பாலகுமாரன்


பாலகுமாரன் எழுதியது வணிக நாவல்கள் என்றாலும் அதில் ஒரு நிதானமும் வாழ்க்கை பற்றின நிறைய அவதானிப்புகளும் இருந்தன. நல்ல புத்தகங்கள் வாழ்க்கையை நெருக்கமாய் நின்று பார்க்கிற உணர்வை தரும். பாலகுமாரன் நாவல்களின் சிறப்பு அவை வெறுமனே விறுவிறுப்பாய் கதை சொல்லி நிற்பதில்லை என்பது. அவரது நாவல்களில் குட்டி அபத்தங்களும் பலவீனங்களும் ஒரு இலக்கிய வாசகனாய் படிக்கையில் புலப்படும். ஆனால் அவர் பொய்யை எழுதவில்லை என்பது தான் அந்நாவல்களின் வலிமை.


எனக்கு அவரது பல நாவல்களின் தலைப்புகளும் கதைகளும் மறந்து விட்டன. ஆனால் உதிரி உதிரியான சம்பவங்கள் நினைவில் உள்ளன. ஒரு நாவலில் நாயகன் சின்ன ஓட்டல் நடத்துவான். தினமும் காலையில் இட்லி வெந்ததும் இரண்டை எடுத்து நெய்யூற்றி அந்த தெருவில் திரியும் பைத்தியக்காரனுக்கு வைப்பான். அவரால் தான் தன் கடை வியாபாரம் அமோகமாய் நடக்கிறது என அவனுக்கு ஒரு நம்பிக்கை. இது இந்திய மனம் பற்றி தரும் சித்திரம் அலாதியானது. அதே போல் இன்னொரு நாவலில் ஒரு கூர்க்கா வருவான். அவன் டீ சாப்பிடும் விதத்தை பற்றி சொல்லுவார். அவன் டீயை சிலாகித்து நேரம் எடுத்து சாப்பிடுவான். அதை படித்த பின் நானும் அது போல் குடிக்க ஆரம்பித்தேன். இது போல் வாழ்க்கை ரசிப்பதற்கான பல விசயங்களை சொல்லித் தருவார். சின்ன வயதில் பாலகுமாரன் வாசிப்பது ஒரு வாழ்க்கை பாடமாகவே எனக்கு தோன்றியது.

“மெர்க்குரி பூக்களில்” என நினைக்கிறேன். தொழிற்சாலையில் வேலை நிறுத்தம். முதலாளி இதை அடக்க குண்டர்களை ஏற்பாடு செய்வார். அதை அறியாமல் வேலைக்கு கிளம்பும் ஒருவன் தெரியாமல் ரௌடி ஒருவனை சைக்கிளில் மோதி விடுவான். அவன் எரிச்சலில் தனது மெல்லிய கத்தி கொண்டு அவனை குத்தி விடுவான். அவனுக்கும் கொல்லும் உத்தேசம் இல்லை, இவனுக்கும் போராடி சாகும் ஆசை இல்லை. ஆனால் சாவு நடந்து விடுகிறது. அவன் மனைவி விதவையாக இது கதையின் போக்கை மாற்றுகிறது. இந்த அசந்தர்ப்பமான அபத்தம் எனக்கு பிடித்திருந்தது. அது போல் இப்பெண்ணுக்கு ஒருவன் தொடர்ந்து உதவுவான். அவள் ஒரு நாள் இரவு ஏதோ தகவல் சொல்ல வீட்டுக்கு வருவான். அவள் தூக்க களைப்புடன் கதவை திறப்பாள். அவளது ஆடை விலகி ஒரு மார்பு வெளியே கிடக்கும். அதை கவனிக்க மாட்டாள். அந்தளவுக்கு அவளுக்கு வாழ்க்கையில் அலுப்பும் அக்கறையின்மையும்.

இன்னொரு நாவலில் திருமணமாகி போகும் பெண் தன் கணவனின் மூளை வளர்ச்சியில்லாத தம்பி பற்றி கூறும் போது அவன் அடிக்கடி தன் அறைக்கு வந்து கால்சராயை கழற்றி விட்டு நிற்கிறான் என கூறுவாள். அவள் நிலைமையை யோசியுங்கள். கோபிக்கவும் முடியாது இரங்கவும் முடியாது.

பாலகுமாரன் உருவாக்கின மனிதர்கள் என்னுடன் வாழ்ந்திருக்கிறார்கள். இன்னும் என் நினைவில் இருட்டில் அசைகிறார்கள். அவருக்கு இன்று பிறந்த நாள். அவரது பல லட்சம் வாசகர்களில் ஒருவனின் நன்றிகளும் அன்பும்.

Comments

Bagawanjee KA said…
மெர்க்குரி பூக்கள் நாவல் எனக்கு பிடித்த நாவலாகும் ,அவரைப் பற்றிய உங்கள் பதிவு அருமை !
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
Krishna moorthy said…


நிச்சயமாய் பாலகுமாரனை தாண்டி வராத 30 வயதை கடந்தவர்கள் எழுத்தின் அழகையும் வாழ்வின் தந்திரத்தையும் உணர முடியாதவர்கள் என்பது உண்மை .
எனக்கும் மிகவும் பிடித்த எழுத்தாளர் பாலகுமாரன். ஒரு கட்டத்தில் ஆன்மீகம் குறித்து எழுத ஆரம்பித்துவிட்டதால்தான் ஒதுங்க ஆரம்பித்தேன். அது தவிர இப்போது அவசர யுகம் வேறு. முன்பு மாதிரி வாசிக்க முடியவில்லை.