Sunday, June 8, 2014

அசோகமித்திரன் கருத்தரங்கு


அசோகமித்திரன் கருத்தரங்கு மைலாப்பூர் லஸ் சாலையில் நேற்று நடந்தது. நான் மதியம் மேல் உள்ள அரங்கில் கலந்து கொண்டு ராஜன் குறை மற்றும் பெருந்தேவி பேசியதை கேட்டேன். அடர்த்தியான விமர்சனபூர்வமான உரைகள். இன்னும் கராறாய் சொல்வதானால் கட்டுரை வாசிப்பு.
ராஜன் குறை அசோகமித்திரனின் அன்றாடத்தன்மை வாழ்க்கையின் மீதான பிடிப்பை சுட்டுவதாய் கூறினார். அதற்கும் துயரத்துக்கும் உள்ள தொடர்பை விவரித்தார். “இன்று” நாவலை பற்றி குறிப்பாய் பேசினார். பெருந்தேவி நவீனத்துவ மனப்பான்மைக்கு ஒரு மாற்றுநிலையை “மானசரோவர்” முன்வைப்பதாகவும் அதனால் அந்நாவல் தனக்கு விருப்பமானது என்றார். நவீனத்துவ நிலையை அவர் விளக்கியது நன்றாக இருந்தது.

பொதுவான நவீனத்துவத்தை நாம் ஒரு சூழலாக பார்ப்போம். உதாரணமாய் எந்திரமாயமாக்கல். எந்திரமயமாக்கலில் பங்கேற்கும் ஒரு மனிதன் எந்திரத்தன்மை பெறுகிறான்.
இன்னொன்று நகரமயமாக்கல். நகரம் அனைவருக்குமான ஒரு இடம். அடையாளங்கள் அழிகிற இடம். பணம் தான் அங்கு பிரதான மதிப்பீடு. பணம் இல்லாதவனுக்கு அவனது “அந்தஸ்து” காரணமாய் ஒரு மதிப்பு கிராமத்தில் இருக்கலாம். ஆனால் நகரத்தில் அவன் குப்பை தான். அவன் அவமானத்துக்குள்ளாகி சிறுத்து போகிறான்.
அப்புறம் நகரங்களில் ஒரு மானிடமின்மை உள்ளது. அதாவது மனிதனை அவன் மனிதன் என்பதற்காகவே நாம் மதிக்கலாம். ஆனால் நகரத்தில் அது இராது (கிராமத்தில் கூட இருக்குமா தெரியவில்லை). ஆனால் நகரத்தில் ஒரு மனிதன் வெறும் உற்பத்தி பண்ணுகிற சாதனம் என்கிற எண்ணம் வலுவாக இருக்கிறது. நகர மனிதன் பற்றிய நம் சித்திரமே காலையில் வேலைக்கு சென்று மாலையில் தாமதமாய் வீடு திரும்புகிறவன் தான். அவன் (கிராமத்தில் போல்) குளத்திற்கு செல்கிறவனாகவோ, திருமண நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறவனாகவோ, இழவு, கோயில் விழாக்கள் போன்ற பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து உதவுகிறானாகவோ இருப்பதில்லை. இப்படி மனிதன் நகரத்தில் வெறும் ஊழியன் மட்டுமாகிறான். அப்புறம் வீட்டில் இருக்கும் மனிதனாகிறான்.
இவையெல்லாம் மனிதனின் அடிப்படை குணத்திற்கு விரோதமானவை. நுண்ணுணர்வு உள்ள மனிதன் நகர வாழ்க்கையை தெரிந்தோ தெரியாமலோ எதிர்க்கிறான். ஆனால் அவனால் அவ்வாழ்க்கையை மாற்றவோ தாக்கம் செலுத்தவோ இயலாது. இந்த சக்தியின்மை அவனை நிராசை கொள்ள வைக்கிறது. அடுத்து அவன் இந்த நகர நிலையோடு அந்நியமாகிறான். இந்த அந்நியமாதலை மானசரோவரின் பாத்திரங்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பது தன பெருந்தேவியின் தலைப்பு.
கடுமையான நெருக்கடியில் இருக்கும் கோபாலுக்கு எப்படி ஒரு சித்தரின் தொடர்பு உதவுகிறது என பேசினார். நவீன வாழ்வில் மனிதனின் அடிப்படை பிரச்சனை மிகுதியான சுயசிந்தனை. அனைத்துக்கும் தன்னை பொறுப்பாக எண்ணுவது. சித்தர் இது அவசியமில்லை, நம்மை கடந்த எவ்வளவோ விசயங்கள் வாழ்வில் உண்டு என அவனை ‘விடுபட’ உதவுகிறார். பெண்களுக்கு இயல்பாகவே குடும்ப நெருக்கடிகள் உண்டு. இவை அவர்களை தம்மை நோக்கி குவியாமல் காக்கின்றன. மேலும் பெண்கள் அதிகமும் பௌதிகமானவர்கள். அவர்கள் மனம் என்பது உடல் தான். இந்நாவலின் பெண் ஒருத்தியை குடும்பம் அந்நியமாதலில் இருந்து காக்கிறது. இன்னொரு பெண்ணுக்கு பைத்தியம் பிடிக்கிறது.
நவீனமாதலில் சூழல் அளவுக்கு மக்களுக்கு பங்குண்டு என்றொரு மேற்கோளுடன் தான் பெருந்தேவி ஆரம்பித்தார். நவீனமாக்கல் ஒரு கலந்துரையாடல் போல. அதற்கு இரு பக்கங்கள். ஒரு பக்கம் மனிதர், இன்னொரு பக்கம் சூழல். சூழலுக்கும் மனிதருக்கும் இடையிலான உரையாடல் தான் நவீனத்துவதை உண்டு பண்ணுகிறது. அதாவது இந்த நகரத்துக்கு நாம் எந்தளவு தேவையாகிறோ அந்தளவுக்கு நகரமும் நமக்கு வேண்டும். நகரத்தின் பல குணங்களை நாமும் தான் தீர்மானிக்கிறோம். உதாரணமாய், பக்கத்து வீட்டாருடன் பரிச்சயமின்மை பாவிக்கிறோம். நமக்கு இப்படி ஒடுங்குவது வசதியாக இருக்கிறது. இதுவும் ஒரு தனிமையை, அந்நியமின்மையை உருவாக்குகிறது. இதற்கு காரணம் நாமும் தான்.
சூழலுக்கும் அது போல் ஒரு பங்கு உள்ளது. பலதரப்பட்ட பன்மை அடையாளங்கள் கொண்ட மனிதர்கள் நகரில் ஒன்றாக வாழ நேர்கிறது. தொடர்ந்து ஆட்கள் வந்து போவதால் நமக்கு பக்கத்து வீட்டாரின் தெருவினரின் குணங்களை புரிந்து கொள்ளவும் சிரமமாகிறது. ஆக நகரத்து தனிமை இச்சூழலும் நாமும் சரிபகுதி காரணம் தான். இவ்விசயம் எப்படி “மானசரோவரில்” நிகழ்கிறது என பெருந்தேவி கூர்ந்து பேசியிருந்தால் இன்னும் ஆழமாக பேச்சு அமைந்திருக்கும்.
ஆனாலும் ராஜன் மற்றும் பெருந்தேவியின் பேச்சுகள் ஆழமான எண்ணங்களை தூண்டுவதாக இருந்த்து. அவர்கள் விமர்சன மொழியை பயன்படுத்தியதால் பல இளைஞர்கள் ஆர்வம் இழந்து செல்போனை நோண்டினர்; எழுந்து போயினர்; நெளிந்தனர். பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் இப்படி நடந்திராது. அப்போது இலக்கியம் நோக்கி வரும் இளைஞர்கள் சிறுபத்திரிகைகளால் சிக்கலான கோட்பாடுகளுக்கு பயிற்றுவிக்க பட்டிருந்தார்கள். ஆனால் இன்று இணையத்தில், முகநூலில் வாசிக்கும் சிறு கதைகளும், அரட்டை கட்டுரைகளும் தான் இலக்கியம் என்கிற நிலை உருவாகி உள்ளது. அது போல் பகுதிநேர இலக்கிய நேசர்களும் அதிகமாகி உள்ளனர்.
இன்னொரு வருந்தத்தக்க விசயம், புரியாத ஒன்றை சிரமப்பட்டு அறியும் ஆர்வமும் குறைந்துள்ளது. இது என்னுடையது அல்ல, எனக்கு தேவையில்லை என்கிற எண்ணம் இன்று இளைஞர்களிடையே வளர்ந்துள்ளது. அல்லது பொதுவாக ஒரு கலவையான, இலக்கியம் அறிந்த அறியாதவர்களின் கூட்டம் இப்போது அதிகமும் வருவதனால் கூட இப்படியான நிலை இருக்கலாம்.
நேற்று மனுஷ்யபுத்திரனுடன் இது பற்றி பேசும் போது சொன்னார்: “கடந்த பத்தாண்டுகளில் முக்கிய எழுத்தாளர்கள் பரபரப்பு விசயங்களை உருவாக்குவதில், வளர்ப்பதில் தான் ஆர்வம் காட்டினர். வாசகர்களை இலக்கிய வாசிப்பு சார்ந்து பயிற்றுவிப்பதில் முனைப்பு காட்டவில்லை”.
எழுத்தாளனுக்கு வாசனுக்கும் இடையே தொடர்புவலை உருவாகி இருக்கிறது. ஆனால் உறவு தோன்றவில்லை. உறவு என்பது பின்னர் கூட்டத்தில் அசோகமித்திரன் சொன்னது போல் “வாசகனுக்கும் பிரதிக்கும் இடையே இருக்க வேண்டும். எழுத்தாளன் என்ன நினைக்கிறான் என நாம் கவலைப்பட கூடாது”.
இன்று நாம் அதிகம் எழுத்தாளன் என்ன நினைக்கிறான் என்பதில் ஆர்வம் காட்டுகிறோம். அதையே விவாதிக்கிறோம். மீண்டும் பிரதிக்கு திரும்ப வேண்டும். எழுத்தாளனை வாயை மூட சொல்லி விட்டு பிரதியை பேச விட வேண்டும். அதற்கு இந்த புத்தக புரோமஷன் கூட்டங்கள் குறைந்து இது போன்ற விமர்சன கூட்டங்கள் அதிகம் நடைபெற வேண்டும். இவை தான் ஒரு இலக்கிய நூலை எப்படி வாசிப்பது என உங்களுக்கு பயிற்சி தருபவை.
புரொமோஷன் கூட்டங்கள் ஒரு புத்தகம் இருப்பதாக வாசகனுக்கு சொல்லும். வாங்க வைக்கும். ஆனால் அவனை வாசிக்க உதவாது. இது குழந்தையை பெற்று குப்பை தொட்டியில் போடுவது போல.
இன்னொன்று பதிப்பாளருக்கு அதிக நூல்கள் விற்க உதவும். பா.வெங்கடேசனின் “காவல் கோட்டம்” இரண்டாம் பதிப்பு விகடனில் வெளிவந்த போது சில நூறு பிரதிகளை தாண்டி விற்கவில்லை. ஏனென்றால் முதலில் விருது வாங்கின பரபரப்பில் மக்கள் அதிகம் வாங்கினார்கள். வெங்கடேசனும் நிறைய கூட்டங்களை ஊர் ஊராக ஏற்பாடு பண்ணினார். ஆனால் அந்நாவல் வாசகனின் மனதை தொடவில்லை. அதனால் அவன் இன்னொருவருக்கு பரிந்துரைக்கவில்லை. தானாகவே வாசிப்பு சுவாரஸ்யத்துக்காக வாசகர்கள் மீண்டும் அந்நாவலை நாட வில்லை.
அது போல் சமீபத்தில் முகநூல் ஸ்டேட்டஸ்களை தொகுத்து அமர்க்களமான புரொமோஷன் கூட்டங்களோடு வெளியான இன்னொரு நூல். அதன் சில நூறு பிரதிகளை எழுத்தாளரே வாங்கினார். இன்னும் கொஞ்சம் பரபரப்பில் விற்றது. ஆனால் கடந்த ஆறுமாதத்தில் ஒரு பிரதி கூட விற்கவில்லை. ஒன்று கூட! இந்த விற்பனை விபரங்களை விடுங்கள். பரபரப்பு விளம்பரம் மூலம் நூலை அதிக பிரதிகள் விற்பதனால் உண்மையில் எழுத்தாளனுக்கு எந்த பயனும் இல்லை. பதிப்பாளருக்கு மட்டுமே லாபம். புத்தகத்தை வாசகன் வாசித்து ரசித்து தொடர்ந்து அவன் பரிந்துரை மூலம் பிற ஆட்கள் வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து அப்புத்தகத்துடன் வாசகர்கள் உரையாட வேண்டும். தெரியாதவர்கள் கூட தேடி வாசிக்க வேண்டும். அப்போது தான் எழுத்தாளனுக்கு லாபம். அதற்கு புத்தகத்தில் சரக்கு இருக்க வேண்டும். மோசமான ஒரு நூலை வாசகனை ஏமாற்றி வாங்க வைக்கலாம். ஆனால் ரசிக்க வைக்க முடியாது.
இறுதியாக: அசோகமித்திரன் கூட்டம் முடியும் வரை முழுநாளும் இருந்தார். அவரது வயதுக்கு ஆரோக்கியத்துக்கு இது பெரிது. அவர் பேசிய போதும் அந்த முத்திரை நகைச்சுவை கிண்டல் புத்துணர்ச்சியுடன் இருந்தது. உதாரணமாக, சித்தர் பாத்திரம் ஒரு கருவி என்கிற அளவில் தான் விவாதம் இருந்தது. சித்தரை ஏன் அசோகமித்திரன் படைத்தார், அது பிற்போக்காக உள்ளது என்று கூட பத்ரி சேஷாத்ரி கேட்டார். அசோகமித்திரன் சொன்னார் “நிஜமாகவே அப்படி ஒரு சித்தர் இருந்தார். அவரை நான் பார்த்திருக்கிறேன்”. பிறகு அவர் அந்த சித்தர் எப்படி சாமான்ய மனிதனாக இருந்து சாமியாராக மாறினார், அதனால் அவர் குடும்பம் எப்படி எல்லாம் சிரமப்பட்ட்து என்று தனது இயல்பாகவே அவலம் சொட்டும் குரலில் கூற எனக்கு ஒவ்வொரு வரியிலும் சிரிப்பு பீறிட்டது. பின்வரிசையில் இருந்து ஒருவர் கூவினார்: “அது தாங்க அசோகமித்திரன்”

இந்த மாதிரி சீரியசான கூட்டத்துக்கு நல்ல எண்ணிக்கையில் ஆட்கள் வந்திருந்தார்கள். அது அசோகமித்திரன் மீதான அபிமானத்தால் வந்த கூட்டம். இத்தனை காலமாய் தன் எழுத்தின் மூலம் ஒரு எழுத்தாளன் தன் ஆயுளின் கால்வாசி கூட வயசாகாத இளைஞர்களை வாசகனாக பெற்றிருக்கிறான் என்றால் அது வியப்பானது இல்லையா! இந்த சூழலின் அத்தனை போதாமைகளையும் தாண்டி ஒருவர் எழுத்தாளராக இருப்பதற்கு இதை விட வேறேன்ன தூண்டுதல் வேண்டும். ஓய்வு பெற்ற ஒரு அதிகாரியை 90 வயதில் பார்க்க இத்தனை பேர் கூடுவார்களா சொல்லுங்கள்! எழுத்தாளன் மட்டுமே அந்த மதிப்பை பெற முடியும்!

No comments: