படிமங்களும் மேற்சொன்ன ஸ்கூல் சீருடை போல் ஆயின.
குறியீடு என்றால் இன்னதென அர்த்தமில்லாத, ஆனால் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் நிற்கிற ஒரு கவிதை உறுப்பு. சு.ராவின் “கதவைத் திற காற்று வரட்டும்” ஒரு குறியீடு. கதவு பல அர்த்தங்கள் கொண்டது. அதேவேளை அது “இறுக்கம்” எனும் ஒரு பொது அர்த்தம் கொண்டது. இதற்குள் மனதின் இறுக்கம், பண்பாட்டின் இறுக்கம், கோபித்த காதலியின் மன இறுக்கம் என எப்படியும் பொருள் கொள்ளலாம்.


படிமம் இதன் அடுத்த நிலை. அது ஒரு சித்திரம். ஒரு காகம் ஒரு வளைகிற மெல்லிய கிளை மேல் அமர்ந்திருக்கிறது. காற்றடிக்கையில் கிளையுடன் காகமும் காற்றில் தாழ்ந்து எழுகிறது. இது ஒரு சித்திரம். இதற்கு எண்ணற்ற பொருட்களை காணலாம். படிமத்தின் அர்த்தங்களுக்கு எல்லையே இல்லை என்கிறார்கள் (நான் எண்ணிப் பார்த்ததில்லை). குறியீடு போல் இதற்கு கட்டுப்பாடுகள் ஒன்றும் இல்லை. நவீன கவிதையில் வெறுமனே ஒரு படிமத்தை உருவாக்கினால் போதும் வேலை முடிந்தது என கவிஞர்கள் நினைக்க தொடங்கினார்கள். எண்பது மற்றும் தொண்ணூறுகளின் தமிழ் கவிதைகளில் பல சிறந்த படிமங்களை குறியீடுகளை பார்க்கலாம்.

இது கவிதையை ஓரளவு எதார்த்த அன்றாட வாழ்க்கையில் இருந்து தள்ளிச் சென்று அரூப விசாரங்களின் பிளாட்பாரத்தில் நிறுத்தவும் செய்தது. கவிதை அதன் இயல்பையும் இயல்பான வாசகர்களையும் இழந்தது. இதன் விளைவாக அடுத்து நேரடிக் கவிதைகள் ரெண்டாயிரத்தில் பிரபலமாயின. நேரடிக் கவிதைகளில் உவமை தான் ரொம்ப முக்கியம். அதுவும் அதிர்ச்சிகரமான விநோத உவமைகள். குட்டிரேவதியின் “பூனை போல் அலையும் வெளிச்சம்” தோதான உதாரணம்.

இந்த வரிகளைப் பாருங்கள்:
“ஒரு பென்சிலை சீவுவது போல்
ஒரு கண்ணாடி டம்ளரை மேஜையில் நகர்த்துவது போல...
நிகழ்கிறது
உன் நீங்குதல்” (மனுஷ்ய புத்திரன், “கடவுளுடன் பிரார்த்தித்தல்”)
இன்றிலிருந்து உனது
எல்லாப் பரிசுகளையும்
நான் தரையில் விட்டுவிடுகிறேன்
ஈரம் காயாத நாய்க்குட்டிகளைப் போல‌
தம் திசைகளை
தாமே அறியட்டும்ன” (மனுஷ்ய புத்திரன், “நீராலானது”)
“வாய்க்குள் உலகத்தை
அடக்கிய கண்ணனைப் போல
உள்ளங்கைக்குள் அடக்குகிறேன்
உன் குறியை” (மனுஷி, “குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்”)

இந்த மாதிரியான உவமைகளின் விநோத, பொருந்தாத் தன்மைக்கு இன்றைய வாழும் சூழலும் ஒரு காரணம். நாம் எதனோடு பொருந்தி முடியாதவர்களாக எதையும் எதுவாகவும் ஏற்கிறவர்களாகவும் மாறி இருக்கிறோம். ஆகையினால் தான் இயற்கை பொருட்களுடன் ஒப்பிடுகிற பாணி இன்று குறைந்து செயற்கையான பொருட்கள் அதிகம் பயன்படுகின்றன. மனுஷி தன் கவிதை ஒன்றில் கண்ணீரை உருகும் மெழுகுத் துளிகளுடன் ஒப்பிடுகிறார். இப்படியான உவமைகள் நமது வாழ்வின் எந்திரத்தன்மையை சுட்டவும் உதவுகின்றன.
உருவகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ”போல” என நேரடியாக சொல்லாமல் இருந்தால் உருவகம். வைரமுத்துவின் “அந்தி” கவிதையில் இப்படி உருவகங்களாய் நெருக்கி கோத்திருப்பார்:

யாரங்கே?
ராத்திரி வரப்போகும்
ராச குமாரிக்கு
மேற்கு அம்மியிலே
மஞ்சள் அரைப்பது யார்?
வானம் துப்பிய தாம்பூலமா
இந்த அந்தி?
பழுத்த பகலா
இந்த அந்தி?


அதாவது நாம் இங்கே நவீன கவிதையில் குறியீடு கத்தி தீட்டிக் கொண்டிருந்த போது இன்னொரு முகாமில் வானம்பாடிகள் உருவகங்களால் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். “என் ரத்தக்கையெழுத்தில் ஒற்றுக் கண்டுபிடிக்கிறார்கள் அவர்கள்” போன்ற வைரமுத்து வரிகளின் சுவாரஸ்யமே உருவகத்தை உரைநடை மொழியின் ஸ்டைலாக மாற்றுவது தான். அதாவது வைரமுத்து உருவகத்திலேயே எழுந்து உட்கார்ந்து கொட்டாவி விடக் கூடியவர். அக்கால கட்ட சினிமா பாடல்களை எடுத்துப் பார்த்தாலும் செறிவான உருவகங்களைப் பார்க்கலாம்.

”இருபது நிலவுகள்
விரலெங்கும் ஒளிவிடும்...”
”இளமையின் வியர்வையில்
பயிரகும் பருவமே”
சமகால சினிமா பாடல்களில் அதே போல் அழகான பல உவமைகளைப் பார்க்கலாம். சில உவமைகள் கொடூரமாகவும் உள்ளன. உதாரணமாக எனக்கு இந்த பாடல் வரிகளைக் கேட்கையில் எல்லாம் கூட்டத்தில் யாரோ காலை மிதிக்கிற உணர்வு வரும்.
”ஒரு பாதி கதவு நீயடி
மறுபாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்” (தாண்டவம், நா.முத்துக்குமார்)

நா.முத்துக்குமார் இப்படியான கொடூரமான உவமைகளை எழுதுவதில் தேர்ந்தவர். அவர் ஒரு உவமை வித்தியாசமாக இருக்கிறதென யோசிக்கிறதுடன் நின்று விடுவார். அதை மனதில் காட்சிப்படுத்தினால் எப்படி இருக்கும் என நினைப்பதில்லை. உதாரணமாய் இங்கு கதவுகள் மூடுவது மிக மிக எதிர்மறையான சித்திரத்தையே அளிக்கும். ஏனென்றால் பொதுவாகவே கதவு மூடப்படுவது அடைபடுவதன், சுதந்திரத்தை இழப்பதன் உவமை தான். அதை எப்படி காதலர்கள் இணைவதற்கு பயன்படுத்த முடியும்? இப்படி ஈட்டியால் காதுகுடைகிற பல உவமைகளை அவர் பாடல்களில் எழுதியிருக்கிறார்.

எனக்குப் பிடித்த சினிமாப் பாடல் உருவகம் “கத்தாழைக் கண்ணாலே குத்தாதே நீ என்ன”. கபிலன் எழுதியது. ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று தான் முதலில் கவனித்து மறந்து விட்டேன். பின்னர் ஒரு அனுபவம் இந்த உருவகத்தின் ஆழத்தை புரிய உதவியது.
ஊரில் கத்தாழைச் செடிகள் பார்த்திருக்கிறேன். அவற்றின் முள் பெரியது. சமீபத்தில் ஊட்டியில் ஒரு குரோட்டென்ஸ் கடையில் சிவப்பு முட்கள் கொண்ட ஒரு குட்டி கத்தாழை பார்த்தேன். பொன்சாய். அதன் மெல்லிய சிவப்பு முட்கள் பச்சை தாளின் ஓரமாய் நின்றிருந்த்து அழகாக ஒரு பூ போல் தோன்றியது. அதன் அருகில் வந்ததும் கையில் எடுத்துப் பார்த்தேன். தொடக் கூடவில்லை. வெறுமே எடுத்துப் பார்த்தேன். கடைக்காரர் விஷமத்தனமாய் புன்னகைத்தார். “இதை நீங்க வீட்டில வச்சுக்க முடியாது. முள் இருக்குல்ல” என்றார். இதெல்லாம் முள்ளா என நினைத்தபடி கீழே வைத்து விட்டேன். கடையில் இருந்து கிளம்புகையில் தான் அதன் மென் முட்கள் கையெங்கும் குத்தத் தொடங்கின. பார்த்தால் தெரியவில்லை. துடைத்தாலும் போகவில்லை. அது வலி அல்ல, ஒரு மெல்லிய நமநமப்பான குத்தல் உணர்வு. இரவு முழுக்க அந்த சுகமான உறுத்தால் இருந்து கொண்டே இருந்தது. அப்போது தான் எனக்கு இது தான் ஒரு பெண்ணின் பார்வையின், அது கடக்கும் வெதுவெதுப்பான காமத்தின், தொலைவு தரும் ஏக்கத்தின் உருவகமாக இருக்க முடியும் எனப் பட்டது. பட்டதும் தெரியாத ஆனால் விடவும் விடாத உறுத்தல் காதலின் பிரத்யேக குணம். அன்று முழுக்க இந்த “கத்தாழைக் கண்ணாலே” என்ற வரியை அசை போட்டுக் கொன்டே இருந்தேன். விட்டு விட்டு எரிகிற பல்பு போல் கத்தாழை முள் குத்தலும் தொடர்ந்தது.


Comments