Wednesday, July 2, 2014

கிரிக்கெட் இனி...

1843இல் இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆடும் ராணுவ தளபதி

கிரிக்கெட் ஒரு காலனிய ஆட்டம். நியுசிலாந்து, இந்தியா, வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே போன்ற அணிகள் இங்கிலாந்தின் வழிகாட்டலின் கீழ் ஆடிய ஒரு பண்பாட்டு பங்கேற்பு நிகழ்ச்சி. ஒரு காமன்வெல்த் நாடு என தன்னை இருத்திக் கொள்வதை தாண்டி இவ்விளையாட்டுக்கு ஒரு முக்கியத்துவம் இருந்ததில்லை. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த துவங்கியது. இங்கிலாந்தின் கையில் இருந்து ஆட்சிக்கட்டிலை அது பறித்தது. இதைச் சொல்லும் போது பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்தே இந்த ஆட்டத்தை இங்கிலாந்து தான் ஆடி வளர்த்தெடுத்தது என நினைவில் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவிடம் இருந்து மே.தீ அணி. பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியா. இப்படி மேலாதிக்கம் மாறி மாறி இரு அணிகளிடம் இருந்தது.

 தொண்ணூறுகள் வரை கிரிக்கெட் ஒரு வணிகரீதியாய் பயன் தரும், ஒரு தனி தொழிலாக கருதத்தக்க விளையாட்டு அல்ல. எழுபது, எண்பதுகளில் மே.இ தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணி சர்வதேச வீரர்கள் பணம் சம்பாதிக்க இங்கிலாந்துக்கு சென்று கவுண்டி கிரிக்கெட் ஆடுவார்கள். அதுவும் இன்று ஐ.பி.எல்லில் வீரர்கள் சம்பாதிப்பதில் கால்வாசி கூட வராது. ஆனால் சர்வதேச கிரிக்கெட் ஒரு முழுநேர தொழில் அல்ல என கூற இதை குறிப்பிட்டேன். இப்படி இவ்வளவு காலமும் கிரிக்கெட் ஏன் ஆடப்பட்டது என நாம் யோசிக்க வேண்டும்? ஒரு ஆர்வத்துக்காக, வெறிக்காக, பண்பாட்டுக்காக, கலை அனுபவத்துக்காக, விளையாட்டு மோகத்துக்காக என பல காரணங்கள். சுருக்கமாக கிரிக்கெட் ஒரு மதிப்பீடாக பார்க்கப்பட்டது. கிரிக்கெட் ஆடுவது இன்றைய பிராமண பிள்ளைகள் கர்நாடக சங்கீதம் கற்பது போல், கேரளாவில் சிலர் கதகளி பயில்வது போல், தமிழில் சிலர் சிறுபத்திரிகை நடத்தி அதில் எழுதிக் கொண்டிருந்தது போல் இருந்தது. அதற்கு ஒரு தூய்மை, லட்சியம், நம்பிக்கைகள் என இருந்தது.
தொண்ணூறுகளுக்கு பிறகு கிரிக்கெட் ஒரு பெரும் தொழிலாகியது. ஆனாலும் அதற்கு ஒரு காமன்வெல்த், “விக்டோரிய மகாராணியின் கீழுள்ள அதிகாரத்தின் கீழ் இயங்கும்” தொனி இருந்தது. அதிக லாபம் தராத சிறுநாடுகளான நியுசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, வங்கதேசம் போன்றவற்றுக்கு பெரும் நாடுகளான இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவின் சம்பாத்தியத்தில் இருந்து ஒரு பகுதி எடுத்து “பரிபாலன நிதியாக” வழங்கப்பட்டது. தொண்ணூறுகளில் இருந்து இருபது ஆண்டுகாலம் கிரிக்கெட் கடும் கார்ப்பரேட்வாத லாபநோக்கு நெருக்கடியின் மத்தியிலும் கூட ஒரு தர்மஸ்தாபனமாக இயங்கியது. ஐ.பி.எல் தோன்றியதும் இந்த தர்மஸ்தாபன நோக்கிற்கு முதல் அடி விழுந்தது.
பல சர்வதேச வீர்ர்கள், குறிப்பாய் மே.இ தீவினர், தம் சர்வதேச அணியை துறந்து ஐ.பி.எல்லில் ஆட தலைப்பட்டனர். சில இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல்லுக்காக சீக்கிரமாக ஓய்வு பெற்று ஐ.பி.எல்லில் மூன்று வருடங்களுக்கு மேல் ஆடினர். லசித் மலிங்கா டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வுபெற்றதற்கு ஐ.பி.எல் வாய்ப்புகளும் ஒரு காரணம். அப்போது மேற்கத்திய கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் வீர்ர்கள், குறிப்பாக டோனி கிரெயிக், பல்வேறு நாடுகளின் வீரர்களை இப்படி இந்தியா பறித்து தம்முடைய நாட்டு உள்ளூர் தொடருக்கு பயன்படுத்துகிறது என்றால் அதில் இருந்து கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை அந்த நாடுகளுக்கும் கொடுப்பது அல்லவா நியாயம் என கேட்டனர். அதாவது ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளின் பல உள்ளூர் இளம் வீர்ர்கள் தொடர்ந்து ஐ.பி.எல்லில் ஆடியிருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல பணமும் கொடுக்கப்பட்டது தான். ஆனாலும் அவர்களை சிறுவயதில் இருந்து பயிற்சி அளித்து வளர்த்தது அந்நாட்டு வாரியம் அல்லவா, அப்படி இருக்க அவர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் அல்லவா என்பது வாதம்.
ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் ஸ்ரீனிவாசனின் கீழ் வேறு விதமாய் யோசித்தது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தான் பெரும்பான்மையான லாபத்துக்கு காரணம். அதைக் கொண்டு தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சின்ன நாடுகளுக்கு நிதி ஒதுக்குகிறது. நம் லாபத்தை எதற்கு தர்மத்துக்கு கொடுக்க வேண்டும் என யோசித்தது. பிற பெரிய நாடுகளுடன் சேர்ந்து லாப விகிதத்தில் மாற்றம் கொண்டு வர நினைத்தது. அதன்படி பெரியண்ணாக்கள் சேர்ந்து இப்போது ஐ.சி.சி ஐ கைப்பற்றி விட்டன. இப்போது ஸ்ரீனிவாசன் தான் முடிவுகளை எடுக்கும் உரிமை கொண்டுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மேன்.
ஒரு வருடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு 3000 மில்லியன் டாலர்கள் லாபம் வரும் என கணக்கிடப் படுகிறது. இதில் 21.9% இனி இந்தியாவுக்கு கிடைக்கும். மிச்ச 9 வாரியங்களுக்கும் சேர்த்து 12.6% தான். அதாவது அடுத்த 8 வருடங்களில் இந்தியாவுக்கு 670 மில்லியன் டாலர்கள் பணம் வரப் போகிறது. இந்த மாற்றத்துக்கு முன் இது வெறும் 53 மில்லியன் டாலர்கள் மட்டுமாக இருந்தது. இந்தியா இனி இங்கிலாந்து போல் ஒரு பணக்கார வாரியமாக ஆகப் போகிறது. உள்ளூர் வீர்ர்களுக்கு இதுவரை ரஞ்சி ஆட்டம் ஒன்றுக்கு 1 லட்சம் விகிதம் கிடைத்தது. இனி அது 2 லட்சம் ஆகும். அதாவது ஒரு ரஞ்சி தொடரும் சில குட்டி தொடர்களும் ஆடினால் ஒரு உள்ளூர் வீரர் இனி மாதத்துக்கு ரெண்டு லட்சம் வரை வருமானம் வரப் போகிறது. அதாவது மென்பொருள் பொறியாளர் ஆவதற்கு பதில் பேசாமல் ரஞ்சி அணியில் வீர்ராக இருக்கலாம். சர்வதேச ஆட்டம் கூட ஆட தேவையில்லை. இங்கிலாந்தில் கவுண்டி அணி வீர்ரகள் இப்படித் தான் நல்ல வசதியாக இருக்கிறார்கள். அது போல் இந்த கோடிகளைக் கொண்டு உள்ளூர் கிரிக்கெட் வசதிகள் சிறுநகரங்களில் அதிகம் செய்து தரப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுவும் நல்ல விசயம். இவ்விசயங்களுக்காக இந்தியாவின் சார்பில் இருந்து நாம் ஸ்ரீனிவாசனை மிகவும் பாராட்டலாம்.
இதுவரை எந்த நாடு எப்போது எங்கு எவ்வளவு ஆட்டங்கள் ஆட வேண்டும் என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தான் தீர்மானித்தது. இனி அதை நான்கு பெரிய நாடுகளும் தீர்மானிக்கும். அடுத்த 8 வருடங்களில் நாம் இங்கிலாந்துடன் 20 டெஸ்டுகள், ஆஸ்திரேலியாவுடன் 16 டெஸ்டுகள், தென்னாப்பிரிக்காவுடன் 12 டெஸ்டுகள் ஆடப் போகிறோம். இந்த எண்ணிக்கை வித்தியாசத்தை கவனியுங்கள். இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகம். தென்னாப்பிரிக்காவில் குறைவு. அதனால் அவ்வணியுடன் நாம் குறைவாகவே ஆடுவோம். இனிமேல் லாபம் பொறுத்து தான் கிரிக்கெட் யார் யாருடன் ஆடுவது என தீர்மானமாகும். இது ஆட்டத்தின் தரத்துக்கு உதவும் என்றாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான அணிகள் ஆடுவதை பார்த்து பார்த்து சலிப்பாகும். அதேவேளை ஒரு அணி சின்ன அணி என்பது பார்வையாளர்களின் எண்ணிக்கை பொறுத்து முடிவாகும் அபத்தமும் நிகழும். உதாரணமாய் போன பயணத்தொடரில் நியூசிலாந்து நம்மை விட பலமடங்கு நன்றாக ஆடி தோற்கடித்தனர். ஆனால் அதற்காக அது இந்தியாவை விட மேலான அணி ஆகாது. ஏனென்றால் அவ்வணியால் லாபம் சம்பாதிக்க முடியாது. அந்நாட்டு ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைவு. எண்ணிக்கை மற்றும் பணத்தின் அடிப்படையில் இந்தியா மேலானதாகிறது. அதனால் இனி இந்தியா அதிகம் நியுசிலாந்துக்கு சென்று கிரிக்கெட் ஆடாது. இதுவரை ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு பயணித்தால் அந்நாடு திரும்ப பயணித்த நாட்டுக்கு வந்து ஆட வேண்டும் என ஒரு விதி இருந்தது. அது இனி பறக்க விடப்படும். சிலநேரம் இந்தியா சின்ன நாடுகளுடன் ஆடிய டெஸ்டுகள் கூட சுவாரஸ்யமாக இருந்துள்ளது. அதனால் அந்த சின்ன நாடுகள் வளர்ந்துள்ளன. இனி அவ்வாய்ப்புகள் மறுக்கப்படும்.

கிரிக்கெட் தன் நெடும்பயணத்தில் இன்று ஒரு டை கட்டிய பி.பி.ஓ கூலியாள் போல் ஆகி உள்ளது. நிறுவனத்துக்கு லாபம் சம்பாதிப்பதே அதன் இருப்புக்கான ஒரே நியாயம். விழுமியங்களுக்காக, கௌரவத்துக்காக, லட்சியத்துக்காக, கலை ஆவேசத்துக்காக, பாரம்பரியத்துக்காக, நம்பிக்கைகளுக்காக ஆடின காலகட்டம் இதோ நிறைவடைகிறது. ஜல்லிக்கட்டு காளைகள் இறைச்சிக்காக கேரளாவுக்கு லாரிகளில் ஏற்றப்படுகிற காட்சி தான் என் மனதில் திரும்ப திரும்ப வருகிறது. நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. காளையின் கயிறை கையில் பிடித்து கண்ணீர் விடுவதைத் தவிர.