கார்ப்பரேட் பிடியில் இருந்து திரையரங்கு, குறும்படம் மற்றும் தமிழ் சினிமா தப்புவது எப்படி?


தமிழில் வெற்றி பெற்ற சினிமாக்கள் மூன்று, ஆறு மாதங்கள் என்ன ஒரு வருடம் ஓடிய வரலாறு கூட உண்டு. இருபது முப்பது தடவை ஒரு படத்தை திரும்ப திரும்ப பார்ப்பது சாதாரணமாக இருந்ததுண்டு. இன்று 4 நாள் ஒரு படம் ஓடினால் அது வெற்றிப் படம். முதல் நாள் நல்ல கலக்‌ஷன் என்றாலே இயக்குநர்கள் குஷியாகி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் மூன்று பேர் கொண்ட குடும்பம் ஒரு நல்ல திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பதென்றால் டிக்கெட் செலவை விட தீனி செலவு இருமடங்காகிறது. ஒரு சமோசாவை அறுபது, என்பது ரூபாய்க்கு, சில திரையரங்குகளில் 120க்கு கூட விற்கிறார்கள். கொஞ்ச நாள் போனால் அங்கே சுவாசிக்கிற காற்றுக்கு கூட காசு பிடுங்குவார்கள் போல.
சென்னையில் டிக்கெட் விலை குறைவு என்கிறோம். ஆனால் ஒரு பீனிக்ஸ் மால் போன்ற இடங்களில் படம் பார்க்க போனால் நீங்கள் இருசக்கர வாகன பார்க்கிங்குக்கு இருநூறு ரூபாய் கொடுக்க வேண்டி வருகிறது. அதாவது பட டிக்கெட்டை விட பார்க்கிங் டிக்கெட் இருமடங்கு விலை. காரில் போனால் பட டிக்கெட்டுக்கு நான்கு மடங்கு பார்க்கிங்கு ஆகலாம்.


இன்று சினிமா நான்கு நாட்களுக்கு மேல் ஒடாததற்கு ஒரு முக்கிய காரணம் இந்த அநியாய செலவு தான் என்கிறார் ஒரு இயக்குநர் நண்பர். கோயம்பத்தூரில் தியேட்டர்களை லீசுக்கு விடுவார்களாம். அப்படி இயக்குநரின் நண்பர் லீசுக்கு எடுத்தார். அஜித் படம் ரிலீஸ். அவர் திரையரங்கில் நூறு நாற்காலிகளை கூடுதலாக போட்டு முன்னூறு ரூபாய் கட்டணம் போட்டு ஓட்டினாராம். இப்படித் தான் சம்பாதிக்கிறார்கள். மாதம் 15,000 சம்பாதிக்கிறவர்கள் குடும்பத்தோடு பத்து முறை இது போல் படம் பார்க்க போனால் என்னவாகும் யோசியுங்கள். எனக்குத் தெரிந்து வாரத்துக்கு ரெண்டு படம் குடும்பத்தோடு (ரெண்டு பேராக) போகும் செலவை விட தினமும் டாஸ்மாக்கில் குடித்தால் குறைவாக தான் ஆகும். இந்த நிலையில் கமல்ஹாசன் ஒரு நேர்முகத்தில் டிக்கெட் கட்டணத்தை அரசு கட்டுப்படுத்தாமல் பிற மாநிலங்களுக்கு இணையாக உயர்த்த வேண்டும் என கேட்டிருக்கிறார். அப்படியென்றால் சினிமா பார்ப்பது கொஞ்ச நாளில் சிங்கப்பூருக்கு சுற்றுலா போவது போல் ஆகி விடும். ஒரு படம் ரெண்டு நாள் ஓடினாலே பிரம்மாண்ட வெற்றி என ஆகும். ஒரு காலத்தில் உள்ளூர் வணிகர்களிடம் திரையரங்குகள் இருந்த போது அது மக்களின் அரங்காக இருந்தது. மாதம் முப்பது நாளும் திரையரங்கு போகிறவர்கள் இருந்தார்கள். அவர்கள் மாதம் குறைவாக சம்பாதிக்கிறவர்கள் தான். ஆனாலும் சினிமா பார்க்கும் செலவு அவர்களுக்கு கட்டுப்படியானது. திரையரங்குகளை கார்ப்பரேட்டுகள் வரித்து கொண்ட பின் இன்று சினிமா பார்ப்பது ஒரு பெரும் ஆடம்பரமாகி உள்ளது. அதனால் மக்கள் படம் பார்க்க போகும் முன் நிறைய தயங்குகிறார்கள், நல்ல படமா என விசாரித்து உறுதி செய்கிறார்கள். கொஞ்சம் போரடிக்கிற படங்களை முதல் காட்சியிலேயே நிராகரிக்கிறார்கள். கார்ப்பரேட் கையில் திரையரங்குகள் வந்த பின் சினிமா தயாரிப்பு என்றால் ஒன்று பெருத்த லாபம் அல்லது மிக மோசமான நஷ்டம் என்றாகி விட்டது. கணிசமான படங்கள் மிக மோசமான நஷ்டத்தை தழுகின்றன. இதனால் இயக்குநர்கள் படத்தை உயிரைக்கொடுத்து சந்தைப்படுத்துகிறார்கள். படமெடுப்பதை விட சந்தைப்படுத்துவதே அவர்களின் பிரதான அக்கறையாகிறது. 

நஷ்டமேற்படும் கவலையால் படசெலவின் 50% விளம்பரத்துக்கு ஒதுக்கிறார்கள். சினிமா எடுப்பது இன்று “அதாகப்பட்டது சார் கடல்லே கப்பல் போகுது, வானத்திலே ஏரோபிளேன் போகுது, ரோட்டிலே பஸ்ஸு போகுது. அந்த மாரி பயணத்தில கூட நீங்க பார்க்க முடியாத பல அரிய பொக்கிஷங்கள இந்த படத்தில பார்க்கலாம் சார்” என அங்காடியில் கூவி விற்கிற நிலைமையில் உள்ளது என்று இயக்குநர் தாமிரா என்னிடம் ஒரு தனிப்பட்ட உரையாடலில் அங்கலாய்த்தார். சினிமா எடுப்பது இவ்வளவு ரிஸ்கான ஆட்டமாக இருப்பதனால் தான் இனிமேல் பாலசந்தர் போல் நூறு சினிமாக்கள் எடுக்கிற ஒரு இயக்குநர் இனி தோன்ற மாட்டார். பாலசந்தர் கூட இந்த காலகட்டத்தில் தோன்றியிருந்தால் இவ்வளவு படங்கள் சாத்தியமே பட்டிருக்காது. இனிமேல் நிலைத்து முப்பது வருடங்கள் இயங்குகிற இயக்குநர் சிகரங்கள் தோன்ற மாட்டார்கள். சில படங்கள் எடுத்து ஓய்கிற சிகரங்கள் தான் இருப்பார்கள். ஏனென்றால் கார்ப்பரேட்வாதம் ஏற்படுத்தும் வணிக நெருக்கடி செல்வராகவன் போன்ற நிலைப்பெற்ற இயக்குநர்களையே புலம்ப வைக்கிறது; களைத்து ஓய செய்கிறது. ரெண்டாயிரத்தில் தோன்றி பெரும்புகழ் பெற்ற தீவிர இயக்குநர்களில் கிட்டத்தட்ட யாருமே இன்று தொடர்ந்து படம் பண்ணுகிற நிலையில் இல்லை என்பதை கவனிக்கலாம்.

ஒரு இயக்குநர் சுதந்திரமாக இயங்க சுவாசிக்கும் வெளி வேண்டும். அவனது பரீட்சார்த்தமான முயற்சிகள் சிலவேளை தோற்கும். சிலவேளை ஜெயிக்கும். அதைக் கடந்தும் அவன் இயங்க முடிய வேண்டும். முன்னால் பாலசந்தருக்கும் பாரதிராஜாவுக்கும் அப்படி தோல்விகளை கடந்து செயல்பட முடிந்தது. இன்று ஒரே தோல்வியுடன் இயக்குநர்கள் படுத்து விடுகிறார்கள். சினிமா குதிரை பந்தயம் போல் ஆகி விட்டது. குதிரை நொண்டியானால் அதற்கு இன்னொரு வாய்ப்பளிப்பதில்லை; சுட்டு விடுகிறார்கள். இன்று தமிழ் சினிமாவில் இயக்குநர் என்றால் கலைஞன் அல்ல. அவன் ஒரு கார்ப்பரேட் சி..ஓ போல் நன்றாக நட்சத்திரங்களை கொண்டு சிறப்பாக மீடியா பரபரப்பு ஏற்படுத்தி படத்தை சில நாட்கள் ஓட வைத்து விற்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். அதாவதுராஜா ராணிஅட்லி போன்ற ஆள் தான் இன்றைய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தேவை, மிஷ்கினோ செல்வராகவனோ அல்ல. இதை நன்கு உணர்ந்ததனால் தான் பரீட்சார்த்த/எதார்த்த சினிமாக்களில் நடித்து பெயர் பெற்ற விக்ரம், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்கள் தங்களை நட்சத்திரங்களாக மாற்றும் மிக மோசமான வணிக படங்களில் கவனம் செலுத்த துவங்கினர். இந்த புராஜெக்ட் கிடைக்காவிட்டால் நீங்க வீட்டுக்கு போக வேண்டியது தான் என சில பி.பி.ஓக்களில் அச்சுறுத்துவார்கள்; கத்தி முனையில் வேலை செய்ய வைப்பார்கள். இன்று கத்திமுனையில் படம் எடுத்து கத்தி முனையில் பார்க்க வைக்கிறார்கள். முன்பு மக்கள் தாமாக படம் பார்க்க வந்தார்கள். ஆனால் இன்று மிரட்டி ஏமாற்றி வரவழைக்கப்படுகிறார்கள். பொதுவாக ஊழியர்களை தேவையற்று கட்டாயமாய் வேலை செய்ய வைத்து உற்பத்தி பண்ணி அந்த உற்பத்தியை கட்டாயமாக பார்வையாளனை நுகர வைக்கும் முதலாளித்துவம் அவ்வாறே சினிமாவை சீரழித்து வருகிறது. சாமான்ய மக்களிடம் இருந்தும் கலைஞர்களிடம் இருந்தும் சினிமாவை மெல்ல மெல்ல அந்நியப்படுத்தி வருகிறது.

தமிழில் சிறந்த மாற்றுப்படங்கள் வராததை பற்றி வருந்துகிறோம். பல திறமையான இளைஞர்கள் கோடம்பாக்கத்துக்கு வந்த உடனே தம்மால் மசாலா படம் எடுக்காமல் பிழைக்க முடியாது என புரிந்து கொள்கிறார்கள். இத்தனைக்கும் கடந்த பத்து வருடங்களில் பரிட்சார்த்தமான எதார்த்த படங்கள் பல வெற்றி அடைந்துள்ளன. ஆனாலும் ஏன் எதார்த்த சினிமா ஒரு போக்காக இங்கு உருவாக வில்லை?

பாலிவுட்டில் மாற்றுசினிமாவுக்கு என்று ஒரு தனித்த தடம் உருவாகி உள்ளது. ஆனால் இங்கில்லை. பாலிவுட்டில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வழி குறைந்த பட்ஜெட்டில் பரிட்சார்த்தமாக எடுக்கப்படும் படங்கள் ஓடுகின்றன. ஆனால் இங்கே திரையரங்குகள் சினிமா மேல் கொண்டுள்ள இரும்புப் பிடி காரணமாய் மாற்றுபடங்களை வெளியிட முடியாத நிலை தான் உள்ளது. “மதுபானக்கடை” நல்ல உதாரணம். அப்படத்தை பார்க்க ஆளிருந்தும் திரையரங்குகள் சில நாட்களில் நீக்கின. நீக்கும் நாள் அறிவிக்கப்பட்டதும் பலர் சென்று அவசரமாய் அப்படத்தை பார்த்த விநோதமும் நடந்தது. ராமின் “தங்கமீன்கள்” கூட வெளியிட வாய்ப்பின்றி பல மாதங்கள் பெட்டியில் தூங்கின. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லான “ஆரண்யகாண்டம்” பரவலாக வெளியிடப்படவில்லை. டி.வியில் கூட பலர் அதை பார்க்கவில்லை. ஆனால் அதே வகை படமான ஆனந்த் காந்தியின் Ship of Theseus இந்தியா முழுக்க வெளியாகி வெற்றி பெற்றது. ஆனந்த் காந்தி தமிழ்நாட்டில் இருந்திருந்தால் சட்டையை பிய்த்து கொண்டு தெருவில் ஓடியிருப்பார். என்னுடைய நண்பர் ஒரு சேனலில் இருக்கிறார். ஒரு படம் தயாரித்திருக்கிறார். படம் ஓடுமா என அவருக்கு கவலையில்லை. டி.விக்கு விற்றால் போட்ட காசுக்கு மேல் லாபமும் கிடைக்கும் என்கிறார். சினிமா மக்களிடம் இருந்து அந்நியமாவதன் அடுத்த நோய்க்குறி சினிமாக்காரர்களே டிவி ரிலீசில் பணம் பண்ணினால் போதும் என நினைப்பது தான்.

டிக்கெட் செலவு காரணமாய் நட்சத்திர அந்தஸ்து இல்லாத படங்களை நோக்கி முதலில் மக்கள் வர மாட்டார்கள். ஆனால் பேச்சுவாக்கில் இப்படங்கள் பிரபலமாகி சில நாட்களில் ஓட துவங்கும். இப்படித் தான் தமிழ் சினிமாவின் பல முக்கிய படங்கள் ஓடின. ஆனால் இன்று அதற்கான அவகாசம் இல்லை. மூன்று நாட்கள் தான் படத்தின் ஆயுள் எனும் போது பேச்சுவாக்கில் பிரபலமாகுவதே சாத்தியமில்லாமல் போகிறது. மக்களாலும் திரும்ப திரும்ப அரங்குக்கு போக கட்டுப்படியாகாது போவதால் திரையரங்குகள் ஓடாத படத்தை அடுத்த நாளே தூக்கி விடுகின்றன. இதனால் நட்சத்திரங்களும் பிரசித்த பெயர்களும் இல்லாத படங்களை வாங்கி வெளியிட தயங்குகிறார்கள். இந்நிலையில் புது முயற்சிகள், பரீட்சார்த்த படங்கள் மொட்டில் வாடிப் போகின்றன. பரீட்சார்த்த முயற்சிகள் இல்லாத சினிமா மிகவும் தேங்கி அழிந்து போகும். மசாலா படங்களை திரும்ப திரும்ப பார்த்து பார்முலா தேய்ந்த பின் மக்களுக்கு அலுத்து போகும். அப்போது ஓரளவுக்கு பரிட்சார்த்தமுள்ள சினிமாக்கள் வெற்றி பெறும். இது பத்திருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிற சுழற்சி. தமிழ் சினிமாவில் அறியப்பட்ட இயக்குநர்களை யாரென்று பார்த்தால் இது போன்ற சுழற்சி கட்டத்தில் தோன்றுகிறவர்களாக இருப்பார்கள். எண்பதுகளில் பாலசந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா, தொண்ணூறுகளில் மணிரத்னம், ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் பாலா, செல்வராகவன், பிற்பகுதியில் மிஷ்கின், சமீபமாக பாலாஜி மோகன், நலன் குமாரசாமி, பா.ரஞ்சித் போன்றவர்கள்.

இந்த சுழற்சி தமிழ் சினிமாவை கொஞ்சம் புதுப்பிக்கும். புது கதைகள், பாணி தோன்றும். பிறகு மீண்டும் வியாபாரிகள் சினிமாவை பீடா போல் மென்று துப்பி சக்கையாக்குவார்கள். அடுத்த சுழற்சிக்காக காத்திருப்போம். இப்படி சினிமா சக்கையாக போவதன் முக்கிய காரணம் மாற்றுபடங்களுக்கான ஒரு சாத்தியம் வணிகபடங்களுடனே இங்கு இல்லை என்பது தான். கேரளாவில் சிறந்த கதையும் கலைத்தன்மையும் கொண்ட இடைநிலை படங்கள் எண்பதுகள், தொண்ணூறின் ஆரம்பங்களில் தோன்றியதன் முக்கிய காரணம் அங்கு மாற்றுப்படங்களும் இன்னொரு பக்கம் இருந்தது தான் – அந்த ஊர் சினிமா அரவிந்தன்கள், ஷாஜி காருண்கள் மற்றும் ஜான் அபிராம்களுக்கும் மூச்சு விட இடம் அளித்தது. பாலிவுட்டிலும் இது போல் ஒரு மாற்றுபட தளம் தொண்ணூறுகளில் தோன்றியது. அதில் இருந்து உறிஞ்சி தான் இடைநிலை சினிமாக்கள் தோன்ற முடியும். நம்மை விட தரமான வித்தியாசமான இடைநிலை படங்களை இந்தியில் எடுப்பதன் காரணம் அவர்களுக்கு இப்படியான ஒரு தோற்றுவாய் இருப்பதனால் தான்.

இன்று சி.வி குமார் போன்றவர்கள் பரீட்சார்த்த படங்களை வெளியிட்டு வெற்றி காணும் ஒரு போக்கை உருவாக்கி இருக்கிறார். ஆனால் இதன் வழி உருவாகும் பரீட்சார்த்த இயக்குநர்களின் ஆயுசும் குறைவாக இருக்கிறது. அவர்களும் கார்ப்பரேட் சுழலில் மாட்டி அடையாளம் இழக்கிறார்கள். பாலுமகேந்திரா ஓடாது என தெரிந்திருந்தும் வீடு, சந்தியா ராகம் போன்ற கலைப்படங்களை எடுத்தார். ஒரு நல்ல படம் எடுப்பதற்காக தியாகங்கள் செய்யவும் காத்திருக்கவும் பாலுமகேந்திரா தயாராக இருந்தார். ஒரு நல்ல சினிமா எடுக்க நாம் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம்; அதற்கு வருந்தக் கூடாது என பாலுமகேந்திரா தனக்கு கற்றுத் தந்ததாக ராம் கூறுகிறார். ஆனால் இன்றைய புது இயக்குநர்களுக்கு அப்படியான கராறான கலைசினிமா அணுகுமுறையோ பொறுமையோ இல்லை. ஒரு வித்தியாசமான சினிமா எடுத்து வெற்றி தந்தால் உடனே கோடம்பாக்கம் கார்ப்பரேட் வியாபாரிகள் அவர்களை கவனிக்கிறார்கள். ஒப்பந்தம் போட்டு வாங்கி போடுகிறார்கள். அவர்களை வழக்கமான மசாலா படம் எடுக்க செய்கிறார்கள். 

கெ.எஸ்.ரவிக்குமார் பாணி படத்துக்கு ஒரு பரிட்சார்த்த பட இயக்குநரை பயன்படுத்தி கொள்கிறார்கள். “அட்டகத்தி” எனும் மிக முக்கியமான படத்தை எடுத்த பா.ரஞ்சித் இப்போது சூர்யாவின் குடும்ப தயாரிப்பில் அவர் தம்பி கார்த்தியை வைத்து “மெட்ராஸ்” என ஒரு படம் இயக்குகிறார். அப்படத்தில் பயிற்சிக்காக குறுகிய காலம் வேலை பார்த்த என் நண்பர் ஒருவர் அது “அட்டகத்தி” போல் அல்லாது அதிகமும் கார்த்தி படம் போலத் தான் இருக்கிறது என்றார். கார்த்தி இப்படத்துக்கு “காளி” என பெயர் வைக்க முரண்டு பிடித்தார். அதன் வழி ரஜினியின் பிம்பத்தை கொஞ்சம் பிட்டுக் கொள்ளலாம் என நினைத்தார். ஆனால் இயக்குநர் போராடி தலைப்பை காப்பாற்றினார். கார்த்தியின் படங்கள் தெலுங்கு படமொன்றை தெலுங்கர்களே சகிக்க முடியாதபடி மோசமாய் எடுத்தது போல் இருக்கும். கார்த்தியின் மோசமான தாக்கத்தில் இருந்து எம்.ராஜாஷாலே கூட தப்பிக்க முடியவில்லை என்பதற்கு கார்த்தி குடும்பம் தயாரித்த “ஆல் இன் ஆல் அழகுராஜா” ஒரு உதாரணம். அதாவது ராஜேஷ் போன்ற தனித்துவமாய் வணிக படம் எடுக்கிறவர்கள் போல் கார்ப்பரேட்டுகளிடம் மாட்டினால் சிதைந்து போகிறார்கள். ரஞ்சித் போன்ற நம்பிக்கைக்குரிய படைப்பாளிகள் பாலுமகேந்திராவின் பாதையில் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர்களால் சினிமா கார்ப்பரேட்டுகளின் கோடிக்கணக்கான சம்பள கவர்ச்சியை மீற முடியவில்லை. “சூது கவ்வும்” வெற்றியடைந்து பேசப்பட்டவுடன் சூர்யா அதன் இயக்குநரை அழைத்து தனக்கொரு படம் பண்ண கேட்டார். நல்ல வேளை அதன் இயக்குநர் இன்றுவரை அந்த கண்ணிவெடியில் மாட்டாமல் இருக்கிறார். இந்த கார்ப்பரேட் கரும்புஜூஸ் எந்திரத்தில் மாட்டாமல் இன்னும் தனித்துவமாய் கலைத்திமிருடன் இருக்கிற தியாகராஜன் குமாரராஜா இத்தருணத்தில் பாராட்ட தக்கவர்.

கார்ப்பரேட்மயமாக்கல் குறும்படங்களை என்ன பண்ணினது என பார்ப்போம். கலைஞர் டி.வியின் “நாளைய இயக்குநர்” நிகழ்ச்சி குறும்பட வடிவை உருத்தெரியாமல் சிதைத்து விட்டது. குறும்படத்தின் அழகியல் தனியானது. அதை உலகம் முழுக்க மாற்று, பரீட்சார்த்த படங்களுக்கான வடிவமாகத் தான் பார்க்கிறார்கள். ஆனால் தமிழில் விநோதமாக குறும்படங்களை மசாலா பார்முலாவுக்குள் திணித்து கொன்று விட்டார்கள். சென்னையின் பிரபல கல்லூரி ஒன்றின் விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் இறுதிவருட புரோஜெக்டாக இயக்கிய குறும்படங்கள் சிலவற்றை சமீபமாய் பார்க்க நேர்ந்தது. அவை ஏற்கனவே எடுக்கப்பட்ட சங்கர் பாணி படங்களின் ஐந்து நிமிட வடிவங்கள் அல்லாவிட்டால் ஒரு பேஸ்புக் ஜோக்/ஸ்டேட்டஸை சின்ன திருப்பதுடன் காட்சிப்படுத்துவதாக உள்ளது. யாருக்கும் சொந்தமாய் கதையோ வாழ்வனுபவமோ இல்லை. இருந்தால் அதை சினிமாவாக மாற்றலாம் என அவர்கள் கருதவில்லை. இவர்கள் தாம் அடுத்த கட்ட இயக்குநர்களாக படையாக அடுத்து கோடம்பாட்டம் நோக்கி வரப் போகிறார்கள் என நினைத்தால் பரிதாபமாக உள்ளது. என் நண்பர் ஒருவரிடம் இந்த மாணவர்கள் ஏன் இப்படி காப்பி படங்கள் எடுக்கிறார்கள் என கேட்டேன். அவர் சொல்லுகிறார்: “கல்லூரியில் கூட உலக சினிமாக்களை திரையிட்டால் இவர்களுக்கு பார்க்க ஆர்வமில்லை. உலக இலக்கியம் போகட்டும், தமிழ் நாவல்கள் கூட படிப்பதில்லை. இவர்கள் விகடன் படித்தாலே பெரிய விசயம். இவர்களுக்கு வாழ்க்கையில் இருந்து சினிமாவை எடுக்கலாம் என இவர்களுக்கு தோன்றவே செய்யாது; அதனால் இவர்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற தமிழ் சினிமாவில் இருந்து தான் இன்னொரு சினிமாவை எடுப்பார்கள்”. இவர்களின் அடுத்த கட்ட முயற்சி “நாளைய இயக்குநருக்கு” படம் எடுப்பதாக இருக்கும். அல்லாவிட்டால் தான் எடுத்த போலி குறும்படத்தை கொண்டு ஏதாவது இயக்குநரிடம் உதவியாளராக அணுகுவார்கள். நான் ஒரு இயக்குநர் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவரது உதவியாளர் வந்து “உங்களை பார்க்கணும்னு ஒரு தம்பி வந்திருக்கிறார்” என்றார். இயக்குநர் “சிடியை வாங்கிட்டு அனுப்பிரு” என்றார். பெரும்பாலான குறும்படங்கள் சொந்த சரக்கில்லாதவை என்றார் அவர். அவர் வீட்டில் குவியலாக கிடந்த சிடிகளை காட்டினார். முன்பு வேலை தேடி போனால் CV எடுத்து போவோம். இன்றைய இளம் இயக்குநர்கள் குறும்பட சி.டி கொண்டு போகிறார்கள். ஆனால் அவற்றில் சொந்தமான கதையோ பாணியோ இல்லை. முன்பு பத்தாம் வகுப்புக்கு மேல் தேறாதவர்கள் கோடம்பாக்கத்துக்கு ரெயில் ஏறுவார்கள். இன்று விஷுவல் கம்யூனிகேஷன் படித்தால் தான் ஆள் எடுப்பார்கள் என்று அதை படித்து விட்டு இளைஞர்கள் கோடம்பாக்கத்துக்கு ரெயில் ஏறுகிறார்கள். இருவருக்கும் பெரிய வித்தியாசங்கள் ஒன்றுமில்லை. சில தொழில்நுட்ப சொற்களை உதிர்ப்பார்கள் கூடுதலாய். ஆனால் வாழ்க்கை பற்றி புரிதலோ சொந்தமான அபிப்ராயமோ தேடலோ கிடையாது.

இதற்கு இரண்டு காரணங்கள்: சொந்தமான வித்தியாசமான சினிமா பண்ணுவதற்கான முன்னோடிகள் நமக்கு இங்கு இல்லை. அப்படியான ஒரு மரபு இல்லை. அதனால் இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. அடுத்து சினிமா என்றால் வியாபாரம் மட்டுமே என்கிற கார்ப்பரேட்வாதம் தரும் அழுத்தம். எதையும் வித்தியாசமாய் யோசிக்க விடாமல் கடிவாளம் பூட்டுகிற போக்கு.
சினிமாவை நேசிப்பவர்கள், நல்ல சினிமாவை குறைந்த செலவில் பார்க்க விரும்புகிறவர்கள், குறைந்த சினிமாவில் படம் எடுத்து அதை ஓட்ட திரையரங்கு தேவைப்படும் இயக்குநர்கள் எல்லோருக்கும் ஒரு மாற்று ஏற்பாடு தேவையுள்ளது. அரசு சில முடிவுகளை எடுக்க வேண்டும்.

“கோச்சடையான்” போன்று நாற்பது கோடியில் தயாராகிற படங்களுக்கு வரிவிலக்கு கொடுக்க கூடாது. ஒரு கோடிக்குள் தயாராகிற மாற்றுத்தன்மை உள்ள படங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அடுத்து, டிக்கெட் கட்டணத்தை தீர்மானிக்கும் உரிமையை தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு அளிக்க வேண்டும். உதாரணமாய் “கோச்சடையானை” 200 ரூபாய்க்கோ 250க்கோ கட்டணம் நிர்ணயிக்கட்டும். ஆனால் ஒரு மாற்றுபடம் 60 ரூபாய்க்கு கூட விலை வைக்க அனுமதிக்க வேண்டும். இன்று மிக மோசமான அரங்குகள் கூட டிக்கெட் கட்டணத்தை எண்பதுக்கு மேல் வைத்திருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும். அதாவது கால்வாசி டிக்கெட் கட்டணத்தில் படம் பார்க்கும் சாத்தியம் உள்ள போது மக்கள் அத்தகைய படங்களை நோக்கி செல்வார்கள். எதார்த்தமும் ஓரளவு ஜனரஞ்சக தன்மையும் கொண்ட படங்கள் வெற்றி பெற்று ரெண்டு மூன்று வாரங்கள் கூட ஓட இது உதவும். அதே போல் திரையரங்குக்குள் உணவின் விலையையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும். பார்க்கிங் கட்டணத்தை பத்து ரூபாய்க்கு கொண்டு வர வேண்டும். தண்ணீரை இலவசமாக அளிக்க வேண்டும். ஒரு குறைந்த பட்ஜெட் படத்தை 80 ரூபாய்க்குள் (நொறுக்கு தீனி செலவும் உள்ளிட்டு) பார்க்கிற வாய்ப்பிருந்தால் மக்கள் திரும்ப திரும்ப ஒரு படத்தை பார்க்க முன்வருவார்கள். இன்னும் அதிகமாய் பரவலாய் புது படங்கள் போய் சேரும். முதல் காட்சியிலேயே ஒரு படம் தோல்வியை தழுவுகிற நிலை இல்லாமல் ஆகும். படம் எடுக்கிற ரிஸ்க் குறையும்.

கார்ப்பரேட் தயாரிப்பாளர்கள்-திரையரங்குகள்-வெளியீட்டாளர் வலைதொடர்பின் தாக்கத்தையும் பலவீனப்படுத்த வேண்டும். அதற்கு திரையரங்குகளை அரசே எடுத்த நடத்த வேண்டும். குறைந்த கட்டணத்தில் படங்களை காட்ட வேண்டும். அதில் மாற்றுபடங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். பெரிய பட்ஜெட் படங்களை முதல் மூன்று நாட்கள் அரசு திரையரங்குகளில் ஓட்டினால் தான் வரிவிலக்கு என நட்சத்திர தயாரிப்பாளர்கள், நடிகர்களை அரசு வலியுறுத்தலாம். இதன் மூலம் லாபத்தையும் சம்பாதிக்கலாம். புது முயற்சிகளையும் ஊக்குவிக்கலாம். திரையரங்கு வருமானம் கொண்டு மாற்றுபடங்களுக்கு அரசே நிதியுதவி பண்ணலாம்.


ஒரு காலத்தில் சினிமா அன்றாட மக்கள் தினமும் பார்த்து ரசிக்கிற காரியமாக இருந்ததனால் தான் சினிமாவை இங்கே வழிபட்டார்கள். அரசியல் சமூக கருத்துக்களை சினிமா மூலம் சொன்னால் மக்களின் இதயத்தை சென்றடையும் என நம்பினார்கள். மக்களும் நடிகர்களை வசனகர்த்தாக்களை முதலமைச்சராக்கினார்கள். ஆனால் இன்று கருத்துக்களை பரப்பும் ஊடகமாக டி.வியும் பேஸ்புக்கும் மாறி உள்ளது. இதற்கு காரணம் சினிமா தன் இடத்தை இழந்து சாமான்ய மக்களிடம் இருந்து விலகி விட்டது தான். மேல்தட்டினருக்கும், கார்ப்பரேட் மயமாக்கல் நிகழ்ந்து மேல்மத்திய வர்க்கத்தும் மட்டுமேயான பொழுதுபோக்காக திரையரங்க அனுபவத்தை மாறினது தான். ஒரு பக்கம் சினிமாக்காரர்களே டி.விக்காகவே படம் எடுப்பது, மக்கள் திரையரங்கில் செலவு செய்ய முடியாததாலே திருட்டு டிவிடியில் மோசமான தரத்தில் வீட்டிலேயே படம் பார்ப்பது போன்ற அவல நிலைகளை மாற்ற வேண்டும். சினிமா பார்ப்பது என்பது நட்சத்திர ஓட்டலில் இட்லி சாப்பிடுவது என்ற மனப்பான்மையும் மாற வேண்டும்.

நன்றி: உயிர்மை ஆகஸ்ட் 2014

Comments

தொலைக்காட்சி வந்த பின்பு குடும்பத்தோடு சென்று படம் பார்ப்பதற்கான சாத்தியங்கள் குறைந்து விட்டதாகவே தோன்றுகிறது.அடுத்து தினமும் திரை அரங்கிற்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.எல்லோருக்கும் நேரம் போக்குவதற்கு திரை அரங்கம் அல்லாத நிறைய சாத்தியங்கள் இருக்கிறது.எனவே டிக்கெட் விலை குறைப்பு ஓரளவே வீழ்ச்சியை சரி படுத்தும்.
Praba said…
“ராஜா ராணி” அட்லி போன்ற ஆள் தான் இன்றைய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தேவை, மிஷ்கினோ செல்வராகவனோ அல்ல.