Sunday, May 25, 2014

மைக் விழுங்கி கூட்டங்கள்இலக்கிய கூட்டங்களை பற்றி ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். “இப்போதுள்ள புது எழுத்தாளர்களுக்கு ஈகோ அதிகமாகி விட்டது. அவர்கள் கூட்டங்களுக்கு வருவதும் இல்லை; வந்தால் அதைப் பற்றி மூச்சு விடுவதும் இல்லை” என்றார். அவர் அதை விளக்கவும் செய்தார்.


ஒரு கூட்டத்திற்கு எழுத்தாளன் வர வேண்டுமென்றால் ஒன்று அவன் அதில் பேச வேண்டும்; அல்லது அவனுக்கு மிக இணக்கமாக சூழல் இருக்க வேண்டும். தனக்கு பிடிக்காத கூட்டம் என்றால் அவன் குறைந்த்து அது குறித்து எதிர்வினை ஆற்ற வேண்டும். ஆனால் தமிழில் கூட்டங்கள் நல்லதோ கெட்டதோ ஒரு செயற்கையான மௌனத்தை உருவாக்க மட்டுமே செய்கின்றன என்றார். முன்னர் குற்றாலம் பட்டறையில் எழுத்தாளர்கள் கலந்து கொண்டு விவாதித்தை அடுத்து ஒரு பரவலான கவனமும் சலசலப்பும் எழுத்தாளர்களிடையே எழுந்தன. பல கட்டுரைகளும் எதிர்வினைகளும் எழுதப்பட்டன என்றார். இன்று நடக்கும் கூட்டங்கள் ஏன் அப்பளம் நொறுங்கும் ஓசையை கூட உருவாக்குவதில்லை எனக் கேட்டார்.

எனக்கு சில காரணங்கள் பட்டன. ஒன்று இன்று நடக்கும் கூட்டங்கள் சுயசிந்தனை கொண்டவர்களுக்கு ஒவ்வாமையை தருகின்றன. அவை விஜய் அவார்ட்ஸ் போல் ஆகி விட்டன. மேடைக்கு மேல்-கீழ் எனு பாகுபாடு இன்னொரு புறம் எழுத்தாளர்களை எரிச்சலடைய வைக்கின்றன. நீ பேசு, நான் கேட்டு ரசிக்கிறேன் என்பது தமிழ் வணிக சூழலுக்கு மட்டும் எடுபடுகிற நுகர்வு பண்பாடு. ஆனால் இலக்கிய வட்டத்தில் அனைவரும் சமம்.

ஒருவர் பேசுவதை கேட்க இன்னொருவர் தயார் தான். ஆனால் ஒன்றரை மணிநேரம் ஒருவர் பேசிக் கொண்டே இருப்பார், மற்றவர் கைதட்ட வேண்டும் என்றால் எரிச்சலாகிறது. ஒன்றரை, ரெண்டு மணிநேரம் பேச நாம் என்ன கர்த்தரா அல்லது கீதை பகன்ற கண்ணனா? பெரும்பாலும் சேதி 10 நிமிடங்களுக்கு தான் இருக்கும். ரொம்ப விரிவாக பேச வேண்டியதென்றால் 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இலக்கிய கூட்ட பேச்சாளர்கள் சாலமன் பாப்பையாவின் அவதாரம் எடுத்து முழங்கிக் கொண்டே போகிறார்கள். இலக்கிய ஆர்வமற்ற பொது பார்வையாளர்கள் தவிர பிறருக்கு இது உவப்பாக இல்லை. அதனாலே இதைவிட ஜனநாயக பூர்வமான சமூக வலைதளங்களில் அவர்கள் இன்னும் உற்சாகமாக இருக்கிறார்கள். அங்கு இது போன்ற கூட்டங்களை பற்றி பேசாமல் மௌனம் சாதிப்பது ஒரு எதிர்ப்பு நிலைப்பாடாகத் தான் நான் பார்க்கிறேன்.

இன்னொரு காரணம் சூழல் விரிந்து விட்டது. முன்பு கவனம் கவரும்படியாய் எழுதுபவர்கள் பத்திருபது பேர்கள். அவர்களைப் படிக்க சில நூறு பேர். அவர்கள் படிக்க ரெண்டு மூன்று பத்திரிகைகள். இதற்குள் ஒரு கூட்டம் அதிர்வை ஏற்படுத்துவது ஒரு முகநூல் பக்கத்தில் பத்து பேர் உக்கிரமாக விவாதிப்பது போலத் தான். இணையத்தில் பேஸ்புக் மட்டுமே, அங்கும் எழுத கூடியவர்கள் பதினைந்து பேர் தான் என வையுங்கள். ஒரு சின்ன சர்ச்சை நடந்தாலும் பிரம்மாண்டமாய் தெரியும்.

முன்பு நிறப்பிரிகையில் தமிழவனை தாக்கி ரவிக்குமார் ஒரு குறிப்பு எழுதினார். அதற்கு ஆளாளுக்கு பதில் எழுதி சர்ச்சை வலுத்தது. இந்த விவாதங்களை ஒரு நாற்பது பக்கங்கள் தொகுத்து நிறப்பிரிகை நூலாக கொணர்ந்த்து. அதைப் படித்த போது இதே தரத்திலான பாணியிலான சில விவாதங்கள் முகநூலில் நிகழ்ந்துள்ளது நினைவு வந்தது. ஆனால் முகநூலில் ஆயிரக்கணக்கில் குப்பை விவாதங்கள் நடப்பதால் எல்லோருக்கும் இந்த ‘சில’ நினைவிருப்பதில்லை. இவை நூலாகவும் பிரசுரமாவதில்லை. முகநூலுக்குள் இவற்றை தேடி கண்டுபிடிப்பதும் எளிதல்ல. இது ஊரில் உள்ள அழகான பெண்கள் மாதிரி தான். கிராமத்தில் ஒன்றோ ரெண்டோ சுமார் அழகிகள் இருப்பார்கள். எல்லா ஆண்களின் மன்ங்களும் அவர்களைத் தான் மொய்க்கும். அவர்களைப் பற்றியே வாய்கள் பேசும். அப்பெண்களும் செருக்குடன் திரிவார்கள். ஆனால் இதில் ஒரு ஆண் நகரத்திற்கு வந்தால் இது போல் நூறு சுமார் அழகிகள் சாலையில் ஏனோ தானோவென திரிவதை பார்ப்பான். அவனுக்கு பின் அடச்சே என்றாகி விடும்.

யுவனை சந்தித்த போது ஒன்று சொன்னார்: “முன்பெல்லாம் ஒரு படைப்பை வெளியிடும் போது சுந்தரராமசாமி அல்லது பிரமிள் திட்டி விடுவாரோ என பயமாக இருக்கும். ஆனால் இன்றுள்ள இளைஞர்கள் யார் திட்டினாலும் கவலைப்படாமல் தம் பாட்டுக்கு எழுதிக் கொண்டு போகிறார்கள். சராசரி எழுத்துக்கும் இன்று ஒரு இடம், வாசகர்கள் உள்ளது. இது தான் இன்றுள்ள சூழல்”. இந்த சூழலில், சரியோ தவறோ, எல்லா எழுத்தாளனும் தனக்கான இட்த்தை கோருகிறான். ஜனநாயக உணர்வு முக்கியம் என நினைக்கிறான். ஒரு மூத்த எழுத்தாளன் காலடியில் வந்து உட்கார்ந்து வருடக்கணக்கில் வெற்றிலை மடித்து தர அவன் இனி தயாரில்லை. ஆக “நான் பேசுகிறேன், நீ உட்கார்ந்து படுத்தும் உருண்டும் புரண்டும் கேள்” என்கிற வகை கூட்டங்களில் அவனுக்கு இன்று ஆர்வமில்லை. அப்படியே இலக்கியம் தெரிந்து கொள்ள இப்படியான கூட்டங்களுக்கு வரும் இளைய எழுத்தாளன் சில கூட்டங்களிலேயே சலித்து, தானே ஒரு கூட்டம் நடத்த உத்தேசிக்கிறான்.

அனைவரும் ஒரு கூட்டத்தில் பேச முடியாது தான். அதனால் இனி அவர்கள் அவர்கள் தமக்கான சிறு கூட்டங்களை நடத்த வேண்டியது தான். நூற்றுக்கணக்கானோர் வருகிற “கல்யாண சமையல்” கூட்டங்களில் பாதி ஆட்கள் வாசலுக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருப்பதை பார்க்கலாம். அதனால் சிறுகூட்டங்கள் தான் இனி சரி. அப்படியான கூட்டங்களிலும் சரி பாதி பார்வையாளர்களின் கருத்துக்களை சொல்லவும் விவாதிக்கவும் நேரம் அளிக்க வேண்டும். இனிமேல் அப்படியான கூட்டங்கள் தான் அதிர்வலைகள் ஏற்படுத்த முடியும்.

பார்வையாளனை பேச விட்டால் அவன் போய் தான் பேசியதைப் பற்றி எழுதுவான். அவர்களை நான்கு மணிநேரம் வாயை கட்டி வைத்தால் அவன் தன்னை பேச விடாதவர்கள் பற்றி தான் ஏன் பேசணும் என நினைப்பான். காலமும் மனநிலையும் மாறி விட்டது. நாம் அதற்கு ஏற்றாற் போல் மாற வேண்டும்.

ஒரு சிலரை புத்தகம் பற்றி சுருக்கமாய் அறிமுகப்படுத்த விட்ட பின்ன, OHP மூலம் புத்தகத்தின் சில பக்கங்களை திரையில் காட்டி அதை கூட்டத்தினர் வாசிக்க அவகாசம் அளிக்கலாம். பிறகு அதை ஒட்டி ஒருவர் பேசி, பிறரது கருத்துக்களை விவாதிக்க கேட்கலாம். நூலை வாசிக்காதவர்கள் கூட மனதளவில் பங்கேற்க இது உதவும். முடிந்தவரை புத்தகம் எழுதியவர் முன்னிலைப்படாமல் ஒருங்கிணைப்பாளரை கொண்டு நடத்த செய்யலாம். எழுதியவர் கூட்டத்துடன் இருக்கலாம்.

மைக் விழுங்கி கூட்டங்களின் காலம் முடியப் போகிறது விரைவில்...

1 comment:

பி.அமல்ராஜ் said...

நல்ல கட்டுரை. நீண்ட நாட்களாக என் மனதில் ஓடிக்கொண்டிருந்த விடயம் இது. நன்றியும் வாழ்த்துக்களும்.