Friday, June 20, 2014

இந்து முன்னணியினர் கலவரமும் அழிவு அரசியலும்
பூந்தமல்லி ஹைவேயில் நேற்று இந்து முன்னணியினர் நிகழ்த்திய வன்முறை உ.பி, குஜராத், அயோத்தியா வகை இந்துத்துவாவை இங்கும் முன்னெடுப்பதற்கான ஆரம்ப முயற்சி. சாலையில் போன பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தாக்கப்பட்டனர். போலீசும் அடிக்கு தப்பவில்லை. இன்னொரு பக்கம் தம் பிள்ளைகளுக்கு ஏதாவது ஆகி விடுமோ என பெற்றோர்கள் பள்ளிக்கூடங்களுக்கு படையெடுத்தனர். போக்குவரத்து நீண்ட நேரம் ஸ்தம்பித்தது, கீழ்ப்பாக்கத்தில் ஒரு பேருந்து மீது கல் வீசி தாக்கியதால் பயணிகள் பயந்து ஓடினர். ஒரு தேவாலயம் மீது தாக்குதல் நடந்தது. மொத்தம் 9 பேருந்துகள் மற்றும் 10 கார்கள் தாக்கப்பட்டன. ஆனால் இந்து முன்னணியினரால் எதிர்பார்த்த அளவு தாக்கத்தை இவ்விசயத்தை வைத்து ஏற்படுத்த முடியவில்லை.

முக்கிய காரணம் இது போன்ற கட்சி நிர்வாகிகளின் கொலைகள் (கழகமோ இந்து முன்னணியோ பிற ஜாதி கட்சிகளோ) அரசியல் கொலைகளோ கொள்கை முரண்பாட்டு கொலைகளோ அல்ல என மக்கள் அறிவர். பெரும்பாலும் இக்கொலைகள் ரியல் எஸ்டேட் மோதல், வணிக தகராறுகள், உட்கட்சி மோதல்கள், போட்டி, பொறாமை இவற்றினால் தான் நடக்கின்றன. பாடி சுரேஷ்குமாரை எதிர்கட்சியினர் கொன்று விட்டார்கள் என்பது நம்பத்தகுந்ததாக இல்லை. போலீஸ் விசாரித்து கண்டுபிடிக்க நேரம் அளிக்க வேண்டும். ஆனால் மரணம் நடந்த அடுத்த நாளே குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை என போலீஸை குற்றம் சாட்டி பொதுமக்களை தாக்குவது கீழ்த்தரமான அரசியல்.
தம் நிர்வாகிகள் ஏன் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள் என விசனிக்கும் பா.ஜ.க ஏன் நன்கு படித்து ஒரு மருத்துவரோ ஆசிரியரோ போன்றிருப்பவர்களை நிர்வாகிகளாக்குவது இல்லை. மணல் மாபியாக்களும், கிரானைட் கொள்ளையர்களும் ரியல் எஸ்டேட் ரௌடிகளும் நிர்வாகிகள் என்றால் பரஸ்பரம் வெட்டித் தான் சாவார்கள். தமிழகத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஏன் ரௌடிகளால் தாக்கப்படுவதில்லை என நீங்கள் யோசித்ததுண்டா? பேய்கள் அரசாண்டால்…?

ஏதோ இந்து அமைப்பு தலைவர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள் எனும் சித்திரத்தை உருவாக்க பா.ஜ.க இங்கு கடுமையாக முயன்று வருகிறது. ஆனால் பிச்சைக்காரனிடம் இருந்து யாராவது பிக் பாக்கெட் அடிப்பார்களா?

ஏற்கனவே தமிழ் நாட்டில் கையேந்தும் ஒரு கட்சியை எதற்கு மெனக்கெட்டு பலவீனப்படுத்த வேண்டும்? இது டீக்கடையில் பன் சாப்பிடுகிற சாமான்யனும் அறிந்த சேதி. பிரிவினைவாதம், மத துவேசம் கொண்டு பா.ஜ.க தமிழகத்தில் வளர முடியாது. அப்படி ஒரு வரலாறு நமக்கில்லை. அதற்கு அவர்கள் மக்கள் தொண்டு மற்றும் போராட்ட அரசியலில் ஈடுபட வேண்டும். உதாரணமாய், மின்சார தட்டுப்பாட்டின் பின் மிகப்பெரிய ஊழல் உள்ளது. அதை வெளிப்படுத்தி போராடலாம். அது போல் பெண்கள் அமைப்புகளை பரவலாக தமிழகம் பூரா உருவாக்கி வலுப்படுத்தி அவர்களை கொண்டு டாஸ்மாக்குக்கு எதிராய் தொடர் போராட்டங்கள் நடத்தலாம். எவ்வளவோ செய்யலாம். ஆனால் அழிவு அரசியல் அவர்களையே அழிக்கும் அன்றி வளர்க்காது.

சென்னையை ஸ்தம்பிக்கும் வகையிலான இரண்டாவது போராட்டம் இது. முதலில் அமெரிக்க எம்பஸிக்கு எதிரான இஸ்லாமியர் போராட்டம் நடக்கப் போவது பற்றி என் நண்பர்கள் சிலருக்கு கூட முன்கூட்டி சேதி தெரிந்திருந்தது. ஆனால் போலீஸ் முற்றிலும் தயாரற்றிருந்தது. சொதப்பியது. நேற்று நடந்த கலவரமும் அது போன்ற போலீஸ் மற்றும் உளவுத்துறையின் போதாமையினால் நடந்த ஒன்று தான். தமிழக உளவுத்துறை கட்சி பிரமுகர்களை உளவுப்பார்ப்பது தவிர வேறென்ன உருப்படியாய் செய்கிறது? அவர்கள் ஒவ்வொரு கட்சிக்குள்ளும், குறிப்பாய் கலவர கட்சிகளான சில ஜாதிக் கட்சிகளுக்குள், ஊடுருவ வேண்டும். கலவரங்கள் திட்டமிட்டு தான் நடத்தப்படுகின்றன. அதற்கு முந்தின நாளே பொறுப்பிலுள்ள கட்சியின் நண்டுசிண்டுகளை தூக்கி உள்ளே போட்டு விட வேண்டும். கலவரங்கள் முடிந்த பின் அலங்காரமாய் ஆயிரக்கணக்கான போலீஸ்காரர்களை சாலையில் நிறுத்தி வீணடிக்க அவசியமில்லை. இனியும் தர்மபுரியில் நிகழ்ந்தது போல் குடிசைகள் கொளுத்தப்பட்டு அப்பாவி மக்கள் கொள்ளையடிக்கப்படுவதை தவிர்க்க வேறு வழியில்லை.

தமிழகத்தில் நடந்து வரும் கலவரங்களுக்கும் மக்களுக்கு ஏற்பட்டு வரும் பீதி உணர்வுக்கும் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் போதாமை தான் காரணம். மாணவர்கள் போராடினால் குண்டாந்தடியாய் அடித்து இழுத்து போகும் போலீசார் கட்சி குண்டர்கள் நடத்தும் கொலைகார போராட்டங்களை ஏன் குழந்தைக்கு நேப்பீஸ் மாற்றுகிற மென்மையுடன் கையாள்கிறது என்கிற கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது.

3 comments:

சீனு said...

//பூந்தமல்லி ஹைவேயில் நேற்று இந்து முன்னணியினர் நிகழ்த்திய வன்முறை//

//முதலில் அமெரிக்க எம்பஸிக்கு எதிரான இஸ்லாமியர் போராட்டம்//

முன்னது வன்முறை. பின்னது போராட்டம். திஸ் இஸ் கால்டு செக்குலரிஸம்... :)

Abilash Chandran said...

இஸ்லாமியர் பொதுமக்களை தாக்கவோ, கோயிலுக்கு கல்லெறியவோ இல்லை. பஸ்ஸுக்கு கல்லெறிந்து பயணிகளை துரத்தவில்லை. பஸ்களுக்கு தீ வைக்கவில்லை. இதையெல்லாம் இந்துமுன்னணியினர் செய்தார்கள். அதனால் இது கலவரம் கூட அல்ல குண்டாயிஸம்

வசந்தன் வசந்தன் said...

ஆக்க பாதையில் அரசியல் தேடினால் தமிழகம் அழிந்து விடும் அபிலாஷ்! அதற்காகத்தான் கட்சிகள் அரும்பாடு பட்டு கலவரங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு இடையூறு செய்து அதில் கட்சியின் உள்கட்சி பூசல், எதிர்க்கட்சி குளிர் காய நினைக்கின்றனர்..

தேர்தலின் போது எதாவது இலவசம் கொடுத்தால் போதுமென்ற நினைப்பு!!மக்கள் மாறிவிட்டனர் என்பதை உணரவே மாட்டார்கள் இந்த மாக்கள்!