Thursday, July 24, 2014

பேய்களும் படைப்புலகமும்


முராகாமி

மனோஜ் நைட் ஷியாமளனின் “சிக்ஸ்த் சென்ஸ்” படத்தில் ஒரு சின்ன பையனுக்கு பேய்கள் கண்ணுக்கு தெரிகிறார்கள். அவன் பெயர் கோல். அவர்கள் பேசுவது கேட்கிறது. பையன் பயந்து வீரிட்டலறுவது இல்லை. பேய்களும் அவனிடம் பழிவாங்க உதவி கேட்பதில்லை. பேய்களுக்கு “உன் உதவி தேவையுள்ளது, அவற்றை கவனித்து அதரவளிக்க யாருமில்லை” என்று அவனது உளவியலாளர் (அவரே ஒரு பேய் என்பது வேறு விசயம்) கூறுகிறார்.

ஆனால் ஒரு பிரச்சனை. பேய்கள் ஒவ்வொன்றும் தாம் வாழ்கையில் அனுபவித்த வதைகளின் வலியில் உறைந்து போயிருக்கின்றன. பின்னந்தலையில் குண்டடிபட்ட பையன் அதே துளையுடன் தோன்றுகிறான். ”வா என் அப்பா துப்பாக்கியை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார் என காட்டுகிறேன்” என்கிறான். கணவனால் சித்திரவதை செய்யப்பட்ட பேய் சமையலறையில் குருதி சொட்டும் கைகளுடன் தோன்றுகிறாள். “என்னை ஏன் இப்படி துன்புறுத்துகிறாய், உனக்காக இவ்வளவு துயரப்பட்டு சமைக்கிறேனே” என பையனிடம் கேட்கிறாள். நூற்றாண்டுகளுக்கு முன் தூக்கிலப்பட்ட குடியானவனின் குடும்பம் விட்டத்தில் தொங்கியபடி தோற்றமளிக்கிறார்கள். தன் ஆண்டையிடன் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்ட அடிமை பதுங்கியிருந்து “நான் திருடவில்லை, என்னை விட்டு விடுங்கள்” என அழுகிறான். தன்னை திறந்து விடுமாறு கெஞ்சுகிறான். சிறுவனால் இவர்களின் துன்பத்தை எளிதில் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அவன் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகிறான்.


அடுத்தவரின் வாதைகளை அறிவதை விட மற்றொரு வதை உண்டுமா? இல்லை. அது நம்மை மெல்ல மெல்ல புற்றுநோய் போல் சிதைக்கிறது, நம்பிக்கைகள், லட்சியங்களை குலைக்கிறது, வாழ்க்கை குறித்து அஞ்சவும் பதறவும் வைக்கிறது. ஒரு கட்டத்தில் கோல் பேய்களின் துன்பங்களை கேட்டறிந்து உதவ முடியுமா என முயல்கிறான். இது பேய்கள் பற்றிய படம் அல்ல. படைப்பூக்கம் பற்றின படம்.
 படைப்பாளி என்பவன் தனக்கு சம்மந்தமில்லாத வாதைகளை, வரலாற்றில் காணாமல் போனவர்களின் துக்கங்களை பதிவு செய்பவன். எழுத்து ஒரு பெரும் வாதை என கி.ரா ஒருமுறை கூறியது இந்த அர்த்தத்தில் தான். மோசமான குற்றங்களை, அஞ்சத்தகுந்த கீழ்மைகளை உங்கள் பாத்திரம் செய்கிறது என்றால், விளங்காத குழப்பங்களுக்கு, விதியின் சிக்கல்களுக்கு அது ஆளாகிறது என்றால் எழுத்தாளனாக நீங்களும் இந்த அனுபவங்களின் சிலுவை சுமந்து தான் ஆக வேண்டும். உங்கள் கதாபாத்திரம் ஒரு குழந்தையின் கழுத்தை நெரித்து கொல்கிறான் என்றால் அதை எழுதும் முன்பான மணித்துளிகள் உங்களுக்கு கடும் வதையாக தான் இருக்கும். எழுதிய பின்பு உங்கள் நாவில் கசப்பின் சுவை நீங்காமல் இருக்கும். அது நீங்கள் இல்லை என்றாலும் அதை கூட இருந்து பார்த்தது நீங்கள் தானே. படைப்பாளி தூக்கிலிடும் பணியை செய்யும் ஆராச்சாரர் போன்றவன். மரணதண்டனை தன் தீர்ப்பு அல்ல என்றாலும் அச்செயலை கூட இருந்து நிறைவேற்றும் துரதிஷ்டம் அவனுக்கு உண்டு. அவன் அதை ஏற்கவோ நிராகரிக்கவோ இயலாது.
அதனால் தான் தீமை குறித்த சிறுகதைகள், கவிதைகள் எழுதுவது எழுத்தாளனுக்கு மயிரிழையில் தப்பிக்கிற விபத்தின் உணர்வை தருகிறது. “நீராலானது” தொகுப்பை படித்த பின் மனுஷ்யபுத்திரனிடம் “இதிலுள்ள அபாரமான கவிதைகளை எழுத நீங்கள் அதிர்ஷ்டம் பண்ணியிருக்கிறீர்கள்’ என்றேன். அவர் சொன்னார் “இதை எழுதியது என் வாழ்வின் ஆக மோசமான காலகட்டம். இதன் உக்கிரம் தாங்காமல் குடித்து குடித்து சீரழிந்தேன். மனச்சிதைவின் விளிம்புக்கே போனேன். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் இவற்றை எழுதாமலே இருப்பேன்”. எஸ்.ராமகிருஷ்ணன் தான் ஒவ்வொரு முறை நாவல் எழுதி முடித்த பின்னும் உடல்நிலை சீரழிந்து மருத்துவமனையில் சேரும் நிலைக்கு போய் விடுவதாக கூறுகிறார்.
பொதுவாக எழுத்து ஒரு நல்ல விடுவித்தல் அனுபவம் என கூறப்படுகிறது. மனச்சோர்வு கொண்டோரை எழுத்துப் பயிற்சியில் ஈடுபட சொல்வார்கள். இதை free writing என்பார்கள். அதாவது தங்குதடையின்றி மனதில் பட்டதை எழுதிக் கொண்டு போவது. ஆனால் எழுத்துப் பயிற்சி உண்மையிலேயே ஆரோக்கியமானது தானா என்கிற ஐயம் இப்போது ஏற்படுகிறது.

எழுத்தாளர்கள் பிறரை விட சீக்கிரமே உடல் நிலை சீரழிந்து போவதை பார்க்கிறோம். போதை மருந்து, காமம், சூதாட்டம் என எதாவது ஒன்றில் சிக்கி மீளமுடியாது தவிப்பார்கள். எழுத்தாளன் என்றில்லை, இலக்கியம் கலை வாசிப்பு என ஆர்வம் உள்ளவர்கள் பலரும் இது போல் தன்னழிப்பு முனைப்பு கொண்டவர்கள் தாம். போதையினால் கற்பனை மலரும், அதனால கலைஞர்கள் போதையின் சாத்தியங்களை நாடுகிறார்கள் என்று ஒரு காலத்தில் நினைத்தார்கள். ஆனால் சுயதேடல் கொண்டவர்களால் தவிர்க்க முடியாது போகிற ஒரு அல்லலாகவே போதையை பார்க்க வேண்டி உள்ளது.
ஏதோ ஒரு புள்ளியில் வாழ்வின் குரூரங்களை, குழப்படிகளை அறிய நேரும் இவர்கள் எளிதில் சகஜ வாழ்வுக்கு மீள்வதில்லை. இதற்கு எழுத்தாளனாய் தான் இருக்கும் அவசியம் இல்லை. படைப்பு மனம் இருந்தால் மட்டுமே கூட போதும். அது உங்களை சதா இருட்டின் பக்கங்களை திறந்து பார்க்க தூண்டுகிறது. அதனால் தான் மிக சாதாரணமான மற்றும் உன்னதமான படைப்பாளிகள் ஒரே போன்று தம்மை தாமே அழித்து கொள்கிறார்கள்.
நாவலாசிரியர்களுக்கு இன்னும் சிக்கல் அதிகம். ஒரு கவிதையை கதையை எழுதிய பின் பைத்திய மனநிலையை கடந்து போய் விடலாம். ஆனால் தினம் தினம் நாவலை எழுதியாக வேண்டும். முடிக்க வருடங்கள் எடுக்கலாம். தினம் தினம் அவன் உளைச்சல்களோடே வாழ்ந்தாக வேண்டும். ஆனால் நாவல் என்பது வாழ்வின் தீமை மட்டும் அல்லவே. வாழ்வின் மகத்துவமான இனிமையான நாட்களையும் சித்தரிக்கும் மனக்கிளர்ச்சி, உல்லாசமும் எழுத்தாளனுக்கு கிடைக்கும். ஆனால் இனிப்பை உற்பத்தி செய்கையில் எந்தளவு அவன் விரல்கள் இனிக்குமோ விஷத்தை உருவாக்கும் போது அதே அளவு விரல் நுனி நீலம் பாரிக்கும். உச்சகட்ட மகிழ்ச்சியின் கிளர்ச்சியையும் துக்கத்தின் வதையையும் வருடம் முழுக்க மாறி மாறி தருவதனால் தான் நாவல் எழுதுவது சிலருக்கு வசீகரமான நடவடிக்கையாய் இருக்கலாம்.
சரி இதை தொழில்முறை ஆபத்து என வரையறுப்போம். அதில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள எழுத்தாளன் என்ன செய்யலாம்? ஒன்று, அவனுக்கு எழுத்தில் தன்னில் ஏற்படுத்தும் விளைவுகள் இவை என்கிற பிரக்ஞை வேண்டும். மதுவையும் மிதமிஞ்சிய காமத்தையும் நோக்கி செலுத்தாமல் இது அவனை பாதுகாக்கும். அடுத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.
இரண்டாவது ஆலோசனையை தருபவர் பிரபல ஜப்பானிய நாவலாசிரியர் ஹருகி முராகாமி. அவர் மிக அதிகமாய் சிகரெட் புகைப்பவர். முப்பத்தி மூன்று வயதுக்கு மேல் ஒருநாள் தொடர்ந்து பல நிமிடங்கள் இருமி முடித்த பின் அவருக்கு ஒரு எண்ணம் வருகிறது: “இப்பிடியே போனால் விரைவில் நான் நோய்வாய்ப்பட்டு தளர்ந்து போவேன். எழுத முடியாமல் போகும்”. அவர் சிகரெட் பழக்கத்தை விடுகிறார். ஆனால் அடுத்து அவர் செய்கிற காரியம் முக்கியம்.
தான் இப்படி தொடர்ந்து புகைப்பது எதனால் என யோசிக்கிறார். எழுத்து தரும் மனநெருக்கடியை தாள முடியாததனால் மனம் உடல் வழி தன்னையே அழிக்க பார்க்கிறது என அறிகிறார். உடலும் மனமும் இருவேறு விசயங்கள் அல்ல. மனதின் நீட்சியே உடல், உடலின் நீட்சியே மனம் என உணர்கிறார். ஆக எழுத்தாளன் வெறுமனே வாசிப்பதும் எழுதுவதும் மட்டும் போதாது. அது கால்வாசி பயிற்சி தான். முழுமையான மனப்பயிற்சி உடலுக்கு சேர்த்து தரும் உடற்பயிற்சி தான் என நினைக்கிறார். அவர் அன்று முதல் ஓட்டப்பயிற்சி ஆரம்பிக்கிறார். அதற்கு முன் அவர் அதிகம் ஓடியது இல்லை. அதனால் மிகுந்த சிரமங்கள் ஏற்பட விடாமல் ஓடுகிறார். மெல்ல மெல்ல மராத்தான் ஓடும் நிலைக்கு வருகிறார். முரகாமிக்கு இப்போது வயது 64. இதுவரை வருடத்துக்கு ஒன்று என 31 மராத்தான்களை ஓடியிருக்கிறார். இந்த மராத்தான் ஓட்டத்திற்காக தனி பயிற்சிகள் எடுக்கிறார். எழுத்தை போன்ற அதே அளவு முக்கியத்துவத்தை ஓட்டத்திற்கு அளிக்கிறார். சில மராத்தான் அனுபவங்களின் டயரிக் குறிப்புகளாக எழுதி ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார்: “ஓட்டத்தை பற்றி பேசும் போது என்ன பேசுவேன்” (What I Talk about When I Talk about Running). இதில் தான் ஒரு இயல்பான ஓட்ட திறமை கொண்ட ஆள் அல்ல என்கிறார் முராகாமி. அவருக்கு நீண்ட தூரம் ஓடும் திறனோ வேகமாய் ஓடும் கால் தசைகளோ இல்லை என்கிறார். கடவுள் அவரை ஓடுவதற்காக படைக்கவில்லை. ஒவ்வொரு மராத்தான் மற்றும் அதற்கான தினசரி ஓட்டப்பயிற்சியும் கடும் வலியை ஏற்படுத்துகிறது. சிலநாள் அவரே கீழே இறங்கி காலை பதிக்க முடியாதபடி கால் மரக்கிறது, முட்டி வீங்குகிறது. ஆனால் வலியை தாங்கும், தொடர்ந்து ஒரு செயலை செய்யும் விடாப்பிடித்தனம் மட்டுமே தனக்கு இயல்பாக கிடைத்த திறமை என்கிறார் முராகாமி. அதைக் கொண்டு மட்டுமே அவரால் திறமையோ உடல்வலிமையோ இல்லாமல் கூட இத்தனை வருடங்களாய் மராத்தான் ஓட இயலுகிறது. ஆனால் எதற்கு ஒருவர் தன்னை இந்தளவு வருத்தி கொள்ள வேண்டும்?

இவ்வாறு வருத்திக் கொள்வதன் வழியாக அவர் தன் மனதை விடுவிக்கிறார். உடலுக்கு அழுத்தம் அதிகமாகும் போது அது மனதை பாதிக்கிறது. மனம் துயருறும் போது அது உடலில் வலியாக வெளிப்படுகிறது. உடல் புல்லாங்குழல் என்றால் மனம் அதில் உள்ள துளைகள். மனதின் வலியை தாங்க ஆரோக்கியமான உடல் வேண்டும் என்கிறார் முராகாமி. எழுத்தின் போது நாம் போகக் கூடாத தீமையின் பாதைகளில் பயணிக்கிறோம்; அப்போதும் நாம் காணும் இருட்டான உலகம் நம்மை கடுமையாய் துன்புறுத்தி மனதை கலைத்து போடுகிறது. எழுதி முடித்த பின்னும் அந்த தீங்கு நம்முடன் ஒட்டிக் கொண்டு வருகிறது. அது நம்மை தொந்தரவு பண்ணிக் கொண்டே இருக்கிறது. அதை தாங்கும் உடல்வலு எழுத்தாளனுக்கு அவசியம் என்கிறார் முராகாமி. மனவலிமை போதும் என முராகாமி சொல்லவில்லை என்பதை கவனியுங்கள். மனம் விழும் போது மனதால் ஒன்றும் பண்ண முடியாது; அதை உடல் தான் தாங்க வேண்டும். அது போல் உடல் விழும் போது மனம் தாங்கிக் கொள்ளும். இந்த புரிந்துணர்வு தான் முராகாமியை அறுபத்தி நாலாவது வயதிலும் மராத்தான் நோக்கி செலுத்துகிறது.
தமிழில் இவ்விசயத்தை நன்குணர்ந்தவர் ஜெயமோகன். அவருக்கு என்று கராறான உணவு நடைமுறை உண்டு. பத்மநாப்புரத்தில அவர் தங்கியிருந்த போது தக்கலையில் உள்ள அலுவலகத்துக்கு நடந்து தான் போவார். அவர் சாராயம், சிகரெட், பீடா, குட்கா எல்லாம் பயன்படுத்துவதில்லை. அவர் நடத்துகிற கூட்டங்களிலும் அனுமதிப்பதில்லை. உடற்பயிற்சி செய்யாத தமிழ் எழுத்தாளனுக்கு அட இவருக்கு ஏன் போதை வஸ்துக்கள் பிடிப்பதில்லை என குழப்பமாக இருக்கிறது. கொஞ்சம் குடித்தால் நம்மை போல் ஜாலியாக இருப்பாரோ என யோசிக்கிறான். வைக்கம் முகமது பஷீர் தினமும் உடற்பயிற்சி செய்வார். குஸ்தி முறைகள் தெரிந்தவர் அவர். இடுப்பில் எப்போதும் கத்தி வைத்திருப்பார். தனது வலிமையான பௌருஷமான உடல் பற்றின பெருமை கொண்டவர் கூட.
கட்டுரைகள் எழுதுவது மனத்தொந்தரவுகளை அளிப்பதில்லை. சொல்லப் போனால் மனச்சிக்கல்களுக்கு அவை தீர்வாக உள்ளன. பா.ஜ.க இத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது என்னை ரொம்ப கலக்கமடைய வைத்தது. தொடர்ந்து நண்பர்களுடன் அது குறித்து புலம்பிக் கொண்டிருந்தேன். அது என்னை மேலும் துன்பத்தில் தள்ளியது. அப்புறம் மோடி குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். அதோடு மனதை பிடித்த சனியன் அகன்றது போல் நிம்மதி கிடைத்தது. ஆனால் நாவல் எழுதுகிற ஒவ்வொரு நாளும் கசப்பில் ஆழ்ந்து கொண்டே போவது தான் என் அனுபவம். இது நேரடியான துன்பம் அல்ல. மறைமுகமாக அடியாழத்தில் நம்மை அரிக்கிற அவஸ்தை.
கட்டுரை உண்மையை எளிமைப்படுத்துகிறது. புனைவு அதை சிக்கலாக்குகிறது. கட்டுரை உண்மையை தெளிவாக்குகிறது. புனைவு அதை குழப்பமாக்குகிறது. கட்டுரையில் வாழ்வின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு இருக்கும். அல்லது குறைந்தது அப்படியான பாவனை இருக்கும். புனைவில் தீர்வுகளே இல்லை. சரி புனைவு எழுதுவதை பேசாமல் விட்டுத் தள்ளலாமே?
கட்டுரை நண்பனைப் போன்றது. நண்பன் வாழ்வை மகிழ்ச்சியாக்குவான். தொல்லைகளில் இருந்து பாதுகாப்பான். ஆனால் புனைவு காதலி போல. நோகடித்துக் கொண்டே இருப்பாள். தற்கொலை நோக்கி தள்ளுவாள். ஆனால் நண்பனா காதலியா என்றால் கண்ணை மூடிக் கொண்டு யாரை தேர்வீர்கள்? மனித குணம் அப்படி!

மூன்றாவதாக ஒரு பிரச்சனை உள்ளது. புனைவெழுத்தாளனால் சமூகத்துடன் ஒட்டிப் போக முடியாது. சமூகத்துக்கும் புனைவெழுத்தாளனுக்கும் பரஸ்பரம் தாம் பேசுகிற மொழி புரியாது. புனைவெழுத்தாளனுக்கு சமூகம் கிறுக்காகவும் சமூகத்துக்கு அவன் கிறுக்ககாகவும் தோன்றும். இது அவனை மோசமாக பாதிக்கும். அவன் தனிமைப்படுவான். “சிக்ஸ்த் சென்ஸில்” கோல் எனும் அச்சிறுவன் தன் சகமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் விநோத பிராணியாக பார்க்கப்படுகிறான். அவன் தன்னைச் சுற்றி உலவும் பேய்கள் கூறும் ரகசியங்களை உடனுக்குடன் வெளியே கூறி விடுகிறான். ஆசிரியர் வகுப்பில் அவர்கள் இருக்கும் வகுப்பறையின் வரலாறு பற்றி பேசுகிறார். அந்த வகுப்பறை பல நூற்றாண்டுகளுக்கு முன் குற்றவாளிகளை தூக்கிலிடும் இடமாக இருந்தது என ஆவிகள் மூலம் அறியும் கோல் எழுந்து வகுப்பில் அதை கூறுகிறான். ஆசிரியருக்கு அவ்வரலாறு தெரியாது. அவர் குழப்பமுற்று அவனை முறைக்கிறார். கோலுக்கு இது எரிச்சலூட்டுகிறது. அவன் அந்த ஆசிரியர் சின்ன வயதில் திக்குவாயனாக இருந்து மனச்சிக்கலுக்கு ஆளாகிய உண்மையை கத்தி கூறுகிறான். சமநிலை இழக்கும் ஆசிரியர் கோலை நோக்கி கத்துகிறார். அவர் பதற்றத்தில் பல வருடங்களுக்கு பின் மீண்டும் திக்குகிறார். பின்னர் கோல் இவ்வாறு எல்லாரிடமும் தன் உண்மைகளை வெளிப்படுத்த கூடாது என அறிகிறான். இறுதிக் காட்சியில் அவன் ஒரு நாடகத்தில் நடிக்கிறான். அதற்காக ஒப்பனை செய்து கொண்டிருக்கையில் பல ஆண்டுகள் முன்பு அம்மேடையில் நடந்த தீவிபத்தில் கருகி இறந்து போன பெண்ணின் ஆவி அவனிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். அப்போது அதே ஆசிரியர் வருகிறார். அவர் தான் கோலுக்கு நாடகத்தில் நடிக்க வாய்ப்பளித்தவர். அவர் “யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய்” என கேட்கிறார். கோல் அதற்கு “சும்மா வரிகளை மனனம் செய்து கொண்டிருந்தேன்” என்று பொய் சொல்லுகிறான். அவர் சமாதானமாகிறார். கோல் நாடக வாய்ப்புக்கு ஆசிரியருக்கு நன்றி சொல்கிறான். நாடகத்தில் சிறப்பாக நடித்து கைத்தட்டு வாங்குகிறான்.
இன்னொரு காட்சியில் அவன் காரில் அம்மாவுடன் இருக்கையில் ஒரு விபத்து நடக்கிறது. அவர்கள் போக்குவரத்து நெரிசலில் வெகுபின்னே தங்கி போகிறார்கள். கோல் தன் அம்மாவிடம் நடந்த விபத்தில் ஒரு பெண் இறந்து விட்டதாய் கூறுகிறான். உனக்கெப்படி தெரியும் என அம்மா வினவ இறந்து போன பெண்ணின் ஆவி தன் பக்கத்தில் கார் கண்ணாடி அருகே நிற்பதாய் கூறுகிறான். அது வரை அவன் தன் அம்மாவிடம் பேய்களை காணும் இயல்பு தனக்கு உள்ளதை கூற மாட்டான். இது பல குழப்பங்களை மனஸ்தாபங்களை இருவர் இடையிலும் ஏற்படுத்துகிறது. இப்போது தன்னைப் பற்றிய உண்மைகளை அவன் முதன்முறை சொல்லிய பிறகு அம்மாவுக்கும் பையனுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுகிறது.
இந்த இரண்டு காட்சிகளில் முதல் காட்சியில் கோல் தன் ஆசிரியரிடம் பேயை பார்த்த உண்மை நிலையை கூறாமல் மனனம் செய்ததாய் பொய் சொல்லுகிறான். இரண்டாவதில் அம்மாவிடம் பேய் பார்த்ததாய் உண்மை சொல்லுகிறான். இதன் பொருள் படைப்பாளி வெளிசமூகத்திடம் தன் உண்மை சொரூபத்தை காட்டக் கூடாது என்பது. வெளியே நீங்கள் மிக மிக சாமான்யமாக இருப்பதே நல்லது. சாமான்யனாய் இருப்பதாய் பாவனை செய்வது வெளிசமூகத்தில் சகஜமாய் தொந்தரவின்றி வாழ உதவும். அதே சமயம் உள்வட்டத்தில் உள்ள அம்மா, மனைவி, நண்பர்களிடம் ஒரு எழுத்தாளனாய் வாழும் நிலையின் சிக்கல்களை வெளிப்படுத்த வேண்டும். வீட்டுக்குள் எழுத்தாளனாகவும் வெளியே சாமான்யனாகவும் இருப்பதே நல்லது என்கின்றன இக்காட்சிகள். எழுத்தாளன் எப்படியும் மறைந்து வாழும் நக்சலைட் போலத் தான். அவன் வெளியே மாறுவேடத்திலும் உள்ளே இயல்பாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சமூகத்துக்கும் அவனுக்கும் ஆபத்து. உதாரணமாய், வெளிசமூகத்தில் எழுத்தாளனாகவே இருக்க தலைப்படும் புனைவெழுத்தாளன் அவமதிக்கப்படுவான், ஒடுக்கப்படுவான், குறைந்தது தவறாய் புரிந்து கொள்ளப்படுவான். வீட்டுக்குள் தன் படைப்பு பிரச்சனைகளை மறைக்கும் ஆணை மனைவி பிரிந்து போய் விடுவாள்.

நன்றி: ஜூன் 2014 அமிர்தா