கௌரவக் கொலைகளை தடுக்க என்ன செய்யலாம்?மதுரையை சேர்ந்த பவானி என்ற ஒரு மத்திய சாதி பெண் ஒரு தலித்தை மண்ந்த காரணத்தினால் அவளது சகோதரனால் பிள்ளைகள் முன்னால் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறாள். கடந்த இரு வருடங்களில் மட்டும் 24 பெண்கள் இது போல் தமிழகத்தில் கௌரவக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக நடந்து வருகிற ஒரு மௌன அநீதி இது.

சாதி அரசியல் ஆட்சிகளை மாற்றக் கூடியது என்பதால் அரசுகள் என்றுமே இவ்வகை குற்றங்களை தண்டிக்க தயங்குகின்றன. குறிப்பாக தேவர் சாதி ஆதரவு அதிமுகவுக்கு அதிகம் என்பதால் அதை சரிசமமாய் பங்கு போடுவது எப்படி என திமுக இப்போது பரிசீலித்து வருகிறது. இப்படி தமிழகத்தில் எந்த கழகம் ஆட்சிக்கு வந்தாலும் சாதிப்படுகொலைகளோ கௌரவக் கொலைகளோ தடுக்கப்படாது. இதற்காக அத்தனை தேவர்களும் வெறியர்கள் என பொருளில்லை. தேவர் சாதிக்குள்ளும் கௌரவக் கொலைகளை கண்டிக்கிறவர்கள் இருக்கிறார்கள். வெறி பிடித்த ஒரு சிறுபான்மை குழு இது போன்ற ஆதிக்க சாதிகளுக்குள் இருக்கும். இக்குழுக்களை கண்டிக்க அரசுகள் தவறுவது தான் மோசமான சாதிய வன்முறைகளுக்கும் பரஸ்பர சாதிய அனுசரனையின்மை ஏற்படவும் காரணமாகிறது. இது இந்தியா பூராவும் உள்ள பிரச்சனையும் தான். உத்தரபிரதேச சாதிய கொலைகள் ஒரு உதாரணம். அங்கும் இது போல் அரசியல் கட்சிகள் கப் பஞ்சாயத்துகளை மயிலிறகுகளால் வருடி பாதுகாக்கின்றன. தேர்தலின் போது கப் பஞ்சாயத்தின் தலைவர்கள் சாதி ஓட்டுகளை தங்களுக்கு எதிராக திருப்ப கூடாது என அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். இதனால் தான் இந்தியா பூரா கொதித்தெழுந்தும் கப் பஞ்சாயத்துகளை ஒழிக்கவோ அவர்களுக்கு எதிராக சட்டம் இயற்றவோ அரசியல் கட்சிகள் தயாரில்லை. உத்தரபிரதேசத்தில் ஒரு கிராமத்தில் உள்ள சாதி இந்துக்கள் அத்தனை பேரும் தீவிர வெறியர்களாய் இருக்கும் அவசியம் இல்லை. ஆனால் கப் பஞ்சாயத்து ஒன்று நடுநிலையில் இருக்கும் மக்களை தீவிர வெறுப்பு நிலைக்கு தள்ளுகிறது. இந்தியாவில் உள்ள அத்தனை இந்துக்களும் பாபர் மசூதியை இடிக்க சொல்லவில்லை. ஆனால் ஒரு கட்சி நடுநிலை மக்களின் மனங்களை இஸ்லாமிய வெறுப்பு நோக்கி குவிக்கிறது.
சரி சாதிய கலவர கொலைகளில் இருந்து கௌரவக் கொலைகளுக்கு வருவோம். தடுக்க என்ன செய்யலாம். ஜெயிலில் போடுவதால் பயனில்லை. ஏனென்றால் ஒன்று இக்குற்றங்களை செய்கிறவர்களை தங்களை தியாகி போல் நினைத்துக் கொள்கிறார்கள். சாதிக்காக வாழ்க்கையை தியாகம் பண்ண தயாராக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சாதிக்குள் குடும்ப கௌரவத்தை காப்பாற்றும் அழுத்தமும் ஒரு காரணமாகிறது. அதாவது சமூக அழுத்தம். சுற்றத்தார், சொந்தக்காரர்கள் தரும் மறைமுக அழுத்தம். மூன்றாவதாய் சொத்து இன்னொரு சாதிக்கு போய் விடக் கூடாது என்கிற ஆவேசம். இக்குற்றத்தை தடுக்கும் வழிமுறை இம்மூன்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
எனக்கு தோன்றுவதை இங்கே சொல்லுகிறேன்.
சாதி மறுப்பு செய்பவர்களுக்கு பதிவு செய்து கொள்ள ஒரு அரசு வாரியம் அமைக்க வேண்டும். இவ்வாரிய உறுப்பினர்கள் தலித்துகளாக இருக்க வேண்டும். அரசு பணியாளர்களாக இருந்தால் இன்னும் நல்லது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சாதி மறுப்பு ஜோடிகளின் பாதுகாப்பு இவர்கள் பொறுப்பு. வருடத்துக்கு ஒருமுறை அவர்களின் நிலையை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாரியத்துக்கு காவல்துறையை கண்காணிக்கும் அதிகாரம் வேண்டும்.
ஒரு ஜோடி சாதி மறுப்பு மணம் செய்தவுடன் காவல்துறை மேல்சாதி பெற்றோர் மற்றும் சொந்தங்களை அழைத்து சமரசம் பேச வேண்டும். எச்சரிக்கை செய்ய வேண்டும். மருமகன்/மருமகளுக்கு தங்களால் எந்த தீங்கும் வராது என எழுதி ஒப்பமிட வைக்க வேண்டும். அதில் அத்தனை சொந்தபந்தங்களும் ஒப்பமிட வேண்டும். இதனால் குற்றத்துக்கு எதிரான ஒரு சமூக அழுத்தத்தை மேல்சாதி குடும்ப ஆண்களிடம் ஏற்படுத்த முடியும்.

இரண்டு சட்டதிருத்தங்கள் பண்ண வேண்டும்.
1.      சாதிமறுப்பு திருமண ஜோடிகளில் யாருக்காவது தீங்கு, கொலைமிரட்டல், கொலை நேர்ந்தால் அதற்கு மேல்சாதி பெற்றோர்களும், உடனடி உறவினர்களும் தான் பொறுப்பு. எந்த ஆதாரமும் இன்றி அவர்களை கைது செய்யலாம். கற்பழிப்பு வழக்குகளில் போல் தாம் குற்றம் செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டவர் தான் நிரூபிக்க வேண்டும். ஒரு பாதுகாப்பு பொறுப்பு பத்திரம் தயார் செய்து அதில் மேல்சாதி பெற்றோர் மற்றும் உடனடி சொந்தங்களை ஒப்பமிட வைப்பது போலீசார் பொறுப்பு.
2.      ஒப்பமிட்ட பின் சாதிமறுப்பு ஜோடியில் யாராவது கொல்லப்பட்டால் மேல்சாதி குடும்பத்தினர் மற்றும் அவர்களின் உடனடி சொந்த்த்தினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். தம் மேல் குற்றமில்லை என நீரூபித்த பின்னர் மட்டுமே சொத்து திரும்ப அளிக்கப்படும். அதுவரை சொத்துக்களில் இருந்து வரும் வருமானம் அரசுக்கு சொந்தம்.

சொத்துக்காகவும் கௌரவத்துக்காகவும் தானே இக்கொலைகள் நடக்கின்றன. தான் கொலை செய்தால் தன் சாதி சொந்தபந்தங்களுக்கு நிறைய தொந்தரவுகளும் சட்டசிக்கலும் ஏற்படும் என தெரிந்தால் யாரும் செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால் அவர் மீது சொந்தபந்தத்தினருக்கு கடும் வெறுப்பு ஏற்படும். இன்னொன்று சொத்து. கொன்றால் தம் சொத்துக்களூம் அதன் வழி குடும்பத்தின் பொருளாதார பத்திரமும் இல்லாமல் போகும் என்றால் அதுவே மிகப்பெரிய மனத்தடையாக கொலையாளிக்கு அமையும். குறிப்பாய் தான் கொலை செய்தால் தன் மனைவி, குழந்தைகள் வீடிழந்து வீதிக்கு வருவார்கள் என்ற எண்ணம்.

இது போன்ற வழக்குகளை தலித் அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க வேண்டும் எனவும், இவ்வழக்குகளில் காவல் துறை மீதான பொறுப்பும் அதிகாரம் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியின் கீழ் தான் இருக்க வேண்டும் எனவும் சட்டமாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.


Comments