வணிக இதழும் தீவிர எழுத்தாளனும்

தபு சங்கர்: வணிக இதழ்களின் சமீபத்திய ஒரே கண்டுபிடிப்பு

வணிக பத்திரிகைகள் ஒரு காலத்தில் தொடர்கதை மூலம் நிறைய எழுத்தாளர்களை ஊக்குவித்தன. நிறைய குப்பைகள் தோன்றின. ஆனால் அதில் இருந்து சுஜாதா, பாலகுமாரன் போன்ற நல்ல புனைவு எழுத்தாளர்களும் தோன்றினர். ஆனால் கடந்த பதினைந்து வருடங்களில் வணிக எழுத்தாளர்கள் கண்டுபிடித்த அல்லது உருவாக்கின எழுத்தாளர்கள் யார் என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது. ஏனென்றால் சிறுபத்திரிகை, நடுநிலை பத்திரிகைகளில் எழுதி பயின்றவர்களை அவ்வப்போது சில பத்திகள் எழுத வைத்து ஏதோ மகானுபாவர்கள் போன்ற ஒரு பிம்பத்தை இப்பத்திரிகைகள் தோற்றுவிக்கின்றன. இன்னொரு பக்கம் இலக்கிய எழுத்தாளர்கள் வீம்பினால் வணிக பத்திரிகைகள் எழுதாதிருந்தனர். இன்று எழுதுகிறார்கள் என்றொரு எண்ணமும் சிலருக்கு உள்ளது. இரண்டும் பொய்கள்.


இன்று பத்தி எழுதும் பல இலக்கிய எழுத்தாளர்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக சிறு, நடுநிலை பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி உருவாக்கிய புகழை, திறமையை வணிக இதழ்கள் ஹைஜேக் பண்ணி பயன்படுத்துகின்றன என்பதே உண்மை. இதே எழுத்தாளர்கள் இருபது, முப்பது வருடங்களுக்கு முன் வணிக இதழ்களில் எழுதவே முடியாது. இன்று இப்பத்திரிகைகளுக்கு எழுத ஆட்கள் இல்லை. அதனால் இலக்கிய பரப்பில் இருந்து ஆட்களை பிழுது தம் வயலில் நட்டுக் கொள்கிறார்கள். எனக்குத் தெரிந்து கடந்த இருபதாண்டுகளில் வணிக இதழ்கள் உருவாக்கின ஒரே எழுத்தாளன் தபு சங்கர் தான். அவர் எத்தனை சிறுபிள்ளைத்தனமானவர் என உங்களுக்கு தெரியும்.

வணிக இதழ்கள் எழுத்தாளர்களை நடத்தும் விதத்தில் சில கோளாறுகள் உண்டு. ஒன்று, வணிக இதழ் ஆசிரியர்கள் தொடர்ந்து சீரியஸான பத்திரிகைகளை படிக்கிறார்கள். ஆனால் அதில் எழுதுகிற திறமையான ஆட்களை அழைத்து தொடர்ந்து தம் இதழில் எழுத வைக்க மாட்டார்கள். அதற்கு பதில் சினிமா உதவி இயக்குநர்கள், சீரியலுக்கு வசனம் எழுதுபவர்கள் போன்று பகுதி நேர ஆட்களையே ஒன்றிரண்டு தொடர்கள் எழுத வைப்பார்கள். இவர்களையும் தொடர்ந்து எழுத அனுமதித்து வளர விட மாட்டார்கள். அல்லது இவர்களுக்கு தொடர்ந்து இயங்கும் ஆற்றலோ ஆர்வமோ இராது. இப்போது தீவிர இதழ்களில் திறமையாக ஆழமாக எழுதுபவர்கள் வணிக இதழ்களில்ன் அடுத்த இருபது வருடங்கள் கழித்து ஒரு தொடரோ பத்தியோ எழுதுவார்கள். உண்மையான எழுத்துப் பயிற்சியும் ஆற்றல் வெளிப்பாடும் தீவிர இதழ்களில் தான் நடக்கிறது. அங்கு தான் பரிட்சார்த்த முயற்சிகளுக்கு அவகாசம் உள்ளது. அங்கு தான் புது திறமைகளுக்கு வாய்ப்பும் உள்ளது. ஒன்று கவனித்தீர்களா? கடந்த பத்து ஆண்டுகளில் வணிக இதழ்களில் மட்டுமே எழுதி கவனிக்கப்பட்ட புது எழுத்தாளன் என யாருமே இல்லை. ஏனென்றால் எழுத்தாளனை தொடர்ந்து எழுத அனுமதிக்க மாட்டார்கள். கடந்த இருபது வருடங்களை எடுத்துக் கொள்வோம். வாரத்துக்கு ஒரு கதை என வணிக கதைகள் எழுதினால் எத்தனை லட்சம் கதைகள். இவ்வளவு லட்சம் கதை எழுதினவர்களில் ஒரு 20 பேர்களாவது தேற வேண்டாமா? 1995க்கு மேல் குமுதம், குங்குமம், விகடன் இவற்றில் மட்டும் எழுதி இன்று எஸ்.ரா, ஜெயமோ அளவுக்கு முக்கியமாக அல்லது பெயர் தெரிகிற அளவுக்கு இயங்கும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எனக்கு யார் பெயரும் நினைவுக்கு வரவில்லை.

இதற்கு காரணம் பார்முலா கதை எழுதுவதை மட்டும் வணிக இதழ்கள் ஊக்குவிப்பது. நான் 2005இல் ஒரு பி.பி.ஓவில் வேலை பார்த்தேன். அங்கு செக்யூரிட்டியாக இருந்தவர் என்னிடம் தான் 20 வருடங்களாக பல வணிக இதழ்களில் சிறுகதை எழுதுவதாக சொன்னார். அவரது சில கதைகளை காட்டினார். ஒரு சின்ன பார்முலா வைத்து கைகாது வரைந்து உருவாக்கின உயிரில்லா கதைகள். அவர் என் கதையை படித்து “உங்களுக்கு என்னை விட திறமை உண்டு” என்றார். ஆனால் நான் அவரிடம் காட்டியது மிக சாதாரணமான ஒரு கதை. ஆனால் சில பரீட்சார்த்த முயற்சிகள் கொண்ட கதை. அதுவே அவருக்கு ஒரு பிரமிப்பை உண்டு பண்ணியது. ஏனென்றால அவர் ஒரு எந்திரம் மாதிரி ஒரே கதைகளை இத்தனை வருடங்களாய் எழுதி வந்திருக்கிறார். எல்லாமே ஒன்று தான். ஜெராக்ஸ் பிரதி கதைகள். இப்படியான பலரை வணிக இதழ்கள் தோற்றுவித்துள்ளன.

பார்முலா படி எழுதவே கூடாது என நான் கூறவில்லை. ஆனால் அதற்குள் ஜீவன் வேண்டும். அப்படியானவரக்ளை ஊக்குவிக்க வேண்டும். ஆனால் வணிக இதழ் எடிட்டர்களில் இலக்கியம் அறிந்தோர் இலக்கிய எழுத்தாளர்கள் மேல் ஒரு வெறுப்பு அல்லது வயிற்றெரிச்சலோடு இருக்கிறார்கள். இலக்கியம் படிக்காத எடிட்டர்களுக்கு நல்ல கதை எதுவென தெரியாது.

தீவிர இதழ்களும் கூட புது எழுத்தாளனை தேடிப் பிடித்து ஊக்குவிப்பது இல்லை தான். ஆனால் ஏதோ ஒரு மூலையில் அவனுக்கு எழுத வாய்ப்புகளை அளிக்கிறது. தொடர்ந்து மாதாமாதம் என வருடக் கணக்கில் எழுத அனுமதித்து எழுத்தாளனை ஒரு ஆளுமை ஆக்குகிறது. ஆனால் இன்று வணிக இதழ்களில் யாரும் தொடர்ந்து எழுதவோ வளரவோ முடியாது. அதற்கு இடைநிலை பத்திரிகைகளில் மாங்குமாங்கென எழுத வேண்டும். அல்லது பிளாகில் இயங்க வேண்டும். இதற்கு ஒரு காரணம் இன்று வணிக இதழ்கள் எழுத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டது என்பது. வண்ண படங்கள், ஆபாச சேதிகள், பேட்டிகள், டிவிட்டரில் இருந்து எடுத்து போடுகிற ஜோக்குகள் மற்றும் சில பரபரப்பு ரிப்போர்ட்டுகள். எதையாவது அள்ளிக் கொடுத்து வாசகனை தக்க வைப்பிற பரிதவிப்பில் இப்பத்திரிகைகள் உள்ளன. இது போக நாம் எதைப் போட்டாலும் படிப்பார்கள் எனும் எடிட்டர்களின் திமிர்த்தனமும்.
பல தீவிர பத்திரிகைகளில் எழுத்தாளன் பத்திரிகையை விட நெடிது உயர்ந்து நிற்பதை பார்க்கலாம். எழுத்தாளனை படிக்க தான் தன் பத்திரிகை வாங்குகிறார்கள் என தீவிர இதழ் எடிட்டர்கள் அறிவார்கள். ஆனால் வணிக இதழ் எடிட்டர்கள் தமக்கு கீழ் தான் எழுத்தாளன் எனும் எண்ணம் கொண்டவர்கள். அவர்களுக்கு அதில் ஒரு ஈகோ திருப்தி உள்ளது. ஏனெனில் இன்றுள்ள பல வணிக இதழ் ஆசிரியர்கள் இலக்கியம் வாசிப்பவர்கள், ஆனால் ஒரு எழுத்தாளனாய் எதையும் சாதிக்க முடியாதவர்கள்.


வணிக இதழ்கள் எழுத்தாளனை எப்படி நடத்துகின்றன என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு பிரபல வணிக இதழின் எடிட்டர் என் எழுத்தாள நண்பருக்கு நல்ல பரிச்சயம். இவரது படைப்புகளை தீவிர இதழ்களில் படித்து தொடர்ந்து அது பற்றி பேசுவார். ஆனால் ஒரு நாளும் தன் பத்திரிகையில் எழுத கேட்க மாட்டார். ஒருநாள் நண்பரே வாய்விட்டு வெறுப்பில் கேட்டு விட்டார் “என்னை ஒருநாளும் எழுத கேட்க மாட்டீங்க தானே”. அதற்கு அவர் “அதுக்கென்ன தாராளமா எழுதுங்களேன்” என்று வாய் வார்த்தையாக சொல்லி மழுப்பி விட்டார். நேரடியாக எழுத கேட்கசில்லை. அடுத்து இதன் போட்டி வணிக இதழ் ஒன்றில் நண்பருக்கு பத்தி எழுதும் வாய்ப்பு கிடைத்தது. உடனே அதனை பிளாக் பண்ணுவதற்காக இந்த எடிட்டர் நண்பரை தொடர்பு கொண்டு “என் பத்திரிகையில் பத்தி எழுதுங்க” என்றார். நண்பர் சரி என்றார். “ஆனால் நீங்க அந்த போட்டி இதழில் எழுதக் கூடாது”. நண்பர் தன்னை இத்தனை நாளும் உதாசீனித்த ஒருவரை விட தானாய் எழுத சொன்ன இதழ் தான் சிறந்தது என முடிவெடுத்து எடிட்டரின் கோரிக்கையை நிராகரித்தார். இப்படி கர்ணனை குந்தியும் பாண்டவர்களும் நட்த்தியது போலத் தான் வணிக இதழ்கள் தீவிர எழுத்தாளனை நடத்துகிறது. இதற்கு ****ளே மேல்.

Comments

King Viswa said…
நெத்தி அடி!

தொடர்ந்து இது குறித்து விரிவாக எழுதுங்களேன்?
நீங்கள் சொல்லியுள்ள விசயங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியவைதான்.ஆனால் வணிக இதழ்கள் என்றான பின் அவர்களிடம் வேறென்ன எதிர் பார்க்க முடியும்?.இப்படி இருப்பதும் வணிக இதழ் என்பதை தீர்மானிக்கும் ஒரு காரணிதானே. தினம் தினம் கோடம்பாக்கத்தை நோக்கி வரும் எத்தனையோ பேருக்கு இருக்கும் அந்த ஒரு "இது" எத்தனை தீவிர எழுத்தாளர்களுக்கு இல்லாமல் இருக்கிறது?.வாய்ப்பு வரும் போது பயன் படுத்திக் கொள்ளாதவனை இந்த சமூகம் எப்படி பார்க்கும்?.அநேக துறைகளில் இப்படித்தான் இருக்கிறது.இணையம் என்ற ஒன்று கடிவாளமாய் வந்திருக்கிறது.அது மட்டும்(இணையம்)இல்லையென்றால் நான் உங்கள் எழுத்தை வாசித்து அதற்கு உடனே பதிலும் எழுவதென்பதை யோசித்துப் பாருங்கள்.
Unknown said…
பெரும்பாலானவற்றை சொல்லிவிட்டீர்கள். ஒருவரையே எழுத வைத்து அவர் பிரபலமாகிவிட்டால் அதிக பணம் கொடுக்கவேண்டி வரலாம் ( இப்போது எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது) என்ற தொலைநோக்கு பார்வையும், எதிரெதிர் நிறுவனங்களும் இதை பின்பற்றுவதில் கூட்டு சதியும் இருக்கும் என நினைக்கிறேன். மேலும் ஏற்கனவே “ஞாநி” போன்றோரை “ வழிக்குக்கொண்டுவர” முயன்று கற்ற பாடங்களும் காரணமாக இருக்கலாம்