Thursday, June 19, 2014

பெண் எழுத்தாளர்கள் போட்ட நோ பால்


பெண் எழுத்தாளர்கள்-ஜெ.மோ சர்ச்சையில் நியாயம் பெண்கள் பக்கமே என அறிவோம். ஆனாலும் இன்றைய ஊடக சூழலில் நியாயம் மட்டும் உங்கள் பக்கம் இருந்தால் போதாது – அதை சரியாய் சாதகமாய் பயன்படுத்த தெரிய வேண்டும். முன்பு போல் இருபது பேர் படிக்கிற சூழலில் அது எப்படியும் இருக்கலாம். ஆனால் முகநூலில் பல்லாயிரம் பேரும், நாளிதழ்கள் வழி லட்சக்கணக்கான பேரும் இந்த சர்ச்சையை கவனிக்கிறார்கள். அவர்களுக்கு இலக்கியமோ மார்க்ஸியமோ ஆணாதிக்கவாதமோ தெரியாது. ஒருவேளை இந்த சர்ச்சையின் போது தான் இதையெல்லாம் அறிகிறார்களாக இருக்கலாம். அதனால் இப்பிரச்சனையில் “நியாயம் யார் பக்கம்” எனத் தான் பொதுமக்கள் கேட்பார்கள்.


ஜெயமோகனை ஒரு பெண் வெறுப்பாளர் என கோருகிற பெண் எழுத்தாளர்கள் அறிக்கையை நேற்று படித்த போதே முக்கியமான தருணத்தில் கோல் அடித்து ஜெயமோகன் ஜெயித்து விடுவார் என நினைத்தேன். அப்படியே நிகழ்ந்தது. இனிமேல் இச்சண்டையை வெளியில் இருந்து பார்க்கும் பொது மக்களுக்கு இது ஜெ.மோவுக்கும் பெண் எழுத்தாளர்களுக்கும் இடையிலான ஒரு குழாயடி சண்டையாகவே தெரியும். அதுவும் ஜெ.மோ தனது இரண்டாவது மற்றும் மூன்றாம விளக்கங்களில் நிதானமாக பேசியிருப்பதால் அவர் நல்லவர் என்றும் பெண்கள் தான் நாகரிகமமில்லாமல் கத்துகிறார்கள் என்பது போன்ற ஒரு தவறான மனப்பதிவும் ஏற்படும்.

அறிக்கைகள் பொதுவாக எந்த பிரச்சனைக்கும் இறுதி ஆணி அடித்து சாம்பிராணி காட்டும். ஆனால் அறிக்கைகளை அரசியல் விளையாட்டில் ஒரு சாதுர்ய தந்திரமாகவும் பயன்படுத்தலாம். அவ்விசயத்தில் தான் இதை எழுதிய பெண் எழுத்தாளர்கள் சிலர் சொதப்பி விட்டார்கள்.

இந்த அறிக்கையை எப்படி எழுதியிருக்க வேண்டும் என்கிற கேள்வியை கேட்கும் முன் இதற்கு முன்னான ஜெ.மோ சர்ச்சைகளில் சாரு மற்றும் மனுஷ் நடந்து கொண்ட விதங்களை பாருங்கள். எப்போது சாருவுடன் மோதினாலும் ஜெ.மோ தோற்றுப் போவார். ஏனென்றால் சாரு அவரை மிக மோசமாய் பகடி பண்ணி விடுவார். ஜெ.மோவின் மோசமான வசைகளுக்கு உணர்ச்சிவசப்படாமல் சிரித்துக் கொண்டே அதை அவருக்கு எதிரான கிண்டலாக மாற்றி விடுவார். மனுஷ் ஜெ.மோவின் குற்றங்களை பட்டியலிடாமல் தன் தரப்பு நியாயங்களை தர்க்கரீதியாக பட்டியலிடுவார். இவ்விசயங்களில் ஜெ.மோ (பெண்கள் விசயத்தில் போல் அல்லாமல்) அடுத்தடுத்து விளக்கங்களும் பதிலடிகளும் தராமல் வாயை மூடிக் கொண்டார். ஏனென்றால் தான் என்ன கோல் அடிக்க முயன்றாலும் பந்து தன் கட்டுப்பாட்டில் இல்லை என அவர் அறிந்திருந்தார்.

பெண் எழுத்தாளர்கள் தம் தரப்பு நியாயங்களை பொதுவில் வைப்பதற்கான வாய்ப்பாக இதை பயன்படுத்தி இருக்க வேண்டும். அவர்களின் இலக்கிய பங்களிப்பை, அது ஏற்படுத்திய எதிர்வினைகளை பட்டியலிட்டு கடந்த இருபது வருடங்களில் இலக்கிய வளர்ச்சிக்கு அரசியல் விழிப்புணர்வுக்கும் தாம் என்னவெல்லாம் செய்தோம் என கூறியிருக்கலாம். பல பெண் கவிஞர்கள் விருதுகள் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கவிதைகள் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் உள்ளன. பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. இருபதாண்டுகளின் முக்கியமான தமிழ் பெண் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகளை பட்டியலிட்டிருக்கலாம். இவற்றையெல்லாம் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கலாம். கடந்த பத்தாண்டுகளில் புதிதாய் எழுத அந்த ஆண் கவிஞர்கள் இதனோடு ஒப்பிடுகையில் சொற்பமாய் தான் சாதித்திருக்கிறார்கள் என கூறியிருக்கலாம். இந்த சர்ச்சையில் புதிதாய் பங்கேற்கும் வாசகர்களுக்கு பெண் எழுத்து குறித்து ஆர்வமும் அபிமானமும் இதனால் ஏற்பட்டிருக்கும். இவ்வளவு எழுதிய பின்னும் எங்களை மட்டம் தட்டலாமா என கேட்டிருக்கலாம். அது பொதுமக்களின் இரக்கத்தை பெண்கள் பக்கம் சாய்த்திருக்கும். ஜெயமோகன் தமிழுக்கு முக்கிய பங்களிப்பு அளித்த பெண்களை வணங்குகிறேன் என மறு அறிக்கை விட்டு ஆட்டத்தை முடித்திருப்பார். அவருக்கு வேறு வழியிருந்திருக்காது,

ஆனால் இப்போது ஜெ.மோவை ஒரு பெண் வெறுப்பாளர் என காட்ட நினைக்கும் இந்த அர்த்தமற்ற முயற்சி பெண்களை தான் மோசமான ஒளியில் காட்டுகிறது. நீ ஒரு பெயர் விளித்தால் நான் உன்னை இன்னொரு பெயரால் திட்டுவேன் என்கிற மட்டமான தந்திரமாக அது தோன்றுகிறது. மேலும் ஜெ.மோ போன்ற எழுத்தாளனை அப்படி “பெண் வெறுப்பாளன்” நீங்கள் எளிதில் முத்திரை குத்த முடியுமா? பெண் ஒடுக்குமுறையை நுணுக்கமாக சித்தரித்த அவரது சிறுகதைகளை அவரது எளிய வாசகன் கூட உங்களிடம் எடுத்த சொல்வான். இலக்கிய எழுத்தாளனுக்கும் ஆணாதிக்கமும் பெண்ணியமும் கலந்து கூட இருக்கும். இரண்டு பிரதிகளை ஒன்றுக்கொன்று முரணாய் காட்டுகிறபடி இருக்கும். புதுமைப்பித்தனை தலித் விரோதி என காட்டுவது போன்ற ஒரு தட்டையான தாக்குதலாக இது மாறி விட்டது. உங்கள் நோக்கமும் கோபமும் புரிகிறது. ஆனால் நீங்கள் எடுத்துக் கொண்ட ஆயுதம் தவறானது. எறும்பை சம்மட்டியால் அடித்தால் பள்ளம் உண்டாகும்; ஆனால் எறும்பு தப்பித்து விடும்.

இன்றைய சமூக வலைதள காலகட்டத்தில் அரசியல் என்பது ஒரு ஒற்றை நூல் பாலம். கரணம் தப்பினால் மரணம். இதோ நீங்கள் போட்ட பாலத்தில் ஜெ.மோ அடிமேல் அடிவைத்து தன்னம்பிக்கையாய் நடந்து போகிறார். உங்களை எங்கும் காணவில்லை. ஒரு பந்து ஏழு ரன்கள் என நிலைமை இருந்தது. நீங்கள் ஒரு நோபால் போட்டீர்கள். ஜெ.மோ இறங்கி சிக்ஸர் அடித்து விட்டார்.

No comments: