Thursday, June 12, 2014

ஜெயமோகனும் பெண் கவிஞர்களும்


ஜெயமோகன் பெண் கவிஞர்களை பற்றி சொன்னது அவரது தனிப்பட்ட மதிப்பீடு. அது போல் அவர் பாரதியாரை பற்றிக் கூட மதிப்பீடு கொண்டிருந்தாரே எனவும், அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டென்றும் அவரது ஆதரவாளர்கள் இப்போது நியாயப்படுத்தி வருகிறார்கள். ஆனால் இது உண்மையா? இல்லை ஜெயமோகன் கூறுவது மதிப்பீடோ அவதானிப்போ அல்ல - பெரும்பாலும் முன்னெண்ணங்கள்.
பெண் கவிஞர்கள் தங்கள் உடலை காட்டித் தான் பிரசுர வாய்ப்புகள் பெற்றார்கள் என்று அவர் வாக்கியத்தை எளிமைப்படுத்தினால் வரும். இது உண்மையா என பார்ப்போம்: குட்டிரேவதி, சுகிர்தராணி, சல்மா போன்றோர் புதுவகையான பாய்ச்சலை தமிழ் நவீன கவிதையில் நிகழ்த்தினார்கள். அது வாசகர்களுக்கு புதுசாக வியப்பாக இருந்தது.


 கவிதை எப்போதும் புதுவாசல்களை திறக்கும் போது அப்படியான கவனம் கிடைக்கும். கவனிக்கப்பட நீங்கள் முழுமை பொருந்திய உன்னத கவிதைகள் எழுத அவசியம் இல்லை. யவனிகா ஸ்ரீராம் எனும் ஆண் கவிஞர் அப்படியான ஒரு புது உலகை கவிதைக்குள் கொண்டு வருகிறவர் தான். முகுந்த் நாகராஜன்? அவர் எழுதியவை மட்டும் உன்னத கவிதைகளா? நீங்கள் அவரை எலியட்டுடனோ டெட் ஹியூக்ஸுடனோ ஒப்பிட முடியுமா? அல்லது தமிழில் பிரமிள், தேவதச்சன், தேவதேவனுடன்? ம்ஹும். முகுந்த் சிதறி விடுவார்.

ஆனாலும் முகுந்த் கவனம் பெற்றார். விரும்பி வாசிக்கப்பட்டார். ஏன்? அவரது கவிதைகள் மனிதர்களுக்குள் உள்ள குழந்தைகளை பற்றியும் குழந்தைகளுக்குள் உள்ள வளர்ந்தவர்களை பற்றியும் புது பார்வையுடன் சித்தரித்தன. இது தமிழில் யாரும் இதற்கு முன் செய்யாதது. வெறுமை, கசப்பு, அவசம் என எழுதிக் கொண்டிருந்த கவிதைப்பரப்பில் ஒருவர் இப்படி புது சித்தரிப்புகளுடன் வரும் போது பரவலாக கவனம் பெற்றார்.
அதற்காக அவரை குழந்தைகளை காட்டி கவனம் பெற்றவர் என கூறலாமா? குழந்தைகளை வைத்து சர்க்கஸ் பண்ணுகிறார் என கூறலாமா? அவரால் பிரமிள் போல் ஆன்மீக உச்சங்களை தொட முடியுமா, தேவதேவன் போல் இறைநிலையின் உன்மத்த கிளர்ச்சியை படிமங்களுடன் காட்ட முடியுமா என கேட்கலாமா? முகுந்த் வெளியிட்டதில் இறுதி தொகுப்பு அப்படியாக தன்னை பிரமிள், சி.மணி சட்டகத்தில் பொருத்தும் முயற்சியாக இருந்து தோல்வி உற்றது.

பேசுபொருள் புதிதாக இருக்கும் போது மொழி புதிதாகிறது. வாசகன் ஆர்வமுறுகிறான். பெண்கள் என்றில்லை, ஆண் கவிஞன் கூட புதிதாய் ஒரு “சரக்கை” சந்தைக்கு கொண்டு வந்தால் கவனம் பெறுகிறான். அடையாளம் ஸ்தாபிக்கிறான். முகுந்துக்கும், யவனிகாவுக்கும் நடந்தது; இப்போது சபரிநாதன்,  நீலகண்டன், கோசின்ரா, ஏ.ஏ.பைசால், லஷ்மி சரவணகுமாருக்கும் அது நடக்கிறது. இவர்கள் வெற்றி பெற்றது உன்னத படிமங்கள், குறியீடுகளை செதுக்கி அல்ல. மொழி நாம் எழுதும் விசயத்தினால் தீர்மானமாகிறது. பெண் கவிஞர்கள் தங்கள் உடல் சார்ந்த உலகை சித்தரித்தார்கள். அதுவரை தமிழ் கவிதை மிக அரூபமாக இருந்ததால் பருண்மையான சித்தரிப்புகளால் சட்டென கவனம் பெற்றார்கள். இது தவிர பல அழகான உருவகங்களை, பதியப்படாத மனநிலைகளை கவிதைக்குள் கொணர்ந்தார்கள். சல்மாவின் இந்த கவிதையை பாருங்கள்:

வன்மம்
***********
வஞ்சம் படர்ந்த
நகரத்தின் தெருக்களில்
வெப்பம் மிதந்தலையும்
பேருந்தில்
வியர்த்து வழியும் உடல்களினூடே
எங்கோ துளிர்த்து பெருகிய வன்மமென
என்மீது நீளும்
ஓர் ஆண்குறி

இக்கவிதை ஒரு அன்றாட பாலியல் அத்துமீறலின் சித்திரத்தை அளிக்கிறது. பொது இடங்களில் பெண்கள் மீது தம் உடலையோ பாலுறப்பையோ உரசும் ஆணின் செயலை காட்டுகிறது. ஆனால் இக்கவிதை அது மட்டும் அல்ல. வன்மம் எங்கிருந்து பிறப்பெடுக்கிறது என்கிற கேள்வியை இக்கவிதை கேட்கிறது. நகரம் பொதுவாக “வஞ்சம் படர்ந்ததாக” உள்ளது. இயல்பிலேயே அங்கு மக்கள் தனிமைப்பட்டவர்களாக, அடையாளம் இழந்தவர்களாக அந்நியப்பட்டு இருக்கிறார்கள். பரஸ்பரம் வெறுப்பு நொதிக்க திரிகிறார்கள். ஆனால் தம் வன்மத்தை வெளிப்படுத்த வாய்ப்பில்லாததால் கண்ணியமாக தோன்றுகிறார்கள். அடுத்து வெக்கை. உடலில் வியர்வை வழிந்து கொதிக்கும் போது நமக்கு யாரையாவது பளாரென்று அறையத் தோன்றும். ஆனால் அறைய முடியாது. அதுவும் பேருந்து போன்ற நெரிசலான இடங்களில் மனிதனுக்கு சகமனிதனை மிதித்து கூழாக்கவே தோன்றும். ஆனால் மிதிக்க முடியாது. ஆனால் ஒரு பெண் அப்பிராணியாக எங்கோ மாட்டுகிறாள். அவளை நோக்கி தன் ஆண்குறியை வெளிப்படுத்தி உரசுகிறான். அதில் அவனுக்கு செக்ஸ் கிளர்ச்சி கிடைப்பதற்கு இணையாய் வன்ம வெளிப்பாடும் அமைகிறது. இது மட்டுமல்ல மனைவி, காதலி, விபச்சாரி என பெண்களிடம் உடலுறவு கொள்ளும் போது கிடைக்கும் விடுபடல் வன்மம் வெளிப்படும் போது கிடைக்கும் விடுபடல் தான். புணரும் உடல்களின் வன்முறையை கவனித்தால் புரியும். இது எவ்வளவு முக்கியமான அவதானிப்பு. இது தமிழ்க் கவிதையில் நிகழும் ஒரு கண்டுபிடிப்பு. வேறெந்த ஆண் கவிஞன் இதற்கு முன் இது போன்ற ஒரு அவதானிப்பை தந்திருக்கிறான். இப்போது சொல்லுங்கள்: பெண் கவிஞர்கள் தம் உடலைக் காட்டித் தான் (ஜெ.மோ மொழியில் பெண்களாக இருப்பதனால் தான்) ஊடக, வாசக கவனம் பெற்றார்களா?

மேலும் இந்த வாசகம் ஒரு பொதுப்புத்தியை கொண்டுள்ளது. அலுவலகங்களில் ஒரு பெண் பதவி உயர்வு பெற்றால் உடலைக் காட்டி வாங்கி விட்டாள் என்பார்கள். ஆனால் உண்மையில் உழைப்பும் திறமையும் இன்றி யாரும் முன்னேற முடியாது. உலகம் அவ்வளவு எளிதானது அல்ல. நீங்கள் ஒருவேளை உடலையோ சாதியையோ அனுகூலமாய் கொண்டு சில அடிகள் முன்னேறினாலும் தேங்கி அங்கேயே நின்று விடுவீர்கள். வெறும் செக்ஸ் சித்தரிப்புகளை எழுதியிருந்தால் “கன்னித்தீவு” அளவு தான் மதித்திருப்பார்கள். வாசகனை முட்டாளாக்க முடியாது. எனக்குத் தெரிந்த நவீன கவிதை தெரிந்த கணிசமான வாசகர்கள் பெண் கவிஞர்களை வாசித்திருக்கிறார்கள். ஆனால் கடந்த பத்தாண்டுகளின் பல ஆண்கவிஞர்களை அவர்களுக்கு தெரியாது. இது ஏன்? வெறும் ஊடக கவனத்தினாலா? அல்ல. ஒரு கவிதையை வாசித்தால் இது உண்மை என மனசுக்கு உறைத்தால் தான் வாசகன் ஏற்றுக் கொள்வான். பெண் கவிஞர்களின் வரிகளில் நாம் பார்க்க உண்மையின் கீற்றுகள் உள்ளன. அது உடலும், பெண்ணிய அரசியலும் சார்ந்ததாக இருக்கலாம். புதுவகையான உடல்சார்ந்த காதல் கவிதைகளால் இருக்கலாம். அவ்வரிகளை ஆண்களால் அதுவரை எழுத முடிந்ததில்லை என்பது தான் உண்மை. சரி, அதனால் மட்டுமே ஒரு கவிதை உயர்ந்த்தாகி விடுமா என யோசித்தால் உங்கள் மதிப்பீட்டு முறையில் தவறுள்ளது.

எழுத்துக்கும் வாசகனுக்குமான உறவு எளிய தர்க்கத்தில் அடங்குவது அல்ல. அதனால் தான் விமர்சகனுக்கு பிடிக்கிறதோ இல்லியோ சில படைப்பாளிகளை வாசகன் தேடி படித்துக் கொண்டே இருக்கிறான். ரசிக்கிறவனுக்கு அதில் உள்ள உண்மை தான் முக்கியம், அது உன்னதமா, அது கலைரீதியாய் முழுமை பெறுகிறதா என கவலைப்பட மாட்டான். தன்னிறைவு கொண்ட எந்த எழுத்தாளனும் தன் படைப்பு வாசகனுடன் உரையாடுகிறதா என தான் அக்கறைப்படுவான். அது சிறந்த கலைப்படைப்பு என ஒருவர் பத்திரம் அளிப்பது அவனுக்கு தேவையில்லை. பெண் கவிதைகள் அப்படி உரையாடினதால் தான் வெற்றி பெற்றன.

பெண் கவிதைகளை நாம் மதிப்பிடலாம். அவற்றின் குறைகளை அலசலாம். ஆனால் அது நியாயமான முறையில் நிகழ வேண்டும். ஆங்கிலத்தில் எடுத்துக் கொண்டால் நவீன பெண்ணெழுத்து துவங்கி நூறு ஆண்டுகள் ஆகின்றன. ஒரு புது எழுத்து பாணி உருவாகி நிலைப்பெற வேண்டும். தமிழ் ஆண் நவீன கவிதைக்கு 60 வயது தாண்டி விட்டது. ஆனால் நவீன பெண் கவிதை ஆரம்பித்து பத்தாண்டுகள் தான் ஆகிறது. ஆக தமிழ் பெண் கவிதை தன் குறுகிய ஆயுசில் சிறப்பான வேலைகளை செய்துள்ளது. இன்னும் ஒரு ஐம்பது வருடங்கள் அளித்தால் நீங்கள் எதிர்பார்க்கும் உன்னத கவிஞர்கள் அவர்களிடத்தும் தோன்றுவார்கள்.

இறுதியாக ஒன்று. இது ஜெயமோகனின் கருத்து மட்டுமல்ல. கடந்த பத்தாண்டுகளில் புதிய வகை கவிதைகளை ஆண்கள் அதிகம் எழுதவில்லை. புதிதாக எழுத வந்தவர்களில் கணிசமானோர் அதே எழுபதுகளின் கவிதையை திரும்ப திரும்ப படியெடுக்கிறார்கள். தொண்ணூறுகளில் கோலோச்சிய ஆண்கவிஞர்களில் பெரும்பாலானோர் ரெண்டாயிரத்து பின் அலுப்பூட்ட துவங்கினார்கள். அதனால் பெண் கவிஞர்கள் அவர்களை மீறி எளிதில் சென்றார்கள். இது ஆண் கவிஞர்களுக்கு எரிச்சலை, பொறாமையை கோபத்தை ஏற்படுத்தியது. ஜெயமோகனின் இதே வாக்கியத்தை பல வழிகளில் ஆண் கவிஞர்கள் முணுமுணுத்து நான் கேட்டிருக்கிறேன். ஒரு மூத்த ஆண் கவிஞர் கூட “பெண்கள் தேவைக்கதிகமாகவே ஊடக இடம் பெறுகிறார்கள், இதனால் ஆண் கவிஞர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது” என எழுதியதை வாசித்த ஞாபகம்.

நண்பர்களே, கடந்த பத்தாண்டுகளின் பெண் கவிதையை மதிப்பிடும் போது ஏன் ஆண் கவிதை ஆஸ்துமா வந்த்து போல் இருமுகிறது என்ற கேள்வியை கேட்க வேண்டும்.
”அமைதியின் மீது
ஓரிடம் விடாமல் காயங்கள்
அதன் கதறலில் துவண்டு போனது
என் இதயம்”

போன்ற “ஐயோ அம்மா வலிக்குதே” வகை கவிதைகள் ஆண்கள் இன்னும் எத்தனைக் காலம் எழுதப் போகிறார்கள் என நாம் கேட்க வேண்டும். ஒப்பாரி வைத்து வைத்தே தமிழ் நவீன கவிதையை கொன்று விட்டீர்கள். இனியாவது ஒப்பாரி வைப்பதையும் பெண்களைப் பார்த்து பொறாமைப்படுவதையும் நிறுத்துங்கள். 

6 comments:

சேக்காளி said...

Vijaysabarivasu said...

Nandri...en manathilum oru mattram erpaduthiyatharku...eluthu vatharku palinam oru thadaya enna.., pooramai padupavarkal oru puram irukattum, namaku porpu nera ya ullathu en eluthalar sakotharikalaa..

Chellappa Yagyaswamy said...

வலிமையான வாதம் இது . ஆண் கவிஞர்கள் புதிய தளத்துக்கு தமிழ் கவிதை யைக் கொண்டு போகவில்லை என்பது உண்மையே .

சர்வோத்தமன் said...

அபிலாஷ்,

நீங்கள் எழுதும் போது பெண் கவிஞர்கள் என்றுதான் குறிப்பிட்டியிருக்கிறீர்கள்.ஏன், பெண் எழுத்தாளர்கள் என்று சொல்லவில்லை.பெண்கள் சிறப்பாகவே கவிதைகள் எழுதுவதாகவே இருக்கட்டும்.ஒரு எழுத்தாளர் என்பவன் தொடர்ச்சியான வாசிப்பும் , குழப்பமும், தனிப்பட்ட வாழ்க்கையில் தன் கருத்தியல்களை வைத்துக்கொண்டு தடுமாறி , உலகம் இப்படி இல்லையே என்று புலம்பி கண்ணீருடன் உண்மையை பின்தொடர்பவன்.அவன் தான் எழுத்தாளன்.அம்பையின் கறுப்பு குதிரைச் சதுக்கம் முக்கியமான சிறுகதை.அதில் உண்மையை நோக்கிய ஒரு பயணம் இருக்கிறது.இங்கே இன்று எழுதும் பெண்கள் பலரில் அத்தகைய எண்ணங்கள் இருக்கிறதா.அவர்கள் என்ன வாசிக்கிறார்கள்.என்ன புதிதாக எழுதியிருக்கிறார்கள்.பெண்கள் என்பதால் எதற்காக சலுகை அளிக்கப்பட வேண்டும்.சரி, காம்யூ பற்றி, சார்த்தர் பற்றி, தஸ்தாவெய்ஸ்கி பற்றி, மார்க்வெஸ் பற்றி, டால்ஸ்டாய் பற்றி இவர்கள் எழுத வேண்டாம்,பத்து நிமிடம் ஒரு கருத்தரங்கில் இன்று பெண் எழுத்தாளர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்களில் எத்தனை பேரால் நிஜமாகவே பேச முடியும்.
கவிஞர்கள் என்றால் வாசிக்க தேவையில்லையா?

சர்வோத்தமன்.

Abilash Chandran said...

சர்வோத்தமன் - ஷாஜியின் இசைக்கட்டுரைகளை எடுங்கள். அவை உன்னதமான படைப்புகள் அல்ல. ஆனால் ஒரு புது மொழியை தடத்தை உருவாக்குகின்றன. அது ரொம்ப சிரமமான காரியம். அப்பாதையில் மேலும் பலர் செல்லும் போது தான் ஆக சிறப்பான படைப்புகள் தோன்றும். அதற்கு பல வருடங்கள் ஆகும்.

பெண்கள் சிறப்பான பல கவிதைகளை எழுதியிருப்பதாகவே கருதுகிறேன். அவர்களுக்கு மிகுதியான புகழ் கிடைப்பதாய் ஜெ.மோ கூறுகிறார். ஆனால் அதை எப்படி அளக்க? என்னிடம் கேட்டால் நாஞ்சில், குரூஸ் போன்றோரை இலக்கிய தரமற்றவர்கள் என்பேன். அவர்களுக்கு அகாதெமி விருதி கொடுத்திருக்க கூடாது என்பேன். ஆனால் பலர் அப்படி அல்ல என நினைக்கலாம். இதை எப்படி நிறுவ முடியும்? பெண் கவிஞர்களின் அங்கீகாரத்தின் அளவுகோலும் அப்படியானதே. ஒரேயடியாய் மட்டம் தட்டுவதும் நியாயம் அல்ல. அவர்கள் கவிதை கோரும் மரியாதையை அளிக்க வேண்டும்; அக்கறையாய் கவனமாய் வாசிக்க வேண்டும் என்றே கோருகிறேன்.

வாசிப்பு விசயம்: அதிகம் வாசிக்காமல் சிறந்த கவிதை எழுதியுள்ளவர்களை எனக்கு தெரியும். அது அவர்கள் தேர்வு. நாம் போய் நீ ஏன் வாசிக்கவில்லை, விமர்சனம் எழுதவில்லை என கேட்கலாமா? அப்படியென்றால் ஜொ டி குரூஸ் தஸ்தாவஸ்கி, நீட்சே பற்றி எழுதியிருக்கிறாரா? நாஞ்சில் மார்க்வெஸ் பற்றி, கீர்க்ககாட் பற்றி எழுதி இருக்கிறாரா? நாம் இதை ஒரு குற்றச்சாட்டாய் வைப்பது நியாயமாய் இருக்காது!

Manushi Bharathi said...

மிகத் தாமதமாக வாசிக்க நேர்ந்தது இக்கட்டுரையை. மிகத் தெளிவான, ஆழமான வாதங்களை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. மகிழ்ச்சி.