நகுலன்: நேரடிக்கவிதைக்கும் குறியீட்டு கவிதைக்கும் நடுவே


குறியீடியக்கம் தமிழ்க் கவிதையை முப்பது வருடங்களுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தியது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இது மெல்ல மெல்ல தளர்ந்து வயோதிகத்தின் முதல் நோய்க்குறிகளை காண்பித்தது. மூன்று காரணங்களைச் சொல்ல்லாம். 1) பிரமிள் போன்ற குறியீட்டுக் கவிஞர்கள் இல்லாமல் போனது. 2) குறியீடு ஒரு இறுக்கமான, செயற்கையான வடிவமாக மாறியது. 3) கவிதை அகம் பற்றியது மட்டுமல்ல, புறமான, தகவல்பூர்வமான பொருண்மை உலகமும் கவிதைக்குள் பிரவேசிக்க வேண்டும் என கவிஞர்கள் நினைத்தது. குறிப்பாய், இதை சாத்தியப்படுத்திய பெண்ணிய, தலித் கவிஞர்களின் வருகை.

நேரடியான தளர்வான கவிதைகள் வாசகனை சட்டென ஈர்த்தன. குறியீட்டியக்கத்தின் உச்சகட்டத்திலும் இவ்வகை கவிதைகளை விக்கிரமாதித்யன், சுகுமாரன் போன்றோர் எழுதியிருக்கின்றனர். விக்கிரமாதித்யன் எழுதியவை கணிசமாய் தத்துவார்த்தமான நிலைத்தகவல்கள் எனலாம். இவை ஒரு புறம் நவீனத்துவ குறியீட்டு கவிதைகள் போல் ஆழ்மன சிக்கல்களை, சில வேளை வெறும் புலம்பல்களை, பேச தலைப்பட்டன. அன்றாட வாழ்க்கை பற்றிய அவரது கவிதைகள் தாம் இன்றுள்ள கவிதைகளுக்கு ஓரளவு நெருக்கமாய் வருகின்றன. நேரடிக் கவிதைகளின் முதல் தேவன் என சுகுமாரனை கூற வேண்டும். எண்பதுகளின் இறுதியில் அவர் எழுதிய நேரடியான, மனித நெருக்கடியை புற வய தகவல்கள் மூல சொல்ல தலைப்படும் கவிதைகள் கணிசமான வாசகர்களை ஈர்த்தன. எண்பதுகளின் கவி உலகில் குட்டி இளவரசனாக இருந்த கலாப்பிரியாவின் கவிதைகள் தாம் இன்றுள்ள கவிதைகளுக்கு மிக மிக நெருக்கமானவை. என்ன கூடுதலாய் (கலாப்பிரியாவிடம் இல்லாத) பகடியும், விநோதமான உவமைகளும், மறுப்புவாதமும் இன்று கலந்திருக்கின்றன. இம்மரபை வளர்த்தெடுத்து பெரும் இயக்கமாக கட்டியமைத்த்து மனுஷ்யபுத்திரன். ரெண்டாயிரத்துக்கு பிறகு மிக அதிகமான புது கவிஞர்களின் பாணியை தீர்மானித்த்து மனுஷ்யபுத்திரன் தான். இதற்கும் இரு காரணங்கள். ஒன்று அவரது கவிதைகள் எளிதாகவும், நேரடியாக நம்மிடம் பேசும் விதமாகவும், புது வாசகர்களும் சட்டென நுழையும்படியாகவும் இருந்தன. விக்கிரமாதித்யன், கல்யாண்ஜி செய்தது போல முதல்நிலை வாசகர்களிடமும் அவர் பிரபலமாக இருந்தார். அடுத்து அவர் இரு பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். அதாவது இரு பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழின் இரு முக்கிய இலக்கிய பத்திரிகைகளின் கவிதை பிரசுரத்தை தீர்மானிக்கிறவராக இருந்திருக்கிறார். தொண்ணூறுகளின் என் நண்பர்கள் காலச்சுவடில் கவிதைகளை மேய்ந்த உடன் “மனுஷ்யபுத்திரனை போல் இன்னும் நாலு பேர் கவிதை எழுதியிருக்கிறார்கள்” என்பார்கள். மனுஷ்யபுத்திரன் இறுக்கமான குறியீட்டு கவிதைகளை விட தனது பாணியிலான நேரடி கவிதைகளையே அதிகம் காலச்சுவடில் அப்போது ஊக்குவித்தார். அவர் பின்னர் உயிர்மை ஆரம்பித்த போது அதில் கவிதைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கவில்லை என்றாலும் அதில் பிரசுரமான கவிதைகளும் அதிகம் நேரடிக் கவிதைகள் தாம். ஆக அவர் ஒரு மரபை பத்திரிகை வழியாகவும் ஊக்கப்படுத்தினார்.
இவையெல்லாம் சேர்ந்து குறியீட்டுக் கவிதையை கொஞ்சம் பின்னுக்கு தள்ளின. ஆனால் குறியீட்டுக் கவிதை இன்னும் ஒரு பக்கம் அண்டம் காக்கை போல் நம் பக்கமாய் சிறகு ஒடுக்கி இருந்து கொண்டு தான் உள்ளது. இந்த தருணத்தில் நாம் இன்னொரு கேள்வி கேட்கலாம். குறியீட்டுக் கவிதைக்கும் நேரடி கவிதைக்கும் இடையில் ஒரு கவிதை உண்டா? உண்டெனில் இதை எப்படி எழுதுவது. இதற்கு எல்லாம் சம்மந்தமில்லதவராக அறியப்பட்ட நகுலனின் கவிதை ஒன்றை நாம் அணுகி இது குறித்து அலசலாம்.
“நான் உள்ளிருந்து
வெளி வந்து விட்டேன்
என் முன் அந்தப் பெயர்
தெரியாத – சாம்பல் – மங்கல் –
வர்ணப் – பறவைகள்
வரிசையாக அணிவகுத்த விமானப்
படைகள் போல வெளிமுற்றத்தில்
சறுக்கிக் கொண்டு வந்தன
மணி பிற்பகல் 4.15”
இந்த கவிதையை நேரடியாக படிக்கலாம். நகுலன் வெளியே வந்து முற்றத்தில் நிற்கிறார். அதாவது உள்ளே (வீட்டில்) இருந்து வெளியே (முற்றத்துக்கு) வருகிறார். அப்போது பறவைகள் பறந்து வந்து முற்றத்தில் அமர்கின்றன. அதாவது வெளியே (வானில்) இருந்து உள்ளே (முற்றத்துக்கு) வருகின்றன. வெளி அல்லது இடம் குறித்த மனிதனின் பாவனைகளை, கற்பனைகளை இக்கவிதை லேசாய் பகடி பண்ணுகிறது எனலாம். நாம் வெளியே வந்து விட்டோம் என நினைக்கும் போது நாம் இருந்ததை விட பெரிய அகண்ட வெளியான ஆகாயத்தில் இருந்து பறவைகள் நம் சிறிய முற்றத்துக்கு வருகின்றன. நமக்கு முற்றம் ஒரு அகண்ட வெளி. ஆனால் பறவைகளுக்கு முற்றத்துக்கு வருவது ஒரு சின்ன இடத்தை அடைவது தான்– அதாவது நகுலன் முற்றத்தில் இருந்து வீட்டுக்கு திரும்புவது போல பறவைகள் ஆகாயத்தில் இருந்து அங்கு வருகின்றன.
அடுத்து இந்த கவிதையின் குறியீட்டு தளம். உள்ளும் புறமும் நகுலனுக்கு வெறும் தோற்றநிலைகள் தாம். இந்த கவிதைகள் நினைவுள்ளதா?
“என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
என சொல்லிச் சென்றார்”

“‘இப்போதும்
அங்கு தான்
இருக்கிறீர்களா’
என்று
கேட்டார்
’எப்பொழுதும்
அங்கு தான் இருப்பேன்
என்றேன்’”
நகுலன் கவிதைகளில் இப்படி யாராவது அவரைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். ஆனால் அவர்கள் பார்ப்பது நகுலனாக இருக்காது, நகுலனைக் குறித்த தம் பிம்பத்தோடு உரையாடுவார்கள், விடை பெறுவார்கள். மனித நிலைகளில் மட்டுமல்ல மனம் சம்மந்தப்பட்ட அனைத்திலும் நாம் வெளியே பார்ப்பது நம் மனக்கண்ணாடியின் பிம்பங்களை மட்டும் தான் என்றார் அவர். இது வைதிக சிந்தனை போல் தெரியலாம். ஆனால் அப்படி அல்ல. மனித பாவனைகளுக்கு அப்பால் ஒரு உண்மை உள்ளதாய் நகுலன் நம்பவில்லை. அவருடைய பிரச்சனை அவரே தன்னை பார்க்கையில் கூட வெறும் பிரதிபிம்பம் தான் தெரிகிறது. இது நகுலனின் மனப்பதிவு மற்றும் நம்பிக்கை. இவ்விசயத்தை மேற்சொன்ன பறவைக் கவிதையில் பொருத்தி பார்கலாம்.
அகவெளியும் பொய், புறவெளியும் பொய், இரண்டும் கற்பனைத் தோற்றங்கள் என்கிறார் நகுலன். ஆகாயத்தை உண்மை என கொள்ளலாமா? பறவைகள் ஆகாயத்தை அடைந்ததும் பறப்பதை நிறுத்துவதில்லை, அவை மேலும் மேலும் உயர்ந்தோ தொலைவிலோ எதையோ தேடிப் பறந்து கொண்டே இருக்கின்றன. ஆகாயத்துக்கு அப்பால் எதுவோ உள்ளதாய் ஒரு பறவை உணர்ந்தால் ஆகாயமும் வெறும் ஒரு பொய் தோற்றம் தான்.
சரி, இந்த கவிதையை குறியீட்டு கவிதையாக தோன்ற விடாமல் இருக்க நகுலன் ஒன்று செய்கிறார். அது தான் நமக்கு முக்கியம். “மணி பிற்பகல் 4.15” எனும் குறிப்பு அது. இக்குறிப்பு அவசியமா என நீங்கள் நினைக்கலாம். கவிதை நிகழ்வது காலையா மாலையா என்பது முக்கியமல்ல தானே. குறிப்பாய் எத்தனை மணி என்பது அவசியமே அல்ல. ஆனால் இக்குறிப்புக்கு ஒரு அவசியம் உண்டு. இது தான் இக்கவிதையை நேரடியான கவிதையாக்குகிறது. இதை நீக்கினால் நிச்சயம் குறியீட்டு கவிதை தான். இக்குறிப்புடன் இது நேரடிக்கும் குறியீட்டுக்கும் இடையிலான கவிதை ஆகிறது. நகுலன் இந்த விசயத்தை மிக கவனமாக செய்திருக்கிறார் என்பதை அவரது பிற கவிதைகள் படிக்கிறவர்களுக்கு புரியும்.


Comments