அந்நிய நிலத்தில் அந்நியமாய் இருந்தேன் - ரீத்தா டோவ் (தமிழில் ஆர்.அபிலாஷ்)வாழ்வின் வசியம் அதிஅற்புதமானது என்பதாலே அதை முறியடிக்க அனைத்தும் முயன்றபடி இருக்கின்றன – எமிலி டிக்கின்ஸன்


அது பேருவகை அல்ல. சாதாரண வாழ்க்கையை தவிர்த்து எது தான் பேருவகை சொல்லுங்கள்? மெல்ல தட்டி ஓசைகள் எழுப்பியபடி
மணிக்கணக்காய் செலவழிப்பாள், நாள் முழுதும் கழித்தாள்
தொட்டும் நுகர்ந்தும் சுவைத்தும்...

மகிழ்ச்சியில் சிறைவைக்கப்பட்ட ஒரு உலகில் அதி அற்புதமான வீட்டுவேலைகள்
ஆனால் எப்போதும் அவை அநேகமாய் ஒன்று போலவே தோன்றின
அந்த மகிழ்ச்சியும், இலக்கற்ற அங்கேயே இருத்தலும்.


ஆகையால் அவள் சற்று நேரம் அலைந்தாள், புதரில் இருந்து தோட்டத்துக்கு நிழலுக்கு,
ஒரு குளத்தின் அமைடியற்ற கண்ணாடியில் தன்னை நோக்க தாமதிப்பாள்.
அவர் பிரபஞ்சத்தை பட்டியலிட சென்றிருப்பார், ஒருவேளை,
யாரோ இன்னொருவரின் பெருங்குழப்பத்தை தன்னால் சீராய் தொகுக்க முடியும் என்று பாசாங்கு செய்தபடி.

அப்போது தான் அம்மரத்தை கண்டுபிடித்தாள்
அப்படி ஒரு பேச்சற்ற பொக்கிஷத்தை சுமந்த
கரணைகள் கொண்ட அதன் கரிய கிளைகளை,
சொல்லாமலே அவளுக்கு தெரியும்
அது தடைசெய்யப்பட்டது என. அது
உரிமை சம்மந்தப்பட்ட பிரச்சனை அல்ல –
இவ்வளவு உன்மத்தமான கச்சிதத்திற்கு
யாரால் உரிமை கோர முடியும்?

அவள் கபாலத்துக்குள் எந்த ஓசையும் எழவில்லை
அந்த இலைகளுக்குள் ஒளிந்திருந்து எந்த கூர்மதியும் கிசுகிசுக்கவில்லை – வெறுமனே ஒரு வலி தான், அது வளர்ந்த போது
அவள் இழந்து விட்டிருந்தாள் எல்லாவற்றையும்
ஆசையைத் தவிர, தன் நீட்டிய உள்ளங்கையில் வெதுவெதுப்பாய் இருந்த
அந்த சிவப்பு பாரத்தைத் தவிர

-     

Comments